நவீன புத்தன்

ஆயிரமாயிரம் உயிர்களைக்
கொன்று குவித்த கர்வத்தை
குடையாய்க் கொண்ட
இரதமொன்றை பூட்டி
நான்கு மாடவீதியில்
உலா வந்தேன்.

தெருவின் முனையில்
இடைம‌றித்த‌ ஒருவ‌ன்
த‌ன்னை புத்த‌னென‌
சுய‌ அறிமுக‌ம்
செய்து கொண்டு
இர‌தத்தில் ஏறிக்கொண்டான்.

யுத்த‌ க‌ள‌த்தின் மொத்த‌ச்
செந்நீர் நாற்ற‌மும் என்
உட‌லில் அப்பியிருப்ப‌தாய்ச்
சொல்லி அவ‌ன் வெண்
ஆடை துறந்து என் மேனியில்
ப‌டிந்திருந்த‌ க‌றையைத்
துடைத்து தன‌தாக்கினான்.

ஒரு சேவ‌க‌னின் செய‌லெனக்‌
க‌ருதி அமைதி காத்தேன்.
அன்பு ஆசையுறாமை
ஜீவ‌காருண்ய‌மென‌ ஒரு
நீண்ட‌ சொற்பொழிவு
நிக‌ழ்த்திய‌ சோர்வு அவ‌ன்
க‌ண்க‌ளில் தெரிந்தது.

சாலையோர‌ம் ஒரு
ம‌ர‌த்த‌டியில் இர‌தத்தை
நிறுத்த‌ச் சொல்லி
என்னைத் தியானிக்கச்
சொன்னான்-வாளை
அவன் கையில் கொடுத்து
கண்கள் மூடிய‌த‌ருண‌ம்
என் த‌லையைக் கொய்து
இர‌த‌த்தைச் சொந்த‌மாக்கிக்
கொண்டான் ந‌வீன‌ புத்த‌ன்.

-சோமா
(sgsomu@yahoo.co.in)

Series Navigationஅன்பளிப்புஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 15