நாகராஜ சோழன் M.A.M.L.A.

கட்சி பாகுபாடில்லாமல் சகட்டு மேனிக்கு அனைவரையும் நையாண்டி செய்திருக்கும் வசனகர்த்தா மணிவண்ணனுக்கு பாராட்டுகள். வருடங்கள் கடந்தாலும், அமாவாசையை அசலாக மீட்டெடுத்திருக்கும் சத்யராஜின் நடிப்பிற்கு வாழ்த்துகள். பழைய கதையில் நவீனத்தை புகுத்தத் தவறிய இயக்கத்திற்கு கண்டனம். கட்டைக் குரலில் கருத்து சொல்லும் சீமானுக்கு கருப்புக் கொடி.

சத்யராஜின் திரை ஆளுமை, தொய்வான படத்தை தூக்கி நிறுத்த முயன்று தோற்கிறது. அரங்கு நிறையவில்லை என்றாலும், சமகால அரசியல் கிண்டல்கள் சிரிப்பலைகளை வரவழைக்கின்றன. பெண்களே இறந்தவர்களைச் சுமப்பது; மரங்களைக் காக்க பழங்குடி மக்களே கைகளால் வளையம் அமைப்பது; அசலான மலைவாழ் மக்களின் வாத்தியங்களை வைத்து ஒரு பாடல்; துப்பாக்கிகளுக்கு எதிராக வில்,அம்பு, கவண்கல் எனப் போரிடும் அப்பாவி மக்கள் ஒடுக்கப்படுவது; போராட்டம் தோற்ற பின், முன்நின்ற தலைவர்கள் தலைமறைவாவது; குறிப்பிட்டு சொல்ல இவை மட்டும்தான்.

“ மலை மேலே நதி போல பிறந்தோமே “ என்ற பாடலும், “ விரைவில் விடியும் “ என்கிற பாடலும் ஜேம்ஸ் வசந்தனை அடையாளம் காட்டுகின்றன. மற்ற பாடல்களில் “காணவில்லை “ விளம்பரம் ரேஞ்சுக்கு மிஸ்ஸிங்.

வசனங்கள் பல இடங்களில் அருமை:

“ இந்த நாட்டில, ஓட்டுப்போட மட்டும் மெஷின் இல்ல.. ஓட்டுப்போடறவனும் மெஷின் தான் “

“ கூட்டணி வச்சு ஜெயிப்பீங்க! சட்டசபையிலே எங்களைப் பாத்தே நாக்கைத் துருத்திகிட்டு கத்துவீங்க “

“ இப்ப புருஷன் பொண்டாட்டி சேர்ந்து கட்சி அமைக்கிறதுதான் ட்ரெண்ட் போல “

“ அடுத்தவன்லாம் ஆப்பு வைக்க வேணாம்.. பெத்த புள்ளையே வைப்பான்.. அதான் லேட்டஸ்ட் “

“ எவன் சி.எம்.ஆனாலும் அல்லக்கைகளோட ஆட்சி மாறவே மாறாது “

சத்யராஜை மீறி தெரிபவர்கள், செண்பகமாக நடித்திருக்கும் மிருதுளா முரளி, கங்கை கொண்டானாக நடித்திருக்கும் ஜூனியர் மணிவண்ணன், ரகு; சத்யராஜின் ஆசை நாயகியாக வரும் வர்ஷா அஸ்வதி;

நாகராஜ சோழனைத் தவிர எந்த பாத்திரமும் முழுமை இல்லை என்பது திரைக்கதையின் கோளாறு. பல முடிச்சுகளை அவசரமாகப் போட்டதில் விரல்களும் மாட்டிக் கொண்ட அவஸ்தை இயக்குனருக்கு.

“ இனி படம் வந்தால் என்ன போனால் என்ன? “ என்கிற தெனாவட்டில் சத்யராஜ் நடித்த படம் இது. “ இனி சத்தியமாக படமே கிடைக்காது “ என்று பூரணமாக நம்பி மணிவண்ணன் இயக்கியிருக்கும், பழைய படத்தின் டிஜிட்டல் பிரிண்ட்.

மொத்தத்தில் : பெருங்காய டப்பா.

பாமரன் குரல் : அப்ப பாத்த மாதிரியே இருக்காருல்ல சத்யராஜ்.. தகடு போல!

0

கொசுறு

போரூர் கோபாலகிருஷ்ணாவில் வேர்க்க விறுவிறுக்க படம் பார்த்த ரசிகர்களிடம் ஒரே காமெண்டுதான்: ‘அமைதிப்படையைவே இன்னொரு தபா பாத்திருக்கலாம்’ . வாரா வாரம் தெலுங்கு படம் பார்க்க வரும் மனவாடுகள் இதில் மாட்டிக் கொண்டு முழித்த கதை சொல்லி மாளாது. மணிவண்ணனுக்கு மார்க்கெட் அவுட். சத்யராஜுக்கு சாப்டர் க்ளோஸ்.

0

Series Navigationவேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -2 Cover image மூன்று அங்க நாடகம்பிரபஞ்சத்தில் புலப்படாத புதிய ஐந்தாம் அடிப்படை உந்துவிசை [Fifth Force] கண்டுபிடிக்கத் தோன்றும் அறிகுறிகள்.