நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு — புத்தகம் ஒரு பார்வை.

நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு பற்றி 1953 இல் ஒரு புத்தகம் வந்துள்ளது. அதன் மறுபதிப்பு 2003 ஆம் ஆண்டு மணிவாசகர் பதிப்பகத்தில் மலர்ந்துள்ளது.

நாகநாட்டில் இருந்து காஞ்சீபுரம், காவிரிப் பூம்பட்டினம், சிதம்பரம் அதன் பின் பாண்டிநாடு என்று அவர்கள் வலசை வந்தது குறித்தும் அவர்கள் வணிகம், தெய்வ வழிபாடு, கொண்டுவிக்கப் போய் பொருளீட்டியது,தரும வட்டி வாங்கியது, சிவாலயங்கள் அமைத்தது, தருமமே குலதர்மமாகக் கொண்டது, வேத பாடசாலைகள், பசுமடங்கள் அமைத்தது, குளங்கள் வெட்டியது, அன்னதான மடங்கள் அமைத்தது, இறைத் தொண்டு பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் வங்கிகள், பங்குவணிகம், பத்ரிக்கைத் துறை, பல்கலைக்கழகங்கள் ஆகியன அமைத்து கல்விச்சேவையில் ஈடுபட்டதும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.தமிழ் இசைக்காகவும் தமிழுக்காகவும் செயலாற்றியது குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது.

வரலாற்றுப் பகுதி,வாழ்க்கை நிலைப் பகுதி, அறஞ்செயற் பகுதி என மூன்று பகுதிகளைக் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. காரைக்காலம்மையார், பட்டினத்தடிகள், கண்ணகி, இயற்பகை நாயனார் ஆகியோர் இவ்வினம் சார்ந்த பெருமக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிய நாடு வந்ததும் ஒன்பது கோயில்களாகப் பிரிந்து ஒன்பது நகரச்சிவன் கோயில்கள் நிறுவி வணங்கி வருவதும் திருமணத்துக்கு கோயிலில் பாக்கு வைத்துச் சொல்லிக் கோயில் மாலையை வாங்கி வந்து திருப்பூட்டுவதும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளது.

பாண்டி நாட்டில் மக்களோடு மக்களாகக் கலந்து வீடுகள் கட்டிக் குடியேறியது, அவர்கள் வணங்கிய காளி,கறுப்பர், மாரி, பிடாரி, ஐயனார் ஆகியோரையே தாமும் தொழுது வந்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திண்ணைப் பள்ளிக்கூடங்களில் மண்பரப்பி எழுதிப் படித்தது. ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதக் கற்றது, ஓலைச் சம்பளச் சீட்டு வாங்கிக் கொண்டு 3 முதல் 5 வருடங்களுக்கு வெளிநாடுகளுக்குக் கொண்டு விக்கப் போனது எல்லாம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வரும் முதல் பிறந்தநாளை புதுமை எனக் கொண்டாடுகிறார்கள். முதன் முதல் பள்ளி செல்லும் போது பிள்ளைகளை கார்த்திகைத் திருநாளில் வீடுகளில் வாழை நட்டு விளக்கேற்றி விநாயகர் கோயிலுக்கோ, சிவாலயத்துக்கோ குதிரை ஏற்றிச் சென்று சோதி தரிசனம் செய்து வரச் செய்கிறார்கள். இதை சூள்பிடி ( சூப்பிடி என்று இப்போது பேச்சு வழக்கு மருவி விட்டது ) என்ற அணையாத லாந்தர் விளக்குகள், மெழுகுதிரி விளக்குகளைக் குதிரை முன் பிடித்துக் கொண்டு கோயிலுக்கு அழைத்துச் சென்று வருவார்கள்.

தலை முதல் கால் வரை வைரநகை அணிந்த மகளிர் மார்கழித் திருவாதிரைப் புதுமை ( மணிவாசகரின் மார்கழி நீராடல் என்ற திருவெம்பாவையை ஆதாரமாக வைத்து ) கொண்டாடுகிறார்கள். திரஸ்டன் , நெல்சன் ஆகிய சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி எழுதி இருப்பதாகவும் இது பற்றிய புகைப்படங்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

திருப்பூட்டுதல் ( அரும்புக் கழுத்துரு ) , வேளாளப் பெண்களை மணம் முடித்தது, உபதேசம் கேட்பது ( ஆண்களுக்குப் பாதரக்குடி, கலா மடம், பெண்களுக்குத் துளாவூர் மடம் ) பற்றி எல்லாம் சொல்லப்பட்டுள்ளது.

முதல் பாகம் சுவாரசியம்.இரண்டாம் பாகம் கோயில் புள்ளி விவரம், ஊர் விவரம் பற்றியது. மூன்றாம் பாகம் வடநாடு, தென்னாடு வாரியாகச் செய்த அறச்செயல்களின் புள்ளி விவரம் பற்றியது. பல நூற்றாண்டுச் செய்திகளையும் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

வித்துவான் வயிநாகரம் அ. இராமநாதன் செட்டியார் தொகுத்தது. மகாமகோபாத்யாய, முதுபெரும் புலவர், சைவசித்தாந்த வித்தகர், பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார் அவர்களால் திருத்தி விளக்கி அமைக்கப் பெற்று சென்னை நகர முன்னாள் மேயர் (கானாடு காத்தான் ) ஆர். ராமநாதன் செட்டியார் அவர்களால் 1953 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.

இந்நூல் மணிவாசகர் பதிப்பகம் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் அவர்களால் 2003 ஆம் ஆண்டு மறுபதிப்புச் செய்யப்பட்டது. மிகப் பயனுள்ள நூல்.

Series Navigation