நான் செத்தான்

Spread the love

 

எப்போதும் இல்லாத முன்னிரவு…

முடிவெடுப்பதுதான் இப்பொழுது முக்கியம் எனப்பட்டது எனக்கு. இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்காக எனக்கு நானே கூனிக்குறுகும் தருணம். எனக்குள்ளே திமிர்ந்த ஏகப்பட்ட கேள்விகள் வல்லாயுதங்களோடு வரிசைபிடித்து நின்றன. இருட்டுக் குகையிலிருந்து வெளிப்படும் பறவை வாயிலிலிருந்து உலகைத் தரிசிப்பதற்கு முன், அந்தத் திருப்பத்தில் புதிய உலகைக் குறித்து ஏற்கெனவே ஒரு கனவு கண்டிருக்குமே, அது போலத்தான். இப்பொழுது ஊரடங்கிய அர்த்த இராத்திரியில்… யாவும் வெறிச்சோடிக் கிடக்கின்ற இந்த நிசப்தத்தில்… எனது பழைய வாழ்க்கை ஞாபகத்திற்கு வருகிறது. வளர்த்து ஆளாக்கப்பட்டது,கற்றது, தொழிலில் இறங்கியது, நண்பர்களோடு அரட்டையடித்தது, திருமணம் புரிந்தது, தேவையற்ற காரியத்திற்கும் மூன்றாவது நபர்களுக்கும் பணத்தையும் பொழுதையும் தண்ணீராய் இறைத்தது, மனைவி மக்களோடு வேண்டா வெறுப்போடு வாழ்ந்தது, இவற்றிற்கெல்லாம் மேலாக வாய்த்த இந்த அழகிய கணங்களை இம்சித்தது எல்லாம் படச்சுருள் போல கண்ணெதிரே படபடவென நகர்ந்தன. பிறக்கும்போது வெள்ளைத் துணிக்கு நிகராகக் கண்விழித்து அதில் காலப் போக்கில் சோபையிழந்து விபரீத வண்ணங்கள் தெளிக்கப்பட்டாலும், அந்த வெள்ளைத் துணி முன்னம் ஒரு பொழுதில் தான் இருந்த விதத்தை அறியாமலா இருந்திருக்கும்? அது தெளிவுறும் சமயம் அகோர வண்ணங்கள் யாவும் துகள் துகளாகத் தானாக உதிர்ந்துவிடுவது போல எனக்கும் நேர்ந்தது இன்று.

என்றோ ஒரு நாள் எனக்குப் பெற்றோர் ஊட்டிய ஞானம் இப்பொழுது மெல்ல மெல்ல விழித்தெழுந்து தலைநீட்டிப் பார்க்கிறது. அந்த ஞானபோதம் பெருங்கரமாய் உயர்ந்து என்னைக் குளிப்பாட்டத் தொடங்க, சில்லென்ற நீர் முற்றிலும் அன்பைச் சுமந்துகொண்டு எனது உச்சந்தலையில் விழுவதுபோன்ற உணர்வு. மாறித்தான் ஆக வேண்டும்.மாற்றத்தைத் என்னிலிருந்து தொடங்கி, குடும்பம்,பணியிடம், சமூகமெனப் படர வேண்டுமென உள்ளம்  தீர்மானிக்கத் தொடங்குகிறது. எல்லாம் இந்த முன்னிரவில்தான்.

முதலில் என்னிடம் குடிகொண்டுள்ள இணக்கமின்மையைத் தகர்த்தெரிய வேண்டும். அதனால்,இவ்வந்தகாரத்தில் ஒரு புது வெளிச்சம் எனக்குள் பிரகாசிக்கும். இத்தனை நாள் அது எங்கிருந்தது? ஏன் அந்த மகோன்னதப் பொழுதைத் தவறவிட்டேன் எனப் பலவாறு கேட்டுக்கொண்டபோது என்னில் இருக்கின்ற பிடிவாதமும் வறட்டுக் கெளரவமும், எனக்கெல்லாம் தெரியும் என்ற கல்விச் செருக்கும் வீம்பும்தான் என்னை யாரிடத்திலும் சமரசம் செய்யமுடியாதபடிக்கு ஏட்டிக்குப் போட்டியாக ஆட்டி வைத்திருந்தன என்பது இப்பொழுது தெளிவாகப் புரிகிறது.

உலுக்கல் 1

‘அப்பா அம்மாவிடம் முகம் கொடுத்துப் பேசியதில்லை. அப்பாவின் அறிவுரைகளைக் கேட்டுக் கேட்டுப் பன்னிரண்டு வயது வரை அவரோடு மோட்டார் சைக்கிளின் முன்கூடையில் அமர்ந்து சென்றேனே!வரின் தோள் மீது கை போட்டுப் பேசிக்கொண்டிருந்த நான், அதற்குப் பிறகு அந்த அன்னியோன்னியம் எங்குத் தொலைந்தது? அப்பாவின் மனப்போராட்டத்தை உணராமலேயே வளர்ந்துவிட்டேன். எனது படிப்பிற்காக ஒரு சம்பள நாளில் யாரோ ஒரு வியாபாரி ஆங்கில நாடாக்களையும் புத்தகங்களையும் கொண்டு வந்து கொடுத்துச் சுளையாக எண்ணூறு ரிங்கிட்டைப் பிடுங்கிச் சென்றானே! ஞாபகத்திற்கு வராதபடி எப்படி எனக்குத் தெரியாமல் போனது? பால்மரம் சீவும் அப்பா அம்மாவின் கூட்டுச் சம்பளமே 650.35 காசுதான். ஆங்கிலத் துணை உபகரணங்களை வாங்கித் தராததால்  அப்பொழுது பெற்றோரிடம் முறைத்துக்கொண்டிருந்தேன். என் மனம் நோகக்கூடாது என்பதற்காக அப்பா அந்தச் சம்பளப் பணத்தோடு தெரிந்தவரிடமிருந்து கைமாற்றாய்க் கொஞ்சம் கடன் பெற்று அந்த ஆங்கில நாடாக்களையும் ஆங்கிலப் புத்தகங்களையும் வாங்கித் தந்தாரே! அந்த நாட்களுக்குப் பிறகு, செலவுக் கடைக்கும் கடன்காரர்களுக்கும் பணம் செலுத்த வேண்டி அபச வார்த்தைகளையெல்லாம் காதில் தேக்கிக்கொண்டு என்னென்ன வேலையெல்லாம் செய்தார் என்பதெல்லாம் எனக்குத் தெரிந்திருந்தும், அதைக் குறித்துக் கொஞ்சமும் உணராதபடி எப்படி ஆனேன்? அதனால் கிராணிகளோடு வாதமிட்டு இருக்கிற அவரின் தோட்டத்து வேலையும் பறிபோனதே!

உலுக்கல் 2

‘அ’ ‘ஆ’வன்னா அறியாத அம்மாவின் ஏதோவொரு மட்கிப்போன சிந்தனையில் முரண்பட்டு என் ஆத்திரத்தில் ஒரு நாள் கொஞ்சமும் இங்கிதமற்றுத் தாயா பேயா என்று வாய்க்கு வந்தபடி திட்டினேனே! அந்த வேதனையோடு அம்மா பல நாட்கள் உணவு உண்ணாமலேயே வேலைக்காட்டிற்குப் போய் வந்திருக்கிறாள். என்றைக்காவது மனந்திருந்தி ‘அம்மா மன்னிச்சிடுங்க!’ என்று கேட்டிருக்கின்றேனா?சரி,பள்ளி வாழ்க்கையில்தான் அப்படி, பல்கலைக்கழகப் பட்டம் பெற்றபோது அம்மா என்னைப் பற்றிப் பெருமையாய் ஊரெல்லாம் பேசியது எனக்குத் தெரிய வந்தபோது எனக்குப் புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது என்ற மிதமிதப்பில் அம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டினேனே! ஞாபகத்தில் இருக்கிறது இன்னமும். ஆனாலும், ஏன் சின்னஞ்சிறிய விஷயங்களுக்கெல்லாம் வீண் வறட்டுப் பிடிவாதம் எனக்கு? என்ன பாவம் செய்தார்கள் அவர்கள் என்னை ஈன்று வளர்த்து ஆளாக்க?

உலுக்கல் 3

நான் வேலைக்கு வந்த புதிதில் எனக்கு மட்டும் வேண்டிய பொருட்களையெல்லாம் என் வாடகை வீட்டுக்கு வாங்கிப் போட்டுவிட்டு அவர்களுக்குப் பணம் அனுப்ப சுணக்கம் காட்டினேனே! எவ்வளவு பெரிய சுயநலவாதி நான்! வயது மூப்பின் காரணமாக நான்கைந்து மாதங்கள் தோட்ட வேலையிழந்த பெற்றோருக்குப் பணம் அனுப்பாமலேயே இருந்தேனே? எனக்கு வேண்டிய வீடு, எனக்கான வாகனம் என வேண்டியதையெல்லாம் வாங்கிக் குவித்த நான், அப்பாவின் மருத்துவத்திற்காக என்ன செய்தேன் ? எனக்குத் தெரிந்தும் தெரியவில்லை, அவரது கடைசி நிமிடம் வரை வேலை செய்தார். ஒரு பாக்கெட் சிகரெட் வாங்குவதற்காகவும் வீட்டுச் செலவு சாமான் வாங்குவதற்காகவும் தினசரி ஒரு தமிழேட்டை வாசிப்பதற்காகவும் கோழிப் பண்ணைக்குப் பாதுகாவலர் வேலைக்காகத் தனது பழுப்பேறிய ஹொண்டா மோட்டார் சைக்கிளை முடுக்கி மூன்று வெள்ளிக்குப் பெட்ரோலை நிரப்பிக்கொண்டு பதினைந்து கிலோமீட்டர் தாண்டி வெயிலோடும் மழையோடும் லொக்கு லொக்கென்று இருமிக் கொண்டு போயிருக்கிறார்! ஏன்? என்னையும் என் சம்பாத்தியத்தையும் என் தயவையும்  எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை எனப் பட்டிருக்கிறது அவருக்கு.என்னை வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்த பெற்றோருக்கு என்ன கைம்மாறு செய்திருக்கிறேன்?

உலுக்கல் 4

பட்டையும் கொட்டையும் போட்டுக்கொண்டு ஊரிலுள்ள ஆலயத்திற்கெல்லாம் போய் ஒலிபெருக்கி போட்டு ஆன்மீக அறிவுரை கூறுகிற எனக்கு முதலில் மனிதனாவதற்குத் தகுதி உண்டா ? ஆன்ம + ஈகம் என்றால் என்னவென்று தெரியாமலேயே வெளிப்பகட்டு நிமித்தம் அதிகம் பேசியிருக்கிறேன். அப்பா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு நாள், வயதானால் போய்த்தான் தீரவேண்டும் என்று அம்மாவிடம் நெஞ்சறிந்து நான் கொட்டிய கூரிய சொற்களால் , அம்மா எத்துணை வேதனைப்பட்டிருப்பார்! மருத்துவ வார்டில் மாதம் முழுக்க அப்பாவின் கால் மாட்டிலேயே கதியாய்க் கிடந்து வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டு அவர் குணமடைந்து திரும்பிவிடுவார் என்று நம்பிக்கொண்டிருந்த அம்மாவை.. நான் பேசிப் பேசியே நிலைகுலையச் செய்துவிட்டேன். இதில் ஆலய நிகழ்ச்சியில் அம்மாவின் பெருமையைப் பற்றிப் பேசுகிறேன் வேறு! எனக்கிருக்கின்ற வசதிக்கு மருத்துவ நிபுணரைச் சந்தித்திருக்கலாம். செய்தேனா? பெரிய தத்துவ ஞானியைப் போல் வயதைக் காரணம் காட்டி பணம் செலவாகும் என்பதற்காகச் சாதாரண சிகிச்சையோடு முடித்து அப்பாவை அனுப்பிவிட்டேனே! எனக்கு மனமே இல்லையா?

உலுக்கல் 5

அப்பாவின் காலம் முடிந்த பின்பு, நானாக ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டேன். அந்த வாழ்வின் நீட்சியாக அம்மாவைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லாது இருக்க எப்படி என்னால் முடிந்தது? அப்படியே போனாலும் ஆறுதலாய் ஒரு வார்த்தையாவது என்னால் கூற முடிந்திருக்கிறதா? எனது பிள்ளைகளைக்கூட அம்மாவிடம் நெருங்கத் தடைவிதித்துக்கொண்டிருக்கிறேனே. அம்மா என்ன அநாகரிமானவரா? என்னை ஈன்று வளர்த்து ஆளாக்கிய தெய்வமாயிற்றே! அம்மாவின் மனம் என்ன கல்லென்றால் என் சொல்லென்ன மாணிக்கமா மரகதமா? இன்று என் வாழ்க்கையில் என்ன இன்பம் இருக்கிறது? அன்பான மனைவியோடு புரிந்து வாழ முடிகிறதா? பெற்றோரை அதட்டி அடக்கியாளத் தெரிந்ததால், மனைவியிடம் அன்பு செலுத்த இயலவில்லை. 50% ஆண்மையும் 50% பெண்மையும் அடங்கிய ஆணும் பெண்ணுமற்ற பிறவியோ நான்? அப்படியானால், என் பொய்மை பெற்றோரிடம் மட்டுமே வெந்திருக்கிறது! அதனால், உறவில் சுமூகமில்லை. பிள்ளைகளிடமும் கறாரான பேச்சு!

உலுக்கல் 6

ஆண்டிறுதியில் பதினான்கு நாட்கள் பக்தர்களைத் திரட்டிக்கொண்டு திருத்தலச் சுற்றுலாவெனத் தமிழகம், ஆந்திரா, கேரளா என்று யாத்திரை போய்,அப்படியே யாரோ ஒரு சாமியாரைப் பார்த்துவிட்டு…. அடேயப்பா! திரும்பி வந்தபோது சாட்சாத்  ஒரு மகான் போல சாந்த சொரூபியாய், உலக ஆசைகளை வெறுத்ததுபோல தாடை முழுக்க தாடியாய் … நெற்றியிலும் கழுத்திலும் ஹ்ம்ம்… சுவாமி விவேகானந்தர்கூட என் காலடியில் அமர்ந்து தீட்சை பெற வேண்டும்! ச்சே,என்ன வகை ஒப்பனை இது!

நான் செய்த தவறுகளுக்குக் கழுவாயோ புனிதத்தலமோ வேண்டாம். வாழ்கிற காலத்தில் பூமியில் அழுந்திய இந்தக் கால்களோடு இதுதான் நிஜமெனச் சிலவற்றைச் செய்தாக வேண்டும். ஆம். உடனே செய்தாக வேண்டும்!இப்பொழுது பணியிடத்தில் ஏற்பட்டிருக்கிற மனத்தடையும் குடும்பத்தில் சுமுகமற்ற நிலைப்பாடும் என்னை எங்கேயே பிடித்துத் தள்ளுவதைப் போல் நான் உணரத் தலைப்பட்டிருக்கிறேன். இந்த வினாடியில் எனது ஆழ் மனத்திற்குள் பெற்றோரால் இளம்பிராயத்தில் ஊட்டி ஊட்டிப் படிந்திருந்த மனிதம் சார்ந்த ஈரம் ஊற்றெடுக்கத் துவங்கியுள்ளது.மிக மிகச் சுலபமான ஒன்றுதான்; இந்த முன்னிரவு விடிவதற்குள் வாழ்க்கை முறையை மாற்றம் செய்தாக வேண்டும்!

விடியற்காலை வெள்ளிக் கிழமை- பொதுவிடுமுறை…

இப்பொழுது கொஞ்சம் வெளியே நடக்க வேண்டும். என்னைத் தொட்டுச் செல்லும் காற்றை உள்ளிழுத்துச் சுகிக்க வேண்டும். ஆடிக் குலுங்கிடும் பூக்களோடு பேச வேண்டும்.பூசைக்காக வரவில்லையென்று பூக்களிடம் கிசுகிசுக்க வேண்டும். முடிந்தால் அவற்றைப் பறிக்கக்கூடாது; அவை தெய்வ சந்நிதானதத்திற்காக வளர்க்கப்பட்டிருந்தாலும்கூட!

எத்தனையெத்தனை அதிகாலைகளில் என்னைக் கண்டு கழுத்தைக் குறுக்கி வணக்கம் சொல்லி வாலாட்டுகிற தோமியைப் பார்க்க வேண்டும்.  காது மடல்களை மடக்கி நெட்டி முறிப்பதுபோல் முன்பாதம் பதிவதை இன்றாவது பார்த்துத் தலைவருட வேண்டும். மாசுமறுவற்ற அதன் கண்களில் உற்று விழிக்க வேண்டும். அதன் கழுத்துச் சங்கிலியைக் கழற்றிவிட்டாலும் எங்கேயும் ஓடாமல் எனதன்பில் கட்டுப்பட்டிருக்கும். இன்றாவது அதனோடு முகம் பார்த்துப் பழக வேண்டும்.

அப்படியே வீட்டு வளாகத்தில் மலர்ந்திருக்கும் பூச்செடிகளுடன் கைக்குலுக்கிப் பார்க்க வேண்டும். சிரிக்கும் பூக்களுக்குப் பதில் சிரிப்பைக் கலங்கமின்றி அளிக்க வேண்டும். அதன் மென்னிதழ்களைத் தடவிப் பார்க்க வேண்டும். முடிந்தால் அவற்றின் வேர்களில் நீருற்றி மகிழ வேண்டும்.

செடிகளுடன் பூக்களாய் மாறும்போது அண்டைவீட்டுக் குழந்தைகள் ‘அங்கிள்’ என்று அழைக்கும். அந்த அன்பை நான் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் பந்து இன்றும் என்னை வந்து மோத வேண்டும். அந்தப் பழைய கோபங்களும் மேட்டிமையும் தொலைந்துபோக வேண்டும். பிள்ளைகளின் உலகத்திலிருந்து எனக்கான வாழ்வைத் தொடங்கத்தான் வேண்டும்.

இவற்றையெல்லாம் முடிப்பதற்கு உயர்ந்த கல்வியோ யாருடைய அனுமதியோ தேவையா எனக்கு? ஆனாலும், எனக்குச் சில கால அவகாசம் தேவைப்படுகிறது. குறைந்தது ஓரிரு மாதங்கள் அதுவாக அவையாக அவர்களாக மாறித்தானாக வேண்டும். என்னால் முடியும். எனக்கிது கழுவாய்! ஆம். இத்தனை காலம் வாழ்ந்த வாழ்க்கைக்கான கழுவாய்.

இன்னும் கொஞ்சம் சுயநசிப்புத் தேவைப்படுகிறது எனக்கு. என்னில் காயங்களைச் செதுக்கிக்கொள்ளும் மார்க்கம் வேண்டும். இந்த முறை முடிந்தால் ஒரு மிதிவண்டியை எடுத்துக்கொண்டு என் தோட்டத்திற்குச் சென்று வர வேண்டும். அநேகமாக அங்கு வெகுச் சில குடும்பங்கள் மாத்திரமே இருக்கலாம். அவர்களுக்கும் என்னை அடையாளம் தெரியாமல் போகலாம். பரவாயில்லை. அல்லது மாரியம்மன் ஆலயமாவது இருக்குமல்லவா? அங்கு எனது பிரார்த்தனையைச் செய்தாக வேண்டும். நாகரிகமும் பணமாலையும் ஆதிக்கம் செலுத்தாத அந்த சந்நிதானத்தில் உன்னதம் உண்டு. முற்றிலும் உண்மை!

எனது புதிய நாட்களுக்கான தொடக்கங்கள்தாம் இவை. இவற்றின் நீட்சிதான் என் குடும்பத்தில் தொடரப்போகிறது.

பன்னிரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு வெள்ளிக்கிழமை…

நான் தயார் நிலையில் அதுவும் தவிர்க்கவியலாத் தயக்கத்தில் இருக்கிறேன். எப்படி ஆரம்பிப்பது? யார் ஆரம்பிப்பது? இது எந்த வகை நடிப்பென்று கமலாவும் பிள்ளைகளும் நம்ப முடியாமல் திகைத்துப் போனால்?! “ கமலா, இன்னிக்கு நாம எல்லாரும் கோயிலுக்குப் போயிட்டு வருவோமா?” என்று அழைத்துப் பார்க்கலாமா? “கோயிலா! வேண்டாம்” என்று வழக்கம்போல் அவள் சொல்லிவிட்டால் என்ன செய்வது?

துணிந்து அழைத்துப் பார்க்கிறேன்.

என்றும் இப்படிக் கரிசனமாய் அழைக்காத நான் இன்று அழைத்திருக்கிறேன். என் மனம் மாறியிருந்ததால் முகமும் மாறியிருக்கிறது. அதைத் தொடர வேண்டும். இப்பொழுது காலை மணி ஏழு. எப்பொழுதும் இந்த நேரத்திற்கெல்லாம் உடைகளை மாற்றிக்கொண்டு மெதுநடைத் தளத்திற்குத் தனியனாய் நடக்கக் கிளம்பிடுவேன். ஆனால் மாறுதலுக்காக இன்று என் மனைவியையும் உடன்வர அழைத்துப் பார்த்தால் என்ன? இதோ, அழைக்கிறேன். கமலா புருவம் குவித்து அதிசயமாய்ப் பார்க்கிறாள். அவளது பார்வை இன்னும் படுத்துறங்கும் வாண்டுகள் மீது கவிகிறது. அவள் ஒன்றும் சொல்லவில்லை; பிள்ளைகளை எழுப்பி, “அப்பாக்கூட வெளியே போவோம் எந்திரிங்க!” என்கிறாள்.

என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, பிள்ளைகள் மூவரும் சடாரெனப் போர்வையை உதறிவிட்டு அம்மாவை வந்து தழுவிக்கொண்டு காலை முத்தம் கொடுத்தனர். எல்லார் முகத்திலும் காலைப்பனியைப் போன்றதான இதமான பொலிவு! மனோகரம் நிரம்பிய காலைக் காட்சியில் எக்களித்துப் போகிறேன். ஆனாலும், எப்பொழுதும் பயந்து நடுங்கும் பிள்ளைகள், எனது அண்மையக் கால செயல்பாடுகளை உன்னித்ததாலோ என்னவோ, அரும்பு நகை மிளிர என் எதிரே வந்து அடிமைகள் போல் கைகளைக் கட்டிக்கொண்டு நிற்கின்றனர். கள்ளங்கபடமற்ற அந்த முகங்களைப் பார்க்கையில் என் விழிகளில் திவலைகள் உடைகின்றன. அவர்களை ஆரத் தழுவுகிறேன். கமலா தன் கண்களைக் கசக்கிக்கொள்கிறாள்.

“ கமலா, மொத நான் கோயில்னு சொன்னத எங்க அம்மா வீட்டை… வர்றீயா? சாயங்காலமா போயிட்டு வருவோம்”

அவள் தலையை மட்டும் அசைக்கிறாள். நான் அவர்களை நோக்கிக் கைகூப்புகிறேன்!

…….. முற்றும்…….

Series Navigationமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4நச்சுச் சொல்