நான் யாரு?

நான் யாரு?

மாடியில் துணி காயபோட்டுவிட்டு அவரும் அவர் மனைவியும் கீழே இறங்கி கொண்டிருந்தார்கள்

“ஏங்க நான் கடைக்கு போய் காய் ஏதாவது வந்திருக்கான்னு பார்த்திட்டு வாங்கி வாரேன். நீங்க வீட்டுக்கு போங்க ”

கடைசி படி இறங்கி மனைவி கடைக்கு போவதை வெறிக்க பார்த்துவிட்டு திரும்பியவரின் மண்டையில் மின்னலேன சின்னவலி வந்து போய் சரியாயிற்று. நடந்து சென்ற அவர் கதவை திறந்து உள்ளே நுழைய எத்தனிக்கையில்

“சார் என்ன வேண்டும் நான் இங்க இருக்கிறேன் ”

என்று வண்டியை துடைத்து கொண்டிருந்த மணி சத்தமிட, அப்பொழுது தான் தவறான வீட்டில் நுழைந்து விட்டது தெரிய , திரும்பினால் தானே நம் வீடு வரும் என லேசாக நினைவு வந்தது. அவர் நடந்தார் திரும்பினார். திரும்பினால் வரிசையாக இருந்த நாலு வீடுகளும் கதவு சாத்தி இருந்தன. அதில் அவருடைய வீடு எது என அவருக்கு நினைவுக்கு வரவில்லை. என்ன செய்வது . கடைக்கு போன அவர் மனைவியும் வரவில்லை. எல்லா வீட்டுகதவுகளை தட்டுவது சரியானதாக இருக்காது என நினைத்து , மனைவியை தேடி கடைக்கு போவதாக முடிவெடுத்து நடந்தார். நடந்து கொண்டே இருந்தார் கடை வரவில்லை. சாலை நீண்டு கொண்டே சென்றது யாராவது தெரிந்தவர் வருகிறார்கள் என அவர் கண்கள் அலைந்தன ஆனால் எந்த முகமும் அவருக்கு தெரிந்ததாக இல்லை. ரொம்ப தூரம் வந்து விட்டதாக மனது சொல்ல என்ன செய்வதென்று அறியாமல் கண்ணில் தெரிந்த பிள்ளையார் கோவிலில் போய் அமர்ந்தார். லேசாக கண் அயர்ந்து விட்டார். திடீரென்று விழிப்பு வர அய்யோ நம்மளை தேட ஆரம்பித்து
இருப்பார்களே என்ற பதட்டம் வர, பக்கத்தில் உள்ள டெலிபோன் பூத்தில் போய் போன் பண்ணலாம் என சென்றார். எந்த எண்களும் நினைவுக்கு வரவில்லை. கஷ்டப்பட்டு யோசித்ததில் பழைய நண்பன் கணபதியின் தொலைபேசி எண் நினைவுக்கு வர தொலைபேசி பண்ணினார் . அழைப்பு சென்று கொண்டிருந்தது. யாரும் எடுக்கவில்லை. பதட்டம் பற்றி கொள்ள அவருக்கு வேர்க்க ஆரம்பித்தது. அழைப்பு கட்டாகி விட அவருக்கு அழுகையே வந்து விடும் போல இருந்தது. இன்னொரு தடவை முயற்சிக்காலம் என்று போன் செய்தார். நல்லவேளை இப்ப ஒரு பெண் எடுக்க

“கணபதி இருக்காங்களா”

“அவரு வெளியே போயிருக்கார்
நீங்க யாரு”

‘நான் …………….’
ஆமா என் பெயர் ………………………………..”

அவருக்கு நினைவுக்கு வரவேயில்லை.

Series Navigationக லு பெ (தெலுங்கில்: சாயி பிரம்மானந்தம் கொர்த்தி , தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்)மருத்துவக் கட்டுரை – கல்லீரல் கரணை நோய் Cirrhosis Liver