நிழல் வலி

Spread the love

சாமிசுரேஸ்

என்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது
ஊமையாய் முறிந்து போன புற்களை
மெல்லத் தடவி வார்த்தேன்
பதுங்கித்திரிந்த மரங்களுக்கு இறகுகள் பொருத்தினேன்
என் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன்
கண்கள் விரியத்தொடங்கின

——–

இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை
யாரிடம் கேட்பது
வாழ்வின் சுவடுகளில்லை
ஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த
பிரளயம் அரங்கேறி முடிந்து
மௌனமும் கதறலுமே எதிரொலியானது
உயிர் மட்டும் துடித்து எரிகிறது

மயான தேசத்தின் துர்நாற்றம் தீர
இன்னும் எத்தனை ஆண்டுகள் கரையும்.
கேள்விகளைக் கைப்பிடித்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறேன்
நுகங்களால் நிலம் தோண்டிச் சுவாசித்தேன்
ஏமாற்றங்களும் சந்தேகங்களும் கதறிக்கொண்டிருந்தன
எம்மை நாமே புண்ணாக்குவதைத் தவிர யாதறியோம்

——–

உடலின் பாகங்களில் கலந்து நகரைப் பிரசவித்தேன்
மேகங்கள் மழையைச் சொரிந்தன
அழகிய பறவைகளின் வரவிற்காய்
என் மனவெளியினுள் கூடுகட்டினேன்
என் நிலம் வளரத்தொடங்கியது
மனிதர்களை பிறப்பிப்பதற்காய் கருக்கொள்ளத்தொடங்கினேன்
30.03.2011

Series Navigationஒரு நூற்றாண்டுக் கழிவுகள்இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி