நீங்காத நினைவுகள் – 6

8.6.2013 “ஹிந்து” ஆங்கில நாளிதழில் பிரபல எண்கணித ஜோதிடர் அமரர் நம்புங்கள் நாராயணன் அவர்கள் மறைந்த நாளை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தார் அவரது புகைப்படத்துடன் கொடுத்திருந்த விளம்பரத்தைக் காண நேர்ந்தது. அவரது வயதுக்குப் பொருந்தாத குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவரது அறிமுகம் கிடைத்த நாளில் நடந்தவை யாவும் நினைவுக்கு வந்தன.
1980 களின் தொடக்கத்தில் ஒரு நாள். நான் பணி புரிந்துகொண்டிருந்த அஞ்சல் துறைத் தலைவரின் அலுவலகத்தில், எனது அறைக்கு அடுத்த அறையில் இருந்த குப்புசாமி எனும் அலுவலர், தமது தொலைபேசியில் என்னை அழைத்து, “பிரபல எண்கணித நிபுணர் திரு நம்புங்கள் நாராயணன் அவர்கள் இப்போது என் அறையில் இருக்கிறார். தொலைபேசியில் உங்களோடு பேச விரும்புகிறார். கொஞ்சம் அவரோடு பேசுங்கள்,” என்றார்.
“பக்கத்து அறைதானே, சார்? இதோ நானே அங்கு வந்து அவரைப் பார்த்துப் பேசுகிறேன். அதுதானே மரியாதை? எவ்வளவு பெரிய மனிதர் அவர்!” என்றேன்.
“இல்லை, இல்லை! முதலில் உங்களோடு அவர் தொலைபேசியில்தான் பேச விரும்புகிறார். முதலில் பேசுங்கள். அதன் பின் அவரைச் சந்திக்கலாம்,” என்ற குப்புசாமி ஒலிவாங்கியை அவர் கையில் கொடுத்துவிட்டார்.
நேரில் நாங்கள் அதற்கு முன்னால் பார்த்துக்கொண்டதோ, சந்தித்துக் கொண்டதோ இல்லை. ஒருவர்க்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டபின் “நான் உங்களைப் பார்க்க வருகிறேனே, சார்? பக்கத்து அறைதானே?” என்றேன்.
அவர் ஒப்புக்கொள்ளவில்லை: “வேண்டாம். நாம் நேரில் சந்திப்பதற்கு முன்னால் நான் உங்களோடு தொலைபேசியில் ஒரு நிமிஷம் பேசவேண்டும். …”
“சரி, சொல்லுங்கள்.”
“ஏதேனும் ஒரு பூவின் அதாவது மலரின் பெயரை நினைத்துக்கொள்ளுங்கள்.”
“சரி,” என்ற நான் மல்லிகைப்பூ என்று மனத்துள் உடனே நினைத்துக்கொண்டேன். ஆனால் அவ்வாறு நினைத்ததன் பின் மறு நொடியே, ‘மல்லிகைப்பூ என்பது அன்றாடம் அடிபடும் சாதாரணப் பெயர். வேறு பூவின் பெயரை நினைப்போம்,’ என்றெண்ணிய நான் தாமரைப் பூ என்று மனத்துள் நினைத்துக்கொண்டேன்.
மறு கணமே, “பூவின் பெயரை நினைத்தாகி விட்டதா?” என்று நம்புங்கள் நாராயாணன் வினவினார்.
“ஆயிற்று.”
“தாமரைப் பூ என்று நினைத்தீர்களா?” என்று அவர் வினவியதும் நான் வியந்து போனேன். ஆனால், அடுத்து அவர் சொன்னதுதான் என்னை வியப்பின் விளிம்புக்கே இட்டுச் சென்றுவிட்டது.
“முதலில் மல்லிகைப் பூ என்று நினைத்துவிட்டுப் பிறகு தாமரைப்பூ என்று மாற்றிக்கொண்டீர்கள்தானே?” – இவ்வாறு அவர் கேட்டதும் தூக்கிவாரித்தான் போட்டது.
இவ்வவு சரியாக ஊகிப்பது எவ்வாறு சாத்தியமாயிற்று என்று கேட்க நினைத்தாலும், அவரிடம் அது பற்றிக் கேட்கவில்லை. அவரது அந்த அமானுஷ்ய சக்தி பற்றியும் extra sensory perception பற்றியும் பத்திரிகைகளில் வந்திருந்த செய்திகளை ஏற்கெனவே படித்திருந்ததுதான் காரணம். எனினும் எனது வியப்பை அவரிடம் தெரிவிக்காதிருக்க முடியவில்லை. ”நீங்கள் இவ்வளவு சரியாக ஊகித்தது ரொம்பவும் ஆச்சரியமான விஷயம், சார்!” என்று மட்டும் சொன்னேன்.
மறு நிமிடமே அவர் எனது அறைக்கு வந்து அமர்ந்தார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஒரு முறை தாம் ஒரு விபத்தில் சிக்கி, உயரத்தில் இருந்து கீழே விழுந்தது, அதன் விளைவாகத் தம் தலையில் அடிபட்டது, அதன் பின்னரே தமது மூளையில் ஏற்பட்ட மாற்றத்தாலோ என்னவோ அத்தகைய அமானுஷ்ய சக்தி தமக்கு ஏற்பட்டது ஆகியவற்றைப் பற்றித் தெரிவித்தார்.
பில் கிளிண்டன் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக இருந்த போது, ஒருவன் அவரைத் தாக்கிக் கொல்ல விருந்தது பற்றிய தகவலை முன்கூட்டியே அவருக்குத் தெரிவித்ததையும், அது உண்மைதான் என்று மெய்ப்பிக்கப்பட்டதன் பிறகு, தமது எச்சரிக்கைக்கு அவர் நன்றி தெரிவித்ததையும், தம்மை அமெரிக்காவுக்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்ததையும், அச்செய்தி அமெரிக்க நாளிதழ்களில் வந்ததையும் கூறினார். அந்நாளிதழ்களின் நறுக்குகளையும் என்னிடம் காட்டினார். நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க, சில நறுக்குகளின் புகைப்பட நகல்களை எனக்கு அனுப்பிவைத்தார். (அண்மையில் வீடு மாறியதில், அவற்றை வைத்த இடம் நினைவுக்கு வராமையால் அவற்றில் அடங்கிய செய்தியின் மொழி பெயர்ப்பு, இதழ்களின் பெயர்கள், தேதிகள் ஆகியவற்றை இங்கே தெரிவிக்க முடியவில்லை.)
பிறர் மனத்துள் புகுந்து பார்த்து அவர்களின் சிந்தனைப் போக்கைச் சரியாக ஊகிப்பதும், வருங்கால நிகழ்வுகளை முன்கூட்டியே மனக்கண்ணால் பார்த்தலும் எவ்வாறு சாத்தியமாகிறதோ, தெரியவில்லை!
முதலில் மல்லிகைப்பூ என்று நினைத்துவிட்டுப் பின்னர் அதைத் தாமரைப் பூ என்று மாற்றிக்கொண்டதைக் கண்டுபிடித்த அவரது சக்தி அப்போது எனக்களித்த வியப்பினின்று இப்போதும் நான் விடுபடவில்லை!

jothigirija@live.com

Series Navigationமொழிபெயர்ப்புக் குறுநாவல் – இறுதிப் பகுதி ஒரு சதைக்குதறல் ஒரு வெடிச்சிதறல்வெற்றி மனப்பான்மை