நீண்டதொரு பயணம்

 
ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு
 

 

நீண்ட தூர பயணம் தான்

இதற்கு முன்பும்,

இதற்கு பின்பும் ஒருவரு மில்லை.

தனித்து விடப்பட்டும்

தனியன் என்று ஒப்பும் மனமில்லை !

சொந்தம் கொண்டாடும்

சொந்தங்களே சொந்தமில்லை.

பிடி மண்ணில்

ஆசைபட்டு நிற்குமா மனம் ?

 

பொம்மையை இறுகப் பற்றி

மழலைக் குணம் ஒவ்வொரு

மனிதத்திடமும்.

காதலன் காதலியையும்

காதலி காதலனையும்

பொருளாகப் பாவிக்கும் உயர்ந்த குணம்

பெற்றோர் பிள்ளைகளையும்

உரிமை பாராட்டட்டும்.

கொத்தடிமைகள் தான் ஏதோ

ஒரு வகையில் !

 

நான்கு பிள்ளைகளுக்குள்

தாயும் கூட உடமைதான்

தனதாக்க வென்றே

தவித்துப் போகிறது நெஞ்சம் !

பாச விலங்கிற்கு முன்னாக

ஒவ்வொருவரும்

தூக்கி எறிந்துவிடத் துரித கதியில்

முடிந்துவிட வில்லை

விருப்பம் என்று எடுத்துக் கொள்ள

துணிகர முயற்சி இல்லை.

 

வாழ்க்கையின் சரிக்கட்டுதலுக்கென

மறுஜென்ம கதைகளைத்

திரித்து விடுகிறது உலகம் !

பயம் கொண்டவர்களின் முதுகுகளில்

யானை சவாரி !

சுயமாக சிந்தித்துணர்தலுக்கு

ஒரு சீவனும் பிறக்கவில்லை.

பிறந்திருந்தாலோ

அது பாசத்தின்

வட்டத்திற்குள் இல்லை !

 

பார்வைக்கு எட்டாத உலகத்தில்

பார்க்கப்படும்

பார்வையாளனுக்கு

அவனவன் நீதி !

உலகத்தின் ஒரு துண்டில்

நின்று கொண்டு

நீதி தேடும் எனக்கோ

நீதியின் துளி மட்டுமே

புசித்தலுக் கென்று பரிமாறப்படுகிறது.

 

+++++++++++++++++++++++++

Series Navigationஅவசரகாலம்கோமதி மாமியாத்து கொலுவுக்குப் போகலாமா?