நூபுர கங்கை

 

பழமுதிர் சோலையில்
நூல் விடும் கண்ணீர்
ஏன் இந்த சோக இழை?

கல் மனம் உருக்கிய‌
மோனத்தின்
வெள்ளி நீர்க் கொடியிது.

அழகர் மலை இங்கு
பாறை விரித்து அம‌ர்ந்து
ப‌த்மாச‌ன‌ம் செய்த‌து.

குளிப்ப‌வ‌ர்க‌ளுக்கு
முதுகில் சாட்டைய‌டிக‌ள்
த‌ண்ணீர்க்க‌யிற்றில்.

ம‌லையே போதையில்
புதைந்த‌துவோ?
பாட்டில்க‌ளில் டாஸ்மாக் தீர்த்த‌ம்.

கள்ளழகனா?கதிர் வேலனா?
மெல் ஒலி உதிர்த்து
நீர் நடத்தும் பட்டிமன்றம்.

அடர் இலையில் சுடர் மலரில்
நிழல் பரப்பிய சங்கப்பலகையில்
திருமுருகாற்றுப்படை இது.

கொத்து கொத்தாய் குரங்குக்குட்டிகள்
ம‌னிதத்”தேர்வில்” தோற்றுப்போன‌தில்
கிழிந்து கிட‌ந்த‌து “டார்வின்”புத்த‌க‌ம்.

நூபுரச் சிலம்பு உடைந்ததில்
நீர்ப்பரல் யாவும்
பாண்டியன் கண்ணீர்த்துளிகள் தான்.

திருமாலிருஞ்சோலை ந‌டுவே
காம‌ம் செப்பிய‌ தும்பிக‌ளின்
சிற‌குத்துடிப்பில் திரும‌ண‌ங்க‌ள்.

சுடுவெயில் ம‌துரைக்கு
ப‌சுமயில் தோகையின் சாம‌ர‌ம்
க‌விதைக‌ள் வீசும்.

=========================

Series Navigationகடவுளும் கடவுளும்அக்கினி புத்திரி