நேரு எனும் மகா மேரு !

ஜோதிர்லதா கிரிஜா

நேரு ” எனும் பெயரைக் கேட்டதுமே இந்தியர்களின் நினைவில் தோன்றுபவர்  சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருதான்.

ஒருவரை விமர்சிக்கும் போது, நடுநின்று விமர்சித்தலே நேர்மையான அணுகு முறையாகும். கட்சிச் சார்புடையவர்கள் அப்படிச் செய்வதே இல்லை.  ஏனெனில் நேர்மையான விமர்சனங்களைக் கட்சித் தலைமை மதிப்பதில்லை என்பதோடு அதைச் செய்பவர்களைக் கண்டிக்கவும் தண்டிக்கவும் செய்கிறது.

குழந்தைகளைப் பெரிதும் நேசித்த ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 குழந்தைகள் தினமாய்க் கொண்டாடப் படுகிறது என்பது நமக்குத் தெரியும். அவர் மறைந்தது மே 27, 1964-இல்.

இந்தியா இன்று உலகமே வியக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்பதற்கு அடித் தளம் அமைத்தவர் ஜவாஹர்லால் நேருதான் என்பதை அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்கள் அங்கீகரித்துள்ளதாய்த் தெரியவில்லை. காஷ்மீர் பிரச்னையில் அவர் சொதப்பினார் என்பது உண்மைதான். அமெரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்திரா காந்தியே, ‘ காஷ்மீர் பிரச்னையை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபைக்கு எடுத்துச் சென்றதன் வாயிலாக என் தந்தை பெருந்தவறு செய்துள்ளர் என்பது என் கருத்தாகும்’ என்று துணிச்சலோடு அறிவித்துள்ளார். இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு, மவுண்ட் பேட்டனை அவர் இங்கே வைசிராய் பதவியில் இருத்திக் கொண்டிருந்திருக்கக் கூடாது. இது ஒரு தவறென்றால், தம் நெருங்கிய நண்பர் ஷேக் அப்துல்லாவைப் பெரிதும் நம்பி துரோகத்துக்கு ஆளாகி மோசம் போனது இரண்டாம் தவறு. சர்தார் வல்லபாய் படேலின் அதிகாரங்களில் அவர் குறுக்கிடாதிருந்திருந்தால் காஷ்மீர் முழுவதும் இன்று இந்தியாவின் வசம் இருந்திருக்கும். போகட்டும்.  இப்போது அவருடைய சாதனைகளுக்கு வருவோம்.

பெரும் பணக்காரக் குடும்பத்தின் மகனாய்ப் பிறந்திருந்தாலும், ஒரு முறை தம் வீட்டு வளகத்தில் குழுமிய இந்திய விவசாயிகள் எலும்புந்தோலுமய்க் கிழிந்த ஆடைகளுடன் காணப்பட்டது கண்டு அதிர்ந்து, உள்ளம் உருகியவர். ’ இந்தியாவில் குடியானவர்களின் நிலை இந்த அளவுக்கா மோசமாக உள்ள்து? ’ என்று கலங்கியதன் விளைவுதான் அவர் பிரதமர் ஆனதன் பின் சில ஆண்டுகளுக்குள் ஜமீந்தார்களின் பிடியினின்று அவர்களை விடுவித்தது. 1957 இல் ஜமீந்தாரி ஒழிப்புக்குப் பின்னர் குடியானவர்களுக்கு ஜமீந்தார்களால் நேர்ந்துகொண்டிருந்த தொல்லைகள் – முக்கியமாய்க் கடன் தொல்லையும் அதன் விளைவான வறுமையும் – பெருமளவுக்குத் தீர்ந்தன.

விவசாயமே இந்தியாவின் தலையாய வாழ்வாதாரமாக இருந்த போதிலும், தொழில்வளம் பெருகினால்தான் விவசாயமும் அபபிவிருத்தி யடையும் என்று நேரு நம்பினார். இதன் விளைவாக அவர் நீர்வளம், மின்சாரம், தொழில் நுட்பக் கல்வி, ராணுவம், போக்குவரத்து, விஞ்ஞானம், பெண்களின் முன்னேற்றம் முதலிய துறைகளில் சாதித்தவை ஏராளம்.

தம் உள்ளத்தில் உதித்த மாபெரும் திட்டங்களைச் சாதிப்பதற்காக அவர் ஐந்தாண்டுத் திட்டங்களை உருவாக்கினார். கீழ்க்காணும் முன்னேற்றங்கள் அவர் நிறுவிய திட்டக் கனிஷனின் விளைவே.

1948-இல் தொடங்கிய மாபெரும் சாதனையான பக்ரா நங்கல் அணைக்கட்டு 1963 –இல் முடிவடைந்தது. அது இந்தியாவின் ஒரு முக்கியமான கோவில் என்று நேரு அறிவித்தார். அசியாவிலேயே இது மிகப் பெரிய அணைக்கட்டு என்று சொல்லப்படுகிறது.

இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எனும் தொழில் நுட்பக் கல்விக் கூடங்களை ரூர்க்கி, கரக்பூர், பம்பாய், கான்பூர், சென்னை, டெல்லி, குவாஹாத்தி ஆகிய நகரங்களில் ஏற்படுத்தினார்.

சென்னை ஆவடியில் 1961 இல் கன ரக ராணுவ வாகனங்கள் (டாங்க்ஸ்) சார்ந்த உற்பத்திக் கூடத்தை நிறுவினார். இதில் உற்பத்தியான விஜயந்தா டாங்க் பெரும் புகழைப் பெற்றது.

சென்னை பெரம்பூரில் ரெயில் பெட்டித் தொழிற்சாலையை நிறுவினார்.

1950 களில் நேருவால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட “ஹிந்து கோட் பில்” எனும் பலதாரமணத் தடைச் சட்டம் போன்றவற்றை என்.சி. சேட்டர்ஜி, சியாம பிரசாத் முகர்ஜி போன்ற அன்றைய ஹிந்து மகா சபைத் தலைவர்கள் வன்மையாக எதிர்த்தார்கள்.  ஆனால், பெண்களுக்கு ஆதரவான அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் பணிகளில் பெண்களுக்கும் பங்கு தர வேண்டுமென்பதில் நேரு உறுதியாக இருந்தார்.

மதச் சார்பின்மை என்பதும் நேருவின் கண்டுபிடிப்பாகும். எந்த அரசும் குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்பதோடு, அதே நேரத்தில் எந்த மதத்துக்கு எதிராகவும் செயல்படக்கூடாது என்பதும் நேருவின் தெளிவான அணுகுமுறையாகும். பெண்களுக்கு ஆதரவான ஹிந்து கோட் பில்லை எதிர்த்தவர்கள் தங்கள் மதம் சார்ந்த நம்பிக்கையினால்தான் அவர் பிரேரேபித்த சட்டத்தை எதிர்த்தார்கள். அந்தச் சட்டம் மணவிலக்குகளில் முடியும் என்றும் மணவிலக்கு என்பது ஹிந்து மதத்துக்கு எதிரானது என்றும் அவர்கள் வாதிட்டதை எதிர்த்து அவர்களின்  வாதங்களைத் தவிடுபொடியாக்கி நேரு ஆற்றிய உரை வன்மை வாய்ந்த ஒன்றாகும்.

1948 இல் பம்பாயில் நேரு நிறுவிய அணு சக்தி வாரியம் (அடாமிக் எனெர்ஜி கமிஷன்) செயல்படத் தொடங்கியதன் பின்னர்தான் அணு சக்தித் துறையில் இந்தியா வியத்தகு முன்னேற்றம் கண்டது. நாட்டின் பல இடங்களிலும் இன்று அத்துறையின் கிளைகள் பல் வேறு பெயர்களில் உள்ளன. இன்று இஸ்ரோ சந்திராயண் – 2 ஐச் சந்திரனுக்கு அனுப்புகிற அளவுக்கு இந்தியா முன்னேறியுள்ளதற்கும், பிற நாடுகள் பல இந்தியாவை அண்ணாந்து பார்ப்பதற்கும் நேரு அமைத்த அணு சக்தி வாரியமே காரணம் என்பது அவர் இந்தியாவுக்காகப் புரிந்த சாதனைகளின் உச்சமாகும்,

 தில்லியில் உள்ள திஹார் சிறைச்சாலையின் கைதிகளுக்கு நன்மை பயக்கும் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தியதோடு அதன் வளாகத்தையும் கட்டடத்தையும் விரிவு படுத்தி அதை ஆசியாவிலேயே மிகப்பெரும் சிறாச்சாலையாக்கியதும் நேருவே.

. “ வேற்றுமையில் ஒற்ற்மை ”  எனும் அரிய சொற்றொடர்க்குச் சொந்தக்காரரும் ஜவாஹர்லால் நேருவே. இன்றைய காலகட்டத்தில் அது எவ்வளவு இன்றியமையாத கோட்பாடு என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

 நேரு மாபெரும் பேச்சாளர், இலக்கியவாதி, எழுத்தாளர் என்பது அனைவர்க்கும் தெரியும். அமெரிக்காவில் ஒரு முறை அவர் ஆற்றிய உரையைக் கேட்டு அந்நாட்டுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி வியந்து நின்றாராம்.

இங்கிலாந்து அரசால் பன்முறை கைது செய்யப்பட்ட அவர் சிறைச்சாலையில் கழித்தது சுமார் ஒன்பது ஆண்டுகள். அந்தக் காலங்களில்தான் அவர் இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியங்களைப் படைத்தார். இந்தியாவின் பால் அனுதாபமுள்ளவரா யிருந்த இங்கிலாந்து வாசியான ஜார்ஜ் பெர்னார்ட் ஷா,  “ இங்கிலாந்து அரசு ஜவாஹர்லால் நேருவை  அடிக்கடி சிறையில் அடைத்தது ஆங்கில இலக்கியம் வளர்வதற்கு உதவியுள்ளது ” என்று கூறியுள்ளார் !

இங்கிலாந்து நமக்குச் செய்த பல கொடுமைகளையும் மனத்தில் வைத்துக் கொள்ளாமல்,  “ இங்கிலாந்தின் காமன்வெல்த் நாடுகளின் கூட்டணியில் உறுப்பினராக இந்தியாவும் இருக்கும் ” என்று பெருந்தன்மையாக நேரு அறிவித்தது ஆனானப்பட்ட இங்கிலாந்தின் பிரதமரான சர் வின்ஸ்டன் சர்ச்சிலின் கண்களைக் கலங்கச் செய்துவிட்டதாம்.

இறுதியாய்த் தம் உயிலில் தம் உடலின் சாம்பல் கங்கை நதியிலும், இந்தியாவின் வயல்களிலும் தூவப்பட வேண்டுமென்று கூறியது அவர் இந்தியாவையும் விவசாயிகளையும் எவ்வளவு நேசித்தார் என்பதற்கான சான்றுகள்.

இன்னும் நேருவைப் பற்றி நிறையவே சொல்லலாம். 1889 ஆம் ஆண்டில் பிறந்த நேரு இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் நாளில் 130 அகவைகளை முடிக்கிறார். .அவருடைய அருமை-பெருமைகளை நாம் நினைவுகூர்வோமாக !

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationதேனூரும் ஆமூரும்நீ ஒரு சரியான முட்டாள் !