பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்

ஹெச்.ஜி.ரசூல்

 

இலைகளும் வேரும் வள்ளியுமாய்

விசித்திரத்தை

தன் உடலில் பெருக்கிய கொடி

ஒவ்வொரு மூச்சின் போதும்

காற்றில் மிதந்து மெளனம் காட்டியது.

தொற்றிக் கொண்டதொரு

பெரண்டையின் தீண்டலில் கசிந்த உதிரம்

சிறுபூவாய்விரிந்தது.

கமுகந்தைகள் பற்றிப் படரும்

நல்லமிளகு கொடிகள்

துயரத்தின் வாசத்தை

காற்றில் மிதக்கவிடுகின்றன.

அதிகாலைப் பனியில் உதிர்ந்த

ஒரு கொத்து கறுப்பு பூக்கள்

பூமியின் இதழ்வருடி

வலிபட முனங்குகின்றன.

பனியூறிய மேகங்கள் கவிந்த

வேளிமலையின் உருவம்

மெல்லத் தெரியத் துவங்கி

ஒரு கனவாக உதிர்ந்திருந்தது.

இதயம் முழுதும் நிரப்பப்பட்டிருக்கும்

உற்சாகம் உருவிழந்து

மூலை முடுக்குகளில்

இருள்திட்டுகளாய் உறைய

ரகசிய வலிகளால் மூடப்பட்ட

முனகல் மேலெழும்புகிறது.

 

Series Navigationபண்பாட்டு உரையாடல்தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்