பழமன் ‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்

‘தலைச்சுமை’ – கொங்கு வட்டார நாவல்
———————————————————-

– வே.சபாநாயகம்.

எந்த ஒரு நூலையும் படிக்கு முன்னர் அந்நூலின் முன்னுரை,அணிந்துரைகளைப் படித்து அது பற்றிய ஒரு அபிப்பிராயத்தை அறிந்து கொண்டுதான் நான் படிக்கத் தொடங்குவேன்.’தலைச்சுமை’ என்ற நாவலின் முன்னுரையில் இந்நூலாசிரியர் திரு.பழமன் அவர்கள் – கொங்கு வட்டார நாவல் என்றதுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருகிற புகழ் பெற்ற நாவலாசிரியர் திரு.ஆர்.சண்முகசுந்தரம் அவர்களின் வாரிசு என்று குறிப்பிட்டிருந்ததை நம்பி ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன்.ஏனெனில் வட்டார நாவலில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள திரு.கி.ராஜநாராயணனுக்கு வெகு காலத்திற்கு முன்பே எனது இளமைக் காலத்தில் தன் ‘நாகம்மாள்’போன்ற அசலான வட்டார நாவல்களால் என்னை மிகவும் ஈர்த்தவர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள்.எனவே கொங்கு வட்டார வாழ்வை இப்போது சிறப்பாகப் பதிவு செய்து வருகிற திரு.சூர்யகாந்தனுக்கு அடுத்து இன்னொரு சண்முகசுந்தரத்தின் வாரிசு என்றதும் ஆர்முடன் படிக்கத் தொடங்கினேன். ஆனால் பெருத்த ஏமாற்றம்தான் ஏற்பட்டது.ஒரே வட்டாரத்துக்காரர்,கொங்கு மண்ணில் கதை நிகழ்கிறது என்ற அளவில் மட்டுமே சண்முகசுந்தரத்துடன் ஒப்பிடலாம்.மற்றபடிக்கு,சண்முசுந்தரம் காட்டும் – அசலான,மற்றப் பிரதேசக்காரர்களுக்கு அறிமுகமில்லாத கொங்கு மண்ணின் மணமும் சுவாரஸ்யம் காட்டும் கொங்கு வட்டார பேச்சு வழக்கும் இந்நூலில் காணக் கிடைக்கவில்லை.

கதைகூட மிகச் சாதாரண,எல்லாப் பிரதேசங்களுக்குமான சினிமா பாணி ஃபார்முலா கதைதான். கொங்கு நாட்டை அடையாளப் படுத்துகிற தனித்தன்மை ஏதுமில்லை.வேலு என்பவன் – படிப்பை முடிக்காமல் கிராமத்தில் விவசாயம் பார்க்கிற, அம்மா வழிகாட்டலில் வாழ்கிறவன்.யாருக்கும் கேளாமலே வலிய உதவுகிற பண்பாளன். அவனது ஊருக்கு மின் துறை கணக்கெடுப்பாளராக வரும் சாந்தி என்கிற பெண்ணுக்கு தங்கள் வீட்டில் குடி இருக்க இடம் தந்து உதவுவதுடன் அவளுகுக் காப்பாளன் போலவும் இருக்கிறான்.அவளது வருகைக்குப் பிறகு, நண்பர்களுடன் குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தி விடுகிறான்.சாந்தியுடனான நெருக்கமான நட்பில் தன் பழைய காதல்,அது நிறைவேறாமல் போனது பற்றியெல்லாம் மனம் விட்டுப் பகிர்ந்துகொள்கிறான். ஊரில் அவனையும் சாந்தியையும் இணைத்துப் பேச்சுக்கள் எழுந்தாலும் அப்படி ஏதும் நடைமுறையில் இல்லாதபடிக்கே அவர்களது பழக்கம் இருக்கிறது.ஒருநாள் சாந்திக்கு எழுத்தராகப் பணியுயர்வு கிடைத்து, நகரத்துக்கு மாறுதல் கிடைக்கவே வேலுவின் வீட்டைக் காலி செயதுவிட்டுப் போய் விடுகிறாள். அது வேலுவுக்கு ஏமாற்றமளிக்கிறது.அவளது பிரிவு,அதோடு அவனது தாயாரின் மருத்துவச் செலவால் ஏற்பட்ட கடன்,விவசாயத்தில் இழப்பு,அதன் காரணமாய் இருந்த சொற்ப நிலத்தையும விற்க வேண்டிய கட்டாயம்,தொடர்ந்து தாயாரின் மரணம் என்று பலவகையிலும் வருத்த – வேலுவுக்கு வாழ்க்கை கசந்து போகிறது.அதை மறக்க மீண்டும் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க ஆரம்பிக்கிறான்.பிறகு குடி அதிகமாகி சீர் குலைந்துபோன செய்தி அறிந்து அவனைப் பார்க்க வந்த சாந்தியை அவளது ஆறுதல் மிக்க அறிவுரைகளை ஏற்காமல் அவளைக் கன்னத்தில் அறைந்து அவமதித்து அனுப்புகிறான்.அவள் போனபிறகு அவளிடம் தான் முரட்டுத் தனமாக நடந்து கன்னத்தில் அறைந்து வெளியேற்றிய குற்ற உணர்வில் வேலு பூச்சிமருந்தைக் குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறான்.தகவலறிந்து அவனை வந்து சாந்தி பார்க்கிறாள்.அப்புறம் என்ன? மறைத்து வைத்திருந்த காதலை இருவரும் பகிர்ந்து கொள்ள,கதை சுபமாக முடிகிறது.

கோவை பழமன் அவர்கள் நீண்ட நாட்களாக – 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர். அக்டோபர் ‘2010-‘யுகமாயினி’ இதழில் அவரது கதை ஒன்று ‘எதிர்வினை’ என்ற தலைப்பில் வந்துள்ளது. அதில் யதார்த்தமும் நம்பகத் தன்மையும் கொண்டதாக – இன்றைய எழுத்தாளர்களின் பிரச்சினையை அழகாக மனங்கொள்ளுமாறு சித்தரித்துள்ளார்.அக்கதையில் அவரே ஒரு பாத்திரமாகி, ‘கதையின்னா இப்படித்நான் இருக்கணும்.சமூகச் சீர்கேடுகளை தோலுரித்துக் காட்டணும்’,’நாட்டு நிலைமையை மக்களுக்குப் புரிய வைக்கணும்.விழிப்புணர்வு வரணும்’என்கிறார்.இவ்வாறு வாழ்க்கையை அசலாகச் சித்தரிக்க விரும்புகிற முற்போக்கு எழுத்தாளர் இந்நாவலைப் போன்ற உப்புசப்பற்ற சாதாரணக் கருவைக் கதையாக்கியுள்ளாரே என்ன்கிற ஆதங்கம்தான் எனக்கு. ஒருவேளை இது அவரது ஆரம்பகாலப் படைப்போ என்னவோ!

கதை எப்படி இருந்தாலும், அவரது எளிய,சிக்கலற்ற எழுத்து நடையும்,விறுவிறுப்பான கதை சொல்லலும் பாராட்டுக்குரியவைதாம். நாவலில் பாத்திரப்படைப்பும் சிறப்பாக வந்துள்ளது.வேலுவின் தாயார் ராமாத்தா ஒரு அசலான, பொறுப்பும் அக்கறையும் கொண்ட பாத்திரம். அவரது பேச்சில் அடிக்கொருதரம் பழமொழிகள் உதிர்கின்றன.இதைப் படித்தபோது சமீபத்தில் காலமான எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் கலைமகள் பரிசுபெற்ற நாவலான ‘மனதுக்கு இனியவள்’ நினைவுக்கு வருகிறது. அதில் வருகிற ஒரு அத்தைப் பாட்டி இப்படித்தான் ரசமான பழமொழிகளாய் உதிர்ப்பாள்.இங்கு ராமாத்தாளின் பழமொழிகள் கொஞ்சம் அதிகமோ என எண்ணுகையில் நாவலில் வரும் பல பாத்திரங்களும் பழமொழிகளை உதிர்ப்பது ஆயாசமளிக்கிறது.

பழமன் போன்ற மூத்த எழுத்தாளரிடமிருந்து இலக்கியத் தரமான படைப்பை எதிர் பார்ப்பவர்களுக்கு இந்நாவல் ஏமாற்றமளித்தாலும், பொழுதைப் போக்க விறு விறுப்பான கதையை விரும்புகிறவர்களுக்கு திருப்தி தரும் நாவல். 0

நூல்: தலைச்சுமை
ஆசிரியர்: பழமன்
வெளியீடு: நிவேதிதா புத்தகப் பூங்கா.

Series Navigationகவிதைகள் : பயணக்குறிப்புகள்அசூயை