‘‘பழமொழிகளில் ஏழ்மை குறித்த பதிவுகள்’’

Spread the love

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

இன்றைய உலகில் இருபெரும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஏழ்மைநிலை, பணம் படைத்த நிலை என்பவையே அந்நிலைமைகள். உண்மையில் ஏழ்மை, ஏழை என்பன பல பொருண்மைகளில் வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. செல்வம் இல்லா வறுமைநிலையினை ஏழ்மைநிலை என்பர். ஏழ்மை நிலையில் இருப்பவனை ஏழை என்று அழைத்தனர். இவ்வேழை என்ற வறுமைநிலை குறித்து பல்வேறு கருத்துக்களை நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர்.

ஏழை – பொருள் விளக்கம்

‘ஏழை’ என்பது செல்வமில்லா நிலையைக் குறித்தே பெரும்பாலும் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது. இச்சொல்லிற்குப் பரிமேலழகர், ‘‘துய்க்க முடியாத நிலை’’ என்று பொருள் கூறுகின்றார். அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றை எதனையும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகின்றபோது அதனையே ஏழ்மை நிலை என்ற சொல் குறிப்பிடுகின்றது எனலாம்.

ஏழை என்பதற்குப் ‘பெண்’ என்ற பொருளும் வழங்கப்படுவது நோக்கத்தக்கது. சிவபெருமானை ‘ஏழை பங்காளன்’ என்று கூறுவர். ஏழை-பெண், பங்காளன்-பாகமாக உடையவன் என்று பொருள். சிவபெருமானின் அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தைக் குறிப்பதாக ஏழை பங்காளன் என்ற சொல் அமைந்துள்ளது.

வறுமை, துய்க்க முடியாத நிலை, பெண் என்பன போன்ற பொருள்களில் ஏழை என்ற சொல் மக்களிடையே வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் உண்மையான பொருளை உணராது இன்று அரசியலில் உள்ளோர் அரசியல் தலைவர்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஏழை பங்காளன் என்று தவறாகக் குறிப்பிடுகின்றனர்.

ஏழை என்ற சொல்

நமது முன்னோர் பொருளில்லா வறுமைநிலையைக் குறிக்க ஏழை என்ற சொல்லை வழங்கியுள்ளனர். சில இடங்களில் பெண் என்ற பொருளிலும் இஃது வழங்கி வருவது நோக்கத்தக்கது.

நீதி கேட்கச் செல்லும் வறுமையாளனின் சொல்லை யாரும் காது கொடுத்தக் கேட்கமாட்டார்கள். அவர்கள் எதைக் கூறினாலும் அவையோர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதனை,

‘‘ஏழை சொல் அம்பலம் ஏறாது’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

இப்பழமொழிக்கு, ‘‘பெண்கள் கூறும் கருத்து அம்பலத்தில் (அவையோரிடத்தில்) மற்றவர்களால் ஏற்கப்பட மாட்டாது’’ என்றும் பொருள் கூறுகின்றனர். பெண் ஏதாவது ஒன்று குறித்து ஒரு கருத்தைக் கூறினால் அதனை அவையில் உள்ளோர் சரியென்றாலும் கிராமப் புறங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற பெண்ணின் கருத்துச் சுதந்திர உரிமைப் பறிப்பையே இப்பழமொழி உணர்த்துகின்றது என்றும் இதற்குப் பொருள் கூறலாம்.

பெண்ணின் கருத்திற்கு நான்கு பேர் கூடிய பொது (அம்பலம்) இடத்தில் மதிப்பில்லை என்ற சமுதாய நிலையினை இப்பழமொழி தெளிவுறுத்திக் காட்டுவது நோக்கத்தக்கது.

ஏழையும் எள்ளுருண்டையும்

வசதி படைத்தோர் தங்களது இல்லத்தில் நிகழும் நிகழ்ச்சிகளில் அதிமாகச் செலவுகள் செய்து தங்களது வசதியை வெளிக்காட்டிக் கொள்வர். இது வசதிபடைத்தோரின் கௌரவத்திற்காகச் செய்யப்படும் செலவாகவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகையோர் வசதிகுறைவுடைய ஏழையின் வீட்டில் நிகழும் நிகழ்ச்சிக்கு வந்தால் அவர்கள் செய்யக் கூடியதைப் பார்த்து ஏளனம் செய்வர். அப்போது அவ்வேழையானவன்,

‘‘ஏதோ ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டை’’

என்று கூறுவான். எள் அளவில் சிறியது. அதுபோன்று வசதிக் குறைவுடையோர் வீட்டில் செய்யக் கூடியவையும் சிறியதாக இருக்கும். தங்களின் இல்லாமையைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக இவ்வாறு வழக்கத்தில் மக்கள் கூறுவர். பணம் படைத்தோர் மற்றவர்களைத் தரந்தாழ்ந்து நினைத்தல் கூடாது. ஏழ்மையை இழிவாகக் கருதுதல் கூடாது என்ற பண்பாட்டினை எடுத்துரைப்பதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது. இது பார்ப்பதற்கு வழக்குத் தொடரினைப் போன்று இருந்தாலும் இது பல்வேறு கருத்துக்களை அடக்கிய பழமொழி என்பது நோக்கத்தக்கது.

இறைப் பணியாளர்(அரசுப் பணியாளர்)

வறுமையில்லாதவன் அவவையில் ஏதேனும் கூற வேண்டும் என்றால் கூச்சப்படுவான். தான் கூறியதை இவ்வவையோர் ஏற்பார்களா? என்று தயங்கித் தயங்கிக் கூறுவர். அவர்கள் நல்லவற்றையே கூறினாலும் அவன் வறுமையாளன் என்பதற்காக அதனைச் சமுதாயம் ஏற்காது. இதனை,

‘‘ஏழை ஒருவன் சொல மாட்டாமையினால்

மெய்ம்மை கூட பொய்போலும்மே’’

என்ற முன்னோர் வாய்மொழியானது எடுத்துரைக்கின்றது.

ஏழையின் வார்த்தையை மதித்தல் வேண்டும். பணமில்லாத காரணத்தால் ஒருவரை இழிவுபடுத்துதல் கூடாது. இதை உணர்ந்து வாழ வேண்டும் என்பதை,

‘‘ஏழை சொல்லுறதை இறைப் பணி கேட்குமா?’’

என்ற பழமொழி விளக்குகிறது. இறைப்பணி-என்பதை எறப்புணி என்று வழக்கில் வழங்குகின்றனர். இறைப்பணி என்பது அரசுப் பணியாளர்களைக் குறிக்கின்றது (இறை-அரசன், அரசு. பணி-பணிசெய்பவன், பணியாளன்). அரசின் நலத்திட்டங்களைச் செயற்படுத்தும் பணியாளர்களில் கடைநிலையில் உள்ளோர் கூட வறுமையாளன் கூறும் கருத்தைக் கேட்கமாட்டார்கள். அவன் ஏதாவது கூறுவதற்கு முன்வந்தாலும் அவனை ஏசி விரட்டிவிடுவர். அத்தகைய வறுமையாளனை இழிவாக நடத்துவர்.

அரசுப் பணியாளர்கள் ஏழைகளின் கூற்றுக்குச் செவிசாய்த்து அவர்கள் என்ன கூற வருகின்றார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு உதவுதல் வேண்டும் என்ற கடமை உணர்வை இப்பழமொழி உள்ளீடாகச் சுட்டிக் காட்டுவது சிறப்பிற்குரியதாகும்.

இப்பழமொழியானது,

‘‘ஏழை சொல்லியா எறைப் புணி கேட்கும்?’’

என்றும் வழக்கத்தில் வழங்கப்பட்டு வருகின்றது. வறுமையுற்றோரை ஏளனமாக நடத்தாது அவர்களை மதித்து உதவி செய்ய வேண்டும். அதுவே சிறந்த அறம் என்றும் இப்பழமொழி வாழ்வியல் அறத்தை எடுத்துரைக்கின்றது. ஏழ்மைநிலையை நோக்காது மனிதநேயத்துடன் முன்னோர் வழி நடந்து அறம் செய்து இனிய வாழ்வை வாழ்வோம்.

Series Navigationஅறியான்நழுவும் உலகின் பிம்பம்