பழமொழிகளில் காலம்

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

     ‘‘காலம் நமக்குத் தோழன் காற்றும் மழையும் நண்பன்’’ என்ற பாடலை நாம் அனைவரும் கேட்ட பழைய திரைப்படப்பாடல் ஆகும். இப்பாடலில் வரும் காலம் அனைவரது வாழ்க்கையிலும் பல்வேறு தடயங்களை விட்டுச் செல்கின்றது. வலிமையானவர்கள் தவறுகள் செய்கின்றபோது அவரைத் தட்டிக் கேட்க முடியாத நிலைவரும்போது, ‘‘அவனுக்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். காலத்திடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது’’ என்று பலரும் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம்.

இக்காலத்தை, ‘‘எனக்குப் போதாத காலம், கேடு காலம், இப்ப உன்னோட காலம், இராகு காலம்’’ என்று பலவாறு வழக்கத்தில் கூறுகின்றனர். நேரம், நாள், ஆண்டு என்று இக்காலத்தினைப் வெவ்வேறாக மக்கள் வழங்குவர். அதிலும் நல்ல நாள், நல்ல நேரம் பார்ப்பது, ஆண்டு நல்ல ஆண்டா? இல்லையா? என்று பஞ்சாங்கம் பார்ப்பது வாழையடி வாழையாக சமுதாயத்தில் மக்களிடையே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

காலமும் இலக்கணமும்

காலத்திற்குப் பெயரிட்டு அதனை இலக்கணத்துள் வகைப்படுத்திய ஓர் இனம் உலகில் உண்டு என்றால் அது தமிழனமாகத்தான் இருக்க முடியும். சமுதாயத்தில் வேறு யாரும் செய்யாத வகைப்பாடுகளைத் தமிழரே செய்தனர். வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மக்களினம் தமிழரே என்று நாம் பெருமிதத்துடன் கூறிக்கொள்ளலாம்.

காலத்தைப் பொழுது என்று பெயரிட்டு நமது மூதாதையர் வழங்கினர். ஒரு நாளைச் ‘சிறு பொழுது’ என்று ஆறு கூறாகப் பிரித்தனர். ஓராண்டைப் ‘பெரும்பொழுது’ எனப் பெயரிட்டு ஆறு வகையாகப் பகுத்தனர். வைகறை, விடியல், நன்பகல், மாலை, எற்பாடு, யாமம் என்று ஒரு நாளைப் பகுத்துரைத்தனர். கார் காலம், கூதிர்(குளிர்) காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என்று ஆண்டினை ஆறு வகைக் காலமாகப் பகுத்துரைத்தனர். இக்காலத்தை முதற்பொருளில் அடக்கி விளக்குவர் தொல்காப்பியர். இக்காலத்தை அடிப்படையாக வைத்து நமது முன்னோர்கள் பழமொழிகள் பலவற்றைக் கூறி அதன்வழி நமது பண்பாட்டை விளக்கியுள்ளனர். இப்பழமொழிகள் பண்பாட்டை மட்டுமல்லாது வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்துவனாகவும் அமைந்துள்ளன.

காலமும் – பொன்னும்

பொன் விலைமதிப்பு மிக்கது. அனைவராலும் விரும்பப்படுவது. ஆனால் அதை அனைவரும் பாதுகாப்பதில் அக்கறைகாட்டுகின்றனர். இந்தப் பொன்னைப் போன்றதே காலமும் ஆகும். காலத்தை விரையம் செய்தல் கூடாது. அங்ஙனம் விரையம் செய்பவன் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணமாட்டான். காலத்தை எவனொருவன் சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றானோ அவனே வாழக்கையில் பெரிய பெரிய வெற்றிகளைப் பெறமுடியும். அதனால்தான் நமது முன்னோர்கள்,

‘‘காலம் பொன்போன்றது கடமை கண்போன்றது’’

என்று பழமொழி வாயிலாகக் காலத்தின் அருமையையும் கடமையின் தன்மையையும் தெளிவுறுத்தினர்.

காலம் நம்மைக் கடந்து சென்றுவிட்டால் திரும்பப் பெற முடியாது. அதுபோன்று கண் பார்வை போய்விட்டது எனில் அதனைத் திரும்பப் பெற இயலாது. அதனால் காலத்தினை விரையமாக்காது அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இப்பழமொழி பொன்மொழி போன்று காணப்பட்டாலும் இப்பழமொழியானது தொன்றுதொட்டு மக்களிடையே வழங்கப்பட்டு வருவது நோக்கத்தக்கது. இப்பழமொழியுடன்,

‘‘காலம் போற்று’’

என்ற பாரதியின் புதிய ஆத்திசூடிக் கருத்தும் ஒப்புமை உடையதாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாது இப்பழமொழியானது காலம் அறிதல் என்ற திருவள்ளுவரின் அரிய வாழ்வியல் நெறியையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.

வெயில் காலம் – மழைக்காலம்

வாழ்க்கை என்பது எப்போதும் ஒன்று போல இராது. எப்போதும் இன்பமாகவோ, எப்போதும் துன்பமாகவோ இருக்காது. இருக்கவும் முடியாது. இரண்டும் கலந்த ஒன்றாகவே இருக்கும். இதனை மக்கள் அனைவரும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மனச்சோர்வு வந்து வாழ்க்கையைப் பின்னடையச் செய்யாது. இன்பம் வந்துவிட்டால் ஒரேயடியாகத் துள்ளிக் குதித்தல் கூடாது. அது போன்று துன்பம் வந்து விட்டால் துவண்டு போய்விடக் கூடாது. எல்லாம் வாழ்க்கையில் இயல்பானது என்று கருதி நமது கடைமைகளைச் செய்து கொண்டே சென்றுவிட வேண்டும். அப்போதுதான் வாழ்வு இனிக்கும்.

சிலர் தங்களுக்குச் சோதனைமேல் சோதனையாக வாழ்வில் உள்ளதே என்று புலம்பிக் கொண்டே இருப்பர். அங்ஙனம் புலம்புவதால் வாழ்வில் ஏதும் நடந்துவிடாது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பத்திலிருந்து எவ்வாறு விடுபடல் வேண்டும் என்று முயலுதல் வேண்டும் என்ற வாழ்வியல் நெறியை,

‘‘புழுதி இல்லாத வெயிலுகாலமும் கிடையாது

சேறில்லாத மழைக்காலமும் கிடையாது’’

என்ற பழமொழியின் வாயிலாக நமது முன்னோர்கள் எடுத்துரைத்துள்ளனர்.

வெயில் காலம் எனில் கோடை காலம் ஆகும். இதனை வேனிற் காலம் என்று இலக்கண நூலாற் குறிப்பிடுவர். இவ்வெயில் காலத்தில் சூரியன் சுட்டெரிப்பதால் வறட்சி அதிகமாகி தெருக்களில் புழுதி பறக்கும். இப்புழுதி இல்லாமல் வெயில் காலத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. இது இயற்கையாகும்.

இதனைப் போன்றே மழைக்காலமும் ஆகும். இம்மழைக் காலத்தைக் கார்காலம் என்பர். இக்காலத்தில் மழை அதிகம் பொழியும். மழை அதிகம் பொழிவதால் சாலைகளில் சேறு அதிகமாகக் காணப்படும். சேறில்லாத(சகதி) மழைக்காலத்தை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. இது இயற்கை ஆகும். அதுபோன்றதே வாழ்க்கையும். இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது வாழ்வு. இங்கு வெயில் காலம் துன்பத்தையும், மழைக் காலம் இன்பத்தையும் குறிகும் குறியீடுகளாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டையும் சமமாகப் பாவித்து எளிமையாக எடுத்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சுவையாக இருக்கும். இல்லெனில் சுமையாகிவிடும் என்ற பண்பாட்டு நன்னெறியை இப்பழமொழி நமக்குத் தெளிவுறுத்துகின்றது.

யானைக்கும்  பூனைக்கும் வரும் காலம்

வாய்ப்புகள் என்பது ஒருவருக்கு மட்டுமே வராது. அனைவருக்கும் வரும். வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருந்து அது வரும்போது நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் தங்களுக்கு வாய்ப்பு வந்து தலைமைப் பதவியில் அமரும்போது பணிவுடன் நடந்து கொண்டு கடமையாற்ற வேண்டும். விருப்பு வெறுப்பின்றி நடந்து கொள்ள வேண்டும். அதுவே தலைமைப் பண்பிற்கு அடையாளமாகும். தாம் பதவிக்கு வந்துவிட்டதால் பிறரைத் துன்புறுத்துதல் கூடாது. அவ்வாறு நடந்து கொண்டால் பாதிப்புக்குள்ளானவர் தமக்கு வாய்ப்பு வரும்போது தம்மைத் துன்புறுத்தியவரைப் பழிக்குப் பழி வாங்க முயல்வர். அதனால் எல்லாவற்றையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில்,

‘‘யானைக்கொரு காலம் வந்தால்

பூனைக்கொரு காலம் வரும்’’

என்ற பழமொழி அமைந்துள்ளது.

யானை பெரியதாக உள்ளது என்பதாலோ பூனை அதைவிடச் சிறியதாக உள்ளது என்பதாலோ வாய்ப்புகள் வருவதில்லை. அனைவருக்கும் வாய்ப்பு என்பது வரும். அவ்வாறு வாரும்போது அதனைப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். வாய்ப்புகள் வரும்போது நாம் விழிப்புணர்வுடன் செயல்படாது இருந்து விட்டோமானால் பிற்பாடு வாழ்வில் வருந்த நேரிடும் என்பதை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.

பூசை காலம்

இறைவனை நாள்தோறும் நாம் வழிபட வேண்டும். இறைவழிபாடானது கோவில்களில் ஆறுவேளையும் நடைபெறும். இதனை ஆறுகால பூசை என்று கூறுவர். இதனை நித்யபூசை என்றும் கூறுவது வழக்கம். இப்பூசையினை ஒவ்வொரு காலத்திலும் செய்து வழிபட்டால் நன்மைகள் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். இராகுகால பூசை, குளிகை காலத்தில் வழிபடுவது, எமகண்டத்தில் வழிபடுவது, அமாவாசைக் காலத்தில் வழிபடுவது, பௌர்ணமியில் வழிபடுவது என்று ஒவ்வொரு கால வழிபாடும் ஒவ்வொரு வகையில் சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது.

வீட்டில் வழிபடுவதும் நல்ல பலனைத் தரும். நாம் செய்கின்ற வழிபாடுகளுக்கேற்ப வாழ்வில் நன்மைகள் ஏற்படும். சில நேரம் நாம் எவ்வாறுதான் வழிபட்டாலும் நமக்குச் சில தீமைகள், மன உளைச்சல்கள் வருவது இயற்கை. ஆனால் அவை தற்காலிகமானவை. இவை இறைவன் நமது உள உறுதிப்பாட்டை சோதிப்பதற்காக ஏற்படுத்துபனவாகும். இத்தகைய இடர்கள் மறைந்து விடும். மேலும் அவ்வாறு ஏதேனும் இடர்கள் வந்தால் அவர் பூர்வ ஜென்மத்தில் செய்த வழிபாடே காரணமாகும் என்பர். இதனை,

‘‘நடந்த புள்ளை(பிள்ளை) தவழுது நான் செஞ்ச

பூசை காலம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகின்றது. நடக்கின்ற ஒரு குழந்தை ஏதாவது நோயினால் தவழும் நிலைக்கு வந்துவிட்டால் அது பூர்வஜென்மத்தில் நடந்த வழிபாட்டுக் குறை காரணமாகும். அக்குறை சரியாகின்ற வரையில் அக்குறையினால் வந்த துன்பம் நீடிக்கும். அதனைக் கண்டு கலங்கக் கூடாது என்ற மன உறுதியை இப்பழமொழி நமக்கு வழங்குகின்றது.

அதனால் காலம் அறிந்து செயல்பட்டு நாம் வாழ்ந்தால் வாழ்வில் உயரலாம். காலத்தை வீணாக்காது வாழ்தல் வேண்டும். காலத்தைத் தொலைத்து விட்டால்  அதனைத் திரும்பப் பெற முடியாது. வாய்ப்பு என்பது எல்லோருக்கும் வரும் அதனை வீணடிக்காது பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ப வாழ்வியல் நன்னெறியை இப்பழமொழிகள் நமக்கு வழங்குகின்றன. காலத்தைப் போற்றி கடமையைச் செய்து வாழ்வாங்கு வாழ்ந்து வளமுறுவோம். வாழ்க்கை மலர்ச்சோலையாகும்.

Series Navigationமலேசியாவில் தொலைந்த மச்சான்அடையாளம்