பழமொழிகளில் தொழிற்சொற்கள்

This entry is part 11 of 39 in the series 4 டிசம்பர் 2011

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’

என்பர் தொல்காப்பியர். தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு பொருள் உண்டு. காலத்திற்கேற்ப சூழல், இடத்திற்கேற்ப அச்சொற்களுக்குப் பொருள் உண்டு. ஒரே சொல் ஓரிடத்தில் ஒரு பொருளையும் பிறிதோரிடத்தில் வேறொரு பொருளையும் தரும் இது தமிழ் மொழிக்கே உரிய சிறப்பாகும்.

அவ்வகையில் அறுத்தல், உரித்தல் ஆகிய இரு தொழிற்சொற்களையும் பழமொழிகளில் பயன்படுத்தி அதன் வாயிலாகப் பல்வேறு பண்பாட்டு நெறிகளை நமது முன்னோர்கள் வழங்கியுள்ளனர்.

வழக்கில் அறுத்தல், உரித்தல்

சிறியவரோ, பெரியவரோ யாரேனும் தவறு செய்தவர்களைப் பார்த்துத் தலையை அறுத்துவிடுவேன், நாக்கை அறுத்துவிடுவேன் என்று பலவகைகளில் கடுமையாகக் கூறுவர். அதுபோன்று தோலை உரித்துவிடுவேன் என்றும் கூறுவர். அதிகமாகக் கோப்படும்போது இத்தகைய கடுமையான சொற்களை அனைவரும் கையாள்வர். இவ்வார்த்தைகள் ஒருவர் மீது கொண்டுள்ள வெறுப்பு மற்றும் வெகுளி உள்ளிட்ட உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன எனலாம்.

அறுக்கத் தெரியாதவன்

சிலருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் ஒழுங்காகச் செய்யமாட்டார்கள். அவர்கள் தவறாகவே செய்வர். ஆனால் பேச்சில் சளைக்கமாட்டார்கள். தான் அப்படிச் செய்வேன் இப்படிச் செய்வேன் என்று வாய் ஓயாமல் பேசுவர். சரி அவர் நன்கு வேலை பார்ப்பார் என்று அவரிடம் ஒரு வேலையைக் கொடுத்தால் சரியாகச் செய்யாமல் காரணங்களைச் சொல்வர்.

இன்னும் சிலர் சரியாகச் செய்தால் எங்கே தன்னிடமே மீண்டும் மீண்டும் வேலைகளைக் கொடுத்துவிடுவார்களோ என்று கருதி வேலை தெரிந்தாலும் தவறாகச் செய்து கொண்டுவருவர். அவ்வாறு கொண்டுவந்தால் தம்மிடம் வேலையே கொடுக்காமலிருக்க என்னென்ன செய்ய இயலுமோ அத்தனையையும் செய்வர். இவரிடம் கொடுப்பதற்கு நாமே அந்த வேலைகளைச் செய்வோம் என்று வேலையைக் கொடுப்போரை நினைக்கச் செய்துவிடுவர். இவர்களது செயல்களையும் பண்பினையும்,

‘‘அறுக்கத் தெரியாதவனுக்கு இடுப்புல ஆயிரம் கரிக்கருவாளாம்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

இங்கு அறுத்தல் தொழில் செய்பவனைக் குறிக்கும் சொல்லாக அமைந்துள்ளது. இச்சொல் வேலை செய்யத் தெரியாதவரையும் வேலை தெரியாதது போல் நடிப்பவரையும் குறிப்பிடுகின்றது.

ஆடும் – அறுப்பவனும்

அறுத்தல் என்பது சில இடங்களில் உயிர்க் கொலை செய்தல் என்ற பொருளிலும் வழக்கில் வழங்கப்படுகின்றது. ஆடு அறுத்தல், கோழியறுத்தல் என்பன போன்ற சொற்கள் ஆடு கோழிகளைக் கொல்லுதல், அல்லது கொலை செய்தல் என்ற பொருளில் ஆளப்படுவது நோக்கத்தக்கது. சிலர் பார்வை பரிதாபமாக இருக்கும். கொலை செய்யப்படப்போகம் ஓர் உயிர் எங்ஙனம் பார்க்குமோ அது போன்று பார்ப்பர். அவர்களின் பார்வை சாதாரணமாக இருக்காது. அவர்களின் கண்களில் ஒருவித மரணபயம் இருந்து கொண்டே இருக்கும். அவனைப் பார்த்து,

‘‘அறுக்கப்போற ஆடுகணக்கா முழிக்கிறான்’’

என்று கூறுவர். அறுக்கப்போகின்ற ஆடு மற்ற ஆடுகள் அறுபடுவதைப் பார்த்து பயந்த நிலையில் கண்களில் பீதியுடன் (அதீத பயம்) பார்க்கும். அதைப் போன்று மனிதர்கள் பார்ப்பர் என பய உணர்வுடைய மனிதனின் குணத்தைச் சித்தரிப்பதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

மனிதரில் சிலர் நல்லவர்களையும், அவர்கள் கூறுவதையும் எப்போதும் நம்ப மாட்டார்கள். மாறாக எவர் அவருக்குத் தீங்கும் தீமையும் நினைக்கின்றார்களோ, அவர்களையே முழுமையாக நம்புவர்.

மகாபாரதத்தில் துரியோதனன் கொடியவனாக மாறியதற்கு அவனது சேர்க்கையே காரணம். அவனிடம் கண்ணன், பீஷ்மர், துரோணர், விதுரன் உள்ளிட்ட பல நல்லோரும் அறிஞர்களும் எவ்வளவோ நன்மை தரக்கூடிய கருத்துக்களைக் கூறி நல்வழி காட்டினர். ஆனால் துரியோதனன் அவர்களை ஏளனமாகக் கருதி அவமதித்துத் தனக்குத் தீங்கு செய்து தீவழிகாட்டிய தனதுமாமனான சகுனியையே நம்பினான். அதனால் அழிந்து போனான். அத்துரியோதனனைப் பொன்று பலர் இன்று உள்ளனர். அவர்களது செயல்பாட்டினையும் பண்பினையும்,

‘‘ஆடு அறுக்கப் போறவனைத்தான் நம்பும்’’

என்ற பழமொழி விளக்குகிறது. நல்லோர் கூற்றை நம்பி நல்வழியில் நடத்தல் வேண்டும் என்ற பண்பாட்டு நெறியை இப்பழமொழி வாயிலாக நமது முன்னோர் எடுத்துரைதத்திருப்பது நோக்கத்தக்கதாகும். இங்கு அறுத்தல் என்பது தீமை செய்வோரது செயலைக் குறித்த பொருளில் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

நம்பிக்கைத் துரோகம்

சிலர் நல்லோரை நம்பும்படி செய்து அவர்களை மோசம் செய்வர். இது குள்ளநரித்தனமாகும். மேலும் சிலரோ நல்லவர் போன்று நடித்துப் பிறரை ஏமாற்றுவர். பாரதக் கதையில் வரும் தருமன் நல்லவன். பிறருக்குத் தீங்கு கருதாதவன். ஆனால் அவனைத் துரியோதனன் சூதுக்கு அழைத்து அது வெறும் விளையாட்டுத்தான் என்று கூறி அதனையே தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டு பாண்டவர்களை மோசம் செய்கிறான்.

அதுபோன்று தன்னிடம் பாண்டவர்களுக்காகத் தூது வந்த கிருஷ்ணனை நல்லவன் பொல் ஏமாற்றி நடித்து அவைக்கு அழைத்து பொய்யான இருக்கையில் அமரச் செய்து கொலை செய்ய இருக்கையின் கீழிருந்த பாதாள அறையில் ஆட்களை இருக்கச் செய்து மோசடி செய்கிறான். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணன் சந்தேகமுறாது துரியோதனது வஞ்சகச் செயலை முறியடித்து உயிர் தப்பி அவனுக்கு அறிவுரை கூறுகிறான். அதுபோன்று நல்லவர் போல் நடித்துப் பிறரை ஏமாற்றுவோராகிய நம்பிகை்கைத் துரோகம் செய்பவர்களை,

‘‘நம்ப வைத்துக் கழுத்தறுக்கிற கதைதான்’’

என்ற பழமொழி விளக்கி உரைக்கின்றது.

நீதிக்குப் புறம்பான பல்வேறு கதைகளையும் (அரக்கு மாளிகைக் கதை, கர்ணனிடம் கண்ணன் வரம் கேட்ட கதை போன்றவை) நினைவுறுத்துவதாகவும் இப்பழமொழி அமைந்துள்ளது. மனிதன் தன்னை நம்பியவர்களை என்றும் காப்பாற்ற வேண்டும். மாறாக அவர்களுக்குத் தீங்கிழைத்தல் கூடாது என்ற அறநெறியை இப்பழமொழி எடுத்துரைக்கின்றது. இப்பழமொழியில் அறுத்தல் என்பது நம்பிகைத் துரோகிகளின் செயலைக் குறிப்பது சிந்தனைக்குரியதாகும்.

அறுத்தகை – உலோபி

மனிதர்களில் சிலர் கடைப்பட்ட பண்புடையவராக இருப்பர். பொருள் நிறைய இருந்தாலும், அவர்கள் துன்புறுவோருக்கு ஒரு சிறிதேனும் கொடுத்து உதவமாட்டார்கள். சிலர் பிறருக்கும் கொடுக்காது தாங்களும் அனுபவிக்காது இருப்பர். இவர்களை கருமி, ஈயாதவன், உலோபி என்று வழக்கத்தில் குறிப்பிடுவர். ஒருவருக்குக் கையில் அரிவாள் அல்லது கத்திபட்டு காயமேற்பட்டுவிட்டது. அதற்குச் சுண்ணாம்பை வைப்பது கிராமப் புறங்களில் வழக்கம். அங்ஙனம் காயத்தில் வைப்பதற்குச் சிறிதளவு சுண்ணாம்பு தேவை. அதனைக் கேட்டாலும் ஈயாதவன் கொடுக்கமாட்டான். அவர்களின் செயலை,

‘‘அறுத்த கைக்குச் சுண்ணாம்பு தரமாட்டான்’’

என்ற பழமொழி சித்தரிக்கின்றது. அறுத்தல் – அறுபட்ட, வேலை செய்யும்போது கையில் ஏற்பட்ட காயம் என்று இதனைக் குறிப்பிடலாம்.

தங்களது எதிர்காலத்திற்கென்று அதிகமாக இருப்பதையும் கொடுத்துவிட்டு துன்புறுவர். ஓர் அளவே பிறருக்குக் கொடுக்கவேண்டும். தேவைக்குப் பொக மீதம் உள்ளவற்றைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதை,

‘‘உதடு பெருத்துட்டா ஊருக்குள்ள அறுத்துக் கொடுக்கலாமா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி எதிர்காலத்தை மக்கள் கருத்தில் கொண்டு சேமித்தல் வேண்டும் என்ற எண்ணத்தையும் வலியுறுத்துகின்றது.

தீய எண்ணம்

தனக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் தனக்குப் பிடிக்காதவர்களுக்குத் தன்னைவிட அதிகம் துன்பம் நேர வேண்டும் என்று சிலர் நினைப்பர். இவர்கள் பிறர் துன்பத்தில் இன்பம் அடையும் மனநிலையை (குரூர எண்ணம்-Sadist) கொண்டவர்கள் ஆவர். இவர்களது பண்பினை,

‘‘மகன் செத்தாலும் பரவாயில்லை

மருமகள் தாலியறுத்தால் சரிதான்’’

என்ற பழமொழி வாயிலாக நமது முன்னோர்கள் தெளிவுறுத்துகின்றனர். மகன், மருமகள், இருவரும் தாய்க்கு மிக நெருங்கிய உறவுகள் ஆவா். இதில் மாமியார் – மருமகள் இருவருக்கும் ஒத்துப் போகாது. வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பர். இதற்குக் காரணம் தன் மகளைத் தன்னிடம் இருந்து பிரிக்கப்பார்க்கிறாள் எனத் தாயும், தன் கணவனின் அன்பு தனக்கு மட்டுமே சொந்தம், எங்கே தன்மீது அன்பு காட்டாது இருந்து விடுவாரோ என மருமகளும் நினைப்பதே இத்தகைய எண்ணம் மனதில் தோன்றக் காரணம் ஆகும். அதனால்தான் மருமகளுக்கு எந்தவகையிலாவது துன்பம் நேர்ந்தால்போதும். அதற்காக எதையும் இழக்கலாம். என்ற நிலைக்குத் தாய் வருகின்றாள். விட்டுக் கொடுக்கும் குணமில்லாதவர்களும் இங்ஙனமே நினைப்பர். இத்தகைய தீய எண்ணமும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் ஒவ்வொருவரிடமும் வர வேண்டும் என்ற அரிய வாழ்வியல் உண்மையை மேற்குறித்த பழமொழி தெளிவுறுத்துவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

உரித்தல்

அறுத்தல் என்ற சொல்லைப் போன்றே உரித்தல் என்ற சொல்லும் பல பொருள்களில் வழக்கில் வழங்கப்பட்டு வருகின்றது. கோழியின் ஈரலை அடுத்துப் ‘பித்து’ என்ற பித்தப்பை இருக்கும் நாட்டுக் கோழியில் உள்ள இந்தப் பித்தை கிராமப் புறங்களில் உள்ளோர் எடுத்துப் பச்சையாக உண்பர். அவ்வாறு உண்பதால் உடலுக்கும் குறிப்பாகக் கண்களுக்கு நல்லது என்று கூறுவர். ஆகையால் கோழியினை உரிக்கும்போது அந்தப் பித்து கலங்காது உரிக்கவேண்டும என்று கூறுவர்.

இந்த உரித்தல் என்ற தொழிற் சொல்லைப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளாது செயல்படுபவனையும், வேலை தெரியாமல் தவறாகச் செய்து கொண்டிருப்போரின் செயல்பாட்டையும் குறிப்பதற்குப் பழமொழியில் அமைத்து நமது முன்னொர் வழங்குகின்றனர். அவர்களின் செயல்திறனை,

‘‘உரிக்கத் தெரியாமல் பித்தக் கலக்கின மாதிரி’’

என்ற பழமொழி உணர்த்துகிறது. வேலை செய்யாதவன், அல்லது திறமையற்றவரின் செயல்பாட்டைத் தெளிவுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

உரித்த பழம்

சோம்பேறிகள் எப்போதும், எதற்காகவும் பிறரை எதிர்பார்த்தே இருப்பர். அர்களுக்கு ஓர் உதவி செய்தாலும்கூட அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளடாட்டார்கள். அத்தகையவர்களை,

‘‘பழத்தை உரித்துக் கொடுத்தால் அதை

மென்று கொடு என்று கேப்பானாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

பழம் உரித்துக் கொடுப்பதே பெரியது. அதாவது உதவி செய்வதே பெரிய செயல். அந்தப் பழத்தை உண்ணச் சோம்பல்பட்டுக் கொண்டு அதை மென்று கொடு என்று கேட்டபது உதவி செய்தல் அதனைப் பார்த்து நீயே அனைத்தையும் செய்து கொடு என்பர். இத்தகைய சோம்பேறிகள் பிறரை எத்திப் பிழைக்கும் உழைப்பைச் சுரண்டும் எத்தர்களாவர். இத்தகையோர் உழைப்பவர்களாக மாற வேண்டும் என்ற உயரிய வாழ்வியற் பண்பாட்டை இப்பழமொழி உணர்த்துவது நோக்கத்தக்கது.

அறுத்தல், உரித்தல் ஆகிய தொழிற் சொற்கள் பெரும்பாலும் மக்களின் செயல் திறனையும், பண்பையும் விளக்குவனவாக அமைந்திலங்குகின்றன. தொழிலைச் செய்து உழைத்து வாழ்வில் உயர வேண்டும் என்ற எண்ணத்தையும் தீயனவற்றைக் கைவிட்டு நல்லனவற்றைக் கைக் கொள்ள வேண்டும் என்ற பண்பாட்டு நெறியையும், இப்பழமொழிகளில் இடம்பெற்றுள்ள தொழிற்சொற்கள் புலப்படுத்துகின்றன எனலாம்.

Series Navigationநானும் ஜெயகாந்தனும்டிசம்பர் 11 பாரதி பிறந்த நாள் சிறுகதை: வாடாமல்லிகை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    It is interesting that the Tamil proverbs have originated from ordinary day to day affairs of the simple village folks of ancient Tamil Nadu. These proverbs have been handed down from generation to generation for centuries.
    Prof. Sethuraman has selected work related words which have been used in these proverbs. Works like cutting, slaying, pealing are quoted with different meanings in different proverbs. Through this paper he has shown the richness of the Tamil language and the humour in the wisdom that prevailed among the Tamils of the past…….
    Dr.G.Johnson, Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *