பழமொழிகளில் பல்- சொல்

Spread the love


முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

     பல பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. பூ-நார், நகம்-சதை, அண்ணன்-தம்பி, நெருப்பு-புகை, என்பன போன்று பல ஒன்றுடன் ஒன்று இணைந்து வரும். மேற்கூறிய சொற்களைப் போன்றே பல்லும் சொல்லும் என்ற இரு சொற்களும் ஒன்றற்கொன்று தொடர்புடையனவாக அமைந்துள்ளன. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் வாழ்க்கைக்கு உரிய பல்வேறு கருத்துக்களையும் நமக்கு வழங்கியுள்ளனர்.

பல்லும்-சொல்லும்

ஒரு மனிதனின் வாயில் பல் இருந்தால் மட்டுமே சரியான உச்சரிப்பில் சொற்கள் வெளிப்படும். தெளிவாகச் சொற்களைக் கூறுவதற்குப் பற்கள் முதற்காரணமாக அமைந்துள்ளன. அண்பல், பல் என இரண்டையும் நா, உதடு போன்றவை ஒற்ற அல்லது வருட சில எழுத்துக்கள் பிறக்கின்றன என்று இலக்கண நூல்கள் குறிப்பிடுகின்றன. எழுத்துக்ளின் பொதுப்பிறப்பினைக் கூறும் நன்னூலார்,

‘‘உந்தி முதலா முந்துவளித் தோன்றி

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ

பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்’’

என்று எழுத்துக்கள் பிறப்பதற்குப் பயன்படும் எட்டுவகையான உறுப்புகளில் பல்லினையும் குறிப்பிடுவது உன்னற்பாலதாகும். இவ்வுறுப்புகள் நன்கு செயற்பட்டால் மட்டுமே எழுத்துக்கள் அவற்றிற்குரிய ஒலியுடன் பிறக்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு உறுப்பு செயற்படவில்லை என்றாலோ இல்லை என்றாலோ எழுத்தோ சொல்லோ சரியாக வாயிலிருந்து வெளிப்படாது. அங்ஙனம் வெளிப்படாது போயின் கேட்போருக்கு எதுவும் தெளிவுற விளங்காது போய்விடும். இதனை,

      ‘‘பல்லுப்போனால் சொல்லுப் போச்சு’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. பல்லைச் சுத்தமாக வைத்துப் பாதுகாத்தல் வேண்டும். உணவு உண்ணுவதற்கும், பேசுவதற்கும் பயன்படக் கூடிய பற்களைப் பேணாது விட்டுவிட்டால் அதுவிழுந்துவிடும் என்று பற்பாதுகாப்பு முறையையும் இப்பழமொழி வலியுறுத்துவதாக இப்பழமொழி அமைந்துள்ளது.

முடிந்தவன் செயற்பாடு

எல்லோராலும் எல்லாச் செயல்களையும் செய்ய இயலாது. பிறர் செய்ய இயலாத செயல்களைச் சிலர் செய்வர். இன்னும் சிலரோ சிலர் செய்ய விரும்பாத செயல்களையும் செய்வர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பலவாறு அவதூறு பேசுவர். அதாவது புறங்கூறிப் பேசுவர். அவ்வாறு புறங்கூறும்போது அதனைக் கேட்கம் மற்றவர் புறம் கூறுவதைப் பார்த்து,

      ‘‘பல்லு இருக்கிறவன் பக்கோடா திங்கிறான்’’

என்று கூறுவர். பல் இருப்பவன் பக்கோடா என்ற கடித்துண்ணும் உணவினை உண்பது போல ஒரு செயலைச் செய்ய முடிந்தவன் செய்கிறான். அதனைப் பற்றி நாம் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற தனிமனிதப் பண்பாட்டு நெறியை இப்பழமொழி தெளிவுறுத்துகின்றது.

பல்லும் உதடும்

பல், உதடு இரண்டும் நெருக்கமாக அருகருகே இருக்கும் உறுப்புகள் ஆகும். அதுபோன்று நெருக்கமாக அருகருகே வசிப்பவர்கள் தங்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டால் ஒருவரை ஒருவர் கடுமையாகப் பேசிக் கொள்வர். தன்னை ஒவ்வாறு மனம் வேதனையுறப் பேசிவிட்டானே என்று ஒருவர் மற்றொருவரைப் பற்றிக் கூறினால் அதனைக் கேட்டவர்,

‘‘நீ பல்லாண்டி என்றால் அவன்

      உதட்டாண்டி என்பான்’’

என்று கூறுவர். நீ கீழ்த்தரமாகப் பேசியதால் அவனும் உன்னைக் கீழ்த்தரமாகப் பேசினான் போ என்று அவர்களைச் சமாதானப் படுத்துவர். இங்கு பல் நீண்டுள்ளவன் என்று ஒருவனை இழிவாகப் பேசினால் மற்றவன் உதடு பெரிதாக உள்ளவன் என்று கூறுவான் என்று இப்பழமொழி எடுத்துரைத்து சண்டைசச்சரவு இன்றி மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்ற பண்பாட்டு நெறியையும் தெளிவுறுத்துகிறது.

சொல்லைக் கொட்டுதல்

யாரிடம் பேசினாலும் அளவோடு பேசவேண்டும். கோபமுற்றோ, வெறுப்புடனோ பிறர் மனம் புண்படுமாறு பேசுதல் கூடாது. மேலும் கடுஞ்சொற்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதுவே சிறந்தது. நன்மை பயக்கக் கூடியது. மேலும் சொற்களைப் பேசினால் அவற்றைத் திரும்பப் பெற முடியாது என்பதை உணர்ந்து பேசுதல் வேண்டும் என்ற பண்பாட்டுநெறியை,

‘‘நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம்

      சொல்லைக் கொட்டினால் அள்ள முடியுமா?’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

நெல் ஒரு உணவுப் பொருள். அவற்றைக் கீழே கொட்டிவிட்டால் எளிதில் அள்ளிவிடலாம். ஆனால் நாம் பேசியவற்றைத் திரும்பப் பெற இயலாது. அதனால் பிறரரது மனம் வருந்தும்படி கடுஞ்சொற்களைப் பேசுதல் கூடாது. என்று இப்பழமொழி விளக்குகிறது. இப்பழமொழியின் கருத்து,

‘‘இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிரப்பக் காய்கவர்ந் தற்று’’

என்ற குறட்பாவுடன் ஒத்திருப்பது ஒப்புநோக்கத்தக்கது. மேலும் ‘‘பேசுபவன் விதைக்கிறான். கேட்பவன் அறுவடை செய்கிறான்’’ என்ற பொன்மொழியை நினைவுறுத்துவதாகவும் அமைந்துள்ளது.

சொல்லும்-கட்டுச்சோறும்

பிறர் கூறுவதை அப்படியே கேட்டு நடத்தல் கூடாது. அது தவறான பழக்கம் ஆகும். நம்மால் அது முடியுமா? அவர் கூறியது சரியா? தவறா? என்று ஆராய்ந்து அறிந்து நாம் சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பதே சாலச் சிறந்ததாகும். சிலர் அவ்வாறின்றி பிறர் கூறுவதை எழுத்துப் பிசகாது பின்பற்றுவர். அவர் சுயமாக எதனையும் சிந்திக்க இயலாது. இது அவருக்கு இடரினைத் தரும். இதனை உணர்ந்து ஒவ்வொருவரும் நடத்தல் வேண்டும் என்ற வாழ்வியலறத்தை,

‘‘சொல்லிக் கொடுத்த சொல்லும்

      கட்டிக் கொடுத்த கட்டுச்சோறும்

எத்தனை நாளைக்குத்தான் வரும்’’

என்ற பழமொழி உணர்த்துகிறது. கட்டுச்சோறு என்பது ஓரிடத்திற்கு அல்லது ஊருக்குச் செல்லும்போது புளிச்சோறு கட்டி வீட்டில் கொடுப்பர். அது ஓரிரு நாள் மட்டுமே வரும். பல நாள்களுக்கு அதனைவைத்து உண்ண இயலாது. அது போன்றே பிறர் கூறிய கருத்துக்களம் ஆகும். இதனை உணர்ந்து அனைவரும் தற்சிந்தனை உடையவர்களாக வாழ்தல் வேண்டும் என்ற கருத்தினை இப்பழமொழி வலியுறுத்துகிறது.

சொல்லும் – புண்ணும்

உடலில் நெருப்பினாலோ அல்லது கூர்மையான பொருள் பட்டதாலோ ஏற்படுகின்ற புண்ணானது ஆறிவிடும். ஆனால் அதனால் உண்டாகிய வடு இருக்கும். அதுவும் சில காலங்களில் மறைந்துவிடும். ஆனால் ஒருவர் நம்மைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டால் அது எக்காலத்திற்கும் ஆறாத புண்ணாக அவரைப் பார்க்கும் போதெல்லாம் மனதில் இருந்து வருத்தத்தைத் தரும். இதனை,

‘‘சுட்டபுண்ணு ஆறிப்போகும்

      சொன்ன சொல்லு ஆறிப்போகுமா?’’

என்ற பழமொழி மொழிகிறது. இப்பழமொழியின் கருத்தும்,

‘‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு’’

என்ற குறட்கருத்தும் ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சொல்லும்-சுரைக்காயும்

ஒருவருக்குப் பயன்தரக் கூடிய பல்வேறு கருத்துக்களைக் கூறினால் அவர் அவற்றை எல்லாம் விட்டுவிட்டுத் தமக்குத் தொடர்பில்லாத கருத்துக்களைப் பற்றிப் பேசுவர். அவர்கள் தங்கள் எதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாது தேவையின்றிப் பேசுவர். இத்தகையவர்களின் பண்பினை,

‘‘சொல்றதை எல்லாம் விட்டுவிட்டு

      சுரைக்காய்க்கு உப்பு இல்லேன்னானாம்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது. மனிதர்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் பேவண்டும் என்பது இப்பழமொழியின் உள்ளீடாக அமைந்துள்ளது. இங்ஙனம் நம் முன்னோர்கள் பல்லையும் சொல்லையும் வைத்து மனிதர்கள் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பழமொழிகள் வாயிலாகக் கூறிப் போந்துள்ளனர். பழமொழிகள் மக்களைப் பண்படுத்தும் பண்பாட்டுப் பெட்டகங்களாகத் திகழ்கின்றன எனலாம். பண்பாட்டு மொழிகளாகிய இப்பழமொழிகள் வழி நடப்போம் பண்பட்ட வாழ்வு வாழ்வோம்.

Series Navigationநினைவுகளின் சுவட்டில் (83)ப்ளாட் துளசி – 2