பழ. சுரேஷின் “ பொற்கொடி பத்தாம் வகுப்பு “

ஒரு கறுப்பு வெள்ளை திரைப்படக்காலத்துக் கதையை எடுத்து, அதேபோல் உருவம் கொண்ட நடிகர், நடிகையைத் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வண்ணம் சேர்த்து டிஜிட்டலில் எடுத்தால் அது நவீனப் படமாகிவிடுமா? இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்.

கதாநாயகன் பிரவீன், ஏ வி எம் ராஜனின் கறுப்பு ஜெராக்ஸ். கதாநாயகி பிரிந்தா, அப்படியே சின்ன வயது புஷ்பலதா. பழைய காலத்து சாராய வியாபாரி ( பாலாசிங் ), குடிகாரர்கள் நிறைந்த கிராமம். இது நடுவே விடலைக் காதல். பாரதிராஜாவின் அறிமுகங்கள் எங்கேயோ போய்விடுவார்கள் என்பது, கருத்தம்மா ராஜஸ்ரீயைப் பொறுத்த வரை பொய்த்துவிட்டது. நந்தாவுக்குப் பிறகு இப்போதுதான் திரையில் வருகிறார். உருப்படியாக ஏதும் செய்யாமல் ஓய்ந்து விடுகிறார்.

ஓவியன் என்பவர் இசை, பாடல். தொழில்நுட்பம் எங்கேயோ போய்விட்ட இந்தக் காலத்தில் இன்னமும் உடுக்கடித்துக் கொண்டிருப்பவரைப் பற்றி என்ன எழுத?

பொற்கொடிக்கு ஒரு குடிகார அப்பா. அவளைக் கல்யாணம் செய்யக் காத்திருக்கும் இன்னொரு குடிகாரக் கூட்டாளி. ஊரில் சாராயம் காச்சும் பாலாசிங். அவரது மகன் சிவா. சிவாவுக்குப் பொற்கொடி மேல் காதல். பொற்கொடிக்கும் உண்டு என்றாலும் சாகும்வரை அதைக் காட்டத் தவறி விடுகிறாள். பின்னெப்படி இரண்டு மணி நேரம் கதை சொல்வது?

ஊரின் வாத்தி (யார் ) காலி சாராய பாட்டில்களில் ‘ கோலா ‘ நிறைத்து, ஊர்க் குடிகாரர்களின் மனைவிகளின் சம்மத்ததோடு, ஒரு நாடகம் ஆடுகிறார். கணவன் குடிப்பானென்றால், மனைவியும் குடிப்பதாக ஒரு நாடகம். கணவர்கள் அதிர்ந்து போய் திருந்துகிறார்கள். வியாபாரம் கெட்டுப்போன பாலாசிங் பொற்கொடியைக் கற்பழித்துக் கொலை செய்ய, சிவா, தந்தையையும் அவரது கூட்டாளிகளையும் போட்டுத் தள்ளி பைத்தியமாக நடமாடுவது கிளைமேக்ஸ்.

மேற்படிக் கதையில் ஏதாவது சுவாரஸ்யம் தட்டியிருந்தால் நீங்கள் போக வேண்டிய இடம் மனநல மருத்துவமனை. இந்தப் படத்தைக், கொடுத்த காசுக்காகப், பொறுமையாகப் பார்த்த எனக்கு, வெளிநாட்டில் சிகிச்சை ஏற்பாடாகியிருக்கிறது.

இயக்குனரின் பெயரைப் பார்த்தவுடனேயே நான் விலகியிருக்க வேண்டும். பழ என்பது அரதப் பழசு போலிருக்கிறது. நாயகன் பிரவீன் நன்றாக இருக்கிறார். ஆனால் பல காட்சிகளில், இருட்டு, அவரது கருப்பு முகத்தை, இருட்டடிப்பு செய்து விடுகிறது. அதனால், அவர் என்னதான் உணர்ச்சிகளை அள்ளிக் கொட்டினாலும் விழலுக்கு இறைத்த நீர்.

கதாநாயகி பிருந்தா பெரிய கண்களால் அகல விழிக்கிறார். ஆனாலும் பெரிதாக நடிக்க வாய்ப்பு ஏதுமில்லை. காலிப்பானையில், எவ்வளவுதான் சுரண்டினாலும், சத்தம் தான் வருமே தவிர, சாதம் வராது.

நிலபுலன்களை விற்று, மகன்கள் ஆசைக்காக படமெடுக்க பட்டணம் வரும் பெரும் நிலச்சுவாந்தார்கள், வீட்டு எல் சி டியில், அடிக்கடிப் போட்டுப் பார்க்க, படமெடுக்கிறார்கள். செலவோடு செலவாக, அதைப் பொதுவான இடத்தில், இலவசமாகப் போட்டுக் காட்டலாம். ஐம்பது ரூபாய் செலவாவது மிச்சமாகும் தீராத ஆசை கொண்ட தமிழ் சினிமா ரசிகனுக்கு.

#

கொசுறு

சாலிகிராமம் எஸ் எஸ் ஆர் பங்கஜத்தில் படம் போடுவதற்கு முன் என்னிடம் பேசிக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் – இளங்கோவன், வேலு. முதலாமவர் விஜய் அப்பாவிடம் அசிஸ்டெண்ட். மற்றவர் ஆர்ட் டைரக்டர். படத்தின் நாயகன் பிரவின் இவர்கள் இருவரது அறைத் தோழன். நான் உட்கார்ந்திருந்த வரிசையில், ஓரமாக உட்கார்ந்திருந்த அவர்கள், இடைவேளைக்குப் பிறகு காணவில்லை. பிரவீனை அறையிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விட்டார்கள் போல.

#

Series Navigationமணமுறிவும் இந்திய ஆண்களும்வாசு பாஸ்கரின் “ மறுபடியும் ஒரு காதல் “