பாசாவின் உறுபங்கம்

Spread the love

வட மொழி இலக்கிய உலகில் சிறந்த நாடக ஆசிரியராகக் கருதப்படும் பாசாவின் நாடகங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னரே கண்டு பிடிக்கப் பட்டாலும் பாசா மறக்கப்படாமல் போற்றப்படும் மரபு அவர் படைப்புகளின் சிறப்பை உறுதி செய்கிறது. பாசாவின் 13 நாடகங்கள் என்று அழைக்கப் படும் படைப்புகள் பெரும்பாலும் மகாபாரதக் கதைகளையே மையம் கொண்டுள்ளன.
பிறப்பு மனித வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை. வளர்ப்பும், சுற்றுப்புறச் சூழலும் , பழக்கமும் தான் எல்லாச் சிந்தனைகளுக்கும் தூண்டுகோல் என்பது இன்றைய உளவியலாளர் வாதம். நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்தியப் படைப்பா ளிகளுக்கும் இவ்வெண்ணத்தில் இரண்டாவது கருத்து கிடையாது.இந்த அடிப்படையில் மகாபாரத துரியோதனனை மூலமாகக் கொண்டே பாசா ’உ றுபங்கம்’ என்ற தன் நாடகத்தைப் படைத்திருக்கிறார். ’உ றுபங்கம்’ என்பதற்கு ’தொடைகளைப் பிளப்பது’ என்று பொருள் அமைகிறது. பீமன் தன் சபதத்தை நிறைவேற்றும் தன்மையிலே நாடகம் இப்பெயர் பெறுகிறது. நாடகம் பீமனுக்கும், துரியோதனனுக்கும் இடையே நடக்கும் போரைக் கொண்டே தொடங்குகிறது.இரு பக்கத்து வீரர்களும் அவரவர் தலைவனின் போராற்றலையும், போர்க்களம் குருதி ஆறாக ஓடிக் கொண்டிருப்பதையும் பற்றி விவாதித்தவாறு இருக்கின்றனர். துரியோதனன் வலிமை ஓங்கி இருக்கும் நேரத்தில் கண்ணன் அறிவுரையால் [ சைகை ] பீமன் போர் முறைக்குப் புறம்பாக துரியோதனன் சிறிதும் எதிர்பாராத விதத்தில் அவன் தொடையைப் பிளக்கிறான். அத்தருணத்தில் துரியோதனனுக்குள் பெரும் மாற்றம் நிகழ்கிறது. துரியோதனின் நிலை குலைவும், பீமனின் செயலும் பலராமுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த பீமனைத் தண்டிக்கப் போவதாகக் கூறுகிறான். வன்மையோடு இத்தனை காலம் போரை எதிர் நோக்கி இருந்த துரியோதனனுக்குப் போர் அர்த்தமற்றதாகத் தெரிகிறது. உடன் பிறந்தவர்கள் அனைவரும் போர் செய்து தனக்காக உயிரை இழக்க , அந்த இறப்பில் , இழப்பில் வாழ நினைக்கும் வாழ்க்கையில் , ஆட்சியில் திருப்தி இருக்க முடியுமா என அவனுக்குள் கேள்வி எழுகிறது.துரியோதனன் முழுவதுமாக மனிதனாவது இத் தருணத்தில் தான்.தொடையைப் பிளந்த பீமன் மேல் எந்த எதிர்ச் சிந்தனையும் அவனுக்குள் எழவில்லை.பலராமால் இச்சூழ்நிலையில் பீமனைச் சிதைத்து விட முடியும் என அறிந்தாலும் அது அவனுக்கு பெரிதாகத் தோன்றவில்லை.” பீமன் தன் சபதத்தை நிறைவேற்றியிருக்கிறான். சகோதர்கள் அனைவரும் சொர்க்கத்தில். ஒரு போர் என்ன மாற்றங்களை ஏற்படுத்த முடியும் ” என யோசிக்கிறான். பீமனின் சபதம் ரகசியமல்ல : அவன் செய்ததும் தவறல்ல என பீமனின் செயலை துரியோதனனே நியாயப் படுத்துகிறான்.தவிர மைத்ரேய முனிவரின் சாபத்திலிருந்து தான் மீள முடியாது என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிகிறது. கண்ணன் அறிவுரையால்தான் போர் முறைக்கு எதிரான தாக்குதல் நடந்ததாக பலதேவனிடம் சொல்லித் தனக்கு கிடைக்க வேண்டியதே தனக்குக் கிடைத்ததாகச் சொல்கிறான்.
துரியோதனைன் நிலை கேட்டு அவன் மனைவியும் , மகனும், திருதராட்டினனும், காந்தாரியும் போர்க்களத்திற்கு வருகின்றனர் ; புலம்புகின்றனர்.மகன் துர்ஜய தன் தந்தையின் தொடையில் உட்காரும் வழக்கமான ஆசையைத் தெரிவிக்க
” உனக்கு பரிச்சயமான இடத்தை விட்டு விடவும் , இங்குமங்கும் உட்கார நீ பழக வேண்டும்” என்று சோகம் வெளிப்பட மகனோடு பேசுகிறான்.தன் தந்தையிடம் பேசும் போது பிறந்த பெருமையோடு வானகம் போவதாகச் சமாதானம் சொல்கிறான்.”எல்லாப் பிறவிகளிலும் நீயே தாயாக வேண்டும் ” எனத் தாயிடம் வேண்டுகிறான். குந்தி , திரௌபதியிடம் மதிப்போடு நடந்து கொள்ள வேண்டுமென மகனுக்கு அறிவுரை சொல்கிறான்.அப்போது அங்கு வரும் அசுவத்தாமன் நடந்தவைகளைக் கண்டு கொதித்து எழுந்து “பிளக்கப் பட்டது தொடை மட்டுமல்ல கௌரவுமும்தான் ” என்கிறான். திரௌபதியின் கூந்தலைப் பற்றியிழுத்தது , அபிமன்யுவைக் கொன்றது ,வனவாசம் அனுப்பியது எனத் தான் செய்தது எதுவும் கௌரவமானவர்களுக்கு சாதாரண நிந்தனைகளா ? என கேட்டு விட்டு என் அழிவு சரியானதே . என் வாழ்க்கையிலிருந்து விடை பெறுகிறேன் ” என்று நிதானமாகப் பேசுகிறான்.

வியாசர் படைத்திருக்கும் துரியோதனனுக்கும், பாசாவின் பாத்திரப் படைப்புக்கும் உள்ள வேறுபாடுகள் நாடக ஆசிரியனின் சுதந்திரத்திற்குச் சான்றாகிறது.பாசாவின் பாத்திரம் எதிர் நிலை இயல்பு கொண்டதல்ல. துரியோதனன் தன் நல்லியல்புகளை இழப்பது முறையற்ற வழி காட்டுதலில் தான். தானே எதிலும் முதன்மையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட அவனுக்கு சகுனியின் வழி காட்டுதல் தவறான பாதையை முன்னிறுத்துகிறது. தோல்வியைச் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளாது வன்மமும், துவேஷமும் கொண்டு ஏற்கிற போது மனித மனம் கொடூரங்களின் பிறப்பிடமாகிறது.என்றாலும் ஏதாவது ஒரு சூழலில் மனிதன் தன் தவறை உணர்ந்த வனாகிறான். இது சிலருக்கு வாழ்வின் தொடக்கத்திலும், சிலருக்கு இடையிலும், சிலருக்கு முடிவிலும் என்று பல கட்டங்களை உள்ளடக்கி அமைகிறது. வாழ்வின் இறுதியில் ’உணர்வு’ பெறுபவன் வாழ்க்கையைத் தான் தொலைத்து விட்டதை அறியும் போது அதுவே அவனுக்கு பெரிய தண்டனையாகி விடுகிறது.பாசாவின் பார்வை இவ்வகையில் தான் அமைகிறது. அதனால் தான் மகனிடம் மற்றவர் அறிவுரைப்படி நடக்கும் படி வேண்டுகிறான். தைரியமும், இரக்கமும் உடையவனாக அவனிருந்தாலும் பொறாமையும், பேராசையும் அவன் நல்லியல்புகளை மாற்றி அழிவுச் சிந்தனையை உரியதாக்கி விடுகிறது.
நாடகப் பாத்திரங்களின் போக்கை உளவியல் ரீதியான பார்வையில் காண்பது பாசாவுக்கு பொருத்தமாகிறது. அதனால்தான் எதிர்நிலைப் பாத்திரங்களை படைப்பாளியால் இரக்கத்தோடு பார்க்க முடிகிறது.அந்தப் பார்வை நாடகத்திற்கும், பாத்திரங்களுக்கும் வெற்றி தருவதை பாசாவின் நாடகங்கள் உணர்த்துகின்றன.
———————-

முனைவர் தி.இரா.மீனா

Series Navigationஆதிஎங்கோ தொலைந்த அவள் . ..