(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை)
முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com
14. நேர்மையால் உயர்ந்த ஏழை
வாங்க…வாங்க…என்னங்க..உம்முன்னு பேசாம இருக்குறீங்க…சரி உடம்புக்கு ஏதாவது சுகமில்லையா? இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா? சும்மா சொல்லுங்க…என்ன ஒண்ணுமில்லையா? அப்பறம் ஏன் உம்முன்னு நிக்கறீங்க…நான் கேட்ட வினாவிற்கு விடை தெரியலியேன்னு வருத்தமா….அடடா…இதுக்குப் போயி வருத்தப்படலாமா? விடைய நானே சொல்லிடறேன்.. இதுல என்ன இருக்கு…. அவரு வேற யாருமில்லை..
1904-ஆம் ஆண்டு தற்போதைய உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள முகல்சாரி என்ற ஊரில் லால் பகதூர் ராம்துல்லாரி தேவிக்கும் சரதா பிரசாத்துக்கும் மகனாகப் பிறந்தார். பிறந்த போது அவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் லால் பகதூர் சிறிவஸ்தவா. இவரின் தந்தை சரதா பிரசாத் பள்ளி ஆசிரியர். பின்பு அலகாபாத்திலுள்ள வருவாய் துறையில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். லால்பகதூர் மூன்று மாத குழந்தையாக இருந்த போது கங்கையில் கரையில் தாயாரின் கையில் இருந்து நழுவி ஓர் இடையரின் கூடையில் விழுந்து விட்டார். இடையருக்கு குழந்தை கிடையாது. எனவே இது தனக்கு கடவுளின் பரிசு என கருதி லால் பகதூரை தன் வீட்டுக்கு எடுத்து சென்று விட்டார். குழந்தையை காணாத லால் பகதூரின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர். காவலர்கள் லால் பகதூரை கண்டு பிடித்து அவர் தம் பெற்றோரிடம் சேர்த்தனர்.
தந்தையின் இறப்பு
லால் பகதூர் ஒன்றரை வயதுக் குழந்தையாக இருந்த பொழுது இவரின் தந்தை இறந்து விட்டார். எனவே தாயார் ராம்துல்லாரி தேவி இவரையும் இவரின் இரண்டு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு தன் தந்தை வீட்டிற்கு சென்று தங்கிவிட்டார் . பத்து வயது வரை தன் பாட்டனார் கசாரிலால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். அங்கு உயர் நிலைப்பள்ளி இல்லாததால் மேற்கொண்டு படிக்க வரணாசிக்கு அனுப்பப்பட்
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுதலும்
மாணவனாக இருக்கும்போது இவருக்கு புத்தகங்கள் படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குருநானக்கின் வரிகள் மீது பிரியமாக இருந்தார். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் அவர்களை போற்றினார், 1915-ஆம் ஆண்டு வாரணாசியில் மகாத்மா காந்தி அடிகளின் உரையை கேட்ட பிறகு தன் வாழ்க்கையை நாட்டிற்கு அர்பணித்தார். சாதி முறையை எதிர்த்த இவர் தன் பெயரில் இருந்த சிறிவஸ்தவா என்ற சாதியைக் குறிக்கும் குடும்பப் பெயரை நீக்கினார் 1921-ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி அடிகள் தொடங்கிய போது அதில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
காவலில் வைக்க உரிய வயது இவருக்கு இல்லாததால் அரசு இவரை கைது செய்து காவலில் வைக்காமல் வெளியில் அனுப்பியது [6]. பின் வாரணாசியிலுள்ள தேசியவாதி சிவ் பிரசாத் குப்தா அவர்களால் தொடங்கப்பட்ட காசி வித்தியாபீடத்தில் இணைந்து 4 ஆண்டுகள் படித்தார். அங்கு முனைவர் பகவன்தாஸ் அவர்களின் மெய்யியல் தொடர்பான விரிவுரையில் பெரிதும் கவரப்பட்டார். 1926-ஆம் ஆண்டில் காசி வித்தியாபீடத்தில் படிப்பை முடித்ததும் சாஸ்திரி என்னும் பட்டம் அவருக்குக் கொடுக்கப்பட்டது. இதுதான் பின்னர் இவரது பெயருடன் இணைந்து விட்டது. லால்பகதூர் மக்கள் சமுதாயத்தின் பணியாள் என்ற அமைப்பில் வாழ்நாள் உறுப்பினராக பதிவு செய்து முசாப்பர்பூர் என்னும் இடத்தில் அரிசனங்களின் மேம்பாட்டுக்காக உழைத்தார். பின் அவ்வமைப்பின் தலைவரானார்.
1921-ஆண்டில் லால்பகதூர், லலிதா தேவியை மணந்தார். அக்காலத்தில் பெண்ணைப் பெற்றவர்களிடம் பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் வெகுவாக இருந்த போதிலும் இவர் காதியையும் இராட்டையையும் மட்டும் வரதட்சணையாகக் கேட்டு வாங்கிக் கொண்டார். 1930-ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். அப்போது இவருடைய மகளுக்கு உடல் நலம் மிக மோசமானதால், லால்பகதூர் எந்தப் போராட்டத்திலும் ஈடுபட கூடாது என்ற நிபந்தனையின் பேரில் 15 நாட்களுக்கு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அவர் வீட்டிற்கு வருவதற்குள் அவர் மகள் இறந்துவிட்டார். லால்பகதூர் ஈமச்சடங்குகளை முடித்து விட்டு 15 நாட்கள் முடிவதற்கு முன்னர் தாமாகவே சிறைச்சாலைக்குத் திரும்பிவிட்டார். அடுத்த ஆண்டு இவர் மகனுக்குக் காய்ச்சல் என்றதால் ஒரு வாரம் சிறையிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதி வாங்கினார். ஆனால் மகனுக்கு ஒரு வாரத்தில் காய்ச்சல் சரியாகாததால் லால்பகதூர் குடும்ப உறுப்பினர்களின் கூறியதையும் மீறிச் சிறைச்சாலைக்குத் திரும்பினார். தனக்குச் சலுகை கிடைக்கிறதே என்பதற்காக வீணாக அதைப் பயன்படுத்தாது எந்தச் செயலிலும் லால்பகதூர் சாஸ்திரி நேர்மை தவறாது நடந்து கொண்டார்.
1937-ஆம் ஆண்டில் உத்திர பிரதேச நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணிக்கமர்ந்தார் . 1940-ஆம் ஆண்டில் சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக தனி நபர் சத்தியாகிரகம் இருந்ததால் ஓர் ஆண்டு சிறை தண்டனை பெற்றார்.. 1942 -ஆம் ஆண்டு காந்தி அடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கினார். சிறையிலிருந்து விடுதலையாகி வந்திருந்த லால் பகதூர் சாஸ்திரி அலகாபாத்திற்குப் பயணம் செய்து ஜவகர்லால் நேருவின் ஆனந்தபவன் இல்லத்திலிருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடர்பாக குறிப்புகளை ஒரு வார காலத்திற்குள் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லால் பகதூர் சாஸ்திரி 1946-ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப்பட்டார். இவர் ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்தார். சிறையில் இருந்த காலத்தில் பல புத்தகங்களைப் படித்தார். மேற்கத்திய தத்துவ ஞானிகள், புரட்சியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் ஆகியோரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டார். மேரிகியூரியின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் மொழி பெயர்த்தார்.
அமைச்சராதல்
இந்திய விடுதலைக்குப் பின்னர் சாஸ்திரி உத்தர பிரதேசத்தின் பாராளுமன்றச் செயலராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் உத்தர பிரதேச முதலமைச்சர் கோவிந் பல்ல பண்ந்த் அவர்களின் அமைச்சரவையில் காவல் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது இவரே முதன் முதலில் பெண்களை நடத்துனராக நியமனம் செய்தார். காவல்த் துறை அமைச்சராக, கட்டுப்பாடற்ற கூட்டத்தைக் கலைப்பதற்குத் தடியால் அடிப்பதற்குப் பதிலாக நீரைப் பீய்ச்சி அடிக்குமாறு காவல்த் துறைக்கு உத்தரவிட்டார் .
1951-ஆம் ஆண்டில் காங்கிரஸ் செயற்குழுவுக்கு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். தலைவராக ஜவகர்லால் நேரு இருந்தார். வேட்பாளர் தேர்ந்தெடுத்தல், தேர்தல் நடவடிக்கைகள், தேர்தல் விளம்பரங்களின் போக்கு போன்றவற்றிற்கு இவர் பொறுப்பானரவாக இருந்தார். காங்கிரஸ் கட்சி 1952, 1957, 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் பெற்ற பெரும்பான்மையான வெற்றிகளுக்கு லால்பகதூர் சாஸ்திரியின் பங்களிப்பு முக்கிய காரணமாகும்.
1951-ஆம் ஆண்டில் நேருவால் இந்திய மேலவைக்கு நியமிக்கப்பட்டார். 1951-1956 வரை ரயில்வே மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1956-ஆம் ஆண்டில் மெகபூப்நகர் ரயில் விபத்தில் 112 பேர் இறந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக முன்வந்தார். எனினும் நேரு இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று மாதங்கள் கழித்து அரியலூரில் நடைபெற்ற இரயில் விபத்தில் 144 பேர் இறந்ததைத் தொடர்ந்து சாஸ்திரி தனது பதவி விலகல் கடிதத்தை நேருவிடம் ஒப்படைத்தார். பதவி விலகலை ஏற்றுக்கொண்ட நேரு இச்சம்பவம் குறித்துப் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது விபத்துக்குச் சாஸ்திரி காரணமில்லை என்ற போதிலும் அரசியல் சாசன முறைமைக்கு இது முன்மாதிரியாக விளங்கும் என்று கூறினார். நாடே சாஸ்திரியின் நேர்மையைப் போற்றியது.
1957-ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலைத் தொடர்ந்து சாஸ்திரி நடுவண் அமைச்சரவையில் இணைந்தார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்பு வணிக மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். 1961-ஆம் ஆண்டில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் உள்துறை அமைச்சராக இருந்தபொழுது சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்பு குழு அமைவதற்கு காரணமாக இருந்தார்.
நேர்மைக்குக் கிடைத்த பரிசு
லால்பகதூரின் நேர்மையை விளக்கும் விதமாக மேலும் ஒரு சம்பவம் நடந்தது. அவர் அமைச்சராக வருவதற்கு முன்னர் காங்கிரஸ் அலுவலகத்தில் பணிபுரிந்தார். அவருக்கு மாத ஊதியமாக ரூபாய் 45 கொடுத்தார்கள். அது வாழ்க்கையை நடத்துவதற்கே சாஸ்திரி அவர்களுக்கு இழுபறியாக இருந்தது. அவரது மனைவி அதை வைத்து எப்படியோ சமாளித்து வந்தார். அந்நிலையில் அவருடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் அவரிடம் முப்பது ரூபாய் இருந்தால் கொடுக்குமாறு கேட்டார். சாஸ்திரியும் அவருக்கு உதவுவதாக வாக்களித்துவிட்டார். தனது மனைவியிடம் வந்து விவரத்தைக் கூறினார். அந்த நண்பருக்கு எப்படியாவது உதவுவதாகக் கூறிவிட்டு வந்துவிட்டதாகவும் மனைவியிடம் எடுத்துரைத்தார்.
சாஸ்திரியின் மனைவி முப்பது ரூபாய் தன்னிடமிருப்பதாகக் கூறி அதனை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தார். சாஸ்திரியும் அதனை வாங்கிக் கொண்டுபோய்த் தனது நண்பரிடம் கொடுத்துவிட்டு வந்தார். வந்த பின்னர் தனது மனைவியிடம் உன்னிடம் பணம் ஏது என்று கேட்டார். அதற்கு அவரது மனைவி, “நீங்கள் கொடுக்கும் பணத்தில் மாதம் தோறும் ஐந்து ரூபாய் மமிச்சப்படுத்தி வைப்பேன். அப்படிச் சேர்ந்ததுதான் இந்த முப்பது ரூபாய்” என்று கூறினார்.
இதனைக் கேட்ட சாஸ்திரி எழுந்து வேகமாக காங்கிரஸ் அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு சென்று தனக்கு நாற்பது ரூபாய் மட்டும் ஊதியமாகத் தந்தால் போதும். இனிமேல் நாற்பத்தைந்து ரூபாய் ஊதியம் தர வேண்டாம் என்று கூறிவிட்டு வந்துவிட்டார். வீட்டிற்கு வந்த சாஸ்திரியிடம் எங்கு வேகமாகச் சென்றீர்கள்? என்று கேட்டார். சாஸ்திரியும் நடந்ததைக் கூறினார். அதனைக் கேட்ட அவரது மனைவியார் வாயடைத்துப் போய்விட்டார். சம்பளம் போதவில்லை என்று கூறிப் போராட்டம் நடத்துபவர்களைத்தான் பார்த்திருக்கிறோம். கொடுக்கிற சம்பளத்தைக் குறைச்சுக் கொடுங்க என்று சொல்றவரை எங்காவது பார்த்திருக்கிறோமா? வறுமையிலும் செம்மையாக வாழும் நேர்மையான குணம் தான் சாஸ்திரி அவர்களை உயர்வான இடத்திற்கு இட்டுச் சென்றது என்றால் எவ்வளவு உண்மை..பார்த்துக்குங்க நாம நேர்மையா நடந்தாலே போதுங்க..அந்த நேர்மை நம்மை வாழ்க்கையில உயரச் செய்யும். இது முழுமையா உணர்ந்து நடக்க வேண்டும்.
ஜவகர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் நாளில் மறைந்ததைத் தொடர்ந்து இந்திய அரசில் வெற்றிடம் ஏற்பட்டது. அப்போதைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் சாஸ்திரி பிரதமராக வருவதற்குக் காரணமாக இருந்தார். நேருவின் கொள்கையுடையவரும் சமதர்மவாதியும் நேர்மையாளருமான இவரது தன்மையான பாங்கும் பேச்சும், பழமையை விரும்பும் வலது சாரியான மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாதோரிடம் செல்வாக்கினை அதிகமாக்கியது. இவரது நேர்மைதான் இவர் பிரதமராக உயர்வதற்குக் காரணமாக அமைந்தது.
இவரு பிரதமரா ஆன உடனேயே அவர வந்து பத்திரிக்கையாளர்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டு, உங்க முன்னேற்றத்திற்கு யாரு காரணம் சொல்லுங்க? அப்படின்னு கேட்டாங்க. அதுக்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “ஒரு தோட்டக்காரர்தான் நான் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம்” என்றார். பத்திரிக்கையாளர்கள் வியப்புடன், ‘எப்படி?’ என்று கேட்டனர். அதற்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “நான் சிறுவயதாக இருக்கும்போது எனது தந்தையார் இறந்துவிட்டார். எனது தாயரே என்னை வறுமைக்கிடையில் வளர்த்தார். நான் சிறுவனாக இருந்தபோது அருகில் உள்ள மாந்தோப்பிற்குச் சென்று எனது நண்பர்களுடன் மாங்காய் பறிக்கச் சென்றேன். எனது நண்பர்கள் என்னை மட்டும் மரத்தில் ஏறி மாங்காய் பறிக்கச் சொன்னவுடன் நான் மரத்தில் ஏறி மாங்காய் பறித்துக் கொண்டிருந்தேன். அப்போது மாந்தோப்பைக் காவல் காக்கும் தோட்டக்கார் வரவே எனது நண்பர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். நான்மட்டும் மரத்தில் இருந்ததால் அவரிடம் அகப்பட்டுக் கொண்டேன்.
என்னைப் பிடித்த அவர் ஏன்டா இப்படிச் செய்யலாமா? என்று கேட்டார். நான் அழுது கொண்டே எனது தவறுக்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டேன். அவரோ தம்பி உனது அப்பா இறந்துவிட்டதால் உனக்கு நீதான் வழிகாட்டி. நீ நேர்மையா இருந்தா பெரிய ஆளா வந்துவிடலாம். நல்லது எது கெட்டது எதுன்னு நீதான் தெரிஞ்சுக்கணும். மற்றவங்களுக்கு அவங்க அப்பா இருக்காங்க. ஒனக்கு நீதான் எல்லாமே. நல்ல நண்பர்களோட சேரு. நல்லவனா இரு. அதுதான் உன்னை வாழ்க்கையில உயர்த்தும்” என்று கூறி மாங்காய்களையும் கொடுத்து அன்பா அனுப்பி வச்சாரு. அவரு சொன்னது எனது மனதில் ஆழமாப் பதிஞ்சு போயிருச்சு. அவரு சொன்னத அப்போதே கடைபிடிச்சேன். அதனாலதான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்தேன். அப்போது அவரு மட்டும் என்னை வழிப்படுத்தவில்லை என்றால் இன்றைக்கு இந்த உயர்ந்த நிலையை என்னால எட்ட முடிஞ்சிருக்காது. என்னோட உயர்வுக்கு அந்தத் தோட்டக்காரர்தான் முக்கிய காரணம்” அப்படின்னு சொன்னாரு.
பாருங்க யாரு நல்லதச் சொன்னாலும் அதை உதாசீனப்படுத்தி ஒதுக்காம நாம வாழ்க்கையில கடைபிடிக்கணும். ‘சிறுதுரும்பும் பல் குத்த உதவும்’ அப்படின்னு நம்ம பெரியவங்க சொல்லி இருக்காங்க. அதனால சொல்றவங்களப் பார்க்காமால் அவங்க சொல்ற நல்ல கருத்தை மட்டும் மனசு வச்சுக்கிட்டு வாழ்க்கையில முன்னேறணும். அதுக்கு லால்பகதூர் சாஸ்திரியோட வாழ்க்கை நமக்குப் பாடமா இருக்கு பாத்துக்குங்க..
இந்தியா கண்ட பிரதமர்களிலேயே மிகக் குறைந்த காலம் ஆட்சியில் இருந்தவர்களில் லால்பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும் ஆவார்கள். இருவருமே நேர்மையும், நாணயமும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு தங்கள் பதவியைத் துஷ்பிரயோகம் செய்யாதவர்களாகவும் இருந்தனர். இந்தக்காலத்தில் இது அதிசயமாக இருக்கலாம். ஆனால் இது நடந்தது. சாஸ்திரிஜியின் பிள்ளை கல்லூரியில் சேரும்போது தன் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அவர் சொல்லிவிட, பிள்ளையும் கல்லூரிக்கு விண்ணப்பம் அளித்திருக்கிறார்.
தகப்பன் பெயர்: லால்பகதூர் சாஸ்திரி
தகப்பன் வேலை: இந்தியப் பிரதமர்
எல்லா விண்ணப்பங்களையும் பரிசீலித்தவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. உடனே அவர் கல்லூரி முதல்வருக்குச் செய்தியைக் கொண்டு சென்றார். முதல்வர் உடனே சாஸ்திரியின் மகனை வரவழைத்துக் கேட்க உண்மை தெரிகிறது. கல்லூரி முதல்வர் உடனேயே பிரதமரின் அலுவலகத்திற்குத் தொலைப்பேசி வழியாகப் பேசி பிரதமரோடு பேச வேண்டும் என்று கேட்க, சில மணிகளில் பிரதமர் பேசுகிறார். முதல்வர் பிரதமராக இருந்த லால்பகதூரிடம் “ஐயா உங்கள் பையன் என்று தெரிந்தால் கல்லூரியில் சேர்க்க மாட்டோமா? இது என்ன சோதனையா?” என்று வருந்த, அதற்கு லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், “இல்லை, ஐயா, அவன் என் மகன் என்பதால் நீங்கள் உங்கள் கல்லூரியில் அவனைச் சேர்த்தால் நான் வருத்தப்படுவேன். அவன் வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் அவன் கேட்டிருக்கும் பாடத்திட்டத்திற்கு ஏற்றதாக இருந்து, அவன் தகுதியுள்ளவனாக இருந்தால் அவனை உங்கள் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லை எனில் வேண்டாம்.” என்று கூறினார். எந்தத் தந்தையும் ஒருபோதும் இப்படிச் சொல்லவே மாட்டார்.
என்னங்க இத நம்ப முடியலயா? சில விஷயங்களை நம்ப முடியாதுங்க. இது உண்மையில் நடந்தது. இது போன்று நேர்மையா இருந்ததனாலதான் அவர உலகமே போற்றியது. அந்த நேர்மைதான் அவர மேலும் மேலும் வாழ்வில் உயர்த்தியது.
சாதனைகள்
மாற்றுக் கருத்துகளையும் மதித்து சமரசம் காணும் இவரது இயல்பான குணத்தினால் இவரது பணி சிறப்பாக நடந்தது. குறுகிய காலம் ஆட்சியிலிருந்த இவரால் நாட்டின் பொருளாதார நெருக்கடியையும், உணவு பற்றாக்குறையையும் சமாளிக்க முடியவில்லை. எனினும் இந்திய மக்களிடம் இவரின் மதிப்பு குறையவில்லை, இவர் இந்தியாவில் பசுமைப் புரட்சி கொண்டுவர முயன்றார். பசுமை புரட்சி மூலம் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதுடன் தேவைக்கதிகமாகவும் உணவு உற்பத்தி செய்தது, அதை பார்க்க இவர் உயிரோடு இல்லை. பாகிஸ்தானுடனான 22 நாள் போரின் போது ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கத்தை உருவாக்கினார். பசுமை புரட்சியை இவர் வழியுருத்திய போதும் வெள்ளைப் புரட்சியையும் ஊக்கப்படுத்தினா
இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டுள்ள போது செப்டம்பர் 17, 1965 அன்று சீனாவிடமிருந்து இந்தியாவிற்குக் கடிதம் கிடைத்தது. அதில் இந்திய இராணுவம் சீனப் பகுதியில் கருவிகளை நிறுவியுள்ளதாகவும், அதை விலக்கிக்கொள்ளாவிட்டால் சீனாவின் சீற்றத்திற்கு இந்தியா ஆளாகும் என்றும் கூறியது. சீனாவின் இப்பயமுறுத்தல் கண்டு சாஸ்திரி, சீனாவின் இக்குற்றச்சாட்டு தவறானது எனக் கூறியதுடன் சீனா இந்தியாவை தாக்குமானால் இந்திய விடுதலையை காக்க உறுதியுடன் நாம் சண்டையிடுவோம் என்றார். சீனா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்திய பாகிஸ்தான் போர் இரு நாடுகளுக்கும் பலத்த ஆள் மற்றும் பொருளாதார சேதங்களை உண்டாக்கியது. இந்திய பாகிஸ்தான் போர் செப்டம்பர் 23 1965 அன்று ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட போர் நிறுத்த ஆணை மூலம் முடிவுக்கு வந்தது.
தாஷ்கண்ட் ஒப்பந்தம்
போர் நிறுத்த கையொப்பத்திற்குப் பின் அதனை நடைமுறைப்படுத்துவதில் இருந்த, இடைவிடாத பிரச்னைக்குத் தீர்வு காண சாஸ்திரியும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் சோவியத் ஒன்றியத் தலைவர் அலெக்சி கோசிசின் அவர்களால் தாஷ்கண்டில் கூட்டப்
மரணம் விழுங்கிய மாமனிதர்
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, டெல்லியில் இருந்த மூத்த அமைச்சர் நந்தாவுக்கு தொலைபேசியின் வழியே செய்தியைக் கூறினார் சாஸ்திரி. இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். பின்னர் டெல்லியில் இருந்த தன் மனைவி லலிதா தேவியுடன் தொலைபேசியில் சாஸ்திரி பேசினார். “பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தது. நாளை டெல்லி திரும்புகிறேன்” என்று தெரிவித்தார். நள்ளிரவு மூன்று மணிக்கு (அப்போது இந்தியாவில் நேரம் இரவு 2 மணி) சாஸ்திரிக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவர் வந்து பரிசோதித்தார். சாஸ்திரியின் நாடித்துடிப்புத் தளர்ந்திருந்தது. மருத்துவர் ஊசி போட்டார். மற்றும் பல மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் பலன் இல்லை. மரணம் சாஸ்திரியை அள்ளிக் கொண்டது.
உயிர் பிரிவதற்கு முன் சாஸ்திரியின் உதடுகள் “ஹரே ராம்” என்ற வார்த்தையை முணுமுணுத்தன. சாஸ்திரி மரணம் அடைந்ததை அறிந்து, பாகிஸ்தான் அதிபர் அயூப்கான், ரஷிய பிரதமர் கோசிஜின் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். விரைந்து சென்று சாஸ்திரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது அயூப்கானும், ஜோசி ஜின்னும் கண் கலங்கினார்கள்.
ஜனவரி 11-ஆம் தேதி காலை, தாஷ்கண்டில் இருந்து
சாஸ்திரி உடல் விமானம் மூலமாக டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டது. சாஸ்திரியின் உடல் தாஷ்கண்ட் நகரில் இருந்து டெல்லிக்கு அனுப்பப்பட்ட காட்சி உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. சாஸ்திரியின் உடல் அவர் தங்கியிருந்த மாளிகையில், மூவர்ணக் கொடியால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
ரஷியப் பிரதமர் கோசிஜின் கண்ணீர் ததும்ப இறுதி மரியாதை செலுத்தினார். பின்னர் சாஸ்திரியின் உடல், ஒரு பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு, தாஷ்கண்ட் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக சுமார் 10 லட்சம் பேர், சோகத்துடன் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். 21 பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. சாஸ்திரி உடல் வைக்கப்பட்டு இருந்த சவப்பெட்டி, விமானத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அயூப்கானும், கோசி ஜின்னும் தோள் கொடுத்து சுமந்தனர். இதுதான் விந்தையிலும் விந்தை! பகைமை பாராட்டிய பாகிஸ்தான் அதிபர் கண்ணீர் மல்க சாஸ்திரியின் உடலைச் சுமந்தது அனைவரது உள்ளத்தையும் உருக்கிவிட்டது. பகைவரின் உள்ளத்தைக் கூட நெகிழ வைத்த நேர்மையாளராகச் சாஸ்திரியார் திகழந்தமை அதன் வாயிலாகப் புலப்பட்டது.
சாஸ்திரியுடன் தாஷ்கண்ட் சென்றிருந்த மந்திரிகள் ஒய்.பி.சவான், சுவரண்சிங் ஆகியோரும் சவப்பெட்டியைச் சுமந்தனர். சாஸ்திரி உடலைப் பெற்றுக் கொள்வதற்காக, டெல்லி விமான நிலையத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் கையில் மலர் வளையத்துடன் காத்திருந்தார். சாஸ்திரியின் மரணச் செய்தியை அறிந்ததும், காங்கிரஸ் தலைவர் காமராஜர் விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார். சாஸ்திரி உடல் வந்து சேருவதற்கு முன்பே டெல்லியை அடைந்து, விமான நிலையத்தில் காத்திருந்தார் காமராஜர்.
நடுவண் அமைச்சர்கள், தலைவர்கள், வெளிநாடுகளின் தூதர்கள், சாஸ்திரி குடும்பத்தினர் ஆகியோரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். சாஸ்திரி உடலுடன் தனி விமானம் பிற்பகல் 2.31 மணிக்கு டெல்லி வந்து
சேர்ந்தது. சாஸ்திரியின் உடலை இறக்க, 6 ராணுவ அதிகாரிகள் விமானத்துக்குள்
சென்றனர். சாஸ்திரியின் மகன் அரிகிஷணை மந்திரி சவான், விமானத்துக்குள்
அழைத்துச்சென்றார். சாஸ்திரியின் உடலைப் பார்த்து, அரிகிஷண் கதறி அழுதார்.
சாஸ்திரி அவர்களின் உடல், பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு அவர் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.
கணவரின் உடலைப் பார்த்து லலிதா சாஸ்திரி கதறி அழுதார். பல
லட்சக்கணக்கான மக்கள் தங்களின் நேர்மைமிகு தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். மறுநாள், யமுனை நதிக்கரையில் நேரு சமாதி அருகே சாஸ்திரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
செய்யப்பட்டது. “சிதை“க்கு, சாஸ்திரியின் மூத்த மகன் அரிகிஷண் தீ
மூட்டினார். இறுதிச் சடங்குக்கு ரஷிய பிரதமர் கோசிஜின், அமெரிக்க துணைக் குடியரசுத் தலைவர் அம்ப்ரே, அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் டீன்ரஸ்க், ராணி எலிசபெத்தின் தூதராக மவுண்ட்பேட்டன் பிரபு, இங்கிலாந்து உதவிப்பிரதமர் பிரவ்ன், பாகிஸ்தான் வர்த்தக அமைச்சர் பரூக் மற்றும் பல அயல்நாட்டுத் தலைவர்கள் வந்திருந்தனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த, மிகக் குள்ளமான லால்பகதூர் சாஸ்திரி, அவர்கள் தன்னுடைய நேர்மையான செயல்களாலும் நடத்தையாலும் பாரத ரத்தினாவாக ஒளிர்கின்றார். அவரது வாழ்க்கை நாம எல்லோருக்கும் அருமையான வழிகாட்டியா அமைஞ்சிருக்கு.. பார்த்தீங்கள்ல.. இனிமேலாவது நான் ஏழை எனக்கு எதுவுமே இல்லை… இந்த ஏழ்மை நிலையில என்னை ஏன் பெத்தாங்க? அப்படி இப்படின்னு எல்லாம் புலம்பாதீங்க…
“வெறுங்கை என்பது மூடத்தனம்
விரல்கள் பத்தும் மூலதனம்”
அப்படடீங்கறத நம்புங்க. முதல்ல உங்கள நம்புங்க.. அப்பத்தான் மத்தவங்க ஒங்கள நம்புவாங்க… இறைவனும் உங்களுக்கு உதவுவதற்காகப் பலவழிகளில் காத்துக்கிட்டிருப்பாரு… அப்பறம் என்ன வெற்றிப் பாதையில இலக்கை நோக்கிப் பயணமாகுங்க…வெற்றி தொட்டுவிடும் தூரம்தான்…
உலகத்துல யாருமே வளர்ர முறையிலோ அல்லது வளர்க்கப்படுகின்ற முறையிலோதான் நல்லவங்களாகவோ கெட்டவங்களாகவோ மாறுராங்க. எல்லாமே சூழல்தான் நிர்ணயிக்குது..அந்தவகையில ஒருத்தரு இருந்தாரு பிறக்கும்போது நல்லவராத்தான் இருந்தாரு..நல்லாப் படிச்சாரு..ஆனா வறுமை வாட்டுச்சு..தந்தையின் கொடுமை…தாயாரின் துன்பம்…பிச்சை எடுக்கக் கூடிய நிலை…இது எல்லாத்தையும் மீறி…தன்னோட கடினமான முயற்சியில அவரு முன்னுக்கு வந்தாரு…பெரிய நாட்டிற்கு அதிபரா வந்தவரக் கண்டு எல்லாரும் பயந்தாங்க…அந்த ஏழை உலகையே நடுங்க வச்சாரு..யாருன்னு அவரத் தெரியுதா?…என்ன ஒரே குழப்பமா இருக்கா?… அடுத்த வாரம் வரைக்கும் பொறுத்துக்குங்க…..(தொடரும்
- பாம்பே ட்ரீம்ஸ்
- வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…
- கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது
- மாயக் கண்ணனின் மருகோன்
- நீங்காத நினைவுகள் – 9
- நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………26 ஜெயமோகன் – ‘புதிய காலம்’
- போதி மரம் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 27
- கவிகங்கையின் ஞானஅனுபவம்
- குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்
- பூமியைச் சுற்றி மூன்றாம் “வான் ஆலன்” கதிர்வீச்சு மின்துகள் வளையம் [Van Allen Radiation Belt] தோன்றி மறைந்தது
- டௌரி தராத கௌரி கல்யாணம்..! – 10
- விட்டல் ராவின் கூடார நாட்கள்
- உ(ரு)ண்டை பூமியை நோக்கி
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -9
- காவல்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !
- வேர் மறந்த தளிர்கள் – 14,15,16
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
- புகழ் பெற்ற ஏழைகள் – 14
- தாகூரின் கீதப் பாமாலை – 72 மீளாத மாலைப் பொழுது .. !
- மருத்துவக் கட்டுரை – தூக்க மூச்சடைப்பு
- ‘தளம்’ காலாண்டிதழின் மின்பதிப்புத் துவக்கம்
- மழையின் பாடல்.
- கவிஞன்
- அலையின் பாடல்
இக் கட்டுரையைப் படித்தபின், அரசியல்வாதிகளும் அவர்கள் முயன்றால் நேர்மையாக இருக்க முடியும் என்பதைப் புலப்படுத்தியது.இத்தகைய சான்றோர்கள் வாழ்ந்த நாட்டிலா இன்று ஊழல் அரசியல் உலா வருகிறது என்றும் எண்ணத் தோன்றுகிறது! வாழ்த்துகள் முனைவர் சி.சேதுராமன் அவர்களே…..டாக்டர் ஜி.ஜான்சன்.