புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

This entry is part 16 of 26 in the series 27 அக்டோபர் 2013

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)
மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத்து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E. Mail: Malar.sethu@gmail.com

30.பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகனாகத் திகழ்ந்த ஏ​ழை

marxim“உ​ழைப்பதிலா இன்பம்? உ​ழைப்​பைப் ​பெறுவதிலா இன்பம்?

எதி​லே உண்​டென்று ​சொல் ​தோழா”

வாங்க…வாங்க… என்னங்க பாட்​டுப் பாடிக்கிட்டு அமர்க்களமா வர்ரீங்க…என்ன பதி​லக் கண்டுபிடிச்சிட்டீங்களா….? அட…ஆமா…உலகப் புகழ் ​பெற்ற தாய் அப்படிங்கற நாவல எழுதின ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி தான் அவர். அவ​ரைத்தான் உலகம் பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன் அப்படின்னு ​சொல்லுது… பாட்டாளிங்க அத்த​னை ​பேரும் அவரத் ​தெரிஞ்சு வச்சிருப்பாங்க.

எத்த​னை​யோ ​பேருக்குத் துன்பம் வருது.. ​போகுது.. ஆனா சில​பேர் துன்பத்தி​லே​யே வாழ்ந்து ​கொண்டிருக்காங்க… அந்தத் துன்பத்தி​லேருந்து ​ரொம்பச் சில​பேருதான் முன்​னேறி இருக்காங்க.. பல​பேரு அதிலிருந்து மீள முடியாம..புலம்பி புலம்பி காணாமப் ​போயிடுறாங்க.. நம்ம பாட்டனார் வள்ளுவரு,

“சுடச்சுடரும் ஒளிவிடும் ​பொன்​போல் துன்பம்

சுடச்சுட ​நோக்கிற் பவர்க்கு”

என்று ​சொல்லுற குறளுக்​கேற்ப, துன்பத்தி​லே​யே பிறந்து துன்பத்தி​லே​யே வளர்ந்து அதில மூழ்கிப் ​போயிடாம ​மே​லே வந்து, தான் மட்டுமல்லாம மற்றவங்க​ளையும் முன்னுக்குக் ​கொண்டுவரப் பாடுபட்டவருதான் மாக்சிம் கார்க்கி.

பிறப்பும் இள​மைத் துயரமும்

உலக​மே வியந்து பாராட்டிய மாக்சிம் கார்க்கி 1868-ஆம் ஆண்டு மர்ச்சு மாதம் 28-ஆம் நாள் ரஷ்யாவில் பிறந்தார். இவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ் என்பதாகும். கார்க்கியின் தந்​தை ஒரு கூலித் ​தொழிலாளி. அவர் கடு​மையாக உ​ழைத்துத் தனது குடும்பத்​தைக் காப்பாற்றினார். ஆனால் கார்க்கியின் பாட்டனார் வாசிலிகாசிரின் என்பவர் அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்றார். தந்​தையின் ​பேரிழப்பு கார்க்கி​யை துன்பக் குழியில் ஆழ்த்தியது. கார்க்கி மூன்று வயதிலேயே பெற்றோரிருவ​ரையும் இழந்தார். தந்​தை இறந்ததால் தனக்​கேற்பட்ட துயரத்தி​னை, “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று கார்க்கி குறிப்பிடுகின்றார்.

மாக்சிம் கார்க்கி தனது இளம்வயதில் இருள் மயமான துயரம் நி​றைந்த வாழ்​வை வாழ்ந்தார். அவருக்கு வாழ்க்​கை எட்டிக்காயாக அ​மைந்திருந்தது. எங்கு ​போகி​றோம்? எப்படி வாழ்கி​றோம் என்ற இலக்​கே இல்லாது வாழ்ந்தார். ஆனால் அந்தத் துயரத்திலும் அவரது பாட்டி அக்குலினா என்பவ​ரே அவருக்குத் து​ணையாக இருந்து அவருக்கு வழிகாட்டினார். அவரது பாட்டி அக்குலினா பாட்டி மட்டும் இல்லையென்றால் மாக்சிம் கார்க்கி என்ற பாட்டாளி வர்க்க இலக்கியப் பிதாமகன் எட்டு வயதிலேயே மடிந்திருப்பார்.

கார்க்கி, “என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து படைத்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின” என்று தனது பாட்டியைப் பற்றி “எனது குழந்தைப் பருவம்” என்ற நூலில் அவர் குறிப்பிடுகின்றார். மாக்சிம் கார்க்கி தனது பாட்டியின் ராஜாராணிக் கதைகளைத் தனது இறுதிக்காலம் வரை கேட்கக் கிடைக்காத புதையல் என்று மதித்துப் பேணிப் பாதுகாத்தார்.

ஆனால் கார்க்கி​யை அவரது தாத்தா ​கொடு​மைப்படுத்தினார். தாத்தாவின் கொடுமைக்கு ஆளாகிய கார்க்கி ​கொடு​மை​யைத் தாங்க முடியாமல் மாக்சிம் தனது பத்தாவது வயதிலேயே வாழ்க்கை​யை நடத்த வீட்டை விட்டு வெளியேறினார். தந்தை இறந்ததாலும் தாத்தாவின் ​கொடு​மையாலும் ஏற்பட்ட துயரமும், வறுமையும் வீட்​டை விட்டு அவரை விரட்டியடித்தன. வீட்​டைவிட்டு ​வெளி​யேறிய கார்க்கி தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத்தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்க்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று ​பொருள்.

மாக்சிம் கார்க்கி குழந்தைத் தொழிலாளியாக மாறி பல இடங்களில் வேலை செய்தார். பத்து வயதி​லே​யே கார்க்கி ஒரு குறிப்​பேடு ​வைத்துக் ​கொண்டு தனது பாட்டி தனக்குக் கூறிய க​தைக​ளை அதில் எழுதி வந்தார். அவர் அவ்வாறு எழுதிய குறிப்​பேட்​டை ஒரு​போதும் மற்றவர்களிடம் காட்டியதில்​லை. அத​னைப் பாதுகாப்பாக தன்னிட​மே ​வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செருப்பு தைப்பது, மூட்டை தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்ப்பாதை​யைக் காவல் காக்கும் காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என அத்தனை வேலைகளையும் மாக்சிம் கார்க்கி ​செய்தார். இவ்வாறு. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால்தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தைப் படைக்க முடிந்தது.
தற்​கொ​லை முயற்சி

மாக்சிம் கார்க்கி ​வே​லை கி​டைக்காததால் பல நாட்கள் பட்டினி கிடந்தார். ​வே​லைக்காகவும், உணவிற்காகவும் வீதிகளில் அலைந்தார். அ​லைந்து அ​லைந்து ​சோர்ந்து ​போன கார்க்கி ஒரு கட்டத்தில் தான் வாழத் தகுதியில்லாதவன் என்று ​நொந்து​போய் வாழ்க்​கை​யை ​வெறுத்து தன்​னை மாய்த்துக் ​கொள்ள முடிவு ​செய்தார்.

அவர் முடிவு ​செய்தபடி 1887-ஆம் ஆண்டு செப்டம்பர் 12-ஆம் நாள் இரவு எட்டு மணிக்கு “தனது தற்கொலைக்கு ஜெர்மானியக் கவிஞர் ஹைனே தான் காரணம்” என்று எழுதி ​வைத்துவிட்டு துப்பாக்கியால் தன்​னைத் தா​னே சுட்டுக் ​கொண்டார். அத​னைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவ​ரைத் தூக்கிச்​சென்று மருத்துவம​​னையில் ​சேர்த்தனர். துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஆறி மருத்துவமனையை விட்டு சுகமாக மாக்சிம் கார்க்கி வீடு திரும்பினாலும் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட தசைவலிகள் அவர் சாகும் வரை அவ​ரைத் துன்புறுத்தின. பிற்காலத்தில் தனது ம​னைவியிடமும் நண்பர்களிடமும் இத​னைக் கார்க்கி ​சொல்லிச் ​சொல்லி சிரிப்பதுண்டு. ​மேலும் மாக்சிம் கார்க்கி, “எனது இளமைப் பருவத்தை தேவன் பறித்து விட்டான்” என்று தனது இள​மைக் காலத்தி​னைப் பற்றி வேடிக்கையாகவும் குறிப்பிடுவது உண்டு. அதற்காக கார்க்கி வேதனைப்பட்ட​தேயில்லை.

பிரார்த்தனை செய்யும் வேலை

கார்க்கி தனது இருபத்து நான்காவது வயதில் வறு​மையின் காரணமாக இடுகாட்டில் பிணங்களின் தலைமாட்டில் நின்று கூலிக்குப் பிரார்த்தனை செய்யும் வேலை செய்தார். கார்க்கி இவ்​வே​லையில் ஆறு மாத காலம் மட்டுமே நீடித்தார். இவ்​வே​லை கார்க்கிக்கு வாழ்க்கையில் மனஉறுதி​யைத் தந்தது. பிணங்களின் வாடையை ஆறு மாதம் பிணத்தின் அருகிலிருந்து தாம் நுகர வேண்டியிருந்த​தை எண்ணி கார்க்கி வருந்தினார். மக்கள் இந்தப் பிணவாடையை விட மோசமான வாழ்வை அனுபவித்த​தைக் கண்டு அதிலிருந்து அவர்களை விடுவிக்கச் சபதம் பூண்டார்.

காவலர் வேலையும் முதல் கவி​தையும்

கார்க்கி காசான் ரயில் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்​போது கார்க்கி தங்கி இருந்த அறைக்குப் பக்கத்தில் ரயில்வே தொழிலாளர்களுக்காக ச​மையல் ​செய்யும் சமையலறை இருந்தது. அதில் ஒரு ச​மையல்காரி தங்கி இருந்து ​தொழிலாளர்களுக்கு ச​மையல் ​செய்து ​கொடுத்துக் ​கொண்டிருந்தாள்.

நாள்​தோறும் இரவு ​நேரங்களில் கார்க்கியை அந்தப் பெண் தொந்தரவு செய்து வந்தாள். அவள் நடந்து ​கொள்ளும் விதத்​தைக் குறித்து ரயில்​வேத் தொழிலாளர்களிடமும், ரயில் நிலைய அதிகாரியிடமும் கார்க்கி புகார் கூறினார். ஆனால் அவர் கூறிய​தை ஒருவரும் ​பொருட்படுத்தவில்​லை. கார்க்கிக்கு என்ன ​செய்வது என்று ​தெரியவில்​லை. சமையல்காரியின் ​​தொந்தர​வைத் தாங்க முடியாத கார்க்கி அத​னைப் பற்றி ஒரு கவி​தை எழுதினார். அது ந​கைச்சு​வையாக இருந்தது.

தனது முதல் கவிதையை கார்க்கி எழுதி அதிகாரியிடம் கொடுத்தார். அத​னைப் படித்துப் பார்த்த அதிகாரி அவ​ரை ​வே​றொரு ஊருக்கு மாற்றி உத்தரவிட்டார். கார்க்கியின் கவிதை ரயில்​வே அதிகாரிகளுக்குப் புரியாத புதிராகவே இருந்தது. அதன் பின்னர் “பழங்கமுகு மரத்தின் கீதம்” என்ற தனது இரண்டாவது கவி​தை​யைக் கார்க்கி எழுதினார். அக்கவி​தை எந்தப் பத்திரிக்​கையிலும் ​வெளியாகவில்​லை. இருப்பினும் கார்க்கி ​தொடர்ந்து கவி​தைக​ளை எழுதிக் ​கொண்​டே இருந்தார். தனது கவி​தைகள் மனிதர்களின் உணர்வுக​ளைத் தட்டி எழுப்புவதில் கு​றைபாடு உள்ளதாக தனது நண்பர்களிடம் தனது கவி​தைகள் குறித்து சுயவிமர்சனம் ​செய்தார். அதனால் கார்க்கி உயிரோடு வாழ்ந்த வரை தனது கவிதைகளைத் தொகுப்பாக வெளியிடச் சம்மதிக்கவே யில்லை. அவர் இறந்த பின்புதான் அந்தக் கவிதைகள் ​​தொகுப்பாக வெளியிடப்பட்டன.

மன​தை உலுக்கிய மரணம்

மாக்சிம் கார்க்கிக்கு ரஷ்ய மொழி தவிர பிரெஞ்சு, இத்தாலி, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளும் நன்கு தெரியும். பிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலந்து, அமெரிக்க எழுத்தாளர் தியோடர் ட்ரீசர், ஜாக்லண்டன், அப்டன் சின்கிளேர், ஆங்கில நாவலாசிரியர்கள் ஜான் கால்ஸ்வொர்த்தி, ஜேன் ஆன்டர்சன், சீன எழுத்தாளர் லூசுன் ஆகியோருடன் கார்க்கி நெருங்கிய நட்புறவு ​கொண்டிருந்தார். ​மேலும் கார்க்கி உலக இலக்கியங்களைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார். பிறநாட்டு இலக்கியங்கள் குறித்து அந்தந்த நாட்டு எழுத்தாளர்களிடம் விமர்சனம் செய்து பாராட்டிப் புகழ்வார்.

கார்க்கி தனது மகனின் உதவியைக் கொண்டு உலக இலக்கியங்கள் பற்றிய பல விமர்சனங்களையும், ஒரு விமர்சன நூலையும் வெளியிட்டார். பல நாடுகளிலிருந்து வரும் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள கதைகள், நாவல்கள், கட்டுரைகளை கார்க்கியின் மகன் தனது தந்தைக்குப் படித்துக் காட்டுவார். தனது தந்​தையின் க​தைக​ளை பிற​மொழிகளில் ​மொழி​பெயர்த்து அனுப்புவதிலும் உதவிகரமாக இருந்தார். இவ்வாறு கார்க்கிக்கு உதவியாக வாழ்ந்திருந்த மகன் 1934-ஆம் ஆண்டு அகாலமாக மரணம​டைந்தார். இம்மரணம் மாக்சிம் கார்க்கி​யை நி​லைகு​லையச் ​செய்தது. மகனின் மரணத்தால் ஏற்பட்ட பாதிப்பு கார்க்கி​யை வாழ்வின் இறுதிவ​ரை உலுக்கி எடுத்துக் ​கொண்​டே இருந்தது.

உ​ழைப்​பை மதித்த உத்தமர்

உலகின் இயக்கத்திற்கு உழைப்​பே உயிர் ஆற்றலாக விளங்குகிறது என்பதில் கார்க்கி உறுதியாக இருந்தார். தன்னுடன் ​பேசும் அ​னைத்து எழுத்தாளர்களிடமும் கார்க்கி இத​னை வலியுறுத்திப் ​பேசினார். கலாச்சாரப் பண்பாட்டிற்கு அடிப்ப​டையாக உ​ழைப்​பே விளங்குவதாக கார்க்கி அ​னைவருக்கும் எடுத்து​ரைத்தார். ​மேலும், “கலாசாரம் என்பது மனிதனின் சிருஷ்டி உழைப்புத்தான்; உழைப்புத்தான் இன்றும் நாளையும் அதன் அடிப்படை. மனிதகுலம் இவ்வுலகில் எப்படியெல்லாம் உழைத்தது, உலகின் வளர்ச்சிக்கு எப்படிப் பயன்படுத்தியது என்பதைக் கூறுகிற கதைதான் உலகின் பேரதிசயமான கதையாகும்” என்று உழைப்பின் ​மேன்​மை​யை எழுத்தாளர்களின் மனதில் பதியும் வண்ணம் கார்க்கி ​தெளிவுறுத்தினார். பாட்டாளிக​ளையும் அவர்தம் உ​ழைப்​பையும் மதித்த உத்தமராக கார்க்கி விளங்கினார்.

பாட்டாளி மக்கள் தங்கள் உழைப்பின் மூலம் படைத்து உருவாக்கிய போற்றுதலுக்குரிய பல்வேறு க​லைப்ப​டைப்புகளிலிருந்துதான் தான் உணர்வு பெற்றதாகக் கார்க்கி கூறினார். அவற்றிலிருந்து பல்​வேறுவிதமான பாடங்க​ளைக் கற்ற கார்க்கி தாய் உள்ளிட்ட அமரத்தன்​மை வாய்ந்த பல இலக்கியப் ப​டைப்புக​ளைப் ப​டைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்க​ளை வளர்த்த எழுத்தாளர்

மாக்சிம் கார்க்கி இளம் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளைப் பொறுமையாய்ப் படித்துப் பார்த்து, அது குறித்த தனது கருத்துக்களைக் கூறுவார். அதில் தவறு ஏதுமிருப்பின் அவற்​றை இன்முகத்துடன் எடுத்துக் கூறித்திருத்துவார். ​மேலும் கடிதங்கள் மூலமாகவும் எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விமர்சனங்க​​ளை கார்க்கி விருப்பு வெறுப்பின்றி எழுதி அனுப்புவார். இளம் எழுத்தாளர்க​​ளை ஊக்கப்படுத்தி அவர்கள் எழுதுவதற்கு உறுது​ணையாக இருப்பார். அ​னைத்து எழுத்தாளர்க​ளிடமும் நட்பு அடிப்ப​டையி​லே​யே கார்க்கி பழகி வந்ததின் மூலம் இளம் எழுத்தாளர்களுக்கு நம்பிக்​கையூட்டினார். இளம் எழுத்தாளர்களின் ப​டைப்புகள் பத்திரிக்​கைகளில் ​வெளிவருவதற்கு கார்க்கி ​தோன்றாத்து​ணையாக இருந்தார். இதனால் இளம் எழுத்தாளர்கள் அ​னைவரும் கார்க்கியின் மீது அளவு கடந்த அன்பு ​வைத்திருந்தனர். அவர்கள் கார்க்கி​யைத் தங்களின் ஞானத்தந்​தையாக​வே கருதினர் என்றால் அது மி​கையாகாது.

கார்க்கி ஆன்டன் செகாவ், மாயகோவ்ஸ்கி போன்ற தனது சமகால எழுத்தாளர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தார். மாயகோவ்ஸ்கியின் வளர்ச்சிக்கு கார்க்கி ​மிகப்​பெரிய உதவிகரமாக இருந்தார். மாயகோவ்ஸ்கி தற்கொலை செய்துகொண்ட​போது கார்க்கி துடித்துப் ​போனார். மாய​கோவ்ஸ்கியின் மரணம் கார்க்கி​யை நி​லைகு​லையச் ​செய்தது.

லெனினிடம் ​கொண்ட நட்பு

​லெனினும் கார்க்கியும் மிகுந்த நட்புடன் பழகினர். கனல் பறக்கும் இதயம் கார்க்கிக்கு அமைந்திருந்தது. அதற்குக் காரணம் மாமேதை லெனி​னே ஆவார். லெனின் கார்க்கியின் வீட்டுக்கு அடிக்கடி வருவார். இருவரும் தனிமையில் பல மணி நேரம் பேசுவார்கள். சில நேரம் சண்டையிடுவது போல் பேச்சு உக்கிரமாக இருக்கும். ஆனால் அது முடிந்தவுடன் இருவரும் நட்புணர்​வோடும் அன்​போடும் நடந்த ​கொள்வர். இத​னைப் பார்க்கும் அ​னைவருக்கும் அது புரியாத புதிராக​வே இருக்கும். அதிலும் கார்க்கி கதை சொல்லத் ​தொடங்கினால் லெனின் அத​னை விரும்பிக் கேட்பார்.

லெனினைப் பற்றி கார்க்கிக்கு மிக உயர்ந்த மதிப்பு இருந்தது. கார்க்கி தனது மரணப்படுக்கையில்கூட லெனின் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தார் என்பதிலிருந்​தே கார்க்கி எந்த அளவிற்கு ​லெனி​னை ​நேசித்தார் என்பது ​​தெளிவாகும். அதே போல் லெனினும் கார்க்கியை தனது உயிராக நேசித்தார்.

“நவில்​தொறும் நூல்நயம் ​போலும் பயில்​தொறும்

பண்பு​டை யாளர் ​தொடர்பு”

என்ற திருக்குறளுக்​கேற்ப ​லெனின் கார்க்கி நட்பு அ​மைந்திருந்தது.

“வீழ்ந்து எழுந்திருக்கும் மனிதனைக் கைகொடுத்துக் தூக்கிவிடு” என்பதுதான் கார்க்கியின் தத்துவமாக விளங்கியது. கார்க்கியின் தத்துவங்களுக்கும் எண்ணங்களுக்கும் ​செயல் வடிவம் ​கொடுத்தவர் ​​​லெனின் ஆவார். ​​​லெனினால்தான் கார்க்கியின் தத்துவம் ​வெற்றிகண்டது எனலாம். தாம் வாழும்​போ​தே தமது தத்துவம் ​வெற்றி கண்ட​தைக் கண்ணாறக் கண்டு மகிழ்ந்தவர் கார்க்கி​யே ஆவார்.

மாக்சிம் கார்க்கி எழுதிய தாய் என்னும் நாவல் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமையுடையது. இந்த நூ​லை எழுதியதற்காக ரஷ்யப் பல்கலைக்கழகம், கார்க்கிக்கு இலக்கியத்துக்கான டாக்டர் பட்டம் கொடுத்துப் பெருமைப்படுத்தியது. டாக்டர் பட்டத்தினைப் பெற்றுக்கொண்ட கார்க்கி​யைப் பார்த்து பத்திரிக்​கை நிருபர் ஒருவர், நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு கார்க்கி, “நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் எனக்கு ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் நான் அதிகம் படித்தேன்” என்றார். ஒவ்​வொரு மனிதரின் வாழ்க்​கையும் ஒரு புத்தகம் என்ப​தை மிகவும் இரத்தினச் சுருக்கமாகக் கூறிய கார்க்கியின் அறிவுத்திறன் ​போற்றத்தக்கதாகும்.

பாட்டாளி வர்க்கத் ​தோழரின் மரணம்

மாக்சிம் கார்க்கி பாட்டாளி வர்க்க மக்களிடம் ஆழ்ந்த அன்பு ​கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி குழந்​​தைகளிடம் அளப்பரிய அன்பு ​கொண்டவராக கார்க்கி விளங்கினார். 1898 – ஆம் ஆண்டில் அவரது கதைகள் அனைத்தும் தொகுப்பாக வெளிவந்த​போது கி​டைத்த பெருந்தொகையைக் குழந்தைகளுக்காகவே கார்க்கி செலவிட்டார். ஏ​ழைகள் மீதும் அனா​தைகள் மீதும் மிகுந்த இரக்கம் ​கொண்டவராக கார்க்கி திகழ்ந்தார். அவர்களுக்குத் தன்னாலியன்ற உதவிக​ளைத் ​தொடர்ந்து ​செய்தார். வெளியில் செல்லும்போது பையில் இனிப்புகளைக் கொண்டு ​​செல்லும் கார்க்கி வீதியில் நடமாடும் ஏழைகளுக்கு அவற்றை மகிழ்ச்சியுடன் கொடுத்துவிட்டுத் திரும்புவார். ஏ​ழைகள் உ​ழைப்பாளிகள் மகிழ்ச்சிய​டைவ​தைக் கண்டு கார்க்கி மகிழ்ச்சிய​டைந்தார்.

ஒருமு​றை தனது ம​னைவியுடன் கிராமத்திற்குச் ​சென்ற கார்க்கி அங்கு வயலில் ​வே​லை ​செய்த உருக்கு​லைந்து வாடிப்​போன விவசாயிக​ளைக் கண்டு கண்ணீர் வடித்தார். அதுமட்டுமல்லாது அவர்களுடன் நிலத்தில் இறங்கி ​வே​லை ​செய்தார். அவர்கள் வாழ்வில் உயர ​வேண்டும் என்று நி​னைத்து அவர்களின் வாழ்க்​கை​யை இலக்கியங்களாக்கினார். அயராது பாட்டாளி வர்க்கத்திற்குப் பாடுபடும் பாட்டாளி வர்க்கத்தினரின் ​தோழராக கார்க்கி விளங்கினார்.

இவ்வாறு அ​னைவராலும் ​போற்றப்பட்ட மாக்சிம் கார்க்கி 1936-ஆம் ஆண்டு ஜுன் மாதம் 18 – ஆம் நாள் தனது 68 – ஆவது வயதில் இவ்வுலகிலிருந்து வி​டை​பெற்றார். அவரின் இறப்பி​னைக் கண்ட பாட்டாளி வர்க்கத்தினர் கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். பாட்டாளி வர்க்கத்திற்காக உ​ழைத்த பிதாமகன் ம​றைந்த​தை அறிந்த உலக மக்கள் கண்ணீரால் அப்பிதாமகனுக்கு அஞ்சலி ​செலுத்தினர்.

மாக்சிம் கார்க்கி பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் மணி மகுடமாகத் திகழ்ந்தார். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஈடு இணையற்ற பெரும் பொக்கிஷம். உலகில் வாழும் ஏழை எளிய மக்களின் அழியாத சொத்தாக விளங்கிய கார்க்கியின் புகழ் மாந்தரினம் இருக்கும் வ​ரை ஒளிர்ந்து ​கொண்​டே இருக்கும்.ஆம்…!

“சிந்திக்கத் ​தெரிந்தவனுக்கு

ஆ​லோச​னை ​தே​வை இல்​லை…!

துன்பங்க​ளைச் சந்திக்கத் ​

​தெரிந்தவனுக்கு வாழ்க்​கையில்

​தோல்வி​யே இல்​லை………….!”

என்பதற்​கேற்ப வாழ்க்​கையில் இள​மையிலிருந்​தே துன்பங்க​​ளை​ அனுபவித்த கார்க்கி அவற்றிலிருந்​தே ​வெற்றிக்கான பாடங்க​ளைக் கற்றுக் ​கொண்டு அவற்​றை​ப் படிக்கற்களாக்கினார். தாமும் உயர்ந்து தான் சார்ந்த நாட்​டையும் நாட்டு மக்க​ளையும் உயர்த்துவதற்கு அடித்தளமாகவும் விளங்கினார்.

என்னங்க மாக்சிம் கார்க்கியின் வரலாறு மன​சுல பதிஞ்சிருக்கும்னு ​நெ​னைக்கி​றேன்.. இனி​மே துன்பம் வந்துட்டுதுன்னு ​நெனச்சு கவ​லைப்படாதீங்க….அத்துன்பத்​தைப் பத்தி ​நெனக்காது வாழ்க்​கையில முன்​னேறிகிட்​டே ​போங்க…..அப்பறம் பாருங்க வாழ்க்​கை பூந்​தோட்டமா மாறி ஒங்க​ளை மகிழ்ச்சிக் கடல்ல ஆழ்த்தும்…​வெற்றி எப்பவும் ஒங்களுக்குத்தான்.

ஒருத்தரு குடி​சையில பிறந்தாரு… ஒ​ழைச்சாத்தான் சாப்பாடு…இல்​லைன்னா இல்​லை…வறு​மையின்னா வறு​மை அப்படி​யொரு வறு​மை… இருந்தாலும் கடு​மையா முயற்சி ​செஞ்சாரு…ஒரு நாட்டுக்​கே அதிபரா வந்தாரு…அப்படி வந்தவரு உலகத்​தை​யே ஆட்டிப் ப​டைச்ச ஒரு சர்வாதிகாரியின் நண்பரானாரு…உலகப் ​போருல அவ​ரோட ​கை​கோர்த்து ​செயல்பட்டாரு…மக்கள மறந்தாரு…கருஞ்சட்​டைப் ப​டைய வச்சிருந்தாரு… வாய்மிரட்டல்​லே​யே எல்லாத்​தையும் சாதிச்சுப்புடலாம்னு ​நெனச்சாரு… ஆனா முடியல..க​டைசியில மக்கள் அவ​ரை ​கொன்னாங்க…அவ​ரோட குடும்பத்​தையும் ​கொன்னாங்க…அப்படி சர்வாதிகாரியா மாறின ஏ​ழை யாரு ​தெரியுமா…. என்ன….​பெருமூச்சு விடுறீங்க…​யோசிங்க…. ​யோசிங்க…அடுத்தவாரம் அவரப் பத்தி ​சொல்​றேன்…அப்ப அடுத்தவாரம் பார்ப்​போம்……….(​தொடரும்………31)

Series Navigationதமிழ்ச்செல்வியின் முதல் கவிதை நூல் பற்றிகுழியில் விழுந்த யானை
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *