பெங்களூர் நாட்கள்

Spread the love

– சிறகு இரவி
0
பெங்களூர் வாழ்வை கனவாக எண்ணி வாழும் மூவரின் வாழ்க்கையை சிலிர்ப்புடன் சொல்லும் சுகமான படம்.
0
1454339663-5092ஜாதக தோஷத்தால் மேற்படிப்பு சிதைந்து, சிவபிரகாஷுடன் சட்டென்று திருமணமாகும் திவ்யா, சிறு வயதிலிருந்தே பெங்களூரை எண்ணிக் கனவு காணும் இளம்பெண். திருமணத்திற்கு பிறகு அவளது வாழ்க்கை கனவின் நீட்சியாக நிதர்சனமாகி பெங்களூரிலேயே வாழும் வாய்ப்பு கிடைக்கீறது. கூடவே அவளது சகோதர்கள் கண்ணனும், அர்ஜுனும் அங்கேயே வர, சந்தோஷ முக்காடலில் திளைக்கீறாள் திவ்யா. தன் பழைய காதலி கிரேசை மறக்க முடியாத சிவா, விமான பணிபெண் லட்சுமியிடம் மையல் கொண்டு ஏமாறும் கண்ணன், ஊனமான சாராவை நெருங்கும் அர்ஜுன் என ரங்கோலி கோலங்களாக மாறுகிறது கதை. சிக்கல்கள் தீர்ந்து சுபத்துடன் முடிகிறது ‘பொம்மரிலு’ பாஸ்கரின் திரை ஓவியம்.
மலையாளத்தில் ஹிட்டடித்த படத்தை அதன் சுவாரஸ்யம் குறையாமல் தமிழுக்கு தந்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டு.
கண்ணனாக பாபி சிம்ஹா அசத்துகிறார். குரூரம் விதைக்கும் கண்களில் அப்பாவித்தனம் பளிச்சிடுவது அவரது தேர்ந்த திறமை. பைக் ரேசர் அர்ஜுனாக ஆர்யா, கலகலப்பு குறைத்து நடித்திருப்பது சராசரி தான். சிவபிரகாஷாக ராணா டகுபட்டி சின்ன பாவங்களில் நிலைத்து விடுகிறார். நஸ்ரியாவை மறக்கடித்து விட்டார் திவ்யாவாக ஶ்ரீ திவ்யா. மீண்டும் சாராவாக ‘பூ’ பார்வதி கவர்கிறார். கண்ணனின் அம்மா சாந்தாவாக சரண்யா பொன்வண்ணன், கிராமத்தை விட்டு நகரத்துக்கு வர ஆசைப்படும் அம்மாக்களின் பிரதிநிதியாக பட்டையைக் கிளப்புகிறார். பெங்களூர் வந்தவுடன் அவரது நடை, உடை, உணவு பாவனைகள் மாறுவதை அவர் காட்டியிருக்கும் விதம் தேர்ந்த நடிகை என அவரை அறுதியிட்டு உரைக்கிறது. சபாஷ். பிரசாதின் காதலி கிரேசாக சிறிது நேரமே வந்து கலகலப்பை விதைத்து விடுகிறார் சமந்தா. அவருடைய அப்பாவாக பிரகாஷ்ராஜ், மகளை இழந்த சோகத்தை வெளிப்படுத்தும்போது நம் கண்களும் கலங்கிப் போகின்றன. லட்சுமியாக ராய் லட்சுமி சூடான காட்சிகளுக்கு தணல் மூட்டுகிறார்.
உறுத்தாத ஒளிப்பதிவுக்கு சொந்தக்காரர் குகன். பிரசாதின் வீடும், பெங்களூரின் அழகிய சாலைகளும் ஓவியங்கள் போல ஒளி பெறுகின்றன. அனாவசிய நீட்டல்கள் இல்லாமல் நறுக்கியிருக்கும் மார்த்தாண்ட் வெங்கடேஷ் பாராட்டுக்குரியவர்.
கொஞ்சம் தெலுங்கு வாடையடித்தாலும் கோபி சுந்தரின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தை தடையில்லாமல் கடத்துகின்றன. “ கூடைக்குள்ளே மூச்சு முட்டும் கல்யாணக் கோழி “ என்கிற பாடல் வரிகள் கவிதையாக, கவிஞரை/ பழனிபாரதியை அடையாளம் காட்டுகின்றன. ரஞ்சித் குரலில் ஒலிக்கும் “ பரபரப்பா ஒரு ஊரு “ குஷியான மெட்டு!
சரியான நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுத்த போதே பாஸ்கர் பாசாகி விடுகிறார். அவர்களை வேலை வாங்கிய விதத்தில் முதன்மை இடத்தில் நிற்கிறார். இனி அவர் தைரியமாக தமிழ் படங்கள் இயக்கலாம். உச்ச நட்சத்திரங்கள் அவருக்கு இசைவார்கள்.
0
பார்வை : தென்றல்
மொழி: ஸ்டார் நாற்காலிகளை நிரப்ப பாபி சிம்ஹாவும், ஶ்ரீ திவ்யாவும் வந்தாச்சு!

Series Navigationவிசாரணைகருணையின் சுடர் – பஷீரின் வாழ்க்கை வரலாறு