பொதுவில் வைப்போம்

This entry is part 22 of 29 in the series 24 மார்ச் 2013

நாம் பிறந்தோம் 
நன்கு வளர்ந்தோம் 
தவழ்ந்தோம் நடந்தோம் 
பள்ளி சென்றோம் 
படித்தோம் விளையாடினோம் 
இருவர் வாழ்விலும் பேதம் இல்லை 
இருவர் வளர்ப்பிலும் பேதம் இல்லை 
இனிமையான நாட்கள்தான் அவை 
பசுமை நிறைந்த நினைவுகள் 

படிப்பில் சிறந்தவள் 
எனப் பாராட்டப் பெற்றேன் 
பதக்கங்கள் வாங்கினேன் 
விளையாட்டில் சிறந்தவள் 
எனப் பாராட்டப் பெற்றேன் 
பதக்கங்கள் வாங்கினேன் 
ஆடல் பாடல் என எதையும் 
விட்டு வைக்கவில்லை நான் 
அவற்றிலும் பரிசுகள் வாங்கினேன் 

திருமணகாலம் வந்தது 
என் மகள் பதக்கங்கள் 
வாங்கியவள் என்றார் தந்தை 
எவ்வளவு சவரன் தேறும்? 
என்றார் உமது தந்தை 
என் மகள் கலைகளில் 
வல்லவள் என்றார் தாய் 
சமையல் கலையை அறிவாளோ?
என்றார் உமது தாய் 

உமக்கும் சமையல் தெரியுமா? 
கேட்கத் தோன்றவில்லை எனக்கு 
கேட்கவில்லை என் பெற்றோரும் 
மணந்தோம் மகிழ்ந்தோம் 
எதிர்காலத் திட்டமிட்டோம் 
பணிக்குச் சென்றேன் நானும் 
என் கல்வியறிவு வீணாகவில்லை 
வந்தது வருமானம் கணக்கிட்டோம் நாம் 
நம் சந்ததியின் எதிர்காலம் சிறக்குமென 

மாலைவரை கடும்  உழைப்பு 
தீராத சலிப்பு களைப்பு 
மேலதிகாரியின் முறைப்பு 
வீடு திரும்பியது சோர்வுற்ற உடல் 
ஓய்வு விரும்பியது அசதியான மனம் 
இருக்கையில் சரிந்து சற்றே 
இளைப்பாறச் சொன்னது அறிவு 
இரவுணவு சமைக்கவில்லையா?
இரக்கமற்று கேட்தது உமது குரல் 

உழைத்த களைப்பு ஏன் 
இருவருக்கும் பொது இல்லை 
புரியவில்லை என் மனதுக்கு 
பயிலும் படிப்பில் வேறுபாடில்லை 
செய்யும் பணியிலும் வேறுபாடில்லை 
சமையல்கலை பெண்களுக்கு மட்டுமே
என்ற பிறந்த வீட்டுச் சீதனமா?
Series Navigationபாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்​அர்த்தராத்திரி ஃபோனும், மாணவர்கள் நிலையும்

4 Comments

  1. Avatar Kannan

    அருமையான கவிதை.. சிறந்த கேள்வி.. பதில் என்ன ?
    வாழ்த்துக்கள்
    தொடர்ந்து நிறைய எழுதவும்

  2. வயிறில்லாக் கணவன் இல்லை !
    பசியில்லாப் பதியும் இல்லை !
    உனக்கும், எனக்கும், சேயிக்கும்
    உள்ளது வயிறு !
    உணவின்றேல் ஊசலாடும் உயிர்
    கணவன் சமைத்தால் என்ன ?
    வானிடிந்து விடுமா ?
    மனைவி மட்டும் ஏன் ? ஏன் ? ஏன் ?
    வினாவுக்குப் பதில் கூறடா
    கணவா ?

  3. Avatar IIM Ganapathi Raman

    பதில்:

    ஒரு வேலைக்காரனையோ காரியையோ வைத்துக்கொள்ளலாம். இருவரும் பணம் சம்பாதிக்க இது முடியும். இன்னொரு ஜீவனுக்கும் அதையொட்டிய மற்ற ஜீவன்களுக்கும் வாழ்வு கொடுத்தாயிற்று.

    பதில் சொல்லமுடியா கேள்விகள் வாழ்க்கையில் இல்லை. பதிலை எதிர்நோக்க பயந்த மனங்கள்தான் உள.

  4. Avatar கோசின்ரா

    நல்ல கவிதை.கேள்விகள் காலத்தை உருட்டுகின்றன.யாரால் பதிலளிக்க முடியும்.இங்கே ஆண் என்பவன் பின்னால் மதம் கடவுள் சம்பிரதாயம் சடங்குகள் இருகின்றன.அவனுடைய சொற்கள் புனித நூலாய் மதிரங்களாய் கலாச்சாரமாய் இருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *