ப்ளாட் துளசி – 1

இந்த ப்ளாட்டுக்கு வந்தது முதல் இதுவரை எந்த பிரச்சனையும் வந்த்தேயில்லை என்கிற சந்தோச பலூனின் சின்னதாய் ஓட்டை.

1.

லிப்டிலிருந்த என்னைக் கையைப்பிடித்து இழுக்காதாவாறு இழுத்து தனது இல்லத்தை நோக்கி இழுத்து சென்றார் நாயர். நாயர் உயரம். பின்னாலிருந்து தள்ளாத குறை.

“ தும் ஆக்கே காலி தோக்கோ “ [ நீ வெறுமன வந்து பாரு ]

நான் ஏன் அவர் வீட்டுக்கு போய் ஏன் வெறுமனே பார்க்க வேண்டும். அதுவும் அலுவல அவசரத்தில்.

’முடியாது’,

’அப்புறம் பார்க்கலாம்’,

’என்ன என்று முதலில் சொல் அப்புறம் யோசிக்கலாம் வரலாமா, வேண்டாமா’

இப்படி ஏதாவது சொல்லியிருக்கலாம் தான். அதற்குள் நாயர் தன் வீட்டு பெல் அடித்துவிட்டார்.

அவரது மருமகள் கதவை திறந்தாள். வியர்வை பொட்டு பொட்டாய் நெற்றியில் முளைத்திருந்தது. சமையலறையில் இருந்து வந்திருக்கலாம். பரதம் ஆடிவிட்டு வந்திருக்கலாம். இல்லை படுக்கை அறையிலிருந்து..

நோ நோ.. சான்ஸ் இல்லை. அவளது கணவன் இப்போது கடலில் உத்தியோக நிமித்தமாய். அதுவுமில்லாமல் காலையிலே அவ்வாறு இருந்திருக்க முடியாது. நாயரின் மனைவி ஆசாரமானவள். எல்லாம் அவள் கட்டுப்பாட்டில் நடப்பதாய் நினைத்துக் கொண்டிருப்பவள்.

“ எந்தா.. இத்தன சீக்கிரம்.. “ மலர்ந்த சிரிப்போடு மாமனாரை பார்த்து தாழ்ப்பாளை நீக்கிய பின், என்னை பார்த்து விரிந்த கண்களில் சின்னதாய் ஆச்சரியக் குறி. இன்னொருத்தன் கூடவே இருப்பதால் தனது மருமகளின் சிரிப்பிற்கு எதிர் சிரிப்பு சிரிக்காமலும், கொஞ்சம் கடினமாகவும் முகத்தை வைத்து கொண்டார் நாயர்.

கதவு திறக்க, முதல் அறை தாண்டி ஹாலுக்கு கூட்டிக் கொண்டு போனார். நான் நடந்தவாறே மருமகளை நோக்க, சின்னதாய் அவள் புன்னகைத்தாள். வெள்ளை நைட்டியில் பச்சை பூக்கள். வியர்வையை அவள் அவசரமாய் ஒரு கையை தூக்கித் துடைத்துக் கொண்டதில் காது பக்கத்து தலைமுடிகள் கலைந்து முகத்தில் விழ, அதை ஓதுக்கி விட இன்னொரு கையைத் தூக்கியதில் ஸ்லீவ்லெஸ் நைட்டி சின்னதாய் நெகிழ்ந்தது போல தெரிந்தது காட்சிப் பிழையாகவும் இருக்கலாம்.

நாயர் இறுக்கமான முகத்தோடு ஹால் திரையின் பின்பக்கத்தைக் காட்டினார். அதில் ஏராளமான சிவப்பு பொட்டுக்கள் இருந்தன. கொஞ்சம் மண் கலந்து இருந்தது. மண்ணை தண்ணீரில் கலந்து கொட்டியது போலத் தெரிந்த்து.

அந்த திரைச்சிலை சோலாப்பூரிலிருந்து வந்த ஓன்று. அதன் மேல் பாகத்தில் எந்த சேதமும் இல்லை. அது அப்படியே சின்ன சின்னதாய் வட்டங்களையும், உருளைகளையும் சேர்த்து கொண்டு தனது உருவத்தை விரித்திருந்தது. அதன் வரைவில் ஒரு திட்டபடிதலையும் தாண்டி மெல்லிதான சுகந்திரமும், இலகு தன்மையும் எப்படியோ அந்த டிசைனில் வந்திருந்தது. அந்த டிசைன் என்னதான் இந்த புடவைக்குள் கட்டினாலும் எனக்குள்ள சுகந்திரத்தை, கள்ளத்தனத்தை மீறலை நீ எடுத்துவிட முடியாது என்று சொல்வது போல தோன்றும். அந்த திரைச்சீலையும் அதிலிருக்கும் ஒரு மெல்லிய, அகிம்சையான கள்ளத்தனத்தையும் ஓவ்வொரு முறையும் இந்த இல்லத்திற்கு வந்திருக்கும்போது இதை ரசித்திருக்கிறேன்.

நாயர் மருமகள் வந்த பின்பு தான் இந்த ரசனை, அதுவும் அவள் ரசனைக்கேற்ற திரைச்சீலை. இதற்கு முன்பு அந்த வீடு ஒரு கந்திர கோலம். நாயர் பெண்டாட்டிக்கு இதெல்லாம் புரிவதில்லை. பிடிப்பதுமில்லை.

நாயர் மூக்கால் பேச ஆரம்பித்தார். மெல்லியதாய் கத்த முயற்சித்தார். செய்தி சுருக்கம் இதுதான்

“ மேலிருந்து விழுந்த நீர் அவர் வீட்டு ஜன்னல் வழியே சிதறி திரையை சிதைத்து விட்ட்து…. இந்த ப்ளாட்டில் இந்த நிம்மதி கூட இல்லை.. இதை சுத்தப்படுத்த என் மருமகள் இவ்வளவு முயற்சித்திருப்பாள். ஆனாலும் அது போவதாயில்லை. நாங்கள் எங்கே போவோம் ? ..

இது நம்மூர் தரவாடில்லை. ப்ளாட் வீடு. மேலே இருப்பதால் மட்டும் கடவுள்களில்லை. என்னால் எந்த கீழ் வீட்டுக்கார்ர்களுக்கும் பிரச்சனையில்லை.. …இத்யாதி ..இத்யாதி.. “ தொடர்ந்து பினாத்திக்கொண்டிருந்தார் நாயர்.

சத்தம் கேட்டு ஈரத்தலையோடும், சந்தன நெத்தியோடும் வந்த நாயர் பெண்டாட்டி அதி பயங்கர மங்களகரமாய் இருந்த்து வயிற்றில் புளியை கரைத்த்து.

“ பாரு.. நானும் தான் செடி வைக்கிறேன்.. அதற்கு மெல்ல மெல்ல தண்ணி விடுவேன். குழந்தைக்கு பால் ஊட்டுவது மாதிரி.. “ சொல்லியபடியே கையை மார்பக்கம் வைத்து காண்பித்தாள். குரலும், உருவமும் பயமுறுத்தியது. திடீரென குரல் மாறி,

“ நீ என் பிள்ளை மாதிரி.. வேறு யாராவது இருந்தால் திருப்பி போட்டு சவட்டி விடுவேன்.. “

இந்த ரீதியில் முழுக்க மலையாள பகவதியாய் அர்ச்சிக்க ஆரம்பித்தாள். நாயர் ஆண்டி வேகமாக பேசும் போது மொழி அதுவாகவே மலையாளமாக மாறி விடுகிறது. ஏன் ஆண்டி திருப்பி போட்டு சவட்டிகிறீர்கள் ? என்று சாதரண நிலையில் இருந்தால் யோசித்திருக்கலாம்.

சிரித்துக் கொண்டே ஆங்கிலத்தில் அவள் மருமகளிடம் கேட்டிருக்கலாம்.

ஆனால் இன்று நிலைமை சரியில்லை. கடிகார முள் அலுவலகத்தை நோக்கி விரைகிறது. சீக்கிரம் கிளம்பணும். வெள்ளைக் கொடி

“ நாயர்.. கண்டிப்பாய் சாயங்காலம் வந்து பேசுகிறேன்.. சாரி.. “ சொல்லியபடியே நகர்ந்தேன்.

நாயர் மருமகள் தான் என்னை வந்து வழியனுப்பி வைத்தாள். அவசரத்திலும் ஒரு மெல்லிய சந்தோசம் எனக்கிருந்தது. அவள் கண்களிலும் ஏதோ ஓன்று வழிவதை உணர முடிந்தது. கிட்ட்த்தட்ட இதே சிரிப்பைத் தான் அவள் மாமனார் கதவைத் திறக்கும்போது விடுத்தாள்.

ஹாலில் அவள் சிரித்த சிரிப்பிற்கும், நடை தாண்டியபின் அவள் சிரித்த சிரிப்பிற்கும் உள்ள வித்தியாசம் நுண்ணியாதயினும் பெரியது. கதவோடு தன் மார்பை நெருக்கி கொண்டாள். லிப்டில் ஏறியபின் மெல்லியதாய் கை அசைத்து விடை கொடுத்தாள்.

அந்த தீரைச்சிலையின் சுகந்திரம் அவள் சிரிப்பில் தெரிந்த்து.

வீட்டிலிருந்து துளசி செடி வழியே வழிந்த நீர் மீதும், அம்மா மீதும் எனக்கே கோபம் வந்தது.

Series Navigationமுகமற்றவனின் பேச்சொலிதேனும் திணை மாவும்