மகுடி கேட்ட மயக்கத்தின் ஆட்டம்

சிரிக்கவும்
இயல்பாய் கரைந்துருகி அழவும்
மரணிக்கவும் தெரிந்த
கடிகார விட்டத்தின் முட்கள்
ஒலிஎழுப்பி தெரிவிக்கும்
அதன் குறிப்புணர்த்தலில்
காலம் கட்டுண்டு கிடக்கிறது
நிறுத்தினால் முடியாத கால ஓட்டத்தை
பந்தயவீரர்கள்
கடந்துவிட முயற்சிக்கிறார்கள்
காலத்தை கைப்பற்றும் முயற்சியில்
எல்லோரும் தோற்றுப் போக
அகாலவெளியில்
சூரியன் மட்டும் பறந்து கொண்டிருக்கிறது.
சகுனம் பார்த்துச் சென்ற நாயொன்றோ
பிறிதொரு நாயைத் தேடி அலைந்தது.
காலம் மீறி
தன் நிழல்பார்த்து குரைத்தபோது தூரத்தில்
இன்னும் நாய்கள் தெரிந்தன.
நிழல் உருவம்
பெரிதாக இன்னும் பெரிதாக
மங்கி மறைந்த சாயல்களில்
பனிரெண்டாயிரம் ஆண்டுகள்
தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த
ஒற்றை உடம்பு குரைக்கத் தொடங்கியது.
ஒடிந்து விழுதென்றும்
துண்டித்து வீசப்பட்ட கயிறென்றும்
ஏமாந்தவர்கள்
காலமற்ற வெளியில் இன்னும் நெருங்கி
பரவசப் புணர்ச்சிக்கு முயல்கிறார்கள்
மகுடி கேட்ட மயக்கத்தில்
தொடர்கிறது ஆட்டம்.
ஸம்ஸம் குடித்து படம் விரித்து சாமியாடும்
நூறுதலைகளுள்ள பாம்புகள்.
வெறிகொண்டு
ஒரு தலையை வெட்டுகையில்
இரண்டுதலைகள் முளைக்கிறது

Series Navigationஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்எதிர் வரும் நிறம்