”மஞ்சள்” நாடகம்

FB_IMG_1498964533821

கடந்த ஜூன் 30 ஆம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நிகழ்த்தப்பட்ட  ”மஞ்சள்”, நாடகம் பார்த்தேன். நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் மன்றம் இணைந்து வழங்கினார்கள். “தவிர்க்கப்பட்டவர்கள்’, என்னும் நூலினைத் தழுவி நாடகப்பிரதியை ஜெயராணி எழுத, ஸ்ரீஜித் நெறியாள்கையில் ,’கட்டியக்காரி’, குழுவினர் நிகழ்த்தினார்கள். ஜெயராணி,பாரதி செல்வா, சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தார்கள். அரங்கில் இருக்கைகள் நிரம்பிப் பார்வையாளர்கள் பலரும் நின்றபடி  பார்த்தார்கள் என்பதே முதல் திருப்திகரமான விஷயம்.”சாதியை ஒழிப்போம் கையால் மலமள்ளும் இழிவுக்கு உடனே முடிவுகட்டுவோம்”, என்னும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்ட நாடகம் குறித்துப் பதிவு செய்வதே அந்நாடகத்தைப் பார்த்து வந்ததற்கான குறைந்தபட்ச நியாயம் எனக் கருதுகிறேன். ஏனெனில் , அது வெறும் நாடகமல்ல. அக்கருத்தைக் கொண்டு சேர்க்கவேண்டும் என்னும் கலைஞர்களின் பேரவா.

 

சரி. நாடகத்திற்குச் செல்வோம்.

எல்லோருக்கும் பெயர் இருக்கிறது. தனித்த தனித்த பெயர் இருக்கிறது. அழைப்பதற்கென்று பெயர் இருக்கிறது. ஆனால், மாநிலம் தோறும் ,இந்தியாவின் பகுதி வாரியாகத்  துப்புரவுத் தொழிலாளர்களை அழைப்பதற்கென்று தனிப்பெயர். சாதியின் பேராலும் தொழிலின் பேராலும் சூட்டிய பெயர். இந்தக் குறிப்போடு தான் தொடங்குகிறது. இயற்பெயர் என்ன ? சமூகத்திற்கு அது தேவையில்லை. பெயர் இல்லாதவர்களாக, முகம் இல்லாதவர்களாக, குரல் இல்லாதவர்களாக.

மலம் அள்ளும் தொழில் செய்கிற போது அதனால்  ஏற்படும் நோய்கள். உடல் நோய்களும் இழிவின் அழுத்தத்தில் உருவாகும் மனவேதனையைத் தாண்டி சரும நோய்கள் .குழந்தை தரித்த தாய்கள் கருச்சிதைவுக்கு ஆளாகும் கொடுமை. மருத்துவர் தவிர்க்கச் சொன்னாலும் இயலாமல் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம்.

இத்தகைய இழி தொழிலைச் செய்வதற்குப் பணித்த ஆதிக்க வர்க்கம் காற்றுவழியேத் தீட்டுப் பட்டு விடும் என்னும் தோரணையில் வீசியெறியும் ரொட்டித் துண்டுகள்.

பெண்கள் என்றும் பாராமல் பெண்களே கொடுமைக்குள்ளாக்கும் கேவலம்.

“எல்லாப் பெண்ணையும் ஒண்ணாப் பார்க்க பிறப்புறுப்புமட்டும் ஒண்ணா இருந்தா போதாது”, என்னும் குரலில் இருக்கும் வேதனை.

பெற்ற குழந்தையைப் படிக்க வைத்து வேறு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்திற்கு எதிராய் நிகழ்த்தப்படும் தடைகள்.

Septic Tank  சுத்தம் செய்கிறபோது விஷ வாயு தாக்கி உயிரிழந்தோர் எத்தனை பேர். யாருக்கு நியாயம் கிடைத்திருக்கிறது.

மரணம் பலவகை உண்டு. இயற்கையான மரணம்.விபத்தால் மரணம். இழிவான மரணம் எத்தனைக் கொடூரமானது. பிறப்பிலே இழிவைச் சுமக்க வைத்த சமூகம் இறப்பிலும் இழிவைச் சுமத்துவது அநீதியல்லவா?

இந்தச் சாவுகளுக்கு, இந்தச் சமூகம் தானே பொறுப்பு. முடியாது என்பவர்களைக்கூட வற்புறுத்திச் செய்யச்சொல்கிற, மிரட்டி செய்யச்சொல்கிற சமூகம் தானே பொறுப்பு.

நீதிமன்றங்கள் என்ன சொல்கின்றன?

அரசியல் அமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

அதில் சொல்லப்படுவது கடைபிடிக்கப்படுகிறதா?

என்ன நடக்கிறது இங்கே?

இங்கே சாதியின் பேரால் தொழிலின் பேரால் அடிமைப்படுத்தி வைத்திருப்பது புனிதமா?

மழை எல்லோருக்கும் மகிழ்வானது. ஆனால் மலம் அள்ளும் தொழிலாளருக்கு நரகம்.

நீதிமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் ஜெய்பீம் பேசும் வசனங்கள் மிகவும் கூர்மையானவை. யாவரையும் சிந்திக்கத் தூண்டுபவை.

“சாதி இங்கே ஒருவனின் வேலையை முன்கூட்டியே தீர்மானிக்கிறது”

”தகுதிக்கேற்ற வேலையை வழங்க சாதி தடையாய் இருக்கிறது”

சாதியை ஒழிக்காமல் ஒருபோதும் தீண்டாமையை ஒழிக்க முடியாது”

“ஆனால்,இத்தனை இழிநிலையை இந்தச் சமூகத்தில் உருவாக்கும் சாதியைக் கேள்விக்குட்படுத்தும் ஒரு பாடப் புத்தகம் கூட இல்லையே ஏன்?”

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை யும் பொறுப்பும் இந்தச் சமூகத்திற்கு இருக்கிறது.

பார்வையாளர்கள் பதிலறியாது திகைக்கிறார்கள்.

கேள்வியின் நியாயம் மட்டும் கைதட்டல்களாய் அரங்கில் எதிரொலிக்கிறது.

மழை குறித்த காட்சியில் அவ்வளவு விஸ்தாரமான மழைப்பாடல் காட்சி தேவையில்லையோவெனத் தோன்றியது. அதுவும் கூட அத்தனை fantasy ஆக சிறப்பாக வேறு அமைந்திருந்தது.

சில காட்சிகள் கூறியது கூறலாய்- வசனங்களல்ல- காட்சிகளே நிகழ்த்தியது நிகழ்த்தலாய் அமைந்திருப்பதை கவனம் கொண்டு தவிர்க்கலாம்.

“மஞ்சள்”, என்பது யாவர்க்கும் மங்கலம். ஆனால் மலம் அள்ளும் தொழிலாளர்க்கு இழிவு. இழிவின் நிறம்.

சமூதாயத்தால் வஞ்சிக்கப்பட்ட தொழிலின் பேரால் இழிவுக்குட்படுத்தப் பட்ட மக்களின் வாழ்வைக் கண்முன் நிறுத்தி அவர்களுக்கான சமூக விடுதலையைத்தர வேண்டிய உணர்வைச் சமூகம் பெறவும் தமதுரிமையைப் பெற யாவர்க்குமான சமவாய்ப்பு அம்மக்களுக்கும் உண்டென்பதை உரக்கச் சொலவும் பெருமளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ,”மஞ்சள்’’, நாடகம் மிக முக்கியமான படைப்பு என்பதில் சிறிதும் அய்யமில்லை.

நாடகத்தை உருவாக்குவதில் பங்காற்றிய  பணியாற்றிய அனைவருக்கும் என் பாராட்டுகளும் மனப்பூர்வமான ஆதரவும்.

—————————————-

Series Navigationஅதிகாரம்English translation in poetical genre of Avvaiyaar’s poems