மந்திரப்பூனை. நூல் பார்வை.

Spread the love

பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு நிறைந்து கிடப்பது போல ஒவ்வொரு எழுத்தாளரிலும் ஒவ்வொரு வாழ்க்கைக்கான வரலாறு புதைந்து கிடக்கிறது. அதை எவ்வாறு எந்த அளவு சிறப்போடும் ஈர்ப்போடும் எளிமையோடும் பகிர்கிறாரோ அந்த அளவு அது காப்பியமாக ஆகிறது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட வைக்கம் முகம்மது பஷீரின் மந்திரப் பூனை நாவல் படித்தேன். தமிழில் மொழிபெயர்த்தவர் சுரா. பலமுறை படித்தும் சுவாரசியம் அடங்கவில்லை. மொழிபெயர்ப்பே இவ்வளவு சுவாரசியம் என்றால் மூலம் எப்படி இருக்கும். மலையாளம் தெரியவில்லையே என்ற ஏக்கம் உண்டானது

”அஹம் பிரமாஸ்மி” என்று ஆரம்பித்துநடுவில் “பிரஹ்ம மயம்” , ”ஸம்பவாமி யுகே யுகே !” என்று சொல்லி ”ஓம் சாந்தி ! சாந்தி !. லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து ” மங்களம் சுபம் என முடித்திருக்குமிந்தக் கதையில் அவர் இந்துவாய் இருந்து சூஃபியாய் மாறினதாக சொல்லி இருக்கிறார். வெறும் இந்துவாய்கூட இல்லை இந்து சன்யாசியாய். அவரைத் தேடிவரும் ஒரு சன்யாசியின்பால் அவருக்கு உள்ள அபிமானத்தையும் , இறைத் தத்துவங்களையும், ரோம மதங்கள் பற்றியும், சங்கீதம் பற்றியும், பிரபஞ்சம் பற்றிய விழிப்புணர்வும்,டார்வினிசம் பற்றிய அழகான விளக்கமும், ஆத்மா மற்றிய விசாரமும், இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்ற கருணையும் நிரம்பிய ., சின்னச் சின்ன சுய கிண்டல்கள், சௌபாக்கியவதிகள் பற்றிய செல்லக் கேலிகள் அடங்கியது இந்நூல்.

பொதுவாக தங்களை மிக சுத்தக்காரர்களாகவும் மற்றவர்களை அழுக்கன், குளிக்காதவன் என்றும் கிண்டலடிக்கும் மக்களின் கிணற்றடிக் குளியல் பற்றி இவரின் எழுத்துக்களில் படித்தபோது அடக்கமுடியாத சிரிப்பு ஏற்பட்டது. ஒரே கிணற்றடியில் எண்ணெய், களிம்பு, சீயக்காய், அரப்பு தேய்த்து குளிக்கும் சிலர் அல்லது பலரின் அழுக்குத் தண்ணீர் அந்தக் கிணற்றிலேயே விழ அந்தத் தண்ணீரையே குடிக்கவும் சமைக்கவும் எடுத்துச் செல்லும் சௌபாக்கியவதிகள், மேலும் அந்தத் தண்ணீரைக் குடித்தால் வரும் குஷ்டம் , ரோகம், போன்றவையும் , இதெல்லாம் விட ஒரே துண்டையே அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உபயோகித்தலும். என மனிதர் உண்மைகளை பட்டியலிட்டுத் தள்ளுகிறார். வீட்டுக் கிணற்றில் சுத்தம் செய்து பொட்டாசியம் பர்மாங்கனேட் , குளோரின் பவுடர் போட்டு சுத்தப்படுத்தி வெள்ளைமணல் இட்டாலே தூய தண்ணீர் கிடைக்கும் என தகவல்களையும் சரளமாகச் சொல்கிறார்.

உலக இலக்கியம் படைக்கப்போவதாக சொல்வதும், அடிக்கடி எழுதிக் குவிப்பதும் பின் சன்யாசியுடன் பால் இல்லாத தேத்தண்ணீர் குடித்து பீடி குடித்தபடி அளவளாவுதலும் என ஒர் அழகான இல்லத்தையும். சௌபாக்கியவதிகளையும், வெண்மணல் முற்றத்தையும், அதில் வாழும் உயிரினங்களையும்., கடல் அலைகளையும். ரயிலின் ஓசையையும், ரயில் பாலத்தில் படுத்தபடி அரிசி பயறை வேகவைத்துச் சாப்பிடும் எளிய சன்யாசியையும் தூரிகை போல வரைந்து காட்டுகிறது கதை. இதில் சன்யாசிகள் யோகம், தியானம் செய்பவர்கள் அரிசியும் பருப்பும் மிளகும் சேர்த்து பொங்கல் போலவே உண்பது நல்லது என யோக நூல்களில் குறிப்பிட்டபடியே இதிலும் பஷீர் சொல்லியிருப்பது குறித்து அவரின் கூரிய பார்வை குறித்து ஆச்சர்யமாய் இருந்தது.

நடுவில் அரசியல்வாதிகளின் உண்ணாவிரதம் குறித்தும், போராட்டம் குறித்தும் கிண்டலும், மனைவியை அவ்வப்போது அடியே என அழைத்து தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதும், மனைவி மற்றும் மற்ற சௌபாக்கியவதிகள் நெருப்பு போன்ற கூரிய பார்வையை தன் மேல் செலுத்துவது குறித்தும், பேசும்போது இடையில் புகுந்து மனைவி பேசுவது குறித்தும் , வைராக்கியத்தை மறக்காத பெண்கள் இனம் குறித்தும், காலம் நேரத்தை மறந்து வாழ்பவர்கள் பெண்கள் என்றும், மனைவிகள் நினைத்து நினைத்து நெஞ்சிலடித்துக்கொண்டு அழ ஒவ்வொரு கணவனிடமும் இருக்கும் பத்துக் குறைகள் பற்றியும், வாழ்வென்பது பயணத்தின் மத்தியில் இரவுநேர சத்திரத்தில் தங்கிப் போவது என்றும், அரசியல், ஆன்மீகம், தத்துவம், லோகாயதம், யதார்த்தம். என சரளமான பகிர்வு.

விவசாயம், தோட்டம், பயிர்விதைகளைப் பாதுகாத்தல், பாம்புகள் பற்றியும் புராணப் பாம்புகளான தட்சன், வாசுகி, அனந்தன் பற்றியும்., இலக்கியவாதிகளின் இயல்பு, அவர்களைப் பற்றிய பகடியும் மிக சுவாரசியம். ஒவ்வொரு முறை தேத்தண்ணீர் குடித்ததும் பீடியோ சிகரெட்டோ குடிப்பது பற்றி எழுதுகிறார்., இந்த பீடி, சிகரெட் , தண்ணீர் இல்லாவிட்டால் யாராலும் உலக இலக்கியம் படைக்கவே முடியாதோ என எண்ணும் அளவு இருக்கிறது.

ஒரு குடும்பத்தலைவனும், ஒரு வொயிட் லகான் சேவலும் ( பதினெட்டுப் பெண்டாட்டிகளும் இவனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் என அடிக்கடி சொல்லி பெருமூச்சு விடுவார் !) மட்டுமே ஆணாயிருக்கும் ஒரு வீட்டில் ஒரு பூனை மகளின் துணைக்காக கொண்டுவரப்படுகிறது. அது பின்னர் ஒரு கட்டத்தில் ஆண் என அறியப்படும்போது உண்டாகும் நிகழ்வுகள்தான் கதை. பெண்கள் ஆண்களை அடக்கியாள்பவராகவும், ஆண் போலி கம்பீரத்துடன் உலா வருபவராகவும். நல்ல சித்தரிப்பு.

கைஸுக்குட்டி எனப் பெயரிடப்படும் அந்தப் பூனை நல்ல ஆபரணங்கள் அணிந்து சிறந்த உணவருந்தி வருகிறது அது பெண் பூனையல்ல ஆண் பூனை என்று அறியப்படும்வரை. சௌபாக்கியவதிகள் மட்டுமல்ல எல்லோருமே புனைகதைகளுக்கு அடிமைகள்தான். எல்லா விநோதமான செயல்களையும் நம்புகிறவர்கள்தான். இரவு நேரம் பேய்க்கதைகள், மந்திரவாதிகளைகள், மோகினிப் பிசாசுக்கதைகள் கேட்டு பயத்தோடு ரசிக்காதவர் இருக்க முடியுமா.. அறிவுக்கு எட்டாத செயல்களை அப்படியே இறைவன் செயல் என்று நம்புவதும்., மனிதர்க்கு மாந்த்ரீக சக்தி உண்டு என்று நம்புவதும் அப்படித்தான்.

இவரே பெண் பூனையை ஆண் பூனையாக மாற்றினார் என்று சௌபாக்கியவதிகளும் அவரின் மகளும், மகளின் தாயும் நம்புவது மட்டுமல்ல, மற்ற சௌபாக்கியவதிகளின் கணவன்மார்களும் வீட்டுக்கு வரும் ஒரு கண்ணாடி அணிந்த ஆளும் நம்புவது ஆச்சர்யம்தான். இதன் நடுவில் அந்தப் புனிதப் பூனை காணாமல் போகிறது. அது ஆண் பூனை என்று அறியப்பட்டதும் சௌபாக்கியவதிகள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் பஷீருக்கு அவர்கள் பயம் ரொம்பப் பிடிக்கிறது . ஒவ்வொரு ஆணுக்கும் பெண் என்பவள் தன்னைக் கண்டு பொய்யாகவேணும் பயப்படவேண்டும் என்ற ஆவல் இருக்கிறதுதான். அது உண்மையாகவே இருந்து விட்டால் அவர்களுக்குத்தான் எவ்வளவு மகிழ்ச்சி..

காணாமல் போன பூனை கனவுகளில் வந்து படுத்துகிறது. பரிகாரம் செய்கிறார்கள். பின் கைஸுக்குட்டி என்ற நீலகண்டன் வந்து சேர்கிறது. சன்யாசியும் வந்து விடைபெற்றுச் செல்கிறார்., மலையுச்சியில் தான் இறந்து கிடப்பதாக நினைத்து விடை கொடுக்கும் படி. எவ்வளவு எளிமையான வாழ்க்கையும் இறப்பும். எல்லாருக்கும் வாய்க்குமா என்ன?

சன்யாசியுடன் கூட பஷீரின் உரையாடல்கள் ரசிக்கத்தக்கவை. நம்மை வேறொரு உலகத்து அறிவுபூர்வமான உலகத்து இட்டுச் செல்பவை. எல்லா மூட நம்பிக்கையையும் அழிப்பவை . முக்கியமாக கடவுள் பற்றிய அவரது கருத்துக்கள், கடவுள் எந்த மதத்துக்கும் சொந்தம் கிடையாது என்பதும்., கடவுள் என்ற கற்பிதம் பற்றியும் அது தம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் ஆளுக்குத் தக்கபடி கையாளப்படும் விதம் பற்றியும் அழகாக ஆழமாக சொல்கிறார். உயிர்களிடம், பாம்பிடம் கூட கருணை காட்டுவது, உயிர்க்கொலை புரியாமல் இருப்பது, அவரது சிந்தனைகளின் வீச்சு, எழுத்து எல்லாம் பிரமிக்க வைக்கின்றன.

இன்று படிக்கும்போது கூட ( இவர் என் தந்தையை விட மிக மூத்தவராக இருப்பார்) ., ஆச்சர்யத்தையும், சந்தோஷங்களையும், நெகிழ்வுகளையும் , அவர் பாணியிலேயே சில கிண்டலான வினாக்களையும் ஏற்படுத்தும் பஷீர் அவர்களுக்கு, எழுத்தின் ஆசான் அவர்களுக்கு என் வந்தனங்கள். நான் இலக்கியத்தில் இன்னும் வளர வேண்டும், மொழியில் வளர்த்துக் கொள்ள வேண்டும். ”குருப்யோ நமஹ..!”

Series Navigationவரவேற்போம் தீபாவளியை!