மனம் வெட்டும் குழிகள்

ஊரை விட்டு
உறவை விட்டு
வந்தது போல்
ஒரு வெறுமை.

மனம்
தனிமையின் குழிகளை
வெட்டிக் கொண்டிருக்கும்.

கண்களில் விரிந்து
கடந்த கால நினைவுகள்
மண் மேடிட்டுக் கிடக்கும்.

ஓய்வு பெற்று
எத்தனை காலம்?

குழியில்
விழுந்து கிடக்கும்
கால நிழலை
மேலும் குழி வெட்டி
மனம் பிடிக்கப் பார்க்கும்.
’மற்றவர்கள்
தன்னை
மறந்து விட்டார்களோ?’
பாறையாய்க்
கேள்வி தடுக்கும்.

’கொஞ்சம் காலமாகத்
தான்
பேச நினைத்த நண்பரோடு
பேசினாலென்ன?’
ஒரு நினைப்பு ஈரமாகும்.

நினைப்பு
நீளும் நினைப்பாகி
ஈரம் போய்
வெகுகாலமாகும்.

ஒரு நாள்
பேச நினைத்த நண்பரே
பேசுவார்
செல்பேசியில்.

அப்போது
பேச நினைத்தே
பேசாது குழியில்
விழுந்து கிடந்த என்னை
வெளியில் அவர்
தூக்கி விட்டது போல் இருக்கும்.

அவர் என்னை நினைத்ததின்
உண்மையில்
’நான் தவறியது’ எனக்குப் புரிதலாகும்.

Series Navigationஎஸ் ராமகிருஷ்ணன் வழங்கும் உலக சினிமா 7 நாள் பேருரைகள்(3) – க. நா.சு. வும் நானும்