டீ. பி. என்று அழைக்கும் நோயைத்தான் தமிழில் காச நோய் என்கிறோம். டீ. பி. என்பது ட்டியூபெர்குலோசிஸ் ( Tuberculosis ) என்பதின் சுருக்கமாகும். இது டீ. பி. நுண்கிருமியால் ( Mycobacterium Tuberculosis ) உண்டாகிறது. இந்த கிருமி காற்றினால் பரவுவது. அதனால் வியாதியால் பாதிக்கப்பட்டவர் பொது இடங்களில் இருமினால் சுற்றிலும் இருக்கும் பலருக்கும் தோற்று உண்டாகும். வீட்டில் ஒருவர் இருமிக்கொண்டிருந்தால் குடும்பத்தினர் அனைவருக்கும் பரவும். வியாதி உள்ளவர் இருமி சளியை வீதியில் துப்பினால் அது உலர்ந்த பின்பும் கிருமிகள் காற்றில் பறந்து பலருக்குத் தொற்றும். இந்த நோய் உள்ளவருடன் நெருங்கிப் பழகினாலும் எளிதில் தொற்றிக்கொள்ளும்.
காச நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவர் மூலமாக குறைந்தது பத்து பேர்களாவது பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது..ஆகவே காச நோய் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு அவசியமாகும். சமீபத்தில்தான் உலக காச நோய் தினம் கொண்டாடப்பட்டது.
உலகில் ஒரு தனிப்பட்ட நோயால் அதிகமானோர் மரிப்பது காச நோயால்தான். 1990 ஆம் ஆண்டில் மட்டும் உலகில் இரண்டு மில்லியன் பேர்கள் காச நோயால் இறந்துள்ளனர்.
இந்தியாவில் வருடத்தில் இரண்டு மில்லியன் பேர்களுக்கு காச நோய் தோற்று உண்டாகிறது. நெருக்கமான மக்கள் கூட்டம், உணவில் சத்துக்குறைவு, குறைவான நோய்த் தடுப்பு, குறைவான நேரில் கண்காணிக்கும் சிகிச்சை முறை, மருந்துகளின் விலை போன்றவை நோய் பரவுவதற்கு முக்கிய காரணங்களாகும்.
நோய் தொற்றும் விதம்
ஒருவருக்கு முதன்முதலாக கிருமித் தோற்று உண்டாவதை ஆரம்ப காச நோய் ( Primary Tuberculosis ) என்று அழைக்கப்படுகிறது. கிருமிகள் நுரையீரலின் நடுப் பகுதியிலும் மேல் பகுதியிலும் புகுந்து அங்கிருந்து லிம்ப் கட்டிகளில் அடைக்கலம் அடைகின்றன. சில கிருமிகள் இரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இக் கிருமிகளை எதிர்த்து வெள்ளை இரத்த செல்கள் போராடி அவற்றை விழுங்குவதொடு, அவற்றுக்கு எதிராக உடலில் எதிர்ப்புச் சக்தியையும் ( ( Immunity ) உண்டுபண்ணுகின்றன. இது 3 முதல் 8 வாரங்களில் உண்டாகிறது. இதை ட்டியூபர்குலின் பரிசோதனையின் மூலம் தோலில் கண்டறியலாம்.
பாதிப்புக்கு உள்ளான நுரையீரல் பகுதியில் அழற்சி உண்டாகி அழிவுற்ற பகுதி வெண்ணை போலாகி அதைச் சுற்றிலும் நார்த்தசைகள் கூடு கட்டி இறுகிவிடும். ஆனால் சுமார் 20 சதவிகித கூடுகளுக்குள் நோய்க் கிருமிகள் சாதுவான நிலையில் உயிர் வாழும். எப்போது உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவு படுகிறதோ அப்போது அவை மீண்டும் வீரியம் பெற்று தாக்கும். அதை ஆரம்ப நிலைக்குப் பிந்திய காச நோய் ( Post – primary tuberculosis ) என்று அழைக்கப்படுகிறது. ஆரம்ப காச நோய் உண்டாகி சில வாரங்களில் இவ்வாறு இரண்டாம் கட்ட காச நோய் ஏற்படுகிறது.
அறிகுறிகள்
ஆரம்ப காச நோயில் பெரும்பாலும் எவ்வித அறிகுறியும் தெரியாது. இருமலும் உடல் சோர்வும் மட்டும் இருக்கலாம்.
ஆரம்ப நிலைக்குப் பிந்திய காசநோயில் பின்வரும் அறிகுறிகள் தோன்றலாம்
* களைப்பு
* பலவீனம்
* பசியின்மை
* உடல் எடைக் குறைவு
* இருமல்
* காய்ச்சல்
* இரவில் அதிக வியர்வை
* சளி – நுரை, சீழ், இரத்தம் கலந்தது
* லேசான நெஞ்சு வலி
* குளிர்
பரிசோதனைகள்
எளிதான பரிசோதனைகளின் மூலமாக காச நோய் உள்ளதை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். அவை வருமாறு
* எக்ஸ்ரே
* சளி பரிசோதனை
அரசு மருத்துவமனைகளில் இவை இரண்டும் இலவசமாக செய்யப்படுகின்றன. தேவைப்பட்டால் சி. டி. ஸ்கேன் ( CT Scan , நுண்ணுயிர் வளர்ப்புப் பரிசோதனை ( Culture ), புரோங்கோஸ்கோப்பி ( Bronchoscopy ) பரிசோதனை செய்யப்படும்.
சிகிச்சை
காச நோயை முற்றிலுமாகக் குணப்படுத்தக்கூடிய மருந்துகள் தற்போது உள்ளன. அவற்றைத் தொடர்ந்து 6 மாதங்கள் உட்கொண்டாலே போதுமானது.தற்போது DOTS என்ற முறை பின்பற்றப்படுகிறது. ( Directly Observed Therapy Short Course = DOTS ) இதில் சுகாதாரப் பணியாளர்களின் நேரடிக் கண்காணிப்பில் நோயாளிக்கு மருந்துகள் தரப்படுகின்றன. அவர்கள் முன்தான் மாத்திரைகளை விழுங்க வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் காச நோய்க்கான இந்த முறையான சிகிச்சை மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தடுப்பு முறைகள்
இருமல் மூலம் காசநோய்க் கிருமிகள் பரவுவதால் இருமும்பொது வாயை மூடிக்கொள்ள வேண்டும். சளி மூலம் நோய் பருவுவதால் கண்ட கண்ட இடங்களில் சளியைத் துப்பக் கூடாது. தற்போது இங்கு வெளி நாட்டுத் தொழிலாளர்கள் பெருகிவருவதால் நோய் பரவுவது அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் இருமல், பசியின்மை, எடை குறைதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
திண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை
உங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.
ஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.