மருத்துவக் கட்டுரை – குடல் புண் அழற்சி

    ColitisUlceratice colitis                          

குடல் புண் அழற்சி நோய் என்பது வயிற்றுப் போக்கு தொடர்புடையது. ஒரு சிலருக்கு இது ஏற்பட்டால் வெறும் வயிற்றுப்போக்குதான் என்று எண்ணி சிகிச்சை மேற்கொள்வது தவறாகும். சாதாரண ஓரிரு நாட்கள் உண்டாகும் வயிற்றுப்போக்கு போன்று இல்லாமல் இது முற்றிலும் மாறுபட்ட நோயாகும்.

          குடல் அழற்சி நோய் அல்லது அல்சரேட்டிவ் கோலைட்டிஸ் ( Ulcerative Colitits  ) என்பது சீதமும் இரத்தமும் கலந்த மலம் கழிப்பதும் அடி வயிற்றில் வலியும் உண்டாகக் கூடிய குடல் அழற்சி நோய். இதில் பசியின்மையும், பலவீனமும்,களைப்பும் முக்கிய அறிகுறிகளாக அமையும்.சில வேளைகளில் வாயில் கூட புண்கள் ஏற்படலாம்.இது போன்று வருவதும் பின்பு குனமாவதுமாக பல காலமாகத் தொடரும். சிலருக்கு இதுபோன்று ஒரு முறை மட்டும் வரலாம். ஆனால் சுமார் 10 சதவிகித்தினருக்கு தொடர்ந்து நீண்ட நாட்கள் நீடிக்கலாம்.
இந்த நோய் கடுமையாக இருக்கும்போது இரத்தம் கலந்த மலம் 10 முதல் 20 தடவைகூட அடிக்கடி வெளியேறி பெரும் சிரமத்தை உண்டுபண்ணலாம்.இதுபோன்று இரவிலும் உண்டாகலாம்.அதோடு அவசர அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல நேரிடும். வெறும் சீதமும் இரத்தமும்கூட வெளியேறும்.
கடுமையான குடல் புண் அழற்சி ஆபத்தானது. அதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படும். மருத்துவமனையில் சேர்ந்து பார்க்கவேண்டும். அதன் முக்கிய அறிகுறிகள் வருமாறு:* இரத்தம் கலந்த மலம் ஒரு நாளில் 6 தடவைக்கு மேல்.
* காய்ச்சல்
* வேகமான இதயத் துடிப்பு
* இரத்த சோகை
* இரத்தத்தில் ஆல்புமின் புரோதம் குறைவு.
மருத்துவப் பரிசோதனையின்போது வயிறு உப்பியுள்ளதையும், அழுத்தி பார்க்கும்போது வலியும் உள்ளது தெரியவரும்.

                                                                   பரிசோதனைகள்

* இரத்தப் பரிசோதனைகள்.- இரத்தம் இழப்பதால் இரத்த சோகை உள்ளதா என்பது தெரிய வரும்.

                            கல்லீரல் செயல்பாடு பரிசோதனை – இதில் ஆல்புமின் எனும் புரோதம் குறைந்து காணப்படும்.

ESR , CRP  எனும் நோய் குறியீடுகள் உயர்ந்து காணப்படும்.

* மலம் பரிசோதனை – இந்தப் பரிசோதனையில் நோய்க்கிருமிகள் வளர்கிறதா என்பது நிர்ணயிக்கலாம்.

*  எக்ஸ்ரே பரிசோதனை – குடலில் காற்று அடைத்திருப்பது பார்க்கலாம்.

* அல்ட்ராசவுண்டு பரிசோதனை – குடலின் சுவர்களின் வீக்கம், குடலுக்குள் தேக்கமுற்றிருக்கும் காற்று, நீர்,போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்.

* பேரியம் எனீமா பரிசோதனை – இதில் குடலில் புண் உள்ளதும், குடல் சுருக்கமும் பார்க்கலாம்.

* கொலோநோஸ்கோப்பி பரிசோதனை – கடும் வலி உள்ளபோது இதை செய்யக்கூடாது. நீண்ட நாள் கொண்ட பிரச்னையில் இதை செய்து பார்த்து புற்று நோய் உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 10 வருடங்களுக்கு மேலான இந்த நோய் உள்ளவர்களுக்கு குடலில் புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

                                                                         சிகிச்சை

குடல் புண் அழற்சி நோய்க்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டபின் இதற்கான முறையான சிகிச்சையை மருத்துவமனையில் பெறுவதே நல்லது. மருத்துவச் சிகிச்சையில் சில பின்விளைவுகள் உள்ளதால் மருத்துவரின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதே மேல்.

மருத்துவச் சிகிச்சை பலனளிக்கவில்லையேல், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். நோயின் தனமைக்கேற்ப அறுவை சிகிச்சை செய்யப்படும். அதிகமான இரத்தக் கசிவு, குடலில் ஓட்டை விழுதல்,நச்சுத் தன்மையால் குடல் வீக்கம் போன்ற ஆபத்தான நிலையில் உடனடி அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்டுள்ள குடலின் பகுதி அகற்றப்பட்டு, செயற்கை ஆசன வழியும் அமைக்கப்படும்.

ஆகவே குடல் புண் அழற்சி நோய் பல்வேறு சிரமங்களை உண்டுபண்ணக்கூடிய நோயாகும். இதன் அறிகுறிகள் இருக்க நேர்ந்தால் உடனடி மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வதே நல்லது.( முடிந்தது )
Series Navigationபில்லியன் ஆண்டுக்குப் பிறகு பூமியின் காந்த உட்கரு எப்படி இருக்கும் என்பதற்கு மாதிரி எறிகல் [Meteorites] மறை குறிப்புசுப்ரபாரதிமணியனின் ” சப்பரம்” நாவல் வெளியீடு: