மருத்துவக் கட்டுரை – நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்

drgj_47

                              

நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டுள்ளவர்கள் எவ்வாறு சிறுநீரகத்தையும் இருதயத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமோ, அதுபோன்றே தங்களுடைய கண்களையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.இல்லையேல் பார்வையை இழந்துபோக நேரிடும்.
சிறுநீரகத்தையும் இருதயத்தையும் எவ்வாறு இந்த நோய் பாதிக்கிறதோ அதே மாதிரிதான் கண்களையும் பாதிக்கிறது. இதை துவக்க காலத்திலேயே கண்டு பிடித்து சிகிச்சை செய்துகொண்டால் நல்ல குணம் கிடைக்கும். இல்லையேல் நிரந்தர பாதிப்பு உண்டாகி பார்வையை இழக்க வேண்டி வரும்.
முதலில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே மிகவும் முக்கியமானது.அப்படி வைத்துக்கொண்டால் கண்கள் பாதிப்புக்கு உண்டாகும் அபாயம் 76 சதவிகிதம் குறைகிறது. கண்களில் பாதிப்பு உண்டாவது துவக்கத்தில் தெரியாமல் உண்டாகும்.
நீரிழிவு நோயில் கண்கள் பாதிக்கபடுவது விழிதிரையில்தான் ( Retina ). இது கண்ணின் உள்ளே நேராக பின் பகுதியில் உள்ளது. இது ஒளியை நுணுக்கமாக உணரும் பகுதி எனலாம். இங்கு நாம் காணும் காட்சிகள் ஒளி சமிக்சைகளால் பதிவாகிறது. பின்பு உடனடியாக அவை கண் நரம்பு ( Optic  Nerve ) மூலமாக மூளைக்கு அனுப்பப்படுகிறது.அப்போதுதான் மூளை அந்த காட்சியையோ, உருவத்தையோ, வண்ணத்தையோ நமக்கு உணர்த்துகிறது. அதைத்தான் நாம் காண்கிறோம்.
இந்த விழித்திரைக்கு தேவையான பிராண வாயுவையும் சத்துகளையும் நுண்ணிய இரத்தக்குழாய்கள் கொண்டு செல்கின்றன. நீரிழிவு நோயில், அதோடு இரத்த  அழுத்தமும் சேர்ந்துகொண்டால், இந்த இரத்தக்குழாய்களைப் பாதித்து அவற்றை வீங்கச் செய்வதோடு அவற்றை பலூன் போன்று விரிந்து வெடிக்கின்றன. அப்போது இரத்தம் கசிந்து வெளியேறி விழித்திரையில் பரவி பார்வையை மங்கச் செய்கிறது. இது சிறு அளவில் நிகழ்ந்தால் நமக்கு எந்த மாற்றமும் தெரியாது.
இவ்வாறு தொடர்ந்து பாதிப்பு ,உண்டானால், இரத்தக் குழாய்களுக்கு பதிலாக புதிய இரத்தக் குழாய்கள் தோன்றி அவையும் உடைந்து மேலும் இரத்தக்கசிவு உண்டாகி விழித்திரை நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் ஒளி புகுவது தடை படும். அதோடு கண்ணுக்குள் இரத்த தேக்கமும் அழுத்தமும் அதிகமாகும்.அதோடு விழித்திரையில் தழும்புகள் உண்டாகி அப்பகுதி கிழிந்துபோகும் ( Retinal Detachment ). இதைத்தான் நீரிழிவு  விழித்திரைநோய் ( Retinopathy ) என்கிறோம். விழித்திரையின் மையப் பகுதி பாதிக்கப்பட்டால் கூறிய பார்வையும் வண்ணங்கள் பார்வையும் பார்க்க இயலாது. இதை உடனடியாக கவனிக்காவிடில் பார்வையை நிரந்தரமாக இழந்துபோக நேரிடும்.

                                       பார்வையைப் பாதுகாப்பது எப்படி?

* பார்வையில் மாற்றங்களை உணர்வது

சாதரணமாக பார்வையில் ஏதும் மாற்றம் தெரிந்தால் கண்ணாடி அணிந்து கொண்டால் போதுமானது என்று நாம் எண்ணுவதுண்டு. ஆனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இவ்வாறு அலட்சியம் செய்யக்கூடாது. அவர்கள் உடன் கண் மருத்துவரைப் பார்ப்பதே நல்லது. அது போன்று பின்வரும் அறிகுறிகள் தென்பட்டாலும் கண் மருத்துவரைப் பார்க்கவேண்டும்.

> பார்வை மங்குதல்
> இரட்டைப் பார்வை
> நேர் கோடுகள் போன்று தெரிதல்
> புள்ளிகளும் கோடுகளும் கண்முன் மிதப்பது
> பார்வையின் பரப்பளவு அளவு சுருங்குதல்
> குறைந்த வெளிச்சத்தில் சரியாக பார்க்க முடியாத நிலை
> பார்வையில் ஒரு ஜன்னல் மூடியிருப்பது போன்று தெரிவது.
> கண்ணில் அழுத்தமும் வலியும்
> வண்ணங்கள் பார்ப்பதில் சிரமம். குறிப்பாக நீளமும் மஞ்சளும் பார்த்து உணர்வதில் சிரமம். ஒரே நிறத்தில் மாற்றங்கள் காண்பதில் சிரமம்.

* தொடர்ந்து பார்வையை கவனித்தல்

முன்பே சொன்னபடி ஆரம்ப காலத்தில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். அதனால் கண் மருத்துவரைப் பார்த்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அவர் கருவி மூலம் கண்ணுக்குள் பரிசோதனை செய்து விழித்திரையை நேரில் பார்ப்பார்.நீரிழிவு நோய் உள்ளது தெரிந்ததும் ஒரு முறை கட்டாயமாக கண் பரிசோதனை தேவை. பின்பு வருடம் ஒரு முறை பரிசோதனை தேவை.ஆனால் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

* உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாடு – உயர் இரத்த அழுத்தமும் விழித்திரையை பாதிப்பதால் அதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

* புகைப்பதையும் நிறுத்த வேண்டும். இதனாலும் இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுகின்றன.

* அளவான உடற்பயிற்சி – கண்கள் பாதிப்புக்கு உள்ளானபின்பு உடற்பயிற்சியை அளவோடு வைத்துக்கொள்ள வேண்டும். காரணம் கடினமான பயிற்ச்சிகள் கண்களுக்குள் அழுத்தத்தை உண்டுபண்ணி இரத்தக்கசிவை உண்டுபண்ணிவிடும்.

* அறுவை சிகிச்சை

பாதிப்ப்க்கு உள்ளான விழித்திரையை சர் செய்ய இப்போது சில சிகிச்சை முறைகள் உள்ளன. அவை வருமாறு.

* லேசர் ஒளிக்கதிர் சிகிச்சை – Photocoagulation
இதன் மூலம் உடைந்துபோன இரத்தக்குழாய்களை அழிப்பதோடு, கசியும் இரத்தத்தைத் தடை செய்து, புதிய இரத்தக்குழாய்கள் உருவாகாமலும் தடை செய்யப்படுகிறது. இதன் மூலம் விழித்திரை கெடுவது 90 சதவிகிதம் குறைகிறது.

* கிரையோசிகிச்சை – Cryotherapy
இதில் தேவையில்லாத இரத்தக்குழாய்கள் குளிரூட்டும் முறையால் அழிக்கப்படுகின்றன.

* விட்ரெக்டமி – Vitrectomy
இதில் கண்ணுக்குள் இருக்கும் ஜெல்லி போன்ற குழம்பு வெளியே எடுக்கப்பட்டு, விழித்திரையிலுள்ள தழும்புகள் நேரடியாக அகற்றப்படுகின்றன.

ஆதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களுடைய சிறுநீரகம்,இருதயம் போன்று கண்களையும் பாதுகாத்துக்கொள்வதே மிகவும் நல்லது.

( முடிந்தது )

Series Navigationஒரு காமிரா லென்ஸின் வழியே…..இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலைமதில் அடிப்புகள்!