மருத்துவக் கட்டுரை — உடலின் எதிர்ப்புச் சக்தி



நமது உடலின் எதிர்ப்புச் சக்தியை தற்காப்பு அரண் ( defence mechanism ) எனலாம். இதை நோய் தடுப்புப் பிரிவு ( immunity system ) என்றும் கூறுவதுண்டு. உடலின் இந்த முக்கிய அங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

நமது சுற்றுச் சூழலில் கண்களுக்குத் தெரியாத நுண்ணுயிர் உலகம் ஒன்று உள்ளது. இவற்றில் பல மனிதனுக்கு நோய்களை உண்டுபண்ணும் தன்மை மிக்கவை. வேறு சில நன்மை பயப்பவை.

பேக்டீரியா , வைரஸ் , காளான் போன்ற்வை நோய்களைப் பரப்புபவை . இதுபோன்று கிருமிகள் மில்லியன் கணக்கில் மனித உடலைத் தாக்கியவண்ணம் உள்ளன .

என்ன? இவ்வளவு கிருமிகள் தாக்குகின்றனவா ? ஏதும் தெரியலையே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. இவற்றை நுண்ணோக்கி மூலமே காணலாம். அதிலும் வைரஸ் கிருமிகளை மின் நுண்ணோக்கி ( Electron Microscope ) மூலமே காணமுடியும்.

இந்த கிருமிகள் உடலுக்குள் புகாமல் தடுக்கும் பணியில் தோல், வியர்வை, எச்சில், சளி , கண்ணீர் , ரோமம் , சுரப்பிகள், அமிலங்கள் போன்றவை செயல் படுகின்றன.

ஆனால் இவற்றையும் மீறி நோய்க் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிட்டால், அவற்றை உடன் தாக்கும் செயலில் நமது எதிர்ப்புச் சக்தி செயலில் இறங்குகிறது .

எதிர்ப்புச் சக்தி பலம் மிக்கதாய் இருப்பின் நோய் தானாக ஒரு சில நாட்களில் குணமாகி விடுகிறது.

நோய்க் கிருமிகள் எதிர்ப்புச் சக்தியையும் மீறி தாக்கினால் நோய் நீடித்து ஆபத்தை விளைவிக்கிறது.

ஆகவே எதிர்ப்புச் சக்தியின் முக்கியமான பங்கு நோய்க் கிருமிகளை அகற்றுவதும் அதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுமாகும்.

இவ்வாறு எதிர்ப்புச் சக்தியை உண்டுபண்ணும் உறுப்புகள் உடலின் சில பகுதிகளில் உள்ளன. அவை வருமாறு:

* லிம்ப் கட்டிகள் – கரலைக் கட்டிகள் ( Lymph Glands ) – லிம்ப் என்பது பால் போன்ற திரவம். இதில் வெள்ளை இரத்த செல்கள் , புரோதம் , கொழுப்பு உள்ளது. உடலின் திசுக்களை நனைப்பதற்க்கு இது உதவுகிறது. எதிர்ப்பு சக்தியில் இது முக்கிய பங்கு ஆற்றுகிறது.

லிம்ப் கட்டிகள் சிறு சிறு உருளைக் கட்டிகள் . கழுத்து, அக்குள், வயிறு, தொடை ஆகிய பகுதியில் இவை உள்ளன. இவற்றிலுள்ள வெள்ளை இரத்த செல்கள் நோய்க் கிருமிகளைக் கொன்று குவிக்கின்றன. அப்போது இவை வீக்கமுற்று காணப்படும். இதையே நெறி கட்டியுள்ளது என்கிறோம்.

* இரத்தக் குழாய்கள் – இவை வெள்ளை இரத்தச் செல்களையும், எண்ட்டிபாடீஸ் எனும் நோய் எதிர்ப்புத் தன்மைகளையும் ,இதர தற்காப்பு சுரப்பிகளின் இயக்கு நீரையும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் போக்குவரத்துச் சாதனமாகப் பயன்படுகின்றன .

* எலும்பு மூளைச் சதை ( Bone Marrow ) – இவற்றில் வெள்ளை இரத்த செல்கள் உருவாகின்றன. இவற்றில் சில கிருமிகளைக் கொல்கின்றன( killer cells ). இவை கிருமிகளை விழுங்கி அவற்றைக் கொல்கின்றன ( phagocytes )

* தொண்டைச் சதை ( Tonsils ) -இவை தொண்டையின் இரு பக்கமும் உள்ளன. சுவாச உறுப்புகளில் நோய்க் கிருமிகள் புகாமல் இவை தடுக்கின்றன. அதிகமான தொற்று உண்டானால் இவை வீக்கமுற்று வலிக்கும்.

* தைமஸ் சுரப்பி ( Thymus ) – இது எதிர்ப்புச் சக்தியின் முக்கிய உறுப்பாகும். இது நெஞ்சின் மேல்பகுதியில் சுவாசக் குழாயைச் சுற்றி உள்ளது. வெள்ளை இரத்த செல்களை டீ-வெள்ளை செல்களாக ( T- Lymphocytes ) இது மாற்றுகிறது. இந்த டீ – வெள்ளை செல்கள் நோய்க் கிருமிகளின் தாக்குதலைத் தடுக்கின்றன.

* மண்ணீரல் ( Spleen ) – இது வயிற்றின் இடது பக்கம் மேல்பகுதியில் உள்ளது. லிம்ப் கட்டியான இது பெரிய உறுப்பாகும். இது இரண்டு விதத்தில் பயன்படுகிறது. எண்ட்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு சாதனத்தையும், வெள்ளை இரத்த செல்யும் உற்பத்தி செய்கிறது. பழைய சிவப்பு இரத்த செல்களிலிருந்த இரும்பு சத்தை பிரித்து எடுத்து அதை மீண்டும் பயன்படுத்த உதவுகிறது.

மேற் குறிப்பிட்டுள்ள அனைத்துமே உடல் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய அங்கங்கள்.

எதிர்ப்புச் சக்தியில் உண்டாகும் குறைபாட்டினால் பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. எதிர்ப்புச் சக்தி சமநிலையில் இருத்தல் அவசியம். அது கூடினாலும் குறைந்தாலும் பிரச்னைததான்!

அவற்றில் சில முக்கிய உதாரணங்கள் வருமாறு : ( வேறு வழியின்றி சிலவற்றை ஆங்கிலத்திலேயே தந்துள்ளேன். இவை நோய்களின் பெயர்கள். கட்டாய மொழி பெயர்ப்பு தேவையில்லை என்றே கருதுகிறேன் )

1. எதிர்ப்புச் சக்தி அதிவேகமாக செயல்பட்டால் உண்டாகும் சில வியாதிகள் ( overactive immune disorders )

* ஒவ்வாமை ( allergy )

* ஆஸ்த்மா ( asthma )

* அரிப்பும் தடிப்பும் ( urticaria )

* சொரி ( eczema )

* மூக்கு அழற்சி ( rhinitis )

* சுய எதிர்ப்பு நோய்கள் ( autoimmune diseases ) – இவை வினோத வகையில் உண்டாகும் நோய்கள்! உடலின் எதிர்ப்பு சக்தி தனது கைவரிசையை தவராக உடலின் உறுப்புகள் மீதே பிரயோகிப்பதால் இவை உண்டாகின்றன! அதனால் இவற்றைக் குணப்படுவதும் சிரமமாகிறது! இத்தகைய விசித்திர நோய்கள் வருமாறு:

* முதல் ரக நீரிழிவு நோய் ( Type 1 Diabetes )

* சோரியாசிஸ் ( Psoriasis )

* ருமேட்டைட் மூட்டு அழற்சி ( Rheumatoid Arthritis )

* ஸ்கிலிரோடெர்மா ( Scleroderma )

* ஐ. டி . பி . ( I.T.P. )

* அழற்சி நோய்கள்

* Fibromyalgia

* Irritable Bowel Syndrome

* Ulcerative Colitis

* Crohn’s Disease

* Celial Disease

2 . எதிர்ப்புச் சக்தி குறைவாகச் செயல்பட்டால் உண்டாகும் சில வியாதிகள். ( Underactive Immune Disorders )

* நோய்த் தோற்று

* புற்றுநோய்

* காசநோய்

* எச். ஐ. வி.

* ஹெப்பட்டைட்டிஸ் B & C

* சைனுசைட்டிஸ்

* சளி – காய்ச்சல்

எதிர்ப்புச் சக்தி அதிக அளவில் செயல்பட்டாலும், அல்லது குறைவாகச் செயல்பட்டாலும் வியாதிகள் உண்டாகின்றன என்பதை அறிந்தோம். ஆகவே உடலின் எதிர்ப்புச் சக்தியை சமநிலையில் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

இதை எவ்வாறு உடலுக்குத் தேவையான அளவில் சமநிலையில் வைத்திருப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

( முடிந்தது )

Series Navigationநல்வழியில் நடக்கும் தொல்குடி!சி.மோகனுக்கு விருது விளக்கு (2014) வழங்கும் விழா