மருமகளின் மர்மம் -10

This entry is part 28 of 29 in the series 5 ஜனவரி 2014

நிர்மலாவின் முகத்து வெளிறலைச் சோமசேகரன் கவனிக்கவே செய்தார். அவருக்குப் பாவமாக இருந்தது.

“இத, பாரும்மா. பயப்படாம சொல்லு. உனக்கு எந்தத் தீங்கும் வராது. அதுக்கு நான் உத்தரவாதம். நான் உங்க அப்பா மாதிரிம்மா. நீ ஏதோ சிக்கல்லே மாட்டிக்கிட்டு இருக்கேன்னு தோணுது. அதுலேர்ந்து உன்னை மீட்க வேண்டியது என்னோட கடமை. உன்னோட அத்தை குளிச்சுட்டு வர்றதுக்குள்ள நாம எல்லாத்தையும் பேசி முடிக்க முடியாது. அதனால, நாளைக்கு யாரோ •ப்ரண்டு  வீட்டுக்குப் போகணும்னு சொல்லிட்டு, ‘வழியில அவ வீட்டுல என்னை உங்க பைக்லே அழைச்சிட்டுப் போய் விட முடியுமா, மாமா’ ன்னு என்னைக் கேளு. நான் ஆ•பீசுக்குக் கிளம்புறப்ப உன்னை என் பைக்குல ஏத்திக்கிறேன். ஆ•பீசுக்கு அரை நாள் லீவ் போட்டுட்றேன். ஒரு ஒட்டலுக்குப் போய் உக்காந்து விவரமாப் பேசலாம்..  ..  .. அடடா! கண்ணைத் துடைச்சுக்கம்மா. நீ என்ன மாதிரியான சிக்கல்ல மாட்டிண்டிருந்தாலும், என்னைக்கும் நீ எங்க மருமகளா இந்த வீட்டில இருப்பேம்மா. ஆனா, உங்க அத்தைக்கு மட்டும் எதுவும் தெரியக் கூடாது.”

“சரி, மாமா.”

“இன்னைக்கு ராத்திரி நீ நிம்மதியாத் தூங்கணும். போலீஸ்ல சில ஆ•பீசர்களை எனக்குப் பழக்கம் அவங்க மூலமா அந்த நவனீதகிருஷ்ணனை நாலு தட்டுத் தட்டி வைக்கச் சொல்றேன்!”

“மாமா!”

“ஒரு யூகந்தாம்மா. எல்லாத்தையும் நாளைக்குப் பேசிக்கலாம். உன்னை காப்பாத்துறதுக்கு நானாச்சு. நிம்மதியாத் தூங்கும்மா, இன்னைக்கு ராத்திரி!”

“தேதே .. தேங்க்ஸ், மாமா.”

“உங்கப்பாவுக்கு நீ தேங்க்ஸ் சொல்லுவியாம்மா? இல்லே, உங்கப்பாதான் வாங்கிப்பாரா?”

அவள் கண்கள் கண்ணீரில் மூழ்கின.

“அசடு, அசடு! கண்ணைத் துடைச்சுக்க!” என்று கூறிவிட்டு அவர் வெளியே போனார்.

மனத்தை அழுத்திக் கொண்டிருந்த கடுஞ்சுமையை இறக்கிவைத்த நிம்மதியுடன் நிர்மலா பெருமூச்செறிந்தாள்.

..  ..  ..       சகுந்தலா ஓட்டல் வளாகத்தில் இருந்த நிர்வாகி நீலகண்டனின் வீட்டுக்கு உடனே போனாள். வீட்டின் நுழைவுக்கு அருகே இருந்த அறையில் நீலகண்டன் உட்கார்ந்திருந்தார். வீட்டில் அவரைத் தவிர வேறு யாரும் இருந்ததற்கான அறிகுறி இன்றி அது அமைதியாக இருந்தது. தினமும் பழகுகிற அதிகாரியாக இருந்தாலும், அந்த இரவு நேர அமைதி சகுந்தலாவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. மறைத்துக்கொள்ள முடியாத திகிலுடன் அவள் அவரை ஏறிட்டாள்.

‘வாங்க. உக்காருங்க.’

அவள் நாற்காலியில் பட்டும் படாமலும் உட்கார்ந்தாள். விஷயத்தையும் சொன்னாள். அன்றுதான் அவளை முதன் முறையாகப் பார்ப்பவர் போன்ற ஆர்வத்துடன் நீலகண்டன் அவளை அணுஅணுவாக ஆராய்ச்சிப் பார்வை பார்த்தவாறே தொலைபேசியை இயக்கினார்.

‘சார்! நான் நீலகண்டன் பேசறேன். நம்ம ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட் சகுந்தலாவுக்கு ஒரு ப்ராப்ளெம். அவங்க ஹஸ்பண்டுக்கு ப்ரெய்ன்ல ட்யூமராம். உடனே ஆப்பரேஷன் பண்ணணுமாம். ..  ..  .. ஆமா. அந்தப் புதுப் பொண்ணுக்குக்குத்தான். இன்னும் ஒரு முழுச் சம்பளம் கூட வாங்கல்லே..  ..  .. ஒரு நிமிஷம், சார்..  ..  .. ஏம்மா, சகுந்தலா! உங்களுக்கு ஹிந்தி வருமா?’

‘தெரியாது, சர். பேசினாக் கூடப் புரியாது.’

‘அப்படியா? நல்லாதாப் போச்சு..  ..  .. வோ பஹ¥..  .. த் கூப்சூரத் ஹை. சினிமா ஸ்டார் பத்மினி கே ஜைஸே! இத்னீ கூப்சூரத் லட்கீ கோ மை(ம்)னே கபீ நஹீ(ங்) தேகா ஹை!’

‘என்ன சொல்றான் இந்த ராஸ்கல்? கூப்சூரத், கூப்சூரத்ங்கறானே? சினிமா  ஸ்டார் பத்மினி மாதரி¢ அழகுன்னு சொல்றானோ’ –  அவள் அந்தச் சொல்லை மனத்தில் இருத்திக்கொண்டாள். ‘ஹிந்தி தெரிஞ்சவங்க யாரையாவது விசாரிக்கணும்.’

அதற்கு மேல் இருவரும் இந்தியிலேயே உரையாடினார்கள். நீல கண்டனின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களில் –  ஹை ஹை என்பது தவிர –  வேறு எதுவுமே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுகிற மாதிரி இல்லை. பேசி முடித்ததும் ஒலிவாங்கியைக் கிடத்திவிட்டு, நீலகண்டன் அவளைப் பார்த்துச் சிரித்தார்.

‘நீ ரொம்பவே அதிருஷ்டக் காரிம்மா. உன்னோட சம்பளத்தை ரெண்டாயிரத்துலேர்ந்து  ரெண்டா யிரத்து ஐந்நூறா ஏத்தச் சொல்றார். கடன் சீக்கிரம் அடையணும் இல்லியா, அதுக்கும்தான்!’ – பேச்சு ஒருமையில் வந்ததை மனத்தில் வாங்கிக்கொண்டாள்.

‘ . . . “அதுக்குத்தான்” ன்னு சொல்லாம, “அதுக்கும்தான்” அப்படிங்கறானே? கூப்சூரத்துக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?’

‘என்ன பாக்கறே? நம்ம முதலாளி தங்கம்னா, தங்கம்மா. வேலையிலே சேந்து இன்னும் முழுசா ஒரு மாசச் சம்பளம் கூட வாங்காத உனக்கு லீவ் குடுத்திருக்காரில்ல? அதிலேர்ந்தே நீ புரிஞ்சுண்டிருந்திருக்கணும். தன் கீழே வேலை செய்யறவங்கள்ள யாரும் கஷ்டப் படக் கூடாதுன்னு நினைக்கிறவர். இப்ப உடனே பதினஞ்சாயிரம் குடுத்துடச் சொன்னார். மீதியை நீ நாளைக்கு வாங்கிக்கலாம். அப்புறம் பதினஞ்சு வருஷம் காண்ட்ராக்ட் போடச் சொன்னார்.”

“பதினஞ்சு வருஷமா!”

“பின்னே? முன்ன பின்ன தெரியாத –  இன்னும் பெர்மனண்ட் ஆகாத ஒரு எம்ப்ளாயீக்கு இவ்வளவு பெரிய தொகையைத் தூக்கிக் குடுக்கிறதுங்கிறது லேசுப்பட்ட விஷயமா? இண்டெரெஸ்ட் இல்லாத கடன். ஆர் யூ இன்டெரெஸ்டெட் ஆர் நாட்?”

‘..  .. யெயெயெ. . .ஸ் சர்! தேங்க்ஸ் எ லாட்!”

“சரி, சரி. இந்தா. இந்தப் பேப்பர்ல கீழேருந்து ஒரு அங்குலம் போல இடம் விட்டுட்டு உன்னோட கையெழுத்தைப் போடு. தேதியையும் போடு. மத்ததை நாங்க பாத்துக்கறோம்  .. என்ன, ஒரு மாதிரி பாக்கறே? இஷ்டமிருந்தாப் போடு. இல்லாட்டி விடு. ஷ்யூர்ட்டி இல்லாம யாரும்மா இவ்வளவு பெரிய தொகையைத் துக்கிக் குடுப்பாங்க?”

“எல்லாம் சரிதான், சர். ஆனா வெத்துப் பேப்பர்ல கையெழுத்துப் போடச் சொல்றீங்களே?”

“இத பாரும்மா. அவர் சொன்னதை நான் செய்யிறவன். வக்கீல்தான் காண்ட்ராக்ட் தயார் பண்ணணும். அவர் ஊர்ல இல்லே. படிச்சுட்டுத்தான் கையெழுத்துப் போடுவேன்னா, ஒரு வாரம் கழிச்சு  வா.’

‘இப்ப கையெழுத்துப் போட்டா இப்பவே பதினஞ்சாயிரம் குடுத்துடுவீங்களா?’

‘மறு நிமிஷமே! நம்ம ஓட்டல்ல எப்பவுமே அரை லட்சம் வெச்சிருப்போம். ஆனா, இன்னைக்குப் பாத்துப் பதினஞ்சுதான் இருக்கு.’

அவள் நடுங்கிகொண்டிருந்த தன் விரல்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து கையெழுத்துப் போட்டு, தேதியையும் எழுதினாள். அப்போதும் விரல்கள் நடுங்கின.

‘ரைட். இப்பவே என்னோட வா. ஓட்டல் ஸ்ட்ராங் ரூம்லேர்ந்து பணத்தை எடுத்துத் தறேன். அப்புறம் மீதியை  அவர் வீட்டுக்கு போய் நீயே நேரடியா வாங்கிக்கலாம்,’  என்றபடி நீலகண்டன் எழ, அவளும் எச்சில் விழுங்கியபடி எழுந்தாள்.

அப்போது அறைக்கு வெளியே காலடி யோசை கேட்டது. வெளியே போயிருந்த அவர் மனைவிதான் திரும்பி யிருந்தாள். அறைக்குள் எட்டிப் பார்த்தாள். முகத்தில் ஒரு சிடுசிடுப்பும் அவநம்பிக்கையும் தெற்றெனத் தெரிந்தன.

‘ஓட்டல் ரிசப்ஷனிஸ்ட். முதலாளி அனுப்பி யிருக்கார்.  வாங்கம்மா, போலாம்.’  –  மனைவியின் முன்னால் மரியாதைப் பன்மை! சகுந்தலாவுக்கு அந்த இசகு பிசகான கணத்திலும் சிரிப்பு வந்தது.

சகுந்தலா அந்தப் பெண்மணியைக் கும்பிட்டாள். முதலில் நீலகண்டன் சாதுவாய் வெளியேறினார். சகுந்தலாவை நோக்கிக் கண்ஜாடை காட்டிய திருமதி நீலகண்டன், ‘முதலாளி படு மோசமான ஆள். ஜாக்கிரதை! என் புருஷன் அவரோட கைப் பொம்மை. பீ கேர்•புல்,’ என்று அவள் காதருகே முனகிவிட்டு உள்ளே போனாள்.

சகுந்தலாவுக்கு வேர்க்கத் தொடங்கிற்று. ஒரு பலியாடு மாதிரி அவருடன் ஓட்டலுக்குப் போனாள். அவர் எடுத்துக் கொடுத்த பணத்துடன் ஆட்டோவில் அவசரமாக மருத்துவ மனைக்குப் பறந்தாள்.

மொத்தப் பணமும் கைக்கு வந்த பிறகுதான் சிகிச்சையைத் தொடங்க முடியும் என்று மருத்துவர்கள் நிர்வாகத்தைக் கேட்ட பிறகு சொல்லிவிட்டார்கள்.

எனவே, மறுநாள் காலை எட்டு மணிக்கு அவள் ஓட்டலில் ஆஜரானாள்.

‘சர்!’

‘வா, வா. மீதிப் பணந்தானே?’

‘ஆமா, சர்.’

‘அதை நீ முதலாளி வீட்டுக்குப் போய் அவர் கிட்டேர்ந்துதான் வாங்க்கிகணும். நேத்தே சொன்னேனே?’

‘அவர் வீடு எங்கே சர் இருக்கு?’

‘இந்தா விசிட்டிங் கார்ட். ஆட்டோவில போ. இந்தா ஆட்டோ •பேர்.’

அவள் போனாள். என்னென்னவோ  கற்பனைகள் அவள் மனத்தில் எழுந்தன. ‘வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்குகிறவர்கள் யோக்கியர்களாக இருக்க முடியாது. ஆனால் எனக்கு வேறு வழியே இல்லை. பதினைந்து வருஷ ஒப்பந்தம் என்று சொல்லிவிட்டு இருபது என்று எழுதிக்கொண்டலும் ஒன்றும் கேட்க முடியாது. ‘இதே சம்பளத்துக்கு என்றும் எழுதிக்கொள்ளக்கூடும்தான்! ஆயினும் என்ன செய்ய முடியும்?  வட்டி  இல்லாத கடன் என்று சொல்லிவிட்டுப் பேச்சு மாறி அநியாய வட்டி விகிதம் போடுவார்களா யிருக்கும்.  வேறு என்ன எழுதி என்னை ஏமாற்ற முடியும்? பார்க்கலாம். . .’

அந்தப் பங்களவை நெருங்கி அவள் அழைப்பு மணியை அழுத்திய கணத்தில் கதவு திறந்தது. முதலாளி விநாயக்ராம் அவளை எதிர்பார்த்தவனாய்க் காணப்பட்டான்.

‘வாம்மா. நீலகண்டன் கூட இப்பதான் •போன் பண்ணினாரு. உள்ளே வா.’

சகுந்தலாவின் இதயத் துடிப்பு அவள் காதுகளுக்கே கேட்டது. வீடு மிக அமைதியாக இருந்தது. திரும்பிப் போய்விடலாம் போல் அவளுக்கு இருந்தது. ஆனால், கடைசிக் கட்டத்தில் அப்படியெல்லாம் யோசிப்பதன் அர்த்தமின்மையும் புரிந்தது. ‘வெற்றுத் தாளில் கையெழுத்துப் போடுவதற்கு முன்னால் இந்த எண்ணம் வந்து அதைச் செயலும் படுத்தி யிருந்திருக்க வேண்டும். ஆனால், நடக்கிற காரியமா?’

உள்ளே யிருந்து தடிமனான நடுத்தர வயதுப் பொண்மணி ஒருத்தி எட்டிப் பார்த்தாள். பிறகு போய்விட்டாள். வேலைக்காரி என்று தோன்றியது. அவள் கை,கால்கள் கரணை கரணையாய் இருந்தன. பலசாலியாய்த் தெரிந்தாள். கைச்சண்டையில் ஓர் ஆணையே மிக எளிதாக வீழ்த்திவிடக் கூடியவள் போல் தோன்றினாள். விநாயக்ராம் தனியாக இல்லை என்பது ஆறுதல் அளித்தாலும், அந்தப் பெண்ணிடம் புலப்பட்ட முரட்டுத் தசை வலிமை அந்த நிம்மதியை மிகச் சில நொடிகளில் போக்கிவிட்டது.

‘அதோ, அந்த ரூம்ல நாற்காலி இருக்குது பாருங்க, அதிலே குந்துங்க.’

அந்தப் பெண் மறுபடியும் எட்டிப் பார்த்தாள்.

‘தேவகி! இந்தப் பொண்ணுக்குக் காப்பி கொண்டுவந்து குடு.’

‘சரிங்கையா.’

தேவகி நெருங்கி வந்து சகுந்தலாவின் முழங்கைக்கு மேலே பற்றி அவர் காட்டிய அந்த அறைக்கு அவளை இட்டுச் சென்றாள். பிடியின் இறுக்கம் சகுந்தலாவின் அச்சத்தை அதிகப் படுத்தியது. நடத்திச் சென்று நாற்காலியில் அவளை அமர்த்தினாள்.

‘காப்பி யெல்லாம் வேணாம்மா.’

அவள் பதில் கூறாது அகன்றாள். அந்த அறை சுமாரான நீள அகலத்தில் இருந்தது. ஆனால் நல்ல வசதிகளுடன் இருந்தது. சுவரை ஒட்டித் தென்பட்ட பெரிய கட்டில் அவளை எச்சில் விழுங்க வைத்தது.

தேவகி இரண்டே நிமிடங்களில் காப்பியுடன் வந்தாள்.

‘குடிங்கம்மா.’

‘அம்மா இல்லியா?’

‘இல்லீங்கம்மா. வெளியூர் போயிருக்குறாங்க.’

‘காப்பி யெல்லாம் வேணாங்க.’

‘வாங்கிக்குங்க. அப்பால அய்யா என்னைக் கோவிப்பாரு.’

வாங்கிக் குடித்தாள். குடித்த மறு நிமிடமே தலை சுற்றத் தொடங்கியது. தனக்கு மயக்கம் வந்து கொண்டிருந்தது அவளுக்கே புரிந்தது. சமாளிக்க முயன்று தோற்றாள். தேவகி தன்னைக் குண்டுக் கட்டாய்த் தூக்கி அந்தப் பெரிய கட்டிலில் கிடத்தியது வரை தெரிந்தது. எழ முயன்றாள். முடியவில்லை. எதிர்ப்புச் சக்தியும், இயங்கும் சக்தியும் அறவே இல்லை. துவண்டு போய்விட்டிருந்தாள். என்ன நடக்கப் போகிறது என்பது புரிந்தது. அடுத்த சில நொடிகளில் சகுந்தலா முற்றும் நினைவிழந்தாள். . .   .அவள் தன்னினைவுக்குத் திரும்பியபோது அந்த அறையின் சுவர்க் கெடியாரம் பதினொன்று காட்டியது. மூக்கைத் துளைத்த வாசனை யடித்த அந்த மெத்தையிலிருந்து அவள் அருவருப்புடன் –  தாங்கவே முடியாத துயரத்துடனும்தான் –   எழுந்தாள். கால்கள் தள்ளாடின. தன்னை அந்த அயோக்கியன் அடைந்துவிட்டதைத் தெரிந்துகொண்டு அழலானாள். அந்தப் பெண் அப்போது அங்கு வந்து, ‘அய்யா இந்தக் கவரை உங்க கிட்ட தரச் சொன்னாரும்மா,’ என்று கூறி ஓர் உறையை அவளிடம் கொடுத்தாள். அதை வாங்கி, உள்ளே இருந்த பணத் தாள்களை எடுத்துச் சுக்கல் சுக்கலாய்க் கிழித்து வீசும் ஆவேசம் அவள் மனத்தில் எழுந்தது. ஆனால், மறு நொடியில் அதே மனம் அந்த எண்ணத்தின் அர்த்தமின்மையை உணர்த்தியது. கிழித்து எறிவதால் நடந்து முடிந்ததைச் சரிசெய்ய முடியாது   என்பதால் அதை இழப்பது அடி முட்டாள்தனம் என்பதையும் அவள் மனம் சுட்டிக் காட்டியது.

‘கருணா! உங்க ஆப்பரேஷனுக்கு நான் கொடுத்த விலை!’ என்று தனக்குள் கூறிக்கொண்டு அவள் மெதுவாக வெளியேற முற்பட்ட போது, தேவகி, ‘முகம் கழுவிப் பொட்டு வச்சுக்கிட்டுப் போம்மா!’ என்றாள். அவளும் அப்படியே செய்தாள். ‘அடியே, ராட்சசி! இந்த மட்டமான ஆம்பளை கிட்ட வேலை செய்யறியே?..  .. பாவம் இவ என்ன செய்வா? கூலிக்கு இருக்கிற வேலைக்காரி. இப்ப நான் கூடத்தான் கெட்டுப் போய்ப் பணம் வாங்கிக்கிட்டுப் போறேன். மீள என்னால முடியல்லியே!’
..  ..  .. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு, கருணாகரன் இனி விழித்துப் பார்க்க முடியாத உறக்கத்தில் ஆழ்ந்தான். அவனுக்கு நம்பிக்கை அளித்துத் தேற்றிவிட்டு, தன்னம்பிக்கையுடன் சிகிச்சை யறைக்குள் சென்ற அவன் வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு வண்டியில் வெளியே கொண்டுவரப்பட்ட போது அவளைப் பொறுத்தவரையில் எல்லாமே இருண்டுவிட்டன. அன்பும் பண்பும் நிறைந்த கணவன் போனபிறகு தான் உயிர் வாழ்வதில் பொருள் இல்லை என்னும் எண்ணம் அவள் மனத்தில் வேரூன்றாதபடிச் செய்தது அவள் குழந்தைதான்! குழந்தைக்காக அவள் வாழ்ந்துதான் ஆக வேண்டும். தனக்கு நேர்ந்தது போன்ற கொடுமை அவளுக்கு நேராதபடி கவனமாக அவளை வளர்க்கவேண்டும்! – சகுந்தலா எழுந்து போய்ச் சுவரில் தொங்கிய கருணாகரனின் பெரிதுபடுத்தப்பட்ட மார்பளவுப் படத்துகு எதிரே வெகு நேரம் நின்றாள்.

‘கருணாகரன்! பெயருக்கு ஏற்றபடி கருணையின் மறு உரு. அந்த ஏழைமையிலும் பிச்சைக்காரர்களுக்கு இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் பிச்சை இடுபவன். கோதுமை நிறத்தவன். அழகன். அவனது உள்ளத்தழகு அவன் கனிவான கண்களில் தெரியுமே! அவன் சிரிப்பதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். சிரிக்கும் போது அவன் கண்கள் மட்டுமின்றி, அவனது உடம்பின் ஒவ்வோர் அணுவும் சிரிக்குமே!’ –     கதவு தட்டப்பட்ட ஓசையில் அவளது சிந்தனை நின்றது. அவள் கதவருகே சென்று,”யாரு?” என்றாள்.
‘டெலிக்ராம்!’
அவள் கதவைத் திறந்ததும் சட்டென்று அதைத் தள்ளி¢க்கொண்டு உள்ளே வந்த அவனைப் பார்த்து அவள் திடுக்கிட்டுப் போனாள்.                                                        (தொடரும்)

Series Navigationசீதாயணம் நாடகப் பின்னுரை – படக்கதை – 14
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *