மருமகளின் மர்மம்-5

5

நிர்மலாவிடம் பேசிய பின் ஒலிவாங்கியைக் கிடத்திய ரமேஷ¤க்கு மறு விமானம் பிடித்து இந்தியாவுக்குப் பறந்து போய்விடமாட்டோமா என்றிருந்தது. அவன் புரிந்து கொண்டிருந்த வரையில் நிர்மலா உணர்ச்சி வசப்படுபவள். என்றோ இறந்துவிட்டிருந்த   தன் அம்மாவை  நினைத்து நினைத்து உருகுகிறவள். அப்பா அவளது மிகச் சிறிய வயதிலேயே இறந்துவிட்டாராம்.  அதன் பின் பதினைந்து வயது வரையில் அவள் அம்மாதான் அவளுக்கு எல்லாமாக இருந்தாளாம். அம்மா தன் திருமணத்தை நடத்தும் கொடுப்பினை தனக்கு இல்லாது போனது பற்றியும் அடிக்கடி புலம்புவாள். அன்பு நிறைந்தவர்கள் எளிதில் உணர்ச்சிவசப் படுபவர்கள் என்பதை அவன் அறிந்திருந்ததால், அவளைப் பற்றி அவனுக்குக் கவலையாக இருந்தது. இரும்பு அலமாரியின் பெட்டகத்தில்  தான் ஒளித்து வைத்திருந்த லூசியின் கடிதக்கட்டை அவள் பார்த்துவிட்டதால்தான் அவளது குரல் மாற்றம் என்று அவன் நிச்சயமாக  நம்பினான்.   அமெரிக்காவின்   அந்தக்  குளிரிலும் அவனுக்கு வேர்வை வரும்போல்  உடம்பில் ஒரு சூடு பரவியது. அவன் மனம் தனது முதல் காதல் கதையை அசை போடலாயிற்று.

அப்போது அவன் வேறொரு தொழிற்சாலையில் இளநிலைப் பொறியாளராக வேலையில் இருந்தான். வேலையில் சேர்ந்த புதிது. ஒரு நாள் சிகரெட் வாங்குவதற்காக ஒரு பெட்டிக்கடை வாசலில் தனது மோட்டார் பைக்கை அவன் நிறுத்தினான். சிகரெட்டை வாங்கிக்கொண்டு அவன் திரும்பியபோது தனது பைக்கின் அருகே ஒரு பெண் நின்றுகொண்டிருந்ததைப் பார்த்தான். அந்தப் பெண்ணின் முகத்தில் கவலை தெரிந்தது. அவன் பைக்கில் ஏறுவதற்கு முன்னால், ‘எக்ஸ்க்யூஸ் மி’ என்ற அவளது இனிய குரலும் அவன் செவிகளில் தேனாய்ப் புகுந்தது. அவன் வியப்புடன் அவளை ஏறிட்டான்.

‘நீங்கள் ராயப்பேட்டை தாண்டித்தானே போகிறீர்கள்?’ என்று அவள் வினவியதும், அவன் வியப்புடன், ‘ஆமாம்?’ என்றான்.

‘எனக்கு அவசரமாக வீட்டுக்குப் போகவெண்டும். உங்கள் பைக்கில் என்னை ராயப்பேட்டை ஹாஸ்பிடல் பக்கத்தில் விட முடியுமா?’ என்று ஆங்கிலத்தில் அவள் அவனை வேண்டினாள். ஓர் அழகான இளம் பெண்  அவனை அணுகி இவ்வாறு வேண்டியது அவனுக்கு முதல் அனுபவமாதலால், அவன் சற்றே திணறினான். அப்போதைய அவளது தோற்றம் ஒரு நிழற்படம் போல் அவன் நினைவில் பதிந்து போயிருந்தது.  நீல நிறச் சேலையும் கறுப்பு நிற இரவிக்கையும் அணிந்து, உதடுகளில் சாயம் தீற்றி யிருந்தாள். தலைமுடியை ‘பாப்’ செய்திருந்தாள். மிக அடர்த்தியான தலைமுடி. பெரிய கண்கள். அடர்த்தியான புருவங்கள். கூரிய மூக்கு. பற்கள் முத்துப் போல் இல்லாவிடினும், வரிசை தப்பாமல் இருந்தன. கண்களில் ஒரு கவர்ச்சி இருந்தது. கெஞ்சுதல் நிறைந்த புன்னகையில் அவளது முக அழகின் பொலிவு கூடியது. தான் இராயப்பேட்டை தாண்டிப் போவதை அவள் கவனித்திருந்ததை எண்ணி அவன் வியந்தான். அவனது வியப்பில் ஒரு மகிழ்ச்சியும் கலந்திருந்தது. ரமேஷ¤க்குத் தன் கம்பீரமான தோற்றம் பற்றிய பெருமிதம் நிறையவே உண்டு. அதைச் செருக்கு என்று சொல்ல முடியாது. எந்த அழகனுக்கும் –  அல்லது அழகிக்கும் –  இருக்கும் இயல்பான பெருமையே அது.

‘உங்களால் முடியாதென்றல் சிரமப்பட வேண்டாம். இன்று ஆட்டோ ஸ்ட்ரைக். ரொம்ப நேரமாய் பஸ்ஸ¤ம் இல்லை. வந்தாலும் ஏற முடியாது. பெரிய கூட்டம் காத்திருக்கிறது,’ என்று அவள் தொடர்ந்தாள்.

அவன் தன் திகைப்பிலிருந்து விடுபட்டு, “ஓ.கே.” என்று கூறி பைக்கில் ஏறி அமர்ந்தான். அவள்  பின்னிருக்கையில் அமர்ந்தாள். அவன் பைக்கைக் கிளப்பினான்.

“நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள்?’ என்று மரியாதைக்காக அவன் அவளை விசாரித்தான், ஆங்கிலத்தில்.

‘நான் தமிழ்ப் பொண்ணுதான் என் பேரு லூசி. லூசின்னதுமே கிறிஸ்டியன்னு புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க. எங்கப்பா நாடார் கிறிஸ்டியன். அம்மா ஆங்கிலோ இண்டியன். ஆனா நான், இந்து முறைப்படி வாழறவ. உங்களுக்கு ஆச்சரியமா யிருக்கும். எங்கப்பா மனசளவில இந்துதான். எப்படின்னா, எங்கப்பாவுடைய அம்மா முதலியார் ஜாதியைச் சேர்ந்தவங்க.  எங்க தாத்தாவுடைய அம்மா ஒரு பிராமின் லேடியாம். எங்கப்பாவுடைய தாத்தாவும் பாட்டியும் கல்யாணம் பண்ணிக்கிட்டப்போ, இந்த மெட்ராஸ் முழுக்க அதை பத்தி ஒரே பேச்சாம்!’ என்று லூசி மூச்சு விடாமல் படபடவென்று சொல்லிக்கொண்டு போனாள். அவளது வெகுளித்தனம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.  ‘உங்க பேரென்ன?  நான் தெரிஞ்சுக்கலாமா?’ என அவள்தான் முதலில் கேட்டாள்.

‘என் பேரு ரமேஷ். எம். டெக். படிச்சுட்டு பிரதீப் அண்ட் கம்பெனியில ஜூனியர் இஞ்சினீயரா இருக்கேன். எங்கப்பா ஒரு செண்ட்ரல் கவர்ன்மெண்ட் க்ளாஸ் ஒன் ஆ•பீசர். எங்கம்மா வீட்டோட இருக்கிற ஹவுஸ் ஒய்•ப். நான் அவங்களுக்கு ஒரே மகன். அது சரி, நீங்க எங்§கே வொர்ர்க் பண்றீஈங்கன்னு கேட்டேனே?’

‘ஜெயபாரதம் அக்செஸ்ஸரீஸ்ங்கிற கம்பெனியில ஸ்டெனோவா இருக்கேன். கார் பார்ட்ஸ் செய்யற கம்பெனி. பாரீஸ் கார்னர்ல இருக்கு.  நானும் என் பேரண்ட்ஸ்க்கு ஒரே பொண்ணுதான். பி. எஸ்ஸி. ஸ்டெல்லா மாரிஸ்ல படிச்சேன். அதுக்கு அப்புறம் டைப்ரைட்டிங் ஷார்ட்ஹேண்ட் கத்துக்கிட்டேன். வயசு இருபது.’

‘உண்மையான வயசுதானே? ஏன்னா, லேடீஸ் வயசைக் குறைச்சுச் சொல்லுவா¡ங்கன்னு கேள்வி!’

அவள் சிரித்துவிட்டு வினவினாள்:  ‘உங்களுக்கு எப்படித் தோணுது?’

‘பொய் மாதிரிதான் தோணுது.’

‘என்னது! பொய்யா?’

‘ஆமா. ஸ்வீட் சிக்ஸ்டீன்னு தோணுது!’ என்று அவன் ஒரு திடீர்த் துணிச்சலில் சொல்லிவிட்டான். எனினும், உள்ளுக்குள் கொஞ்சம் உதைப்பாக இருந்தது. சில பெண்கள் தாங்கள் மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள்.  ஆனால், ஆண்கள் அதை ஆதாயப் படுத்திக்கொண்டு அடுத்த அடி எடுத்து வைத்தால் தாங்கவோ ரசிக்கவோ மாட்டார்கள்! அனால், அவளோ போக்குவரத்து மிகுந்த சாலையில் பைக்கில் போய்க்கொண்டிருந்தது பற்றிய உணர்வே இல்லாதவள் போல் சத்தமாய்ச் சிரித்தாள். அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்த ஒருவர், ‘மெதுவாச் சிரிங்கம்மா. இப்படிச் சத்தமாச் சிரிச்சா வீட்டுக்காரரோட கவனம் கலையுமில்ல? அதுனாலதானே ஆக்ஸிடெண்ட் ஆகுது?’ என்று கூறியபடி நகர்ந்தார்.

அந்தக் கணம் பார்த்துச் சிவப்பு விளக்கு எரிய, எல்லா வண்டிகளும் நிறுத்தம் போட்டு நின்றன. ரமேஷ் பக்கவாட்டில் இலேசாய்த் தலை திருப்பி அவளைக் கவனித்தான். அவளும் தலை திருப்பி அவனைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ‘ரொம்ப சுலபமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டாரே அந்த ஆளு!’ என்று அவள் குறும்பாய்ச் சொன்ன போது, ஒரு பெண் இப்படியெல்லாம் பேசக் கூடியவள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை.  ஆங்கிலோ-இந்தியத் தலைமுறையில் வந்தவள் என்பதும் அதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாமென்று நினைத்தான். இந்தக் காலத்துப் பெண்கள் வழிவழி தொடரும் போதனைகளால் கற்பிக்கப்பட்டுள்ள மான, வெட்க உணர்வுகளைச் சிறிது சிறிதாக உதிர்த்துக்கொண்டு வருவது பற்றியும் அவன் அறிந்துதான் இருந்தான். ஆனாலும், முதல் சந்திப்பிலேயே அவள் அப்படிச் சொன்னது கொஞ்சம் பெண்மைக் குறைவாக அவனுக்குத் தோன்றியது..   .   .  .

அதுதான் அவளைப் பற்றிய சரியான கணிப்பு என்பது பின்னாளில் மிகவும் கொடுமையான முறையில் அவனுக்கு உணர்த்தப்பட்ட தெனினும், அந்தக் கணத்தின் கிறக்கத்தில் அவன் அந்த உள்ளுணர்வை அசட்டை செய்துவிட்டான்! அந்த அசட்டையின் விளைவுதன் தனது இன்றைய பிரச்சினை என்று நினைத்துத் தன்னிரக்கத்தோடு அவன் பெருமூச்செறிந்தான்.

‘ரொம்ப சுலபமா ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டாரு அந்த ஆளு’ என்ற போது அவள் விழிகள் அவனைத் துருவிக்கொண்டிருந்தன. ஆனால் ஒரு கணத்துக்கு மேல் அந்தத் துருவல் நீடிக்கவில்லை. லூசி தலையை  அப்பால் திருபிக்கொண்டு வெட்கப்பட்டாள். அந்த அவளது வெட்கம் அவள் சொன்ன அந்தச் சொற்களைவிடவும் அவனுக்கு அதிகம் பிடித்திருந்தது. வெட்க உணர்வுகள் தன்னிடம் குறைவாக இருப்பதாக இவன் நினைத்துவிடுவானோ என்கிற அச்சத்தில்தான் அவள் வெட்கப்பட்டதாய்க் காட்டிக்கொண்டாள் என்பது அவனும் அவளும் பிரிய நேர்ந்ததன் அடிப்படைகள் வெளிப்பட்ட போதுதான் அவனுக்கு வெளிப்பட்டது! அவமானம்! தனது முதல் காதல் முறிந்து போனதைக் காட்டிலும் அந்த முறிவிற்கான காரணங்கள்தான் அவனை அதிகமாய் வருத்தின.  முறிந்ததோடு நின்றதா அந்த விவகாரம்?

..  ..  .. பைக் மறுபடியும் கிளம்பியதும், ‘ராயப்பேட்டை தாண்டித்தான் நான் போகணும்னுகிறது  உனக்கு எப்படித் தெரிஞ்சுதுதுன்னு நீங்க கேக்கவே இல்லியே?’ என்றாள் அவள்.

‘அப்படி யெல்லாம் மரியாதைக் குறைச்சலா நான்  பேசமாட்டேன்.’

‘என்னது! மரியாதைக் குறைச்சலாவா!’

‘ஆமா. ‘உனக்கு’ எப்படித் தெரிஞ்சுதுன்னு கேக்கமாட்டேன். ‘உங்களுக்கு’ எப்படித் தெரிஞ்சுதுன்னுதான் கேப்பேன்.’  –  அவள் மறுபடியும் இரைந்து சிரித்தாள். பிறகு, ‘நல்லவேளை. அந்த பைக் ஆசாமி முன்னாடி போயிட்டாரு.!’ என்றாள்.

‘சரி, இப்ப கேக்கறேன். சொல்லுங்க. நான் ராயப்பேட்டை தாண்டிப் போறவன்கிறது உங்களுக்கு எப்படித் தெரியும்?”

‘தினமும் சரியா எட்டேமுக்காலுக்கு  ஹாஸ்பிடல் பஸ் ஸ்டாப்பைத் தாண்டிக்கிட்டு பைக்ல போவீங்க. அப்ப நான் பஸ்ஸ¤க்கு  அங்கே நிப்பேன்.’

‘ஓகோ! அதானா? ஆனா, சாரி, நான் உங்களைக் கவனிச்சதில்லியே?’
‘கும்பலோட கும்பலா நின்னிட்டிருப்பேன். எப்படி கவனிக்க முடியும்?’

‘பாதையையே கவனிச்சு வண்டி ஓட்றதால கவனிச்சிருக்கல்லே. இல்லாட்டி உங்களைக் கவனிக்காம இருக்க முடியுமா? எந்தக் கும்பல்லேயும் நீங்க பளிச்னு தனியாத் தெரிவீங்களே!’ என்று அவன் உளறினான். பிறகு, ‘ஐம் சாரிங்க. கொஞ்சம் அதிகப்படியாப் பேசிட்டேன்.  மன்னிச்சுக்குங்க. முதல் சந்திப்பிலேயே இப்படி எல்லாம் பேசறது தப்பில்லையா? என்னைப்பத்தி நீங்க எனா நினைப்பீங்க்?’

‘அப்ப, அடுத்த சந்திப்பில பேசுங்க!’ – அவன் வாயடைத்துப் போனான்.

‘இன்னொண்ணும் சொல்லட்டுமா? எந்தக் கும்பல்லேயும் பளிச்னு தனியாத் தெரிவீங்கன்னு இப்ப சொன்னீங்கல்லே? அதையே நானும் இப்ப சொல்றேங்க. ரோட்லே எத்தனையோ பேரு பைக் ஓட்டிக்கிட்டுப் போறாங்க. ஆனாலும், அந்தக் கும்பல்ல பளிச்னு தெரியற ஒரே ஆளு நீங்கதான். இப்படியெல்லாம் நான் வெளிபடையாப் பேசறதை நீங்களும் தப்பா எடுத்துக்கல்லையே?”

‘சேச்சே! நான் பேசலாம், நீங்க பேசக்கூடாதா? அது சரி, அர்ஜெண்டா வீட்டுக்குப் போகணும்னீங்களே? யாருக்காவது உடம்பு கிடம்பு சரி இல்லையா?’

‘கரெக்டா ஊகிச்சுட்டீங்க. எங்கம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லை. ப்ளட் ப்ரெஷர் உள்ளவங்க. அப்பப்ப எகிறும். .  . பைக்கை நிறுத்திறுங்க நான் போய்க்கிறேன்.’ –  அவன் பைக்கை நிறுத்தினான். அவள் இறங்கிக்கொண்டாள். பன்முறை நன்றி கூறினாள். பின்னர் ஒரு சந்தினுள் புகுந்து மறைந்தாள்.

வீடு வந்து சேர்ந்த வரையில் அவன் அவனாக இல்லை. கண்டதும் காதல் என்பதில் அவனுக்கு அதுகாறும் நம்பிக்கை இல்லாத போதிலும் –  அந்த நேரத்தில் அவள் மேல் அப்படி ஓர் உணர்வு அவனுக்கு வராவிட்டாலும் –  அந்த அறிமுகம் அத்துடன் நிற்கப்போவதில்லை என்று உள்ளுணர்வாய் அவனுக்குத் தோன்றிவிட்டது.  ஆனால் அவள் கிறிஸ்துவப் பெண் என்பதை நினைத்த போது, அவனுக்குத் திக்கென்றது.  அவன் அப்பாவைச் சரிக்கட்டிவிடமுடியும். அம்மாவைத்தான் இலேசில் மசிய வைக்க முடியாது..   அன்றெல்லாம் அவனுக்கு அவள் நினைவாகவே இருந்தது. அவளது அபார அழகையும் அந்தச் சிரிப்பையும் நினைவு கூர்ந்த போதோ, ‘ஜாதியாவது, மதமாவது! மண்ணாங்கட்டி!’ என்று தோன்றியது.
மறுநாள் இராயப்பேட்டைப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அவன் பைக்கை மெல்ல ஓட்டி, அவள் அங்கு இல்லை என்பதைக் கண்டு ஏமாற்றமடைந்தான். ‘அவள் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்றாளே? அதனால் இன்று விடுப்பு  எடுத்திருக்கலாம்’ என்று நினைத்தவாறு விரைந்தான்.

அலுவலகத்தில் கூட அவனுக்கு அவள் ஞாபகமாகவே இருந்தது. அவள் மேல் தனக்குப் பைத்தியம்தான் பிடித்துவிட்டது என்று எண்ணினான். ஒரு திடீர் அறிமுகம் இவ்வளவு படுத்துமா என்றெண்ணி ஒரு நம்ப முடியாமையில் மூழ்கினான். கடைசியில் பொறுக்க முடியாமல், நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அவளது அலுவலகத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடித்துச் சுழற்றினான். அவள் அன்று வரவில்லை என்று சொன்னார்கள். ‘யார்’ என்று வினவிய பெண்ணிடம் அவன் தன் பெயரையும், அலுவலகத்தையும் தெரிவித்தான். ‘நாளைக்கு வந்தா, சொல்றேன்’ என்ற  பதில் சொன்ன அந்தப் பெண்ணின் குரலில் வழிந்த சிரிப்புக்கு அந்த மயக்கத்தில் அவனுக்கு ஒரே ஒரு பொருள்தான் தெரிந்தது.  ‘லூசியோட காதலனா நீ !’

ஆனால் அந்தச் சிரிப்புக்குப் பொருள் அதுவன்று என்று புரிந்துகொள்ள அவனுக்கு எத்தனை நாள்கள் தேவைப்பட்டுவிட்டன!  அன்று முழுவதும் அவளது நினைப்பே அவன் மனத்தைக் குடைய, அவளைத் தான் காதலிக்கத் தொடங்கிவிட்டது அவனுக்குத் தெளிவாயிற்று.  மறு நாளும் அவள் பேருந்து நிறுத்தத்தில் தென்படவில்லை.  ஆனால், லூசியே அன்று அவனைத் தொலைபேசியில் அழைத்துவிட்டாள்!

‘ஹல்லோ! மிஸ்டர் ரமேஷ்! நேத்து •போன் பண்ணினீங்களாமே?’

‘ஆமா. உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ¦ச¡ன்னீங்களா? அதான்  கொஞ்சம் கவலையா யிருந்திச்சு.’

‘அட! பரவ யில்லையே! ஒரு நாள் பழக்கத்திலே என்னைப் பத்திக் கவலைடத் தொட்ங்கிட்டீங்களே? தேங்க்ஸ்!’  –  அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை.

‘சும்மா, தமாஷ்! அவங்களுக்காகத்தான் நேத்து லீவ் எடுத்தேன். இன்னைக்கு லேட்டா வந்தேன். இப்ப பரவாயில்லே.. எங்கம்மா கவலையே படக்கூடாதுன்னாரு டாக்டர். அது முடியுமா? எங்கப்பா உசிரோட இருந்தாலும், என்னைப் பத்தின அவங்க கவலையிலே பாதியைப் பங்கு போட்டிருப்பாரு. இல்லியா?’

அவன்,  ‘என்னது! உங்களைப் பத்தின கவலையா?’ என்றான்.

‘ஆமா. இது கூடவா புரியல்லே? கல்யாண வயசில பொண்ணு  இருக்கிற எல்லா அம்மாக்களுக்கும் இருக்கிற கவலைதான். வேற என்ன?’

அவ்வளவு வெளிப்படையாக அவள் சொன்ன பதில் அவனை அப்படியே அயர்த்திவிட்டது. அதற்குத் தான் எவ்வாறு எதிரொலிக்க வேண்டும் என்று  அவனுக்குத் தெரியவில்லை. ‘பெண்களோடு பழக்கம் இல்லாததால் நான் வாயடைத்து நிற்கிறேனா, அல்லது இவள் எல்லை கடந்து பேசுகிறாளா!’ என்று அவன் தன்னையே வினவிக்கொண்டு மலைத்தான்.

‘என்னங்க! பதிலையே காணோம்?’ என்று அவள் கேட்டதும், அவன் ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்து, ‘நியாயமான கவலைதான்,’ என்றான்.

‘ரமேஷ்!’

‘சொல்லு!, லூசி!’  –  மிஸ்டரும் மிஸ்ஸ¤ம் ‘மிஸ்’ ஆகியிருந்தன.   இரண்டே நாள்களுக்குள் தாங்கள் இருவரும் மிக நெருக்கமான உறவுக்கு அடித்தளம் போட்டுக்கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான்.
‘நாம  மனசு விட்டுப் பேசணும், ரமேஷ்!’ உங்களுக்கு எப்ப சவுகரியம்?’

‘ஏன? இன்னைக்கே சவுகரியப்படும்.’

‘தேங்க்யூ! ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் போட்டுட்டு எங்க ஆ•பீசுக்க வர முடியுமா? நானும் போட்றேன். ரெண்டு பேரும் ஏதாவது ஓட்டல்லே உக்காந்து பேசலாம்.’

‘சரி. அப்ப நான் மூணரை மணிக்கு உங்க ஆ•பீசுக்கு வர்றேன்.’

ரமேஷ¤க்கு வியப்புத் தாங்கவில்லை. ‘பெண்கள் எல்லாருமே இப்படித்தானா! இல்லாவிட்டால் இவள் விதிவிலக்கா?’ என்று குழம்பினான்.

சாப்பாட்டுக்காகக் கதவு தட்டிய பணியாளின் வருகையால் அவனது சிந்தனை கலைந்தது. அவன் எழுந்தான்.
(தொடரும்)

Series Navigationபுதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்தமனித் தடிப்பு – Atherosclerosis