மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 28

31.     கார்த்திகைமாதம். காலை நேரம். சாம்பல் நிற வானம் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவக்காற்று சந்திராயன் துர்க்கத்தினாலோ அல்லது அடர்ந்திருந்த தோப்புகளாலோ பாதிக்கப்படாததுபோல கோட்டைச் சுவரில் திறந்த பகுதிகளில், காவலர்க்கோ அரசாங்கத்தின் உத்தரவுக்கோ காத்திராமல் பிரவேசித்து எதிர்த் திசையில் வெளியேறியது. அவ்வாறு வெளியேறுகிறபோது நகரெங்கும் மெல்லிய குழலோசை மெல்லிய புகை மூட்டம்போல எழும்புவதும் படர்வதுமாக இருந்தது. கிருஷ்ணபுரவாசிகள் உட்கோட்டையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேணுகோபாலசாமியே குழலெடுத்து தங்களைப் பரவசப்படுத்துவதாக நம்பினார்கள். பின்னிரவில் ஆரம்பித்திருந்த மழை அதிகாலையில்தான சற்று ஓய்ந்திருந்தது. ஆனைகுளம், செட்டிகுளம், சர்க்கரை குளம், செட்டிகுளத்திற்கு வருகிற ஓடை அவ்வளவும் நிறைமாத கர்ப்பினிகள்போல வாயும்வயிறுமாயின.  திடீர் திடீரென்று காற்றுவீசுகிறபோது மேகம் கலைந்து புத்தம்புது சூரிய ஒளி நகரத்தின்மேல் பாய்ச்சலிடும் நேரங்களில் அரண்மனை; கமலக்கண்ணியம்மன் கோவில், ஸ்ரீ வெங்கட ரமண ஆலயம், வேணுகோபாலசுவாமி கோவில் கலசங்கள்; கல்யாணமகால்; அரசாங்க காரியஸ்தர்கள், முக்கியஸ்தர்களின் இல்லங்கள் ஆகியவை மஞ்சள் கிழங்கு நிறத்திற்கு வந்து போயின. வீசும் காற்றில் பிடிப்பின்றி உதிரும் பழுத்த இலைகளை, மழை நீர் குளியல்முடித்த மினுமினுப்புடனிருந்த இலைகள் சிரித்தபடி வேடிக்கை பார்த்தன.

மழைக்காலம் காரணமாக இருக்கவேண்டும் கோட்டைக்குள்ளிருந்த நகரத்து மக்களில் பலர் இன்னமும் உறக்கம் கலையாதிருந்தனர். பெரிய மனிதர்ளே அதிகமும் வசித்ததால் கோட்டைக்கு வெளியே வசித்த குடியாவர்களைப்போலன்றி இரவு நேரங்களில் அவர்களுக்குக் கண்விழிக்கும் வழக்கமிருந்தது. சித்திரை வைகாசிபோன்ற கோடை நாட்களில் நகர ஆலயங்களில் விழாக்களும் வேடிக்கைகளுமிருந்தன. இது தவிர கதா காலட்ஷேபங்கள், சூதாட்டம், கோழிச்சண்டை, கிடாய்ச்சண்டைகள் நடப்பதுண்டு. மழைக்காலமென்பதால் பிரத்தியேகமாய் சமைத்திருந்த நல்லுணவு முடித்து, காரியஸ்தர்களில் அநேகர் தாசிவீடுகளுக்குச் சென்று, அதிகாலை கருக்கலில் அவரவர் இல்லந்திரும்பியிருந்தார்கள். கோட்டைக்குள் இருப்பவர்கள் எவரும் உழைக்கும் கூட்டமல்ல என்பதால் கூடுதலாகவே உறங்குவார்கள்.

அதிகாலையிலேயே ராஜகிரிகோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு காவலைத் திடப்படுத்தியிருந்தார்கள். வேறு அலுவல்களும் மன்னருக்காகக் காத்திருந்தன. அதிலொன்று வைணவ ஆலயங்களில்  பெருமாள் திருமஞ்சன சேவைக்காகக் காத்திருப்பது. நாயக்கர் தவறாமல் கலந்துகொள்ளவேண்டிய விசேடம். அண்மையில் மன்னருக்கேற்பட்ட சோதனைக்கு பெருமாளின் திருவடியன்றி வேறு போக்கிடமில்லையென்பது கிருஷ்ணப்பரின் தீர்மானம். “எம்பெருமான் கோவிந்தராஜர் தயவுபண்ணாவிட்டால், உயிர் பிழைத்திருக்கமாட்டேன், அவரன்றோ மதுரை, தஞ்சை நாயக்கர்கள் மனதிற் புகுந்து எனக்கு உபகாரம் செய்யவைத்ததோடு, இந்த ராச்சியத்தைத் தொடர்ந்து பரிபாலனம் செய்யவேணுமாய் என்னைக்கேட்டுக்கொள்ளவும் வைத்தார்”, என தமது ராஜகுருவிடத்திலும், பிரதானியிடத்திலும் கடந்த சில தினங்களாக ஓயாமல் நாயக்கர் கூறி வந்தார்.

தளவாய், பிரதானி, இராயசம், தானாதிபதியென முக்கியஸ்தர்கள் அனைவரும் காலையில் நேரத்திற்கு தர்பார் வரும்படி உத்தரவாகியிருந்தது. வழக்கம்போல புரோகிதர்கள் இருநூறுபெரும் தர்பாருக்கு முன்னதாக வந்திருந்து செய்யவேண்டிய சடங்குகளை செய்திருந்தனர்.  ஓலாந்துகாரர்களுக்காக ஓலையொன்று எழுத வேண்டியிருந்தது. மகாராயர் கிருஷ்ணபுரத்தின் மீது படையெடுக்க அதன் காரணமாக வந்து போன குதிரைகளின் குளம்படிகளும், ஆனைகளின் தடங்களுங்கூட மழைக்குப்பிறகும் கரையாமலிருக்கின்றன. தம்மைக் கைவிட்டு எதிராளியுடன் கைகோர்த்துக்கொண்ட தளபதிகள் இடத்தில் வேறு ஆட்களை நியமிக்கவேண்டிய நெருக்கடியும் நாயக்கருக்கு இருக்கிறது. இந்நேரத்தில் மேற்கு கரையில் இதுநாள்வரையிருந்த ஒலாந்துக்காரர்கள் உள்நாட்டில் தேவனாம் பட்டினத்தில் கோட்டையொன்றை எழுப்பவும் நகரமொன்றை நிர்மாணித்துக்கொள்ளவும் உத்தரவுகேட்டு தங்கள் பிரதிநிதியை அனுப்பியிருக்கிறார்கள். தமக்கு மேலுள்ள விஜயநகர அரசாங்கத்தைக்கேட்டு செயல்படுவதா அல்லது தம் விருப்பம்போல ஒலாந்துகாரர்களை அனுமதிப்பதா என்ற கவலை நேற்று அவர்கள் ஓலையை முதன்முறையாக வாசிக்கச்சொல்லிகேட்டபோது நாயக்கருக்கு இருந்தது. சந்திரகிரியிலிருக்கும் மன்னர் வெங்கடபதியாரிடம் உத்தரவு கேட்பதெனில் அவ்வளவு சுலபத்தில் நடவாது. அன்றியும் ஏற்கனவே தம்மிடத்தில் பகைமையுடனிருக்கும் அவர், ஓலாந்துகாரர்களின் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய சாத்தியமில்லை.  பத்தாண்டுகளுக்கு முன்பு போர்த்துகீசிய திருத்தூதர் பாதரெ பிமெண்ட்டா கிருஷ்ணபுரம் வந்தவேளை, சென்ன பட்டணத்தின் சாந்த்தோமே விலிருந்து சென்ற பாதரே சிமோன், சந்திரகிரியிலிருந்த வெங்கடபதியார் மாமனாரைச் சந்தித்ததும், அவர் தம் மருமகனும் மகாராயருமான வெங்கிடபதியாரிடம் பாதரே சிமோனை அறிமுகப்படுத்த, அவர் போர்த்துகீசியர்களுக்கு சந்திரகிரியில் தேவாலயம் கட்ட அனுமதித்தார். அதுவும் தவிர பராமரிப்பிற்காகப் பல கிராமங்களையும் தானமாக அளித்திருக்கிறார். ஒலாந்துகாரர்களுக்குத் தாமளிக்கும் உத்தரவால் தமக்கு கிடைக்கவிருக்கும் பலாபலன்களையும் நாயக்கர் கணக்கிட்டிருந்தார். இராகவ ஐயங்காரிடம் முன்னதாகக் கலந்துபேசி ஒரு முடிவினையும் அவர் ஏற்கனவே எடுத்திருந்தார். இனி செய்யவேவையெல்லாம் சடங்குகள்.

இரண்டு கட்டியக்காரர்கள் வெள்ளிபூணிட்ட தண்டுகளுடன் தர்பாருக்குள் நுழைந்து ஆளுக்கொரு பக்கம் வணங்கி நின்றனர். அவையில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தங்கள் ஆசனத்திலிருந்து எழுந்துகொண்டனர். முதலாவது கட்டியக்காரன்: மண்டல ராயர் வாழ்க! என்றான். அவனுக்காக காத்திருந்தவன்போல எதிரிலிருந்தவன்: தில்லை கோவிந்தராஜர் திருக்கோவிலை புதுப்பித்த வள்ளலே வாழ்க! என்றான். மீண்டும் அடுத்தவன்: கிருஷ்ணபட்டணம் ஸ்தாபித்த மகாபுருஷரே வாழ்க! என்றான், தொடர்ந்து சொல்லிக்கொண்டுபோனார்கள். நாயக்கர் வலது கையை அசீர்வதிப்பதுபோல பிடித்து இரண்டு முறை அசைத்ததும் கட்டியக்காரர்கள் அமைதியானார்கள். அவையில் சோவென்று மழை அடித்து ஓய்ந்ததுபோலிருந்தது. இராகவ ஐயங்கார், இதைக் குறைப்பதற்கு ஏதேனும் வழிமுறை இருக்கிறதாவென யோசிக்க ஆரம்பித்தார்.  நாயக்கர் கிருஷ்ணப்பர் அண்மையில் தமக்கேற்பட்ட சோதனைகளை முற்றாக மறந்து, சந்தோஷத்தில் திளைப்பதுபோல வழக்கம்போல வெல்வெட்டினாலான திண்டுகளில் கைகளைப் இருபக்கங்களிலும் போட்டுக்கொண்டு அமர்ந்தார். அரசாங்கத்தின் முக்கிய காரியஸ்தர்கள் அவரவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தனர். வெள்ளைதோல் மனிதன் ஒருவனும் விருந்தினர்க்கான ஆசனத்தில் மன்னருக்கு மிக அருகே அமர்ந்திருந்தான். அவனருகிலேயே நேற்று மன்னருக்கு பரிசளித்ததுபோக இன்னமும் பிரிக்காத இரண்டு கட்டுகள் இருந்தன. அவற்றுள் அநேகமாக நேற்றுகொடுத்ததுபோல தங்கமோ, வெள்ளியோ, மென்பட்டு வகைகளோ இருக்கலாம்.

சட்டென்று மன்னரின் குரல் அவையில் கம்மி ஒலித்தது:

– ” பிரதானி, இராயசம் இருவரும் எனது மனதைப் படித்திருப்பீர்களென நினைக்கிறேன். இது விஷயமாக நமது இராகவ ஐயங்காரிடமும் கலந்தாலோசித்தேன். இருவரும் ஒலாந்துகாரர்களின் கோரிக்கையை ஏற்பதென்று முடிவு செய்திருக்கிறோம். ஒலாந்துக்காரர்களும் அவர்களின் கோரிக்கையை நாம் ஏற்பதென்று முடிவுசெய்தால் எவ்விதமாக ஒப்பந்தம் செய்துகொள்ளவேணுமோ அந்தப்படிக்கு ஒப்பந்தமும் தயார் செய்து தங்கள் ஒலையுடனேயே அனுப்பியுள்ளனர். இனி நீங்கள் இருவரும் உங்கள் பதிலைத் தருவீராயின், நாம் உடனடியாக ஒப்பத்தந்தத்தை கைசாற்றிடலாம். என்ன சொல்கிறீர்கள்?

நந்தகோபால் பிள்ளை தமது இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார். சிரம் தாழ்த்தி வணங்கினார்.

” மகாராஜாவுக்கு அடியேனின் வந்தனம்! உங்கள் எண்ணத்திற்கு மாறாக நாங்கள் சொல்ல என்ன இருக்கிறது. தாங்கள் சிந்தைப்படி இயங்கவே நாங்கள் இருக்கிறோம். அதுவன்றி வேறு பதில்களை மன்னர் எதிர்பார்ப்பது நியாயமாகாது”, – என்றார்.

இராயசமும், அரசாங்க கணக்கரும், தானாதிபதியும் ஒருமித்த குரலில், “மன்னர் விருப்பமே தங்கள் விருப்பம்”, – என்றனர்.

ஒரு மணிநேர ஆலோசனைக்குப்பிறகு ஓலாந்துகாரர்களுக்கு தேவனாம் பட்டணத்தில் கோட்டையொன்று எழுப்புவதற்கான ஒப்பந்த ஓலை திருமந்திர ஓலைநாயகத்தால் எழுதப்பட்டது. ஒப்பந்தத்தை எழுதிமுடித்ததும் கிருஷ்ணப்ப நாயக்கர் திருமந்திர ஓலைநாயகத்திடம்: “எல்லோரும் கேட்கதக்கதாய் ஒருமுறை உரக்க படியுங்களேன்”, என்றார்.

“கிருஷ்ணபுர சக்கரவர்த்தி ஸ்ரீமான் மஹாராஜராஜ பூஜித மஹாராஜ ராஜஸ்ரீ கிருஷ்ணப்ப நாயக்கர், ஒலாந்துகாரர் சந்நிதானத்திற்கு இதனால் தெரிவிப்பது யாதெனில், நீங்கள் எங்களிடம் விண்ணபித்து கொண்டபடி தேவனாம் பட்டிணத்தில் நகரொன்றை நிர்மாணித்துக்கொள்ளவும், அங்கு குடியேறவும் அதுபோது போர்த்துகீசியர்களின் குறுக்கீட்டிலிருந்தும் பிறவகையில் ஏற்படும் இடையூரிலிருந்தும் உங்களை பாதுகாப்பதற்கு வகைசெய்யப்படுமென உறுதியளிக்கிறோம்”

“மேற்கண்ட உத்தரவிற்கிணங்க மகாரஜஸ்ரீ சன்னிதானத்திற்கு ஓலாந்து பிஜைகளாகிய நாங்கள் சம்மதித்து எழுதிக்கொடுப்பது என்னவெனில் எல்லாவிதமான பொருட்களையும் மேற்கண்ட துறைமுகத்தில் இறக்குமதிசெய்வதோடு அரிசியைத் தவிர்த்து மற்றவற்றிர்க்கு நான்கு சதவீதம் தரகு தருவார்களெனில் பாரபட்சமின்றி தரகர்கள் அனைவருடனும் வியாபாரம் செய்யவும்; அவ்வாறே இங்கிருந்து  ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கும் நான்கு சதவீத தரகுப்பணம் தரவும் இந்தப்படிக்கு சம்மதிக்கிறோம். ஆனால் இவ்விதி ஏற்கனவே தரகுப்பணம் செலுத்திய பொருட்களுக்கு பொருந்தாதென்பதையும் அறியவும். ”

(தொடரும்)

Series Navigation2014 இல் இந்தியா அடுத்தனுப்பும் சந்திரயான் -2 தளவுளவி இறக்கத் திட்டத்தில் ஏற்படும் தாமதம்கேரளாவின் வன்முறை அரசியல்