மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39

This entry is part 34 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

– நாகரத்தினம் கிருஷ்ணா

ஹரிணி

 

 

47.       வேணுகோபாலை கைத்தொலைபேசியில் பிடித்தேன். நாளை செஞ்சி வருகிறேன் வீட்டில் இருப்பாயா என்றேன். சென்னைக்கு போக வேண்டியிருப்பதாகவும் மாலை நான்கு மணிக்குத் திரும்பிவிடுவதாகவும் உறுதியளித்தான். படித்துமுடித்த செஞ்சி நாவலைக்குறித்து சில சந்தேகங்கள் இருந்தன. உண்மையின் விழுக்காடுகள் எவ்வளவு என தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது.  சடகோபன் பிள்ளையுடன் விவாதிக்கவேண்டும். முடிந்தால், செஞ்சியின் காவலரண்கள் குறித்து ஆய்வுசெய்த ழான் தெலொஷையும் பிள்ளையையும் சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டும். கையெழுத்துப்பிரதியை நூல்வடிவில் கொண்டுவரவேண்டுமென்ற பெரியவர் சடகோபனின் கனவை உண்மையாக்கவேண்டும். அசட்டுதைரியத்தில் முடியுமென்று சொல்லிவிட்டேன். எனக்கான சக்தியை எடைபோட்டுப்பார்க்க இன்றுவரை தவறியிருக்கிறேன். என் இடத்தில் பவானி அம்மாள் இருந்தால் இதுபோல நடந்துகொள்வாளா? இவ்விடயத்தில்தானென்றில்லை. பல நேரங்களில் (என் வயது காரணமோ) அவசரத்தில் முடிவெடுத்துவிட்டு பின்னர் சங்கடப்படுவது பழகிவிட்டது. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆர்வம் காட்டுமா? அவர்கள் பதிப்பித்திருக்கிற நூல்களை பார்க்கிறபொழுது சந்தேகமாக இருக்கிறது. அங்கேயும் அரசியல் இருக்கிறது. வேண்டுதல் வேண்டாமைகள் இருக்கின்றன. ஒருவாரத்திற்கு முன்பு காப்பி பாரில் சந்தித்த ஓவியருக்கு எழுத்தாளர் பிரபஞ்சனை நன்கு தெரியும்போலிருக்கிறது, அவரைக் கேட்டுபார்க்கலாம். செஞ்சிசெல்கிறபோது பெரியவர் சடகோபனிடம் நம்பிக்கை அளிக்கிறவகையில் பதில் அமையவேண்டும்.

 

மாலை பவானிஅம்மாவின் வீட்டை பார்க்க திட்டமிட்டிருந்தேன். பவானி அம்மாவைப்பற்றி  உங்களுக்குத் தெரியாதில்லையா? அவளுக்கு புதுச்சேரி சொந்த ஊர். இருவாரங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்திற்கு ஒருவரை வழி அனுப்ப செல்லவேண்டியிருந்தது. விமான நிலையத்தில் ஒரு பெண் கனகாம்பரத்தையும் மல்லிகையும் தலைநிறைய சுமந்திருந்தாள், கழுத்தில் ஈரம் உலராத மஞ்சள் கயிற்றுடன் சினிமா ஜோடியை அட்டைப்படமாகப் போட்டிருந்த இதழொன்றை,  சுவாரஸ்யமாக வாசித்துக்கொண்டிருந்தாள். அருகிலில் பை நிறைய முருங்கைக்காயும், மிக்ஸியொன்றுமிருந்தன. பவானி அம்மாவென்றால் அப்படி பிரான்சுக்கு புறப்பட்டு வந்திருக்கமாட்டாள். அவள் வேறு ரகம். நிற்க வேண்டிய இடத்தில் நடக்கவும், குனிந்திருக்கவேண்டிய இடத்தில் நிமிர்ந்தும் பழக்கப்பட்டவள். ஒரு நாள் தீக்கு இரையானதாக பத்திரிகை செய்தி. செய்திக்குப்பின்னே நடந்தவற்றைக் கண்டறிந்து களைத்திருந்தேன்.  சோர்ந்திருந்த மனதிற்கு தெம்பூட்டிக்கொள்ள, பவானி அம்மாள் மனதில் கட்டிஎழுப்பிய புதுச்சேரியை நேரில் பார்ப்பதென்று முடிவெடுத்தேன். நான் இந்தியாவுக்குப் புறப்பட்டுவர அதுதான் காரணம்.

 

ஹாட் பிரெட்டிலிருந்து புறப்பட்டு இடதுபுறம் திரும்பி நேருவீதியைப்பிடித்தேன். புதுச்சேரியில் சைக்கிள்கள் அதிகம், வாகனங்கள் அதிகம், பசுமாடுகள் அதிகம், மனிதர்களும் அதிகம். இடப்புறமிருந்த பெட் ரோல் விற்பனை நிலையத்தை வேகமாகக் கடக்கவேண்டியிருந்தது. எண்ணெய்வாடை உடலைக்கவியது. வெயிலும் வெள்ளைவேட்டி வெள்ளைசட்டை அணிந்திருந்தது. வெப்பம் வழக்கம்போல கடுமையாகவிருந்தது. தலையை உயர்த்தி பார்த்தபோது கண்கள் கூசவும், தாழ்த்திக்கொண்டேன். காலையில் கொஞ்சமாக டியோர் வாசனைத்தைலத்தை கழுத்திலும், அக்குளிலும் வைத்தேன். வியர்வையில் கலந்து மணத்தைத் தொலைத்திருந்தது. நடைபாதையை ஆங்காங்கே தோண்டிவைத்திருந்தார்கள்.

வாகனங்களில் பயணிப்பதைவிடவும் நடப்பதில் அநேக நன்மைகள். மனிதர்களை மிக நெருக்கமாக பார்க்கவும், கட்டிடங்களை நிதானமாக அவதானிக்கவும், பேச்சுத்தமிழின் பாவபேதங்களில் இலயிக்கவும் முடிகிறது. எதிரே இரண்டு பெண்கள் பேசிக்கொண்டுவந்தனர். ஒருத்தி சாடையாக  என்னைப்பார்த்தாள். ‘வணக்கம்’ என்றேன். அவள் பதிலுக்கு வணக்கமென தெரிவித்திருக்கலாம். சிரித்துக்கொண்டே கடந்து சென்றது வியப்பளிக்கவில்லை. சென்ற இரண்டு மாதங்களில் அநேகதடவைகள் இவ்வனுபவங்களுக்குப் பழகியிருந்தேன். பிரான்சு நாட்டின் முன் பின் தெரியாதவர்களாக இருந்தால்கூட ஓர் ஈர்ப்பின்பேரில் ‘முகமன்’ சொல்வதுண்டு. வணக்கத்தைக் காதில் வாங்கிய நபர் விரோதியாக இருந்தால் கூட பதில் வணக்கம் தெரிவிப்பதென்பது சம்பிரதாயம். பிரான்சு நாட்டில் தமிழில் ‘முகமன்’ சொல்ல  வாய்ப்புகள் அமைந்ததில்லை. புதுச்சேரியில் எனது தமிழைவளர்ந்துக்கொள்ளவும், நகரத்தை இதுபோல சுற்றுவது உதவுகிறது.

 

நேருவீதில் எல்லாவித வாடைகளுமுண்டு.மனிதர் வாடை, ஜவுளி கடைகளில் புத்தம் புது துணி வாடை, பெரிய அங்காடி அருகில் போனால், மீன் வாடை, பூக்களின் வாடை, பழங்களின்வாடை, மசாலாக்களின் வாடை, ஊதுபத்திகளின்வாடை, எண்னெயில் வேகும் தின்பண்டங்களின் வாடை, புத்தகக் கடைகளின் வாடை, அவற்றின் எதிரே வீதியிற் சிந்திக்கிடக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி, கீரைகளின் வாடை, அதையும் தாண்டினால் எதிரிலிருக்கிற பிள்ளையாயார் கோயிலின் பன்னீர் கலந்த திருநீர் வாடை என வாழ்க்கையின் நுண்கலைகளாக எல்லாமுமுண்டு. உயிர்வாழ்க்கையை ஒன்றிரண்டு வரிகளில் சொல்லக்கூடியவை என்றாலும் ஓய்வாக இருக்கிறபோது பக்கம்பக்கமாக நினைவுக்கு நோகும் வரை எழுதிக் களைப்பேன். அம்மாவின் நாட்குறிப்பில் இவ்வாடைகளைப்பற்றி எழுதியிருக்கிறாள். சொந்தமண்ணின் வாடைகளை புலம்பெயர்ந்த மண்ணில் விலைகொடுத்து வாங்க முடியாதுதான்.

 

அம்மாவின் அடிச்சுவட்டில் கால் வைத்து நடப்பதுபோல இருந்தது. பவானி அம்மாவின் காலடிகள் ஆயிரக்கணக்கில் தார்ச்சாலையில், சாலையோரங்களில், கடைவாசல்களில் அழிக்கப்படாமல் கிடந்தன. குனிந்து அம்மாவின் பாதம்பட்ட இடங்களைத் தடவிப் பார்த்தேன். வெதுவெதுப்பான இளஞ்சூட்டினை நகக்கணுக்களில் தொட்டுணர்ந்த கணத்தில் உணர்வு அலைகள் அடித்து ஓய்ந்தன. அம்மாவின் மார்புகளில் முகம் புதைத்ததுபோலவிருந்தது. இவ் உள்ளனுபவம் செஞ்சியில் வேணுகோபாலின் தங்கை கலாவை அணைத்துக்கொண்டபோதும் ஏற்பட்டிருக்கிறது.

 

நேருவீதியில் பாரதிவீதியை அடுத்து தேடிவந்த நிழற்பட நிறுவனமிருந்தது. அதற்கு முன்பாக இருந்த துணிக்கடை வாயிலில் வேட்டியை முழங்காலுக்கு மேல் மடித்துக்கட்டியிருந்த ஆசாமி, “வாம்மா உள்ளே வாங்க உங்களுக்கு வேண்டியதிருக்கிறது” என்றார். அவரைக் கடந்து சென்றேன். சற்றுமுன்பு நான் தமிழில் வணக்கம் சொல்ல எதிரில்வந்த பெண் பதில் வணக்கம் கூறாமல் என்னைக் கடந்தது நினைவுக்கு வந்தது. உள்ளே நுழைந்ததும், மெலிந்த தேகவாகுடன் முகப்பில் ஒரு பாதியுடலை டெஸ்க்கில் மறைத்து பெண்ணொருத்தி அமர்ந்திருந்தாள். கைப்பையிலிருந்து ரசீதை எடுத்து அவளிடம் நீட்டினேன், உட்காருங்கள் என்றார். பலநாட்களாக சாப்பிடாதவள்போல பேசினாள். அவள் காட்டிய திசையில் சுவரை ஒட்டி ஐந்து மடக்கு நாற்காலிகள். ஒன்றில் அமர்ந்தேன். உள்ளே சென்றவள் இரண்டொரு நிமிடங்களில் கையில் ஓர் உறையுடன் வெளிப்பட்டாள். “பார்க்கறீர்களா” என்றாள். எழுந்து கையில் உறையை வாங்கி, மொத்தப் படங்களையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக சில நொடிகளில் பார்த்துமுடித்துவிட்டு, உறையில் எழுதியிருந்த தொகையை அவளிடம் கொடுத்து ரசீது பெற்றுக்கொண்டேன். மணி பதினொன்று ஆகியிருந்தது. கைப்பயிலிருந்த முகவரியைக்காட்டி எங்கே இருக்கிறது எனக்கேட்டேன். கம்பன் கலை அரங்கத்தினருகே இருக்கிறது. அங்கே உழவர் சந்தை இருக்கிறது பாருங்கள் அதற்கு நேரெதிரே என்றாள். எதிர்பார்க்கவில்லை. தற்போது நான் தங்கியிருக்குமிடத்திற்கும் அதற்கு ம் அதிக தூரமில்லை. புதுவை நகராட்சியில், அம்மாவின் திருமணப் பதிவைக் கண்டுபிடித்து அதிலிருந்து எடுத்த முகவரி. பவானி அம்மா புதுசேரியிலிருந்த போது வசித்த வீட்டைப்பார்க்க வேண்டும்போலிருந்தது. அதற்கு நியாயமுமிருந்தது. ஒவ்வொருவருடமும் பிரான்சுநாட்டிலிருக்கிறபொழுது அம்மா இறந்த தினமான பிப்ரவரி 10 அன்று கல்லறைக்குசென்று பூங்கொத்துவைத்து பிரார்த்தனை செய்து திரும்புவதும் வழக்கம்.

 

எனது குடியிருப்பிற்குச்சென்று மதிய உணவை முடித்து, நிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். காலையில் வேலைக்கார அம்மாள் கௌசல்யாவைப் பார்க்கவில்லை. நான் புறப்பட்டு வந்த பிறகு வந்திருக்கக்கூடும். அந்த அம்மாள் நன்றாகை சமைக்கிறது. ஒரு நாள் வீட்டுரிமையாளர் பெண்மணியிடம், உங்கள் வீட்டு சாப்பாடுபோல ஓட்டலில் இல்லை என்று சொல்லப்போக, எங்கள் வீட்டு வேலைக்காரிக்குத் தெரிந்தவள் ஒருத்தி இருக்கிறாள். தனக்கு  உடம்புக்கு  முடியலையெனில் அவளை அனுப்பி வைப்பாள். நன்றாக சமைக்கவும் செய்வாள். இருநூறு ரூபாய் கொடுத்தாயானால், ஒருவேளை சமையலும் செய்வாள். பத்துபாத்திரங்களையும் கழுவி வைப்பாள்’, என்றாள். நானும் மறுப்பு சொல்லவில்லை. நிழற்பட நிறுவனத்திலிருந்து வெளிவந்ததும் பாரதிவீதியில் இறங்கி மீண்டும்  பெரிய மார்க்கெட்டிற்குள் நுழைந்து கொஞ்சம் பழங்களும் உதறிப்பூக்களும் வாங்கிக்கொண்டேன். சில மீட்டர்கள் தூரம் நடந்திருப்பேன். வெயில் சுளீரென முகத்தில் அடித்தது. களைப்பாக இருந்தது. «  ஆட்டோ வேணுமா? »என்ற குரல் எனக்குப் பின்புறமாக வந்தது. திரும்பிபார்க்கமட்டும் செய்தேன். அவர் லீவரை இழுத்த இழுப்பில், அசையவில்லை. பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். ஐம்பது ரூபாய் கேட்டார்.  கேட்கிற தொகைக்குக்ப் பத்து ரூபாய் குறைத்து கொடுக்கச்சொல்லி எனக்கு ஆலோசனை வழங்கப்படிருந்தது. நாற்பது ரூபாய் கொடுக்கிறேன் வாங்கிக்குங்க என்றேன், கொஞ்சம் யோசனை செய்வதுபோல பாவனை செய்து சக நண்பர்களை பார்த்தார். சரி உட்காருங்கம்மா என்று கூறி அடுத்த பத்து நிமிடத்தில் நான் குடியிருக்கும் வீட்டின் முன் இறக்கிவிட்டார்.

 

48.       மறுநாளுக்காக செஞ்சியில் சடகோபன்பிள்ளையிடம் பேசவேண்டியவைகளைப்பற்றிய குறிப்புகளை எழுதிமுடிக்க மாலை நான்கரை ஆகியிருந்தது. கையில் வாழை இலையில் கட்டிக்கொடுத்த உதறிப்பூக்கள் பொட்டலமாக இருந்தன. ஐந்து மணிக்கு கௌசல்யா அம்மாவும் நானுமாக வா.உ.சி. வீதியில் எண்40ஐ தேடியபோது காலி மனையொன்று வரவேற்றது. வீதியை ஒட்டி இடுப்பளவு உயரத்திற்கு சுவர் எழுப்பி தடுத்திருந்தார்கள். மரக்கதவு போட்டு இழுத்து மூடியிருந்தார்கள். தள்ளியதும் திறந்துகொண்டது. உள்ளே குடிசைபோட்டிருந்தது. காலெடுத்து வைத்ததும் தேகம் உதறி அடங்கியது. கையிலிருந்த உதறிப்பூக்களை அவ்வளவையும் கொட்டியவள் சிறிது நேரம் அமைதியாக பிரார்த்தனை செய்தேன்.

 

« கர்த்தாவே! இதோ உமது அடியாள் பவானி தேவசகாயம் இன்று நித்திரை அடைந்து உம்மிடம் வருகிறாள். நீர் அவளது  பாவங்களைப்பாராமல் மன்னித்து உமது நித்ய வீட்டில் சேர்த்துக்கொள்ளும். அவர் சமாதானத்தில் இளைபாறுவாராக! முடிவில்லாத பிரகாசம் என்றும் ஒளிர்வதாக! ஆமென்.” கல்லறையில் பிரார்த்தனைக்கென்று போகும்போதெல்லாம் கேட்கும் குருவின் குரல்.

 

கதவின் சத்தம், காரணமென்று நினைக்கிறேன். கொண்டையை வாரிமுடிந்தபடி நடுத்தரவயது பெண்மணியொருத்தி குடிசைக்குள்ளிருந்து வந்தாள்.

 

– யாருங்க நீங்க?

 

– பிரான்சுலே இருந்து வறேன்.

 

– பிரான்சுன்னா எப்படி, இந்த மண்ணுக்கு உடையவங்க நெருப்புலே வெந்துட்டதாகச் சொன்னாங்களே அவங்களுக்கு நீங்க என்னா வோணும்.

 

– அவங்க பெண்ணை எனக்குத் தெரியும்.

 

– உடையவங்க எட்டி பார்க்காததாலே, யார் யாரோ சொத்துக்கு பாத்தியதைண்ணு சொல்லி வந்தாங்க அப்புறம் நெருப்புலே குளுர்ந்துட்டுதே அந்த அம்மாவுக்குச் தாய்மாமன் வந்து பொலிஸ¤லே சொல்லி இங்கிருந்துவங்களை காலிபண்ணார். ஒரு குடிசைப் போட்டுக் கொடுத்து எங்களைக்  காவலுக்கு வச்சிருக்காங்க.  பவானி அம்மாவுக்கு மச்சனன் என்று சொல்லிக்கொண்டு சாயந்திரமானா ஒருத்தர் சாராயம் குடிச்சுட்டு வந்து எங்களை மிரட்டிக்கொண்டிருக்கிறார்

 

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரு சக்கன வாகனமொன்று வந்து நின்றது. வாட்டம் சாட்டாமாக ஒரு ஆள் அதன்மீது உட்கார்ந்திருந்தான். வாகனத்திலிருந்து இறங்காமலேயே குடிசைக்கார பெண்மணியிடம் கிழவன் வந்தானா? என்றான். அநேகமாக சுவருக்கு மறுபக்கம் நின்றிருந்த என்னையும் கௌசல்யா அம்மாவையும் பார்க்கவில்லையென்று நினைக்கிறேன். எங்களைக் காட்டிக்கொள்வதுபோல எட்டிபார்த்தோம். எனது தோற்றம் அவனுக்கு சில சந்தேகங்களை எழுப்பியிருக்கவேண்டும். வாகனத்திலிருந்து இறங்கினான். வண்டியை ஒழுங்குடன் நிறுத்திவிட்டு நின்றான். வேட்டியின் ஒரு நுணி கையில் இருந்தது.

 

– பிரான்சுலே இருந்து வருகிறீர்களா?

 

– ஆமாம் ஏன்.

 

– எங்க அண்ணன் பொண்ணா இருப்பீங்களோவென்ற சந்தேகம்.

 

– எனக்கு விளங்கவில்லை.

 

– தேவசகாயத்தின் மகளா எனக்கேட்டேன்

 

தேவ சகாயம் என்னுடைய அப்பா. கொஞ்சம் புரிவதுபோல இருந்தது

 

– இல்லை நீங்க சொல்கிற பெண்ணை எனக்குத் தெரியும். எனக்கு பிரண்டு அவங்க.

 

– ஒரு நிமிடம் வரமுடியுமா? நான் குடிசைக்காரப் பெண்மணியைப்பார்த்தேன். எனக்கென்ன என்பதுபோல அவள் தலையைக் குனிந்தபடி நின்றிருந்தாள்

 

என்னதான் அந்த ஆள் சொல்கிறானென கேட்பதற்கு இறங்கினேன். கை கொடுத்தான். குலுக்கிக்கொண்டோம்.

 

– தேவசகாயத்தின் தம்பி அந்தோனி. அப்பா இறந்த பிறகு அண்ணன் பாகம் என் பொறுப்பில்தான் இருக்கிறது. இது அண்ணியோட சொத்து.  அவங்க இறந்தபிறகு நியாயப்படி பொண்ணுக்குச் சேரணும். யாரோ தாய்மாமன்னு சொல்லிக்கொண்டு சொந்தம் கொண்டாடிக்கொண்டுவறான். நானும் யார் யாரிடமோ கேட்டுப்பார்த்துட்டேன். எங்க அண்ணனை பத்தின தகவல்களுமில்லை. அவங்க பொண்ணை பத்தின தகவல்களுமில்லை. இரண்டுபேருலே ஒருத்தர் அட்ரஸ் கிடைச்சாகூட போதும்.

 

– சரியான முகவரி வேண்டுமெனில் உங்கள் எண்ணை கொடுங்க, கிடைச்சதும் போன் செய்யறேன்.

 

– எங்க தங்கியிருக்கீங்கண்ணு சொல்லுங்க வீட்டுக்கு வருகிறேன்.  ஒரு நாளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வாங்களேன்.

 

எனக்கு அந்த ஆளிடமிருந்து தப்பினால் போதுமென்றிருந்தது.

 

– தற்போது நான் தங்கியிருக்குமிடம் நிரந்தரமானதல்ல ஓரிரு நாட்களில் இடம் மாறிடுவேன்.

 

– காவற்கார நாயை வச்சிக்கிட்டு நாம எதுவும் பேசமுடியாது. ஒருநாளைக்கு வீட்டுக்கு வந்தீங்கன்னா விபரமா பேசலாம். அவசியம் போன் பண்ணுங்க.

 

– அதற்கென்ன வருகிறேன், என்றேன்.

 

(தொடரும்)

 

————————–

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Series Navigationமலட்டுக் கவிகருணைத் தெய்வம் குவான் யின்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *