மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 5

வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். இப்போது சஞ்சலப்பட்டு என்ன பயன்? நான் கூறியதைப்போல பரியாரிவீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது உபாயம் வைத்திருப்பாள்.
7. செண்பகத்திற்கு சங்கடமாக இருந்தது. சித்ராங்கியை நினைக்கப் பரிதாபமாக இருந்தது. இருக்கட்டுமே பரிதாபத்துக்குரியவர்களாக ஏழைகள் மட்டுமே இருக்க வேண்டுமா என்ன? சித்ராங்கிக்காக கோபுரவாசலிலும், கொடிக்கம்பத்தருகேயும், பிரகார வெளிகளிலும், ஆயிரங்கால் மண்டபத்திலும் பல ஜெகதீசன்கள் காத்திருக்கிறார்கள். இவளுக்கு எத்தனை பேர் இருக்கிறார்கள் ? வல்லம்படுகையில் ஒர் அத்தை மகனிருக்கிறான். உற்சவகாலங்களில் வீட்டில் கற்பூர வாடை அடித்தால் அத்தையும் அவள் பிள்ளையும் ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று பொருள். அவனுக்கு உடலெங்கும் படர்தாமரை. எந்நேரமும் சொரிந்துகொண்டு, இரணத்தில் நீர் வடிய உலாவருவான். சந்தணத்தை எலுமிச்சைசாறில் குழைத்து இரண்டுநாளைக்கொருமுறை உடலில் பூசுவதை நிறுத்தியதில்லை. அவனுக்கு நஞ்சையில் பத்துகுழி நிலமும் ஒரு ஜோடி உழவுமாடுகளும் சொந்தமாக இருந்தன. தலைமாட்டில் கொள்ளிடம். மடையை காலால் சீண்டினால் போதுமாம். அத்தைக்கு செண்பகத்தை தனது மருமகள் ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற கனவு வெகு நாட்களாக இருக்கின்றது. தமிழ்க் கவிதை சோறுபோடாதநிலையில், மகளை தங்கையின் மகனுக்கு மணமுடித்துவிடலாமென்பது கவிஞனான தகப்பனுடைய திட்டம்.

சித்ராங்கி எழுதிய கடிதத்தை எடுத்துக்கொண்டு முதன்முறையாக ஜெகதீசனை தேடிபோனபோது, நெருக்கத்தில் கண்ட அவன் உருவம் என்னவோ செய்தது. எஜமானிக் கொடுத்த முதல் காதல் மடலை தான் எழுதியதாக சொன்னாள். ஆரம்ப நாட்களில் சங்கடமாக இருந்தது. உனக்கு நரகமே வாய்க்குமென அவள் உள்மனம் சபித்தது. மனதிலிருந்த மற்றொரு செண்பகம் அவளைத் தேற்றினாள். வேசிப்பெண்ணான சித்ராங்கிக்குள்ள ஆசைகளும் கனவுகளும் உனக்கும் இருக்கலாம் தவறில்லையென்றது அவள்தான். சித்ராங்கி எழுதிய ஓலைமடல்களை அதன் பின் ஒவ்வொருமுறையும் கிழித்துப் போட்டாள். ஜெகதீசனை வீழ்த்த முடிந்த அவளது சாமர்த்தியத்தை அவளே மெச்சிக்கொண்டாள். ஆசைப்பட்டதுபோலவே எல்லாம் நடந்ததென்று நினைத்திருக்க விதிபோல தீட்சதர் வீட்டு வாழைத்தோட்டத்தில் வைத்தா கிழித்துப்போடவேண்டும். இத்தனைபெரிய தில்லையில் அதைக்கிழித்தெறியவா இடமில்லாமல் போய்விட்டது. கைய்யும் மெய்யுமாக பிடிபட்டுவிட்டாள். அன்று முதல் ஜெகதீசனின் போக்கே மாறிவிட்டது. வேறொரு ஆபத்தும் துரத்திற்று. கவனமாக இருந்தும் விபரீதத்தைத் தடுக்க முடியவில்லை. அவன் வாரிசு இவள் வயிற்றில். ஏதாவது செய்தாகவேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை சூன்யமாகிவிடும், முதன்முறையாக அச்சத்தை உணர்ந்தாள். நெஞ்சில் தீப்பந்துகள் உருண்டன. அவள் மேனி சிலிர்த்து அடங்கியது. மயிர்க்கால்கள் குத்திட்டன. உடல் வெடவெடத்தது. கால்களை வேகமாக எடுத்துவைத்து தற்காலிகமாக பயத்திலிலிருந்து விடுபடமுயன்றாள். கூந்தலுக்குக் கீழே பிடரியில் பூரானொன்று ஊர்வதைப்போல உணர்ந்தாள். காது குழைகளை கழற்றி எரியவேண்டும்போலிருந்தது. ‘வேண்டாமடிப்பெண்ணே’, என்றேன், கேட்டாயா எங்கேனும் குளம் குட்டையிருந்தால் விழுந்து தொலை என்ற குரலை ஒதுக்கிவிட்டு மனதைத் திடப்படுத்திக்கொண்டவளாய் நடந்தாள். எப்படியாவது ஜெகதீசனின் மனதில் தன் மீது இரக்கத்தை உண்டாக்கவேண்டும். இல்லையெனில் நிலமை இலவுகாத்த கிளியாகிவிடும்.

– ஏண்டி செண்பகம்.. கொஞ்சம் நில்.- குரல்கேட்டுத் திருப்பினாள். மீனாம்பாள் வீட்டுக்கு பால் அளக்கும் இடைச்சி நின்றுகொண்டிருந்தாள்.

– ம் என்ன சேதி?

– எங்கே? தீட்சதர்வீட்டுக்கா?

– உனக்கென்னவந்தது. எதற்காக போகும் போது கூப்பிடுகிறாய்.

– நீ எக்கேடுகெட்டால் எனக்கென்ன. நாளைமாலை பாலை நான் கொண்டுவரமாட்டேன். நீதான் வரவேண்டும். எங்கள் வளவில் கொஞ்சம் வேலை இருக்கிறது.

– அதைச்சொல்ல இதுதானா இடம்.

– பார்த்தேன், கூறினேன். இதிலென்ன தப்பு. போபோ.

அதற்குமேல் தீட்சதர் வீட்டிற்குப்போக அவள் வேறு வழி வைத்திருக்கிறாள். வீதியில் கணேச தீட்சதர் வீட்டுக்கு வலப்புறமுள்ள சந்தில் நுழைந்தால் ஒற்றையடிபாதை தீட்சதர் வீட்டுப் பின் வாசல் வாழைத்தோட்ட த்தில் நேராக சென்று முடியும். மனிதர் நடமாட்டம் அதிகமில்லாத பாதை. இருபதடி நடந்திருப்பாள்.

– செண்பகம் செண்பகம். இந்த தடவை ஆண்குரல். திரும்பினாள் வியப்பாக இருந்தது. ஓர் இளைஞன். அவனை இதற்கு முன் சிதம்பரத்தில் எங்கேயும் பார்த்ததாக நினைவில்லை.

– வெளிதேசமா?

– ஆமாம்.

– எனது பெயர் எப்படி தெரியும்?

– சற்று முன்னர் ஓர் அம்மாள் உங்கள் பெயரைக்கூறி அழைத்தாளே?

– சரி சரி சொல்லுங்கள் என்ன விஷயம்.

– நான் கிருஷ்ணபுரத்திலிருந்து வருகிறேன். மன்னர் வருகிறாரில்லையா, அவருடைய பாதுகாப்புக்காக வந்திருக்கிற வீரர்களில் நானுமொருவன். எனது சகாக்கள் போய்விட்டார்கள். சித்தேரி அருகே எங்கள் படைவீடு. எப்படி போக வேண்டும் சொல்லமுடியுமா?
– நல்ல ஆளய்யா நீர். எனக்கு வழி தெரியாது. வந்த வழியே போ. யாராவது ஆண்கள் இருந்தால் அவர்களிடம் கேள். சொல்வார்கள். பெண்கள் பின்னே ஓடிவரவேண்டாம்- கூறிவிட்டு முறைத்தாள். அவனுக்குப் புரிந்திருக்கவேண்டும். பதில் சொல்லாமல் வந்த வழியே திரும்பி நடந்தான். அவன் போகட்டுமென்று காத்திருந்தவள் அவன் தலை மறைந்ததும் தொடர்ந்து நடந்தாள். அடுத்து சில கணங்களில் தீட்சதர் வீட்டு புற வாசலை அடைந்திருந்தாள். தொப்புளான் வண்டி மாடுகளைஅவிழ்த்து தொட்டிபக்கம் கொண்டுபோனான். அங்கிருந்த பூவரசு மரத்தின்பின்னே அவனிடமிருந்து தப்பிப்பதற்காக மறைந்தாள். சிறிது நேரம் காத்திருந்தாள். அவள் நினைத்ததுபோலவே அடுத்த ஓரிரு நாழிகையில் ஜெகதீசன் வந்தான். யாரும் கவனிக்கிறார்களாவென்று பார்த்தாள். ஒருவரும் இல்லை யென்பதை உறுதிபடுத்திக்கொண்டதும் வாழைத்தோட்டத்திற்குள் ஓசையின்றி நுழைந்தாள்.

– ஐயா நில்லுங்க..

“நான்கு இலைகள் நறுக்கிவா”! என்று கட்டளையிட்ட தமக்கையின் வார்த்தையை மதித்து வீட்டின் பின்புறமிருந்த வாழைத்தோட்டத்திற்குள் நுழைந்த ஜெகதீசன் குரல் கேட்டு திரும்பினான்.

– செண்பகம் நீயா?

– நானே தான்

– எங்கே வந்தாய். இங்கே யெல்லாம் என்னைத் தேடிக்கொண்டு வரவேண்டாம் என்று சொல்லியிருந்தேனே.

– சொன்னீர்கள்.

– பின் ஏன் வந்தாய்?

– நீங்களா இப்படி? « உனக்காக கால்கடுக்க காத்திருக்கிறேன்? ஏன் இவ்வளவு தாமதம்? » என என்னைக் கடிந்துகொண்டதெல்லாம் மறந்துபோனதா? – முந்தியை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

– சரி சரி இங்கே பிலாக்கணம் படிக்கவேண்டாம். யாராவது பார்த்தால் வம்பு. எனது அக்காவுக்கும் மாமாவுக்கும் தெரியவந்தால் வேறு வினையே வேண்டாம். நீ முன்னே போ. படலைச் சாத்திவிட்டு வருகிறேன்.

ஜெகதீசனின் போக்கு கடந்த சில தினங்களாக மாறியிருந்தது. கண்கள் கலங்க தலை குனிந்து நின்றாள். சூரியன் மேற்கில் சற்றுமுன்புவரை இருந்த இடம் சுத்திகரிக்கப்பட்டு அங்கே தழும்புபோல கருநீலத்தில் ஒட்டிக்கிடந்தது. வாழைத்தோட்டமெங்கும் இருள் மெல்ல பரவிக்கொண்டிருந்தது, சிலு சிலுவென்று காற்றுவேறு. வாழைத் தோட்டத்திற்கே உரிய பசுமையின் வாடை காற்றில் கலந்திருந்தது. பூமியிற் மண்ணிற்கிடந்த பழுத்த இலைகளில் ஓணான்கள் இரண்டு ஒன்றையொன்று துரத்துவதும் பின்னர் நின்று இவளை வேடிக்கைபார்ப்பதுபோலவும் இருந்தக் காட்சி அவளை மேலும் வதைத்தது. கரிச்சான் குஞ்சொன்று இறக்கையை படபடவென அடித்துக்கொண்டு தலையை உரசிக்கொண்டு சென்றது. உன்மத்தம் பிடித்தவள்போல பூமியை வெறித்தபடி பொலபொலவென்று கண்ணீர் சிந்தினாள்.

– இங்கே நிற்கவேண்டாமென்று சொன்னேனேகாதில் விழவில்லையா? போ போ.. நிற்காதே.

ஜெகதீசன் ஆணைக்குப் பணிந்தவள்போல வாழைமரங்களுக்கிடையில் புகுந்து நடந்தவள், அவர்கள் வழக்கமாக சந்திக்கிற வடக்கு வேலியோரமிருந்த ஒதியமரத்தடியில் போய் நின்றாள். அங்கு வழக்கத்திற்கு மாறாக இருள் கூடுதலாக துருத்திக்கொண்டிருந்தது. நாகப்பாம்பொன்றை அங்கு பார்த்து மூர்ச்சையானதும் ஜெகதீசன் அவளை மடியிற்கிடத்திக்கொண்டு வெகு நேரம் காத்திருந்ததும், கண்விழித்து இவள் வெட்கத்தில் துடித்ததும் நேற்று நடந்ததுபோல உள்ளது. இந்த முறை தன்னை பாம்பு கொத்தினால் கூட பரவாயில்லை என நினைத்தது மனம்.

– ம் என்ன ? சொல். எங்கே வந்தாய்?

– போன கிழமை நான் உங்களிடம் கூறியிருந்தேனே. அது விபரமாகத்தான் வந்தேன்.

– எது விபரமாய்?

– எனக்கு நாள் தள்ளிப்போகிறதென்று கூறியிருந்தேனே?
– இல்லை என்றா சொல்கிறேன். பரியாரி மனைவியை போய் பார்த்தாயா? இதுபோன்ற இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றுவது அவளுக்குக் கைவந்தகலை என்கிறார்களே.

– உங்களுக்கென்ன, எளிதாக சொல்லிவிட்டீர்கள். ஒரு பெண்ணுக்கல்லவோ அதிலுள்ள சங்கடங்கள் தெரியும்.

– இதையெல்லாம் நீ முன்பே யோசித்திருக்கவேண்டும்.

– உங்களுக்கு எந்தப்பொறுப்புமில்லையென்று கை கழுவினால் என்ன பொருள்? இது துரோகமில்லையா?

– துரோகத்தைப் பற்றி நீ பேசக்கூடாது. உன் எஜமானி கொடுத்த ஓலைமடல்களிலொன்றை கிழித்தெறிந்ததை நல்லவேளை நான் பார்க்க நேர்ந்தது. நாளைக்கு இதுபோன்றதொரு துரோகத்தை எனக்கு செய்யமாட்டாயென்று என்ன உத்தரவாதம்.

– இறந்து போன உங்கள் முதல் மனைவிபோல நான் இருப்பதாகவும். மறுபடியும் தீட்சதர்பெண்ணொருத்தியை மணமுடிக்க விருப்பமில்லையென்றும், இருவரும் மணமுடித்து வேறுதேசத்துக்குப் போகலாமென்றும் ஆசைவார்த்தைகள் கூறி இருந்தீர்களே?

– அதெல்லாம் உன் உண்மைச் சொரூபம் தெரிவதற்கு முன்பு.

– சித்ராங்கி வேசியென்று தெரிந்துமா? உங்கள் மாமா அவ்வப்போது வந்துபோகிற வீடென்று தெரியுமா தெரியாதா?

– எதுவென்றாலும் இருக்கட்டும் நீ அவளை ஏமாற்றியது தவறு.

– உங்கள் மீதிருந்த ஆசையால் அப்படி செய்துவிட்டேன். என்னை மன்னிக்ககூடாதா? என் வயிற்றிலிருக்கிற கருவுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்.

– பதில் சொல்ல என்ன இருக்கிறது. வெட்கமின்றி எனக்கு முந்தானைவிரித்தபோது இதையெல்லாம் யோசித்திருக்கவேண்டும். நான் கூறியதைப்போல நாவிதர் வீட்டு பச்சையைப்போய் பார். அவள் ஏதாவது உபாயம் வைத்திருப்பாள். எனக்கு வேலைகள் இருக்கின்றன.

– போகாத ஊருக்கு வழிகாட்டுகிறீர்கள். என்னை அவ்வளவு சுலபமாக ஏமாற்றிவிடமுடியாது. உங்கள் கைகளைக்கொண்டே என்னைக் கொன்று இந்த வாழைத்தோப்பில் புதைத்துவிடுங்கள். கொள்ளிடக் கிழவன் சோழகன் அதைத்தான் செய்கின்றானாம்.

ஜெகதீசனின் கைகளிரண்டையும் பிடித்து தன் கழுத்தில் வைத்தாள். ஜெகதீசனுக்குக் கோபம் மூண்டது.

– நல்லது ஒழிந்துபோ. பீடைவிட்டதென்று எனக்கும் நிம்மதி.

கழுத்தை நெரிக்கத் தொடங்கினான் செண்பகம் இதைஎதிர்பார்க்கவில்லை. விழிகளிரண்டிலும் நீர் தத்தளிக்க வெண்படலம் குத்திட்டுநின்றது. மூச்சுத் திணறினாள். எங்கிருந்துதான் அவ்வளவுபலம் வந்ததோ அவன் முன்கைகளை இறுகப்பற்றி உதறினாள், பின்பக்கமிருந்த வாழைப்போத்தில் தடுக்கிவிழுந்ததென்னவோ இவள்தான். நிதானித்து எழமுயன்றவளின் கால்களை ஜெகதீசன் தனது இடதுகாலால் எந்தித் தள்ளினான். திரும்பிப்பார்த்தவன் அவள்மீது காறித் துப்பினான். பிறகு சிரித்தான்., ‘தாலியா கட்டவேண்டும். வேண்டுமானால் கோவிலுக்கு வா! மாமாவிடம் சொல்கிறேன். பொட்டுகட்டிக்கொள்”, என்றான். இவள் சுற்றியிருந்த சீலையெங்கும் வாய்க்கால் சகதி. தலையின் பின்புறமும் ஈரமண்ணில் அமிழ்ந்ததில் தலை மயிர் அவிழ்ந்துசேற்றில் ஒட்டிக்கிடந்தது. அவமானப்பட்டதுபோல உணர்ந்தாள். நெஞ்சு சுவாசத்தில் உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. கொண்டையை முடிந்தவள் கைகொள்ள சேற்றைஎடுத்து இவளைக் கடந்துசென்றவன் முதுகைக் குறிவைத்து எறிந்தாள். அவன் திரும்பிப்பார்க்காமல் நடந்தான். அவள் கவனம் தரையிற்கிடந்த வாழை இலை சருகுகளிலிருந்து வந்த சலசலப்பின் மீது படிந்தது, முதலில் அரணையென்று நினைத்தாள். விலாங்குபோல நெளிவதைவைத்து சாரைப் பாம்பென முடிவுசெய்தாள். நிதானமாக அது மறைய அவ்விடத்தை ஒரு கரும்புள்ளி இட்டுநிரப்பிய பின்பும் வெறித்து பார்த்தபடி நின் றாள்.
(தொடரும்)

Series Navigationஇராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்!முகமற்றவனின் பேச்சொலி