மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 9

This entry is part 15 of 30 in the series 15 ஜனவரி 2012

தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள்.

11 இளவேனிற் காலமென்பதால் வெப்பம் முன்னிரவு நேரத்திலும் மூட்டம்போல கவிந்திருந்தது. நீர்ப் பாசி போல கரிய இருள் இரவு நீரில் கலந்தும் கலவாமலும் மிதந்துகொண்டிருந்தது. மரங்கள் காற்றை எதிர்பார்த்து அசைவின்றி இருந்தன. தொழுவத்தில் கட்டத் தவறிய பசுவொன்று வெகுநேரமாக இருட்டில் நிற்கின்றது. மரகதப்பச்சையில் ஒளிறும் அதன் விழிகளின் காட்சியில் பள்ளி அறையின் சன்னல் கம்பிகளைப் பிடித்தபடி சித்ராங்கி லயித்திருந்தாள். தீட்சதர் நடந்து வருவாரா, வண்டியில் வருவாரா? காகத்தில் வருவாரானால் மிகவும் பொருத்தம், என்று மனம் நினைத்தது. சனிபகவானுக்கு காகம் வாகனமாமே! தாய் மீனாம்பாளிடம் கூட தமது உள்ளக்கிடக்கையை கூறியிருந்தாள். எதில் வந்தாலென்ன வரும்பொழுது மறவாமல் பொன்னை கொண்டுவந்தால் சரியென்பது அவள் பதில்.

தில்லை நடராஜருக்கு சித்ராங்கி வாழ்க்கைபட்ட அன்றிரவு முன்னதாக வெந்நீர்வைத்து செண்பகமும் மீனாம்பாளும் அருகருகே நின்று சித்ராங்கியைக் கஸ்தூரி மஞ்சள் தேய்த்து நீராடச் செய்தார்கள். வாசனாதி திரவியங்களைப் பூசினார்கள். அதிகம் உறுத்தலில்லாத நுண்பூங்கலிங்கம் உடுத்தினார்கள், எளிதில் அவிழ்க்கும்படியாக சிவப்பு மார்பு கச்சினை முடிந்தார்கள். நகைகளை குறைத்து, மலர்களால் அலங்கரித்திருந்தார்கள். மல்லிகையும் மருக்கொழுந்தும் கலந்த சரத்தை கூந்தலில் சூடினார்கள். மஞ்சள் பூசிய சித்ராங்கியின் முகம் விளக்கொளியில் உற்சவ அம்மன்போலவிருந்தது. இரவில் உதித்த சூரியன். முன்னிரவு முடிந்த நான்கைத்து நாழிகைக்குள் தீட்சிதர் வந்துவிடுவார் என்றார்கள். தீட்சதர் வரும்வரை தெருமாடத்திலிருந்த விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்வதென்று தீர்மானித்து செண்பகம் அவ்வப்போது வெளியில் வந்து திரியின் சிட்டத்தை நிமிட்டி சரி செய்துவிட்டு இரண்டு கரண்டி நெய்விட்டுச்சென்றாள். ஆமணக்கு எண்ணையைத்தான் வழக்கமாக மீனாம்பாள் உபயோகிப்பதென்றபோதிலும், வீட்டிற்கு பால் அளக்கும் ஆச்சியின் வீட்டில் விளக்குகளுக்கென நான்குபலம் பசுவெண்ணெய் சொல்லிவைத்து செண்பகத்தை வாங்கிவரச் செய்தாள் அதில் நான்கு துளசி இலையைப்போட்டு உருக்கியிருந்தார்கள். நடையில் ஒன்று கூடத்திலொன்றென விளக்குகள் தீட்சதருக்காக காத்திருந்தன.
தலைமை தாசியென்ற கியாதியால் தீட்சதரின் உடல் உபாதைகளை போக்கும் கடமை சித்ராங்கிக்கு இருக்கிறதென்பதை மீனாம்பாள் மகளுக்கு தெளிவாகவே புரிய வைத்திருந்தாள். கோவிலிலிருந்து வீடு திரும்பியவுடனே மீனாம்பாள் செய்த முதல் காரியம் மகளுக்குப் பாடமெடுத்ததுதான். தைரியமூட்டினாள். முதல்நாள் அனுபவம் கடுமையானதென்றும், பிறகு மெல்ல மெல்ல பலதையும் புரிந்துகொள்ளும் சூட்சமத்தில் சித்ராங்கி தேர்ந்துவிடுவாளென்றும் கூறினாள். மீனாம்பாள், அவள் தாய், அவள் பாட்டியென அவர்கள் குடும்பத்தினர் வழிவழியாக நிறைவேற்றிவந்த குலத் தொழிலை மகள் இனி பொறுப்புணர்ந்து தொடரவேண்டிய அவசியத்தை, கண்களில் நீர் அரும்ப தாய் மகளுக்கு எடுத்துக் கூறினாள். தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள். மேலத் தெருவிலிருக்கும் தாசிகளின் பெயர்களைக்குறிப்பிட்டு, அவர்களின் இன்றைய தரித்திரத்தை நினவூட்டி அந்த வாழ்க்கை நமக்கும் வேண்டுமாவென யோசித்து பாரென்றாள். உண்மைதான் அவளால் ஞாபகப்படுத்த முடிந்த பெண்மணிகளில் ஒன்றிரண்டு குடும்பங்களைத்தவிர பெரும்பான்மையோர் நிலமை மிகவும் மோசமாக இருந்தது. தாசிகளுக்கு உடல்தான் மூலதனம், ஆனால் அதையும் விற்று முதலாக்க சாமர்த்தியம் வேண்டும். அத்தகைய சாமர்த்தியம் தம்மிடம் இருந்ததும் அவர்களிடம் இல்லாததுமே அவர்களின் வறுமைக்கும் தமது செழுமைக்கும் காரணமென்று பெண்ணுக்கு விளக்கினாள். வறுமையும், நோயும் சேர்ந்தே அவர்களைப் பீடித்திருந்தது. ஒருபோதும் அதுபோன்ற வாழ்க்கையைச் சந்திக்கும் திராணி தமக்கில்லை என்பதை சித்ராங்கி புரிந்துவைத்திருந்தாள்: ஒளி மங்கிய முகமும், குழிவிழுந்த கண்களும், மேகரோகத்தில் அவதிப்படும் சரீரமும்…ம்… பணத்தைச் சம்பாதிக்கமுடிந்தால் அதை பராமரிக்க முடிந்தால் அம்மா சொல்வதுபோல சௌந்தர்யத்தை ஆயுள் பரியந்தம் கட்டிகாக்க முடியும்.

தீட்சதர் வந்திருப்பதன் அடையாளமாக நடையில் காலடிகளின் சத்தம், கதவு அடைக்கப்படுகிறது. மீனாம்பாள், செண்பகம், தீட்சதர், பிறகு வேறொருவரென்று கதம்பக்குரல்கள், ரகசிய சம்பாஷனை. காலடிகள் விலகி திசைக்கொன்றாய் கரைந்துபோகின்றன. இவளது அறை பக்கமாக நடைகூடத்தைக் கடந்து அழுந்தப் பதிக்காமல் வயதின் தன்மைக்கொப்பவும் சமூகத்தில் தமக்குள்ள இடத்தை உறுதிபடுத்தவுமென்றே எடுத்துவைத்த காலடிகள். நெருங்கும்போது சந்தணத்தின் மணமும் அவர் காதுமடல்களில் செருகியிருந்த பன்னீர் புஷ்பங்களின் மணமும் இவள் மூக்கு துவாரங்களைத் தொட்டதும், சித்ராங்கி க்கு வேர்த்தது. மஞ்சத்திலிருந்து இறங்கிநின்றாள். கதவு மெல்ல உட்பக்கம் திறந்ததும், சில்லென்று உள்ளே புகுந்த காற்றில் உடல் வெடவெடத்தது. திறந்தக் கதவு மூடப்படுவதும் அதிகம் சதைபற்றில்லாத, விரல்பிரிந்த பாதங்களிரண்டு இவளை அண்மிக்க நெஞ்சம் படபடத்தது. தலையை நிமிர்த்த அச்சம். அடுத்தகணம் அவள் தோளில் துவளுவதுபோல ஒரு கை. மற்றொரு கையின் விரல்கள்நுனிகள் முகவாயில் இருந்தன. அவருக்கு அதிகம் சிரமத்தைக் கொடுக்காமல் தலை இயல்பாக பின்புறம் மடிந்ததில் தலைமயிரில் இழைபிரித்துச் சூடியிருந்த மல்லிகைச்சரம் தோளிலிருந்து நழுவி அவளுடைய இளம் மார்பில் விழுந்தது. தீட்சதரின் முகம் இப்போது இவளது பார்வையின் பரப்புக்குள் வந்திருந்தது. முனைவளைந்த கூறான அலகும், சாம்பல் நிற விழிமடல்களுக்கிடையில் தெரிந்த பூனைக்கண்களும், கொசகொசவென்று ரோமத் திரட்சியில் மிதந்த புருவங்களும் அவரை வல்லூறுவாகவும் இவளைத் தாய்க்கோழி பிரிந்த குஞ்சாகவும் கற்பனை செய்து தேகம் கூடுதலாக நடுங்க ஆரம்பித்திருந்தது. சித்ராங்கி க்குத் தலை சுற்றியது. தீட்சதர் அவளை மெல்ல அணைத்து மஞ்சத்தில் அமர்த்தினார். தள்ளி உட்கார்ந்தார். அவரது எதிர்பாராத இச்செய்கை அவளுடைய பதற்றத்தை தணித்திருந்ததென சொல்லவேண்டும்.

– பாடுவாயா?

– ம். தலையாட்டினாள்

– எங்கே பாடேன் கேட்போம். தம்புராவை எடுத்து வரட்டுமா? – எழுந்திருப்பதுபோல பாவனை செய்தார். சுவரில் சார்த்தியிருந்த தம்புராவை பார்த்ததால் அக் கேள்வி.

– இல்லை.. நீங்கள் அமர்ந்திருங்.. நானே.. நானே போய் எடுத்து வருகிறேன்.

– அவர் மெல்லசிரித்தார். அவளுக்கு வெட்கமாக இருந்தது. அவர் சிரிப்பில் நிதானமிருந்த போதிலும் பள்ளி அறைக் கதவைக் கடந்து மீனாம்பாள் செண்பகமென இருவர்காதுகளிலும் விழுந்திருக்கவேண்டும்.

– நீ பாடுகிறாயா? நான் பாடட்டுமா?

– இல்லை நானே பாடுகிறேன். இம்முறை ஓட்டமும் நடையுமாக – ஒற்றை சடை பின்புறம் ஊசலாடச் சென்று தம்புராவை கொண்டுவந்தாள். அவர் காலடியில் சம்மணமிட்டு அமர்ந்து தம்புராவைத் தோளில் சாய்த்து அதன் நரம்புகளைச் சுண்டினாள். தீட்சதர் கண்களைமூடி நினைவுகளில் மிதப்பவர்போல மஞ்சத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒரு முறை தலையை உயர்த்தி அண்ணாந்து பார்த்துவிட்டு பாடத் தொடங்கினாள்.

– சூடுவேன்.. அடுத்த சொற்களை நினைவிற் கொண்டுவர இயலாமற் தடுமாறினாள்.

– சூடுவேன் பூங்கொன்றை – தீட்சதர் உதவிக்கு வந்தார்.

சித்ராங்கி க்கு அடுத்தடுத்த வரிகள் ஞாபகத்திற்கு வந்தன, தீட்சதரை மறந்து உற்சாகத்துடன் பாடினாள். தீட்சதர் கண்களை மூடி பதிகத்தின் இசையிலும் பொருளிலும் ஆழ்ந்தார்.

சூடுவேன் பூங்கொன்றை
சூடிச் சிவன் திரள்தோள்
கூடுவேன் கூடிமுயங்கி மயங்கிநின்று
ஊடுவேன் செவ்வாய்க் குருகுவேன் உள்ளுருகித்
தேடுவேன் தேடிச் சிவன்கழலே சிந்திப்பேன்
வாடுவேன் பேர்த்தும் அலர்வேன் அனலேந்தி
ஆடுவேன் சேவடியே பாடுதுங்காண் அம்மானாய்

பாடிமுடித்து தம்புராவைச் சுவரில் சாய்த்தபோது தீட்சதரிடத்தில் அவர் மைத்துனன். சித்ராங்கி யின் நெஞ்சு கனத்தது, சுவாசைப்பையிலிருந்து வெளியேறிய மூச்சுக்காச்சு அனலாக தகித்தது. குத்து விளக்கின் தீப ஜுவாலைக்குள் ஊடுபற்றுதல்போல அவள் முகம்: பனித்தக் கண்கள், துடிக்கும் உதடுகள், எச்சில் பிசிறுகளுடன் பிரியும் இரு அதரங்கள், வெண்பற்களுக்கிடையில் தவிக்கும் நா. மஞ்சத்தில் தீட்சதரிடத்தில் அமர்ந்திருப்பது அவருடைய மைத்துனன் போல தெரிந்தது. கனவில் மிதப்பவள்போல எழுந்தவள், பெண் என்பதையும் மறந்து வெட்கமின்றி எதிரிலிருந்த ஆணுடலை தனக்குள் வாங்கிக்கொள்ள முனைந்தவள்போல கைகொண்டு அவர் முதுகைப் இறுகப்பற்றுகிறாள். தீட்சதர் தீயை மிதித்தவற்போல பதறிக்கொண்டு எழுந்தார்.

– பெண்ணே! கொஞ்சம் பொறு. சற்று முன்புவரை உன்னிடத்தில் எனக்கு மோகம் இருந்தது உண்மை. இப்போது நிலமைவேறு. உன் மனதில் ஆருத்ரர் இருக்கிறார். பாடியபோது சாட்சாத் அந்த சிவகாமசுந்தரியே பரமனை நினைத்து இசையில் உருகுவதுபோல இருந்தது. இப்படியொரு இசைக்குயில் திருவாசகத்தைப் பாடுமென்றால் எம்பெருமானே கைலாயத்தைத் துறந்து சித்ராங்கி க்காக சிதம்பரத்தில் நிரந்தரமாக தங்கிவிடக்கூடும். இசையுடன் பதிகங்களைக் நல்ல குரல் வளமுள்ளவர்கள் பாடிக் கேட்கவேண்டுமென்று தென்னாடெங்கும் அலைந்திருக்கிறேன். அவர்களை ஆருத்ரா தரிசனத்திற்கு அழைத்துவந்து பாடவும் வைத்திருக்கிறேன். இனி உன்னால் அந்த சஞ்சலம் நீங்கியது.

கணீரென்று ஒலித்த தீட்சதிரின் குரலைகேட்டபிறகுதான் சித்ராங்கி க்கு சுய நினைவு வந்தது. தமது எதிரே இருப்பவன் தீட்சிதர் மைத்துனன்அல்ல அவனது மாமா சபேச தீட்சதர் என்பதை உணர்ந்த மாத்திரத்தில் மனதிற் கவலை குடிபுகுந்தது. மீனாம்பாள் குடும்பத்தின் நிலமையைக் கிளிப்பிள்ளைபோல எடுத்துச் சொல்லியிருந்தாள். அவளும் தாயின் அறிவுரைப்படி நடந்துகொண்டதாகவே நினைத்தாள், தீட்சதரின் திடீர் மாற்றம் இளம்பெண்ணிற்குப் புரியாத மர்மமாக இருந்தது. தான் ஏதேனும் குற்றமிழைத்துவிட்டோமோ? என நினைத்தாள். இமைகள் ஒட்டிக்கொண்டன. சொல்ல முனந்து வார்த்தைகளற்றவள்போல தடுமாறினாள். தீட்சதர் அவள் மனதை வாசித்தவர்போல தொடர்ந்தார்:

– பெண்ணே சஞ்சலப்படாதே. நீ அற்ப மானுடப் பெண் அல்ல. தேவதை, தில்லைவாணனுக்குரியவள்.

– ஐயா! ஏதேதோ வார்த்தைகளைக்கூறி என்னை உயர்த்தி பேசுகிறீர். அதற்குரியவள் நானல்ல. தாசிகுலப்பெண். எனது கடமை, எமதில்லங்களைத் தேடிவரும் ஆண்களை மகிழ்விப்பது. நீங்களும் அதற்கென்றே வந்திருக்கிறீர்கள். என் தாயார் உங்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென சொல்லியிருக்கிறார்கள். உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வேன். உங்களைச் சந்தோஷப்படுத்த அடிமை நான் எதையும் செய்வேன்.

– உனதுவாயால் பதிகத்தைக்கேட்டதும் மீனாம்பாள் மகள் தாசி சித்ராங்கி என்பதே மறந்துபோயிற்று. என்ன சொல்ல நினைக்கிறாய் என்பது விளங்காமலில்லை. உனதில்லத்தில் காலெடுத்து வைத்தபோது உன்னைப் பெண்டாளும் விருப்பத்துடனேயே வந்தேன், அது முறையல்ல என்பதைப் புரிந்துகொண்டேன்.

– இதுபோன்ற வார்த்தைகளை உபயோகித்து எங்கள் குடும்பத்தை நிர்க்கதிக்கு ஆளாக்கிவிடாதீர்கள். உங்களைத்தான் நாங்கள் பெரிதும் நம்பியிருக்கிறோம்.

– அது பற்றிய கவலைகள் வேண்டாம். கோவிலிருந்து வரவேண்டிய சம்பளமும் இதர சம்பத்துகளும் ஒப்புக்கொண்டதுபோல திங்கள்தோறும் உங்கள் இல்லம் தேடிவரும். நீ செய்ய வேண்டியதொன்றுதான் மீனாம்பாளிடம் இது பற்றி பேசாதே நான் எப்போதும்போல வந்துபோவேன்.

இதுபோன்றதொரு பதிலை சித்ராங்கி தீட்சதரிடம் எதிர்பார்க்கவில்லை. அவர் பெரிய மனிதர், எது சொன்னாலும் நியாயாமாகத்தான் இருக்குமென மனம் நம்பியது. அன்றிரவு அவர் மஞ்சத்திலும், இவள் கீழே பாயிலும் உறக்கமென்றானது. மறுநாள் காலை மீனாம்பாளுக்கு பெண்ணின் நலுங்காத உடையும், உடையாத வளைகளும், அதிகம் உதிர்ந்திராத பூக்களும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தீட்சதர் கொடுத்தாரென்று இரண்டு பொன் மாட்டல்களை காண்பித்த பொழுது எல்லாவற்றையும் மறந்தாள்.

தீட்சதர் மீனாம்பாளிடமும் தெளிவாகவே சொல்லிவிட்டார். வேற்று மனிதர்களின் சுவாசங்கூட மேலதெருவில் படக்கூடாதென்பது அவருடையக் கட்டளை, மீறினால் அந்த நிமிடமே, தில்லை அம்பலத்திற்குச் சொந்தமான நஞ்செய் அறுவடைகாலத்தில் வீடுதேடிவரும் என உறுதி அளிக்கபட்ட ஐந்து கல நெல்லும், இதர தானியங்களும், எண்ணெய் குடமும், இரண்டு வராகனும் நிறுத்தபடுமென்று எச்சரித்திருந்தார். மீனாம்பாளுக்கு தீட்சதரிடமிருந்து இப்படியொரு ஆக்கினையை எதிர்பார்க்கவில்லை. உள்ளூர் பெரிய மனிதர்களும் ஸ்த்ரீலோலர்களும் தூது அனுப்பி மீனாம்பாள் மனதை மனதை அறிய எத்தனித்தபோது, மீனாம்பாளுக்கு ‘எந்த புற்றில் எந்த பாம்பு இருக்குமோ’ என்று சந்தேகம். தற்போதைக்கு தீட்சதரை மனம்கோண நடந்துகொள்ளவேண்டாமென நினைத்து பிற ஆண்களின் விருப்பங்களை தள்ளிப்போட்டுவந்தாள்.

மாதம் தவறாமல் முதல் வெள்ளிக்கிழமை, தீட்சதர் வரிசைகளென்று வண்டியில் வருகிறது. கூடம் நிறைகிறது. உக்கிராணம் வழிகிறது. கூடுதலாக சில பட்டுபுடவைகள் பெட்டியில் இடம்பெற்றன. பொற்கொல்லர் வீட்டிற்கு அழைத்துவரப்பட்டார். நடராஜர் சன்னதியில் மரியாதைக் கூடியிருந்தது. தீட்சதரும் தவறாமல் வந்தார். சித்ராங்கி யும், தாசிக்குரிய தருமத்துடன் காத்திருந்தாள். மீனாம்பாள் வேண்டுக்கோளுக்கிணங்க கதவை மறக்காமல் தாளிட்டாள். திருவாசகம் பாடேன், திருவெம்பாய் பாடேன், அவிநயம் பிடியேன், என்பார். தாண்டவம் ஆடச்சொல்லி பார்த்து விடியற்காலையில்தான் கண்ணயர்வார். எப்போது படுத்தாலும் கருக்கலில் எழுந்து போய்விடுவார்.

Series Navigationநான் குருடனான கதைஒரு நாள் மாலை அளவளாவல் – 1
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *