மாயா

Spread the love

0
மாயவனத்தில் மடிப்பிள்ளையை தேடி அலையும் ஆவித்தாயின் கதை!
அப்சரா நடிப்பின் மீது பேராவல் கொண்ட துணை நடிகை! அவள் கருவுற்றது, தொழில் வளர்ச்சியை பாதிக்கும் என்று வாதம் செய்து, கருவை கலைக்க அப்சரா மறுப்பதால், விலகுகிறான் அவளது கணவன் அர்ஜுன். மீரா எனும் பெண் குழந்தையுடன், தனியே திரைப்படத் துறையில் போராடிக் கொண்டிருக்கிறாள் அப்சரா! 27 வருடங்களுக்கு முன் மாயவனம் காட்டில் கொலை செய்யப்படும் மாயா எனும் மனநோயாளி, தன்னிடம் இருந்து பிரிக்கப்பட்ட குழந்தையைத் தேடி, ஆவியாக அலைகிறாள். அப்சரா வாழ்வில் மாயா குறுக்கிட, தொலைந்த குழந்தை தானே என உணர்கிறாள் அப்சரா. மாயாவாகவே நடிக்க, அப்சராவுக்கு வாய்ப்பு வருவது க்ளைமேக்ஸ்!
அப்சராவாகவும், சில காட்சிகளில் மாயாவாகவும் அதிகம் பேசாமல், விழிகளாலேயே கவர்கிறார் நயன் தாரா! அர்ஜுனாக ஆரி, தெளிவான உச்சரிப்பாலும் முக பாவனைகளாலும் மனதில் இடம் பிடிக்கிறார். திரைப்பட இயக்குனராக மைம் கோபி, அதிகம் அலட்டிக் கொள்ளாமல் அதிர வைக்கிறார். வனத்துறை ஊழியராக ரோபோ சங்கர். தன்னையே சுட்டுக் கொண்டு செத்துப் போகும் பரிதாப மரணம் அவருக்கு!
படத்துக்குள் படம் என்பதை கடைசி வரை உடைக்காமல், காட்சிகளை கறுப்பு வெள்ளை, கலர் என்று வித்தியாசப்படுத்தி வென்றிருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சரவணன். மாயாவின் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரத்தை தேடி அலையும் அனைவரும் இறப்பதை காட்சிப்படிமமாகக் காட்டி, அது கடைசியில் அப்சராவிடம் சேர்வதைக் காட்டும் காட்சியில், நடிகையும் இயக்குனரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கிலியை உச்சம் தொட வைக்கும் பேய் பட இலக்கணத்தை மீறாமல், இசையைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இசைஞர் ரான் எத்தன் யோகன். தெளிவான படப்பிடிப்பால் கவர்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்.
மாயவனத்தையும், அதன் நடுவில் இருக்கும் மனநலக் காப்பகத்தையும் வடிவமைத்த கலை இயக்குனர் தா. ராமலிங்கத்துக்கு பாராட்டுக்கள். அப்சராவின் வீடு நவீன சிற்பங்களால் மிளிர்வது அவரது கற்பனைக்கு ஒரு சான்று!
காட்சிகள் அதிகம் இழுபடாமல் வேகமெடுக்க வைத்த எடிட்டர் சுரேஷ், நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார்.
அர்ஜுனே நாயகனாக நடிக்கும் பேய் படத்தை, அவன் விலக்கி வைத்த மனைவி அப்சராவே பார்ப்பதும், அதுவே அவர்கள் மீண்டும் இணைய காரணமாவதுமான கவிதை முடிவை நிறைவோடு தருகிறது மாயா!
0
பார்வை : ஜமாய்யா!
0
மொழி : நயன் நம்பர் ஒன்னாக இருக்கறதுக்கு காரணம் அந்த பரவச முகம் தானய்யா!
0

Series Navigationலாந்தர் விளக்கும் காட்டேரி பாதையும்சுந்தரி காண்டம். 7 . ஜிகினா மோகினி ஜில் ஜில் சுந்தரி