முண்டாசுப்பட்டி ( திரை விமர்சனம்)

 

இயக்கம்: ராம்குமார். இசை: சீயான் ரோல்டன். ஒளிப்பதிவு: பி.வொ.சங்கர். எடிட்டிங்: லியோ ஜான் பால். நடிப்பு: விஷ்ணு விஷால், ஆனந்தராஜ், நந்திதா, காளி வெங்கட், ராம்தாஸ். நேரம்: 148 நிமிடங்கள்.

 

அழுத்தமில்லாத கதையை, சிரிப்பூக்களால் நிரப்பி, புன்னகைக் கதம்பமாக ஆக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமாருக்கு வாழ்த்துக்கள். இரண்டரை மணிநேரம், கதையை இழுத்து ரசிகனின் பொறுமையைச் சோதித்த குற்றத்திற்காக, திரைக்கதை தேர்வில் பெயில்.

இசைஞானியும் இசைப்புயலும் சேர்ந்த கலவையாக முத்திரை பதித்திருக்கும் இசைத் தென்றல் சீயான் ரோல்டனுக்கு ஒரு பொக்கே. வித்தியாச பின்னணி இசையும் பாடல்களுமாக நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். பலே!

“ உச்சியிலே உதித்தவனே” என்கிற ஆரம்பப் பாடலே, சீயானின் இசைக்கு கட்டியம் சொல்கிறது. படம் நெடுக சின்னப்பாடல்களால் பரவசமாகிறது ரசிகன் மனம். “ கொத்து கொத்தாய் எண்ணங்களைக் கொல்கிறாய்”, “காதல் கனவே தள்ளிப் போகாதே”, “ காற்றும் என் காலைச் சுத்தும்” என மணிகளாய் சிறு பாடல்கள் விரவிக் கிடக்கிறது படம் முழுவதும். சபாஷ்! சாவு வீட்டின் பின்னணியில் ஒலிக்கும் காதல் பாடல்;, நல்ல கற்பனை., “ ராசா மகராசா” என்கிற அந்தக் காட்சிப் பாடல் படத்தின் நம்பர் ஒன்.

சங்கரின் ஒளிப்பதிவில் இருட்டும் வெளிச்சமும் கண்கட்டு வித்தையாய் களி நடனம் புரிகின்றன. விண்கல் தாக்குவதும், பூனைப்படை பாய்வதும் பாராட்டுப்பெறும் கிராபிக்ஸ்.

விஷ்ணு விஷாலை முந்திக் கொண்டு, இன்னொரு தம்பி ராமையாவாக காளி வெங்கட் பளிச். அவருக்கு எதிர்காலம் பிரைட். இன்னொரு அதிசயப் பிரவேசம் பழைய வில்லன் நடிகர் ஆனந்த்ராஜ். காமெடி வில்லனாக அவர் அதகளம் பண்ணியிருக்கிறார். சூப்பர். நந்திதாவின் அழகு கண்கள் கவிதை. விஷ்ணு விஷாலின் தோற்றமே, அவருக்கு பாதி வெற்றியைத் தேடித்தரும் மேடை.

உடல் மொழிக் காமெடி, வசனக் காமெடி, சூழ்நிலைக் காமெடி என்று ஒன்று விடாமல் பதம் பார்த்து வெற்றியும் கண்டிருக்கிறார் இயக்குனர் ராம்குமார். அவரது அடுத்த முயற்சி வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

1982ல், சத்தியமங்கலத்தில், ஹாலிவுட் ஸ்டூடியொ என்கிற அரத பழைய புகைப்பட நிலையம் நடத்தி வரும் கோபியும் ( விஷ்ணு விஷால் ) அவனது உதவியாளன் அழகுமணியும் (காளி வெங்கட் ) ஒரு பள்ளி மாணவர்களைப் புகைப்படமெடுக்கும் சந்தர்ப்பத்தில், கலைவாணியை (நந்திதா) சந்திக்கிறார்கள். கோபிக்கு வாணியின் மேல் கண்டதும் காதல். ஆனால் அவளது ஊரான முண்டாசுப்பட்டியில், அவளுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. முண்டாசுப்பட்டியில், ஒரு விண்கல்லை, வானமுனி என்கிற தெய்வமாக கும்பிட்டு வருகிறார்கள். கூடவே, புகைப்படம் எடுத்தால் மரணம் சம்பவிக்கும் என்கிற மூட நம்பிக்கையையும் அழுத்தமாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். விண்கல்லின் புராதனத் தன்மைக்காக, அதை திருட துடிக்கும் கோமளப்பட்டி ஜமீந்தார் ஏகாம்பரம் (ஆனந்த்ராஜ்) ஒரு புறம். ஒரு பிணத்தை புகைப்படமெடுக்க முண்டாசுப்பட்டிக்கு வரும் கோபி மறுபுறம். ஏகாம்பரத்திடமிருந்து, வானமுனியைக் காப்பாற்றி, கோபி எப்படி கலைவாணியின் கரம் பிடிக்கிறான் என்பது மொத்தக் கதை.

பழைய புல்லட் மோட்டார் சைக்கிள், நீளத் தலைமுடி, புராதன யஷிகா கேமரா என கோபி பாத்திரம் அருமையாக செதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முனிஸ்காந்த் ( ராம்தாஸ்) என்கிற நடிகர் பாத்திரத்தைத், தேவையில்லாமல் சேர்த்து, படத்தை இழுத்து அலுப்பாக்கியிருக்கிறார் ராம்குமார். அந்தப் பாத்திரம் இல்லாமல் ஒரு அரை மணி நேரம் குறைக்கப்பட்டிருந்தால், முண்டாசுப்பட்டி இன்னொரு “புதிய வார்ப்புகள்” ஆகியிருக்கும். கோட்டை விட்டு விட்டார். ஆனாலும், ராம்குமாரிடம் திறமை தெரிகிறது. அடுத்த படத்தில் அவசியத்தை மட்டும் சேர்த்து இயக்கி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

 

Series Navigationபிரெஞ்சு புரட்சியின் மறுபக்கம்வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11