மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

This entry is part 14 of 23 in the series 7 அக்டோபர் 2012

 

1. Domaine de Courson

 

நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  ‘எஸ்ஸோன்’ (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா ‘Domaine de Courson’ உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும், தாவரஇயல் விற்பன்னர்கள் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக தங்கள் கைத்தூரிகைக்கொண்டு  விதைத்து, நட்டு, பதியமிட்டு வளர்த்துத் தீட்டிய பாரீஸின் சஞ்சீவி பர்வதம் அது. வேட்டுவப் பெண்களையும், காட்டுமறவர்களையும் எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் பாரதிதாசன் வர்ணிக்கிற அத்தனை காட்சிகளுக்கும் உத்தரவாதம் சொல்லலாம். இயற்கையின் எல்லா கோலத்தையும் காணலாம். பர்வதத்திற்குப் பதிலாக, பதினெட்டாம் நூற்றாண்டைச்சேர்ந்த நன்கு பராமரிக்கப்பட்டுவருகிற கோட்டை. வெர்சாய் மாளிகை¨க்கும் அதனை ஒட்டிய பூங்காவிற்கும் நீங்கள் இரசிகரென்றால், நீங்கள் மகிழ்ச்சி அடையக்கூடும். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில் (19-21 தேதிகளில்) நடைபெறும் தாவரஇயற் கண்காட்சியில் ஐரோப்பாகண்டத்தைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த தோட்டக் கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.  இவ்வருடத்திய நிகழ்ச்சி நிரலில் எனது பிரத்தியேக கவனம் பெற்ற செய்தி ·பபியன் டுஷெ (Fabien Ducher) என்ற தோட்டக் கலைஞர் தாம் உருவாக்கிய மஞ்சளும் ஊதாவுமான புதிய ரோஜாமலரொன்றுக்கு பிரான்சு நாட்டின் மூத்த எழுத்தாளரும் பெண்ணியல்வாதியுமான பெனுவாத் க்ரூ (Benoச்te Groult) பெயரைச் சூட்டுகிறார்.

2. பெனுவாத் க்ரூ

 

இருபதாம் நூற்றாண்டிற்கென்று அடையாளப்படுத்தவேண்டிய பெண்ணியப் போராளிகளுள் ஒருவர். முகத்தில் எப்போதும் தயார்நிலையில் இருக்கும் புன்சிரிப்பு, அருவிபோல சலசலத்தபோதும் பேச்சில் தெளிவு, அளந்து தீர்மானமாக வெளிப்படும் சொற்கள், எதிராளியை சிநேக வட்டத்திற்குள் எளிதில் ஈர்க்கும் வசீகரம், பெண்ணியத்தின் அத்தனை கூறுகளையும், அதன் உள்ளீடுகளையும் அறைகூவலுடன் வெளிப்படுத்தும் மனோபாவம் கொண்ட பெண்மணி. ஏனைய பிரெஞ்சு பெண்ணியல்வாதிகளைப் போலவே இடதுசாரி. நாவல்கள், மற்றும் கட்டுரைகள் வடிவத்தில் உள்ள இவரது படைப்புகள் அனைத்துமே பெண்ணியம் சார்ந்தவை.

 

1920ம் ஆண்டு பாரீஸில் பிறந்தார். தந்தை ஒரு புகழ்பெற்ற அலங்காரக் கலைஞர், தாயார் நிக்கோல் புகழ்பெற்ற ஆடை அலங்கார கலைஞர் போல் புவாரெவினுடைய சகோதரி, ஒரு கம்பீரமானப் பெண்மணி. Picasso, Picabia, Jouhandeau, Paul Morand போன்ற ஓவியர்கள், படைப்பாளிகள் வந்துபோகிற இல்லம். தாயாரின் வழிகாட்டுதலில் இளமை முதற்கொண்டே இலக்கியங்களில் ஆர்வம். பிரெஞ்சு இலக்கியத்தில் முதுகலை படிப்பு, கூடுதலாக இலத்தீன், கிரேக்கம் ஆங்கில மொழிகளில் தேர்ச்சி. ஆரம்பக்காலங்களில் பிரெஞ்சு இலக்கிய பேராசிரியராகப் பணியாற்றியவர், பின்னர் இதழியலுக்கு வருகிறார். பெண்கள் தொடர்பான Elle, Marie-Claire, Parent போன்ற சஞ்சிகைகளிலும் பணிபுரிந்திருக்கிறார். 1984 – 1986ம் ஆண்டுகளில், முக்கிய பணிகளிலும், அதிகாரமட்டத்திலும் பெண்பால் பெயர்களை ஏற்படுத்தவென்று மொழியியல் அறிஞர்கள், எழுத்தாளர்கள் கொண்டு இயங்கிய அரசு ஆலோசனை சபையினைத் தலமையேற்று நடத்தியவர். திருமண அனுபவங்கள் ‘பெண்ணியம்’ குறித்து பெரிதும் பேசவும் எழுதவும் இவருக்கு உதவின. தனது சகோதரி புளோரா’வுடன் (Flora) இணைந்து முதல் நாவல் JOURNAL A QUATRE MAINS 1958ம் ஆண்டில் வெளிவந்தது. தொடர்ந்து சகோதரிகள் இருவரும் கூட்டாக இரண்டு நாவல்களை எழுதினார்கள். பிரெஞ்சு பெண்களின் அவலநிலையைப் பேசுகின்ற LA PART DES CHOSES, ‘AINSI SOIT ELLE என்ற இருகட்டுரைத் தொகுப்பும் மிகப்பெரிய வெற்றியை அளித்தன. LES TROIS QUARTS DU TEMPS, LES VAISSEAUX DU COEUR முக்கிய நாவல்கள்.

 

பெனுவாத் வாழ்க்கையும் எழுத்தும், இற்றை நாள்வரை பெண்ணினத்தினை முதன்மைப்படுத்துவதல்ல. ஆணுக்கு நிகரென்று பெண்ணைச் சொல்கிறார். எந்த ஜீவனையும்போலவே ‘அவள்’ முதலில் ‘தனக்கானவள்’ எனபதை வலியுறுத்கிறார்: கட்டுண்ட பெண்கள், சீரழிந்த பெண்கள், முதிர்ச்சியின் பலம் என ஓயாமல் எழுதுகிறார். தற்போது அதற்கான வயதில் (92) – முதுமையை விவாதத்திற்கு உட்படுத்துகிறார். இவரது ‘நட்சத்திர தீண்டல்’ நாவலில்  ‘மரணம் கண்ணியத்துடன் நிகழவேண்டும் என்றார். அறுபத்தைந்து வயதில் முதியவர்களாகப் பிறந்து எண்பத்தைந்து வயதுவரை முதுமையுடன் வளறுகிறோம், அதுமுதல் நட்சத்திர ஸ்பரிசத்திற்காக நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம், அத்தீண்டலுக்கான நாளை தேர்வு செய்வது நாமாகத்தான் இருக்கவேண்டுமென்பது இவரது வாதம். சிமோன் தெ பொவார் (Simone de Beauvoir) எழுத்தில் இருக்கக்கூடிய மெல்லிய நகையுணர்வு இவரது எழுத்திலும் ஊடாடுகிறது.

 

3.  பிலிப் ரோத்த்திற்கும் விக்கி பீடியாவிற்குமான யுத்தம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

கடந்த செப்டம்பர்மாதம் 7ம் தேதி நியுயார்க்கர் இதழில் விக்கிபீடியாவிற்கு பிலிப் ரோத் திறந்த மடலொன்றை எழுதவேண்டியிருந்தது. http://www.newyorker.com/online/blogs/books/2012/09/an-open-letter-to-wikipedia.html – விக்கிபீடியாவுடன் தனிப்பட்ட அளவில் தாம் எடுத்த முயற்சிகள் நிராகரிக்கப்பட்ட பிறகு வெளியுலகம் அறியவந்தால் தமக்கு வேண்டுகோளுக்கு நியாயம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் பேரில் விக்கிபீடியாவிற்கு எழுதிய பகிரங்க கடிதமது. தம்மைப்பற்றி என்னதான் விக்கிபீடியாவில் எழுதியிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒருநாள் நமது எழுத்தாளர் எட்டிபார்த்திருக்கிறார். பிறந்ததேதி, பெற்றோர்கள், பூர்வீகம், படிப்பு, பார்த்த உத்தியோகம், கைப்பிடித்த பெண்கள், எழுதிய நூல்கள், எழுத்தாளர் உருவாக்கிய பாத்திரங்களின் குலம் கோத்திரம்- முக்காலே மூணு வீசம் எல்லாம் சரி- என எழுந்திருக்கையில் ஏதோவொன்று கண்ணிற்பட்டிருக்கிறது, மனிதர் கொதித்துப்போய்விட்டார். எப்படி அபாண்டமாக தீர விசாரிக்காமல் அதை எழுதப்போயிற்று? என்ற கேள்வி. அவரைக் கோபமூட்டும் அளவிற்கு விக்கிபீடியாவில் வந்திருந்த தகவல் கொஞ்சம் சுவாரஸ்யமானது. அவரது ‘The human stain’ நாவல் பற்றிய தகவலது. “நாவலில் வரும் கதைநாயகன் பேராசிரியர் சில்க், உண்மையில் ‘அனத்தோல் ப்ரொயார்'(Anatole Broyard) என்றும், அவரது வாழ்க்கையை ஆதாரமாகக்கொண்டே நாவல் எழுதப்பட்டதென்றும்  விக்கிபீடியா தெரிவிக்கிறது. (தலவற்)களஞ்சியத்தில் நெல் மணிகளோடு, பதர்நெல்லும் கலந்திருக்க வாய்ப்புண்டென எழுத்தாளர் அறியாததது குற்றமல்ல; பதரை நெல்லென்று வாதித்த விக்கிபீடியாவின் பிடிவாதம் அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது. விக்கிபீடியாவை உடனே தொடர்புகொண்டிருக்கிறார். ‘நீங்கள் தெரிவித்துள்ள தகவல் அபத்தம், அதை உடனடியாக நீக்கவேண்டும் அல்லது திருத்தம் செய்யவேண்டும்’ என்றிருக்கிறார்.

 

விக்கிபீடியா தகவலுக்கு ரிஷிமூலம்: ‘The human Stain’ நூலை விமரிசனம் செய்த நியுயார்க் டைம்ஸ் இதழியலாளர், நாவலில் வரும் பேராசிரியர் சில்க் ஐயும், அக்கதையில் அவர் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளாத ‘ஆப்ரோ- அமெரிக்கர்’ என்ற உண்மையும் மறைந்த அமெரிக்க எழுத்தாளர் அனத்தோல்ப்ரொயார் என்பவரோடு தொடர்புடையன என்றொரு ஒரு முடிச்சைப் போட்டிருந்தார். இதன் அடிப்படையிலே விக்கிபீடியாவும் தகவலைச் சேர்த்திருக்கிறது. இத்தகவல் பொய்யானது என்ற ரோத் உடைய வாதத்தை விக்கிமீடியா நிர்வாகிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் கூறிய பதில் “உங்கள் தகவல் நம்பகமானதல்ல” பிலிப் ரோத் தமது திறந்த மடலில் பிரச்சினையை நமக்கு விரிவாகவே சொல்கிறார். எழுத்தாளர் அனத்தோல் ப்ரொய்யாரை இரண்டு மூன்றுதடவை சந்தித்ததை ஒப்புக்கொள்ளும் ரோத், நூலை எழுதியபோது தமது கதைநாயகன் சில்கிற்கும் எழுத்தாளர் அனத்தோலுக்கும் உள்ள ஒன்றிரண்டு ஒற்றுமைகளைத் தெரியாதென மறுக்கிறார்.

 

‘ரோத்’ஐ பொறுத்தவரை, சில்க் பாத்திரம் அவரது நெருங்கிய நண்பர் மெல்வின் டுமன் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்டது. சில்க்கைப்போலவே கல்லூரியில்  வகுப்புக்கு வராத இரு மாணவர்களை ‘Spooks’ (அவர்கள் கறுப்பரினத்தவர் என்ற உண்மை அறியாமலேயே) என்று சொல்லப்போக, நிறவெறியில் உதிர்த்த வார்த்தை என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாகி எதிர்ப்பு வலுக்க கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் மெல்வின் டுமனை பணி நீக்கம் செய்ததாகவும், நண்பர் நிறத்தில் வெள்ளைத்தோல் கொண்டவரென்றபோதும்  உண்மையில் ஒரு ஆப்ரோ- அமெரிக்கரென்றும், அவரதுவாழ்க்கை நெருக்கடிகளே நாவலில் சொல்லப்பட்டதென்கிறார், ரோத்.

 

நமக்கும் எழுத்தாளர் வாதத்தை ஏற்காத விக்கிபீடியாவின் பிடிவாதம் ஆச்சரியத்தை அளிக்கிறது. நான் இப்படித்தான் எழுதினேன் எனச் சொல்கிற எழுத்தாளரை நம்பாமல் ( பிள்ளைக்குத் தகப்பன் யாரென்று பெற்றவளையன்றி வேறொருவர் சொல்லமுடியுமாவென தெரியவில்லை) , ‘அவர் அப்படி எழுதியிருக்கலாம்’ என்கிற ஒரு விமரிசகரின் ஊகத்தை நம்பும் விக்கிபீடியாவின் தகவல்களை சந்தேகிக்கவேண்டியிருக்கிறது. The human Stain நாவல் பற்றிய பக்கத்தில் விக்கிபீடியா தற்போது எழுத்தாளர் மறுப்பையும் பதிவுசெய்திருக்கிறது.

 

———————————–

Series Navigationதிரைப்படம்: ஹாங்காங்கின் இரவுகள்ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *