மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020

This entry is part 21 of 22 in the series 19 ஏப்ரல் 2020

அண்மை நாட்களில்….

பொதுவாக  மார்ச் மாதம் முதல் மே இறுதிவரை வழக்கமாகவே கடினமான மாதங்கள். வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கவேண்டும். 60 பதுகளில் ஜமாபந்தி நாட்கள் நினைவுக்கு வந்துவிடும். அப்பா கிராம மணியமாக வேலை பார்த்தார், அம்மா வழி சகோதர ர்கள் கர்ணமாக வேலைபார்த்தார்கள். ஜமாபந்தி நாட்களில் நாங்கள் அவர்களுக்கு உதவேண்டும். விழி பிதுங்கிவிடும். சிட்டா, அடங்கலை கூட்டிக்  கூட்டிக் கண்கள் பூத்துவிடும், போதாதென்று ஜமாபாபந்தி நாட்களில் திண்டிவனம் தாலுக்கா ஆபிஸில் பழியாய் கிடக்கவேண்டும். அதனால் கிடைத்த ஆர்வம் கணக்கிலும் ஆர்வம்.  எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் தங்கள் பிரதான பணிபோக இங்கு தோட்டப்பராமரிப்பு, தேனிவளர்த்தல், தச்சு வேலை, எதையாவது பழுதுபார்த்தல் என செய்கிறார்கள். நான் பெரிதாக வெட்டி முறிப்பதில்லை. எனவே  கடந்த 30 ஆண்டுகளாக எனது நிறுவனக் கணக்குகளையும் நானே பார்க்கிறேன். பிரான்சுக்கு வந்த பின்பு DPECF படித்தேன். தவிர அது க்கவுண்டன்சிக்கானது. தவிர கடந்த இருபது வருடங்களாக இதற்கென உள்ள மென்பொருள்கள் பிரச்சனையை எளிதாக்கி உள்ளன. தெரிய வேண்டியதெல்லாம் வரவு செலவு கணக்கை,  1 முதல் 8 வரையிலான எண்களின் உட்பிரிவுகளின் கீழ் அந்தந்த journal ல் , debit aல்லது crédit பதிவு செய்யத் தெரிந்திருந்தல்.

வாசிப்பு

இந்நெருக்கடியிலும்சில நூல்களை வாசிக்க முடிந்த து.1சிரியாவின் தலை மறைவு நூலகம்  2. உயிர்த்தேன் 3. சாமத்தில் முனகும் கதவு 4. La Tresse ஒரு பிரெஞ்சு நாவல்

1. சிரியாவின் தலை மறைவு நூலகம்

 பிரெஞ்சு மொழி பெயர்ப்ப்பு, மொழி பெயர்த்திருப்பவர்  பேராசியர் எஸ் ஆர் கிருஷ்ணமூர்த்தி. ஏற்கனவே சில நூல்களைப் பிரெஞ்சிலிருந்து தமிழுக்குப் மொழிபெயர்த்து நன்கறியப்பட்டவர். பேராசியரும் மற்றொரு மொழிபெயர்ப்பாளருமான சு. வெங்கடசுப்பராய நாயக்கரின் கல்லூரி ஆசிரியரும் கூட. இந்நூல் காலச்சுவடு வெள்யீடு.

நூலாசிரியர் டெல்ஃபின் மினூய் (Delphine Minoui), மினூய் தந்தையின் பெயர், ஈரானியர். தாய் பிரெஞ்சு பெண்மணி. அரசு வானொலிகளில் பணியாற்றியவர், தற்பொழுது நன்கறியப்பட்ட பிரெஞ்சு பத்திரிரிகை குழுமத்தின் சிறப்பு செய்தியாளராக பணியாற்றுகிறார். தந்தை ஈரானியர் என்பதாலேயே என்னவோ தமது பத்திரிகையாளர் பணியை இஸ்லாமிய நாடுகள் சார்ந்து எனத் தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே  ஈரான் ஈராக், ஏமன் ஆகிய நாடுகளை மையமாக கொண்டு எழுதியிருக்கிறார். இந்நூல் துருக்கியில்  பிரெஞ்சு இதழொன்றின் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் அண்டை நாடான சிரியா உள்நாட்டு யுத்தத்தால் சின்னாபின்னபட்டுக்கொண்டிருந்த நிலமையைப் பேசுகிறது.  தலைக்குமேலே யுத்த விமான ங்கள் தாக்குதலை நடத்த சகோதர யுத்த்திற்கிடையிலும் வாசிப்புக்குமனிதர்களின் தலைவிதியை நூல் பகிர்ந்து கொள்கிறது.  

அரபு வசந்தம் :

அண்மைக்காலங்களில் இலங்கையை அடுத்து உள்நாட்டுப் போரால் அதிகம் பாதிக்கப்பட்டநாடு சிரியா.  பொதுவாக அரபு நாடுகளில் நாடு என்பது ஆள்பவரின் உடமை. சுதந்திரம் என்பது அவரவர் வீட்டு எல்லையைப் பொறுத்தது.அது  பொதுவெளி உபயோகத்துக்கு அல்ல.  அண்மையில் சவுதி அரேபிய நாட்டைச் சேர்ந்த Al-arab News ல் பணியாற்றிய பத்திரிகையாளர் ஜமால் ஹஷோஹி (Jamal Khashoggi) துருக்கியில் சவுதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொலைசெய்யப்பட்டது உலகறிந்த செய்தி. செய்த குற்றம்  சௌதி அரசை  அவர் விமர்சனம் செய்தது.  சுதந்திர ம் குறித்து வாய்கிழிய பேசும் அமெரிக்காவோ பிற மேற்கு நாடுகளோ உத்தியோகபூர்வமாக சவுதி அரேபியாவை இதுநாள்வரை கண்டித்த தில்லை.

அரபு நாடுகளுக்கே உரிய இத்தகைய நெருக்கடியில் பிரான்சு நாட்டின் முன்னாள் காலனி நாடான துனீஸிய மக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை வற்புறுத்தி  வீதியில் இறங்கினாகள். 2010ல் தொடங்கிய இப்போராட்டம்  « அரபு வசந்தம் » என்ற பெயரில் மளமளவென பிற அரபுநாடுகளிளும் பரவிற்று. அடிப்படைத் தேவைகளுக்காக தொடங்கிய போராட்டம் முடியாட்சி, சர்வாதிகாரம் ஆகியவமற்றிற்கு எதிரானதாக பின்பு திசை மாறியது. இக்கட்டத்தில் போராட்டக்காரர்கள்  மேற்கத்திய நாடுகளின் கைக்கூலிகளென  சித்தரிக்கப்பட்டனர். இவ்விமர்சனத்தில் ஒரளவு நியாயமும் இருந்தது. எதிர்பார்த்ததுபோல அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்த்த அரபுநாடுகள் இத்தகைய போராட்டத்தை எதிர்கொள்ளவில்லை. அரபு வசந்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிரியாவும் ஒன்று.அதிகாரத்திற்கு எதிராக மக்கள் ஆயுதம் ஏந்தினர். அவர்களை மேற்கு நாடுகள் மறைமுகமாக ஆதரித்தன. இச்சம்பவத்தைப் பயன் படுத்தி இசுலாமிய தீவிரவாதம் கலிபா அரசாங்கம் அமைக்கும் கனவுடன் உள்ளே நுழைய வழக்கம்போல அப்பாவி மக்கள் உயிச் சேதத்தையும், உயிர் வாழ்க்கை சேத த்தையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. சிரிய மக்களின் விதியில் விளையாடியவர்கள் நால்வர். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற  அரபு வசந்த போராளிகள், ரஷ்யாவின் ஆதரவுபெற்ற சிரியா முடியாட்சி, இஸ்லாமிய தீவிரவாதிகள், இச்சம்பவத்தைப் பயன்படுத்தி  தங்கள் நிரந்தர எதிரிகளான குர்தின மக்களை அழிக்க முனைந்த துருக்கி அரசு.

சிரியாவின் தலைமறைவு நூலகம் 

பல மேற்கத்திய பத்திரிகையாளர்கள், யுத்தமுனைகளிலிருந்து செய்திகளை அனுப்புவதை அறிந்திருக்கிறேன், ஆஃப் கான் யுத்தம், தலிபான்கள், இசுமாமிய தீவிரவாதிகள் இவர்களையெல்லாம் நேரில்  சென்று, கண்டு  பணயக் கைதிகளாக பிடிபடக்கூடும்  என்ற அச்சம் எதுவுமின்றி தகவல்களைக் கட்டுரைகளாக தருவது வழக்கம். இந்நூலாசிரியர் இஸ்தான் புல்லில் பணியாற்றியபொழுது தமக்குச் சிரியாவிலிருந்து சமூக ஊடகமொன்றின் உதவியால் கிடைத்த புகைப்படைத்தைக் கொண்டு நூலைத் தொடங்குகிறார்.  புகைப்படத்தை  அனுப்பிய அஹமத்  என்வருடன் தொடர்புகொண்டு நூலாசிரியர் அவர் தரும் தகவல்களைக்கொண்டு இஸ்டான்புல்லில் இருந்தபடி  நூலின் பக்கங்களை நிரப்புகிறார். இடிபாடுகளுக்கிடையில் கிடைத்த புத்தகங்களைக் கொண்டு நூலகத்தை அஹமத் தம் நண்பர்களின் துனையுடன் ரகசியமாக உருவாக்குகிறார். அவர்களின் முயற்சிக்கு« வயிற்றுப்பசியை விரட்ட இலை தழைகளிலான சூப் ! அறிவுப்பசியை விரட்ட தொடர்வாசிப்புகள் ! » எனக் காரணத்தை முன் வைக்கிறார் ஆசிரியர். சிரியா தலைமறைவு  நூலகம் ஊடாக டமாஸ்கஸ் அருகிலிருந்த  தராயா நகரின் போராளிகள், நகர்மீதான அரசுப்படைகளின் தாக்குதல்கள், அப்பாவி மக்களின் அவல வாழ்க்கை என விரியும் நூல் இறுதியில் நகரம் அரசுப் படைகளின் கைவசம் போக முற்றுப்பெறுகிறது. துனிசீயாவில் தொடங்கிய அரபு வசந்தம் அரபு நாடுகளைபொறுத்தவரை கானல் நீர் என்பதை நூல் உறுதி செய்கிறது. து சிரியா உள்நாட்டு யுத்த த்தை செய்திகளாவும் புகைப்படங்கள் உட்டாகவும் அறிந்திருப்போம். நூல் நேரடி விவரணையைத் தருகிறது. கறிப்பாக அஹமது, ஷாதி,ஹூஸ்ஸும் ஓமர் மறக்க முடியாத மனிதர்கள்.

பிற நூல்கள் குறித்து அடுத்து வரும் கட்டுரையில்….

——————————————————————————————

Series Navigationஜீவ அம்சம்பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *