மோகம்

கு.அழகர்சாமி

கண்ணாடிப் பேழைக்குள்
உறங்குவது போலும் உடலுக்குள்
உயிர் செலுத்துவது போல்
அழுது கொண்டிருக்கும்
அவளைக் கண்டதும்
கைகளைச் சேர்த்தழுத்தியது தான்.

எங்கே
இழுத்துப் போகிறாள் என்னை?
எந்தக் கடலுக்குள்?
எந்த ஆழத்துக்குள்?

கனவு மீளாது
போய்க் கொண்டே இருக்கிறேனா?

காலம் நழுவியதில்
காணாமல் போய்க் கொண்டே இருக்கிறேனா?

என்னுள் பெருகும் வெள்ளத்தில்
நெக்குருகிக் கரைகின்றேனா?

ஒரு
பிணத்தைத் தூக்கிக் கொண்டு
கரையேறுகிறாளே அவள்
இன்னொரு காலத்தில்?

அவள்
மருவலில்
என்
மரணமா?

கண்ணாடிப் பேழைக்குள்
எவர் மோகம்
பிணமாய்க் கிடக்கும்?

Series Navigationதோனி – நாட் அவுட்பஞ்சதந்திரம் தொடர் 30- முட்டாள் நண்பன்