ரம்யம்/உன்மத்தம்

ரம்யம்

வசந்தகாலத்தின்
முதல் பழங்களை
அணில் ருசிக்கும்
பறவைகளின் சப்தம்
சன்னமான இசை
மேகங்களற்ற வானம்
மலை உச்சியிலிருந்து
கீழே விழுந்தான்
பாறையில் மோதிய கணத்தில்
சிறகு முளைத்தது
அந்தி வானத்தில்
கூடு திரும்பும்
பறவைக் கூட்டம்
பருந்தின் நிழல் கண்டு
அஞ்சும் புறாக்கள்
லேசான தூறல்
ரம்யமான மாலை
கிழக்கு வானத்தில் வானவில்
அலைகள் சொன்ன கதைகளை
கரை யாரிடம் சொல்லும்
குளம் எப்படி
நிலாவை
சிறை பிடித்தது
தோட்டத்து மலர்களில்
அவள் கூந்தலை
அலங்கரிக்கப் போவது எது
கடல் காற்று
கரை மோதும் அலைகள்
நீர்க்குமிழிகள் உடைகின்றன
என் மனம் போல
அவரவர் உலகத்தில்
அவரவர் பத்திரமாய்.

உன்மத்தம்

கதவைத் திறந்தேன்
முன்பனி முகத்தில்
அறைந்தது
உறக்கம் தழுவும் தருணம்
யாருக்கு இங்கே தெரியும்
கதவைத் திறந்தே வைத்திருங்கள்
எந்த உருவத்திலும்
இறைவன் வரலாம்
சில சமயம்
பார்க்க நேர்ந்துவிடுகிறது
அம்மாவின் முகத்தை
பொட்டில்லாமல்
இன்று ஒரே நிறத்தில்
உடையணிந்து வந்திருக்கிறோம்
எதேச்சையாக நேர்வது தான்
என்றாலும்
மனதில் வண்ணத்துப்பூச்சி
சிறகடிக்கிறது
விழுந்த மரத்தில் இருந்தது
வெறுமையான குருவிக் கூடு
வழிதவறிய யானைக் கூட்டம்
வாழைத் தோட்டத்தை
துவம்சம் செய்தது
கார்காலத்தில்
மனதில் ஏனோ ஈரப்பதம்
வாழ்க்கைக் குறிப்பேட்டில்
உங்களுடைய வாசகத்தை
நீங்கள் தான் எழுத வேண்டும்.

ப.மதியழகன்

Series Navigationகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 5அன்று கண்ட பொங்கல்