ராஜ்கிருஷ்ணாவின் ‘ ஒரு நடிகையின் வாக்குமூலம் ‘

டர்ட்டி பிக்சர் வித்யா பாலன் அளவிற்கு பெயர் வாங்கித் தருமா என்று தெரியாது, ஆனால் சோனியா அகர்வாலுக்கு இது செகண்ட் இன்னிங்ஸைத் துவக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு நடிகையின் டைரியைக் கொண்டு கதையை நகர்த்தும்போது, கொஞ்சம் ஷகிலாத் தனமான காட்சிகள் வைத்தால் கூட தவறில்லைதான். ஆனால் அதைக்கூட காட்டாத இயக்குனரின் கண்ணியத்தைப் பாராட்ட வேண்டும். இந்தப் படத்துக்கு திரை உலகத் திலிருந்து ஏகத்துக்கு கண்டனம் வரலாம். வி. சேகரின் ‘ நீங்களும் ஹீரோதான் ‘ படத்துக்கு அப்படித்தான் வந்தது. ஆனால் அதுவே ஒரு விளம்பரமாக ஆகி, அதற்கப்புறம் குடும்பக் கதைகள் இயக்குனர் என்கிற பெயர் வாங்கித் தந்தது. கே எஸ் ரவிக்குமாரும் ‘ புரியாத புதிர் ‘ எடுத்த போது, சேடிஸ்ட் கணவன் கதையைத் தான் எடுத்தார். இப்போது இரு உச்சங்களை இயக்கும் மசாலா இயக்குனர். ராஜ்கிருஷ்ணா அடுத்த படத்தைக் கவனமாக தேர்ந்தெடுத்து நிருபித்தால், அவரும் ஆகலாம் வெற்றி இயக்குனராக.
உச்சத்திலிருக்கும்போதே காணாமல் போகும் நடிகை அஞ்சலியை, டி ஆர் பி ரேட்டிங்கிற்காக தேடும் ரீட்டா ( புன்னகைபூ கீதா ), ஒரு மடத்தில் அவரைக் கண்டு பிடிப்பதும், அவரது டைரியைப் படிக்கும்போதே, காட்சிகள் விரிவதும், பழைய உத்திதான். அதிலும் கீதாவைத் தனியாக எடுத்து, பேக்கிரவுண்டில் காடு, கோயில், சோலை என்று காட்டுவது ரசிகர்களை இன்னமும் எம் ஜி ஆர் காலத்து ரேக்ளா ரேஸ் பார்ப்பவர்கள் என்று இயக்குனர் எடை போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. எது ரியல் எது கிராபிக்ஸ் என்று கண்டுணரும் அளவிற்கு ரசிகன் தேறி விட்டான் என்று ராஜ்-கீதாவுக்கு புரியாதது அஞ்சாங்கிளாஸ்தனம்.
கொஞ்சம் சில்க், கொஞ்சம் பாரதிராஜா, கொஞ்சம் நடிகர்கள் என்று ஒற்றி எடுத்து ஒரு கதை பண்ணிவிட்டார்கள். இதில் டான்ஸ் மாஸ்டர்களையும், இசையமைப்பாளர் களையும் விட்டு விட்டது கொஞ்சம் ஆறுதல்.
சோனியாவின் சோக முகம் பெரிய ப்ளஸ் என்றாலும், திருமண முறிவுக்குப் பின் அவர் அழகாகவே இருக்கிறார். சமயத்தில் திரிஷா போலக் கூட இருக்கிறார். ஆனாலும் கிராமத்துப் பெண் வட இந்தியப் பெண் போலப் பேசுவதுதான் சகிக்கவில்லை. சோனியாவின் தாயாக வரும் ஊர்மிளா கனமான உடம்பிலும் பாத்திரத்திலும் பிச்சு உதறுகிறார். அதேபோல தந்தையாக வரும் தேவராஜ், மாமனாக வரும் சுக்ரன் சொல்லிக் கொள்ளும்படி நடித்திருக்கிறார்கள். மனோபாலா, கோவை சரளா காமெடிக்கு. சோடை போகவில்லை. அதிலயும் சரளா ‘ ·ப்ளோவ்ல வந்திருச்சு ·ப்ளோருக்கு கொணாந்தா எப்படி? ‘ என்று கலகலக்க வைக்க வைக்கிறார். கோர்த்து விடும் பாத்திரத்தில் ஜோதிலட்சுமி, க்ளிக் ஆனது அதிசயமில்லை.
சோனியா துணிந்து விட்டார் என்பதை அவரது உடைகள் காட்டுகின்றன. புதுமுக இசையமைப்பாளர் ஆதிஷ் வெரைட்டி தர முயன்று ஓரளவிற்கு வெற்றியும் பெற்றிருக் கிறார். வசனங்கள் ஆங்காங்கே நிமிர்ந்து உட்கார வைக்கின்றன.
பார்த்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. ஆனால் பார்த்தால் தப்பில்லை என்றுதான் தோன்றுகிறது.
0
கொசுறு
விருகம்பாக்கம் தேவி கருமாரியில் ஏசியில் எட்டு பத்து பேர் பார்த்திருப்பார்கள். சோனியா ரோஜா இதழ்கள் நிரம்பிய தொட்டியில் குளிப்பது போல போஸ்டர் ஒட்டியிருந்ததால் பாதிபேர் வேறு ஏதோ எதிர்பார்த்து வந்திருப்பார்கள் என்று நம்பு கிறேன். வந்தவங்க மெரினாவுக்கு போயிட்டாங்க என்றார் பக்கத்து சீட்காரர்.
டிக்கெட் கிழிப்பவரிடம் ஏன் டோனி போடல என்றேன். படம் நல்லால்லீங்களாம் என்றார். எதையும் நல்ல படம் என்று ஒத்துக்கொள்ளாத என் மகள் டோனி படம் பார்த்துவிட்டு நல்லாருக்கு என்கிறாள். அடுத்த வாரம் பார்க்க வேண்டும்.
0

Series Navigationபாத்தென்றல் முருகடியான் இயற்றிய திண்ணப்பர் பிள்ளைத் தமிழ் நூல் வெளியீடுவிஜய் நந்தாவின் ‘ விளையாட வா ‘