ராணி., பெண்ணாதிக்கம் இரு கவிதைகள்.

ராணி..
**************************

சேணம் பிடித்து
பாயும் குதிரையின்
பிடறி சிலிர்க்க
தோல் பட்டியில்
கால் மாட்டி
எவ்வுகிறேன்..,
முன்பின்னாக ஆடும்
மரபொம்மைக் குதிரையில்
கூட இல்லை..

திருவிழா .,
தேரோட்டம்.,
புரவி எடுப்பு..
அணிவகுப்பு முடித்து
அமைதியாய் உறைந்து
அசைவு மறந்த
ஐயனார் கோயில்
மண் குதிரையில்
ஆசையோடு அமர்ந்து..

********************************************

பெண்ணாதிக்கம்..
*****************************

கருவறைக்குள்
முடங்கிக் கிடந்த
கோபமோ என்னவோ.,
கர்ப்பக்கிரகத்துள்
அடக்கிப் போட்டாய்..
சில நூற்றாண்டுகளுக்கு முன்
நிலவறையிலும்..

தீட்டென்றும்
கற்பென்றும்
கண் அறியா
வேலியிட்டாய்..
தப்புவித்துக் கொண்டே
இருக்கிறேன்
வேலிகளுக்குள்
சிக்கித் தவிக்கும்
உன்னையும்..

கண்நிறைந்த அழகோடு
கைநிறைய சம்பாதிக்கிறேன்..
எனக்குமுண்டு
தனித்த சிந்தனைகளும்
விழைவுகளும் இச்சைகளும்..
கர்ப்பப்பையும் நான்தான்
சுமக்கிறேன்
உன்னிடம் ஒப்புவிக்காமல்..

இரட்டைக் குதிரை
சவாரி செய்தும்
சேவை செய்கிறேன்..
அதில் பாதி நீ
செய்யுமுன்னே
பெண்ணாதிக்கம்
என்கிறாயே..

Series Navigationபூமராங்“தமிழ்ச் சிறுகதையின் தந்தை “