ராமராஜ்ஜியம் எனும் மாயை

 

 

ஜோதிர்லதா கிரிஜா

     ராம ராஜ்ஜியம் என்பது ஒரு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் நியாயம் வழங்கும் ஒரு நேர்மையான அரசனின் நல்லாட்சி என்று புகழப்பட்டு வருகிறது. ராமர் மகாவிஷ்ணுவின் ஏழாம் அவதாரம் என்று நம்பப்படுகிறது. கடவுள் மனிதனாக இறங்கும் போது, மனிதனுக்குரிய நிறை-குறைகளுடனேயே நடந்துகொள்ளுவதாகவும் கூறப்படுகிறது. இந்துக்கள் கூறி வரும் பத்து அவதாரங்களும் பூமியின் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றன. முதல் அவதாரம் மத்ஸ்யாவதாரம். (மீன் – நீரில் வாழ்வது) இரண்டாம் அவதாரம் கூர்மாவதாரம் (ஆமை – நீர் நிலம் இரண்டிலும் வாழ்வது.)  மூன்றாம் அவதாரம், வராஹாவதாரம் (பன்றி), நான்காம் அவதாரம் நரசிம்மாவதாரம் (சிங்கமுக மனிதன்), ஐந்தாம் அவதாரம் வாமனாவதாரம் (குள்ள மனிதன்), ஆறாம் அவதாரம் பரசுராமாவதாரம் (கோபக்கார மனிதன்), ஏழாம் அவதாரம் ராமாவதாரம் (முழுமையான மனிதன்), எட்டாம் அவதாரம் கிருஷ்ணாவதாரம் (தெய்விக அரசாளன்) ஒன்பதாம் அவதாரம் பலராமாவதாரம் (கலப்பையை ஏந்தும் கிருஷ்ணனின் அண்ணன் – மல்லன்), பத்தாம் அவதாரம் கல்கி அவதாரம். இப்போதைய கலியுகம் முடிந்ததன் பிறகு வரப் போவதாய்ச் சொல்லப்படும் அவதாரம். இவர் வெள்ளைக் குதிரை மீது வாள் ஏந்தியபடி வருவாராம். அராஜகம் செய்து உலகத்தை நாசப்படுத்திவரும் நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து அதைக் காப்ப்பதற்காக வரப்போகும் அவதாரமாம்.

      கடவுள் மனிதனாய் அவதரிக்கும் போது மனிதனுக்குரிய குறை-நிறைகளுடன் நடப்பான் என்று சொல்லப்படுகிறதல்லவா?  ராமாவதாரத்தை எடுத்துக்கொள்ளுவோம். ராமர் முழுமையான மனிதன் என்று கூறப்படுகிறது. ராமர் எத்தனையோ நற்குணங்களின் உறைவிடமாய்ச் சித்திரிக்கப்பட்டாலும், அவரிடம்  காணப்பட்ட இரண்டு பெருங்குற்றங்கள் மன்னிக்கப்படக் கூடியவையல்ல.

      மரத்தின் மறைவில் நின்றுகொண்டு அம்பெய்தி வாலியை ராமர் கொன்றது மன்னிக்கக்கூடியதன்று என்று ராமாயணத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய ராஜாஜியே வெளிப்படையாய்க் கூறியுள்ளார். ராமரின் இந்தச் செயல் எதைக் காட்டுகிறது? மனிதன் தன் குறிக்கோளை அடைய நியாயமற்ற எந்த எல்லைக்கும் போகக் கூடியவன் என்பதைத் தானே? அப்படித்தானே இம்மண்ணின் மக்கள் இருந்து வருகிறார்கள்?

      அடுத்து, ராம ராஜ்ஜியம் என்று புகழப்படுவதற்கான நிகழ்ச்சிக்கு வருவோம். மனைவி என்றும் பாராமல் சூலுற்றிருந்த சீதையை ராமர் காட்டுக்கு அனுப்பியதையே இதற்கான அடிப்படையாக ராமபக்தர்கள் கூறிவருகின்றனர். ராமர் சீதையைக் காட்டில் விட்டுவரச் செய்தது நியாயமான செயல்தானா என்பதைப் பார்ப்போம்.

      சீதையை ராவணன் கவர்ந்து சென்று இலங்கையின் அசோகவனத்தில் சிறை வைத்தது நமக்குத் தெரியும். அவண் சீதையை வலுக்கட்டாய நுகர்வுக்கு உட்படுத்தாததை – அதற்கான காரணத்தை அறியாதவர்கள் – இன்றளவும் புகழ்ந்து வருகிறார்கள். ராவணன் ஒரு பெண் பித்தன். அவன் ஒரு முறை தன் மகள் முறையில் இருந்த ஒரு பெண்ணை – தம்பியின் மருமகளை – வன்கொடுமை செய்ய முற்பட்டபோது தான் அவனுக்கு மகள் போன்றவள் என்பதை அவனுக்கு நினைவூட்டி அவனது தகாத செயலை அவள் தடுக்க முயல்கிறாள்.  ஆனால் பித்தன் ராவணன் அதை கேட்பதாயில்லை. ‘நீ என் தம்பிக்குத்தான் மகளைப் போன்றவள்… எனக்கு இல்லை’ என்று வாதிடுகிறான். இதனால் பெருஞ்சினமுற்ற அவள், ‘எந்தப் பெண்ணையும் அவள் விருப்பத்துக்கு எதிராக நீ தொட்டுக் கட்டாயப்படுத்தினால், அந்தக் கணமே உன் தலை சுக்கு நூறாய் வெடித்துச் சிதறும்’ என்று சாபமிடுகிறாள். பதிவிரதைகள் சாபமிட்டால் அது பலிக்கும் எனும் நம்பிக்கை நிலவிய காலம் அது. எனவேதான் பயந்து போன ராவணன் சீதையைச் சிறை வைத்தபிறகு அவளைக் கட்டாய நுகர்வுக்கு ஆளாக்காமல் இருந்ததோடு, தினமும் சிறைக்கு வந்து அவளெதிரே நின்று, அவளையே தன் பட்டத்து ராணியாக்குவது, எல்லா அணிகலன்களையும் அவளுக்கே அளிப்பது போன்ற ஆசை வார்த்தைகளால் அவளை வழிக்குக் கொண்டு வர முயல்கிறான்.

      சீதை எதற்கும் மசிவதாக இல்லை. இதனிடையே ராமர் இலங்கை மீது படை எடுத்து ராவணனை வென்று சீதையை மீட்டு அழைத்துச் சென்றார் என்பது நமக்குத் தெரியும். சீதையை முடிவாக ஏற்பதற்கு முன்னால், அவர் லட்சுமணன் மூலம் நெருப்பூட்டி அதில் சீதையைப் பிரவேசிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபித்தார். இது மட்டுமின்றி, அன்றொரு நாள் மாய மானைத் துரத்திச் சென்று கொன்ற ராமரின் குரலில் மாய மானாகிய ராவணனின் மாமன் மாரீசன் சாகும் முன், “லட்சுமணா! சீதே!’ என்று கூவியதைக் கண்டுகொண்டதால், உடனே சென்று ராமனைக் காப்பாற்றுமாறு சீதை விடுத்த வேண்டுகோளை ஏற்காத லட்சுமணனின் அசையாமைக்குத் துர்நோக்கம் கற்பித்து ஒரு பாவமும் அறியாத அவனைச் சந்கேகித்து நோகச் செய்ததற்காக ராமர் சீதைக்கு அளித்த தண்டனை அது எனவே கொள்ள வேண்டும்.

      சீதை தூய்மையானவள்  என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தவே அந்தத் தீக்குளியல் என்று ராமர் பின்னர் சமாதானம் சொன்னதும் நமக்குத் தெரியும். ஆனால் இதே ராமர் பின்னாளில் செய்தது சரிதானா என்பதே இப்போது கேள்வி.

      அந்நியனின் சிறையில் பல நாள் இருந்த சீதையை ராமர் திரும்ப ஏற்றுக்கொண்டது கேவலமான செயல் என்று சிலர் பேசுவதாய் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்டு, ராமர் சீதையைத் துறந்து காட்டுக்கு அனுப்பினார். யாருக்கும் தன் ஆட்சியின்பால் மனக்குறை இருக்கக் கூடாது என்று ராமர் நினைத்து நியாயமாய்ச் செயல்பட்டதாய்ப் பலரும் புகழ்வதும், ராம ராஜ்ஜியம் என்பதன் மெய்ப்பாடாக இந்த நிகழ்ச்சியைக் கொண்டாடுவதும் அசட்டுத்தனமல்லவா?

      சீதையின் தூய்மையை மெய்ப்பிப்பற்காகவே அவளை அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னதாய் அன்று விளக்கம் அளித்த ராமர் பின்னர் இவ்வாறு செய்ததில் என்ன நேர்மை இருக்கிறதாம்? தமது ஆட்சியை யாருமே குறை சொல்லக் கூடாதென்று நினைத்தவராயின், அவரது இந்த அடாத செயலிலும் குற்றம் கண்டவர்கள் நிறைய எண்ணிக்கையில் இருந்திருப்பார்கள்தானே? ராமர் அவர்களைத் திருப்தி செய்ய வேண்டியதில்லையாமா?

ராமரின் செயல் என்ன காட்டுகிறது? இன்ன பிற எத்தனை நற்குணங்கள் இருந்தாலும் ஒரு மனிதன் தன் மனைவியை உணர்வுகள் அற்ற சொத்தாகவே எண்ணி அவளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கருதுகிறான் என்பதைத் தானே இந்த அவரது அடாத செயல் காட்டுகிறது?

ராஜாஜி வாலிவதத்தை மட்டுமல்லாது, ராமரின் இந்தச் செயலையும் துளியும் அங்கீகரிக்கவில்லை. சீதையின் துயரம் இன்னும் முடியவில்லை என்றும், அது நம் பெண்களின் வாழ்க்கையில் இன்னமும் தொடர்கிறது என்றும் தாம் எழுதிய ராமாயணத்தின் முடிவுரையில் அவர் கூறுகிறார்.

எனவே ராம ராஜ்ஜியம் எனும் மாயையிலிருந்து நாம் விடுபடுவோமாக!

…….

Series Navigationதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]எமிலி டிக்கின்ஸன் கவிதை – 26