லிங்குசாமியின் ‘ வேட்டை ‘

தரணியின் ‘ ஒஸ்தி ‘ க்கு எந்த விதத்திலும் குறைந்ததில்லை இந்தப் படம். என்ன.. மாதவன் இருப்பதால், படம் கொஞ்சம் பிழைத்துக் கொள்கிறது. மாதவன் திரை உலகை விட்டு விலக நேர்ந்தால், அனுபம் கேர் மாதிரி, யதார்த்த நடிப்பிற்கு ஒரு பள்ளி ஆரம்பிக்கலாம். நிறைய மாணவர்கள் கிடைப்பார்கள் இப்போதிருக்கும் நடிகர்களிடையே..
இனிமேல் பாக்ஸ் ஆபிஸில், பட்டையைக் கிளப்ப, படம் எடுக்க விரும்பும் தோற்ற இயக்குனர்கள், ஆங்கில டிவிடி படங்களைப் பார்க்க வேண்டாம். லிங்குசாமியிடம் போனால் போதும். அவரே சிவாஜி, எம்ஜிஆரிலிருந்து ஆரம்பித்து, கமல், ரஜினி வரை, வந்த படங்களின் சிறந்த காட்சிகளைக், கோர்த்துக் கொடுத்து விடுவார். பாடல்களை மட்டும் புதிதாகப் போட்டு எடுத்து விடவேண்டியதுதான். மற்றதெல்லாம் சுட்ட பழம் தான். இடையிடையே விசு, வெங்கட் நாடகங்களைப் போல காட்சிக்கு தகுந்தாற் போல டிஎம்எஸ், பி சுசீலா, எல் ஆர் ஈஸ்வரி பாடல்களை பின்னணியில் போட்டுக் கொள்ள வேண்டும். பாக்ஸ் ஆபீஸ் காக்டெய்ல் ரெடி.
திருமூர்த்தி, குருமூர்த்தி அண்ணன் தம்பிகள். அண்ணன் பயந்தாங்கொள்ளி. தம்பி அசகாய சூரன். அடிதடி எக்ஸ்பெர்ட். அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர். தம்பி ஊர் சுற்றி. தூத்துக்குடியில் போஸ்டிங் வாங்கும் அண்ணனுக்கு டூப்பாக வில்லன்களை ஒழித்துக் கட்டுகிறான் தம்பி. இருவரும் அக்கா தங்கையைக் கலியாணம் செய்து கொண்டு சுபம்.
கைட் ரன்னரில் இருந்து காத்தாடி சீன். படம் அப்படித்தான் ஆரம்பிக்கிறது. அப்புறம் ஒரே ஒற்றல் தான். குடியிருந்த கோயில், எங்க வீட்டுப் பிள்ளை பாணி திரைக்கதை. தூத்துக்குடி, தாதா என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அடியாட்களே அழகாக இருக் கிறார்கள். இந்தி வில்லனை அண்ணாச்சியாகப் போட்டு தூத்துக்குடி தமிழில் டப்பிங். திருந்தவே மாட்டீங்களா? ரெண்டு ஹீரோ, அவர்களுக்கு ஒரு ஓபனிங் சாங். ரெண்டு ஹீரோயின். அவர்களுக்கும் ஒரு ஓபனிங் சாங்.
வட நாட்டு நடிகைகளும் கேரள நடிகைகளும் வெயிலில் நடிக்க பயப்படுகிறார்கள். அதனால் அவுட்டோர் பாடல் காட்சிகளில் அங்கங்கள், முகங்களிலெல்லாம் ஒன்றரை இன்ச் சன் ஸ்கிரீன் கிரீம். வெயிலில், வெள்ளைப் பேய்கள் ஆட்டம். கப்பல் துறைக்கும், இம்மாதிரி படங்களுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. நாயகிகள் வரும் காட்சிகளில் எல்லாம் ஒரே நேவல் தரிசனம். அரை இன்ச் இறங்கினால், அந்தரங்கம் அம்பேல். ரஜினி, குஷ்பு படத்திலிருந்து பாத்ரூம் சீன், தளபதியிலிருந்து ஆஸ்பத்திரி சீன், ‘ நீ இருப்பே.. நான் இருப்பேனா? ‘ என்று நாகேஷ் பன்ச், விஜய் பாதிப்பில் ரெயின் கோட் சண்டை, எல்லா ரசிகர்களையும் கவர அஜீத், ஜீவா படங்களின் காட்சிகள், பாடல் காட்சிகளில் ஷங்கரின் அடியை ஒற்றி பெரிய மூக்கு டான்ஸர்கள். ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களுக்கு என்ன பண்ணுவார் லிங்கு என்று கவலைப்பட்டதில் எனக்கு டெங்குவே வந்து விட்டது.
இரண்டு பேரைப் பற்றி சொல்லியாக வேண்டும். ஒருவர் மாதவன். இந்தியிலும் ஏன் வரவேற்பு என்று இப்போது புரிகிறது. மனிதர் அலட்டிக் கொள்ளவே இல்லை. கொஞ்சம் அந்தண உச்சரிப்பு என்றாலும், பளிச் என்று தெரிகிறார்.
இன்னொருவர் நாசர். சொற்ப காட்சிகளிலே வந்தாலும், ‘பொய் சொல்லப் போறோம்’ படத்திற்கு பிறகு அண்டர் ப்ளே காமெடி பண்ணியிருக்கிறார். தம்பி ராமையா மைனாவைப் போலவே கான்ஸ்டேபிள், ஜீப் டிரைவர் என்று நடித்து, அதே மாதிரி முழித்துக் கொண்டிருந்தால், காணாமல் போய்விடுவார். சமீரா ரெட்டி சரியாக வாயசைக்கிறேன் பேர்வழி என்று ஏகத்துக்கு பொளக்கிறார் வாயை. வாரணம் ஆயிரம் நினைப்பில் போனால், அப்புறம் சூரணம் தேவைப்படும். அமலா பால் அசப்பில், வெண்ணிற ஆடை ஜெ போல் இருக்கிறார். ஆனால் ஒரே நடிகையைக் கதாநாயகி ஆகப் போட்டு படமெடுக்க இப்போது எம்ஜிஆரும் இல்லை. சிவாஜியும் இல்லை.
நிரவ் ஷாவின் ஒளிப்பதிவு குறை சொல்வதற்கில்லை. யுவன் பின்னணி இசையில் பின்னுகிறார். தமிழ் புத்தாண்டுக்கு டிவியில் போடுவார்கள். நிதானமாகப் பார்த்துக் கொள்ளலாம்.
0
கொசுறு செய்தி
பரங்கிமலை ஜோதியில் ஒஸ்தி படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் முதல் நாள் நூறு ரூபாய்க்கு மேல். மேட்னி ஷோ வரை படத்தட்டே வரவில்லை. வித்தவன் எஸ்கேப். திரையிடாத காட்சிக்கு கவுண்டரில் ஐம்பது ரூபாய் தந்தார்களாம். மீதியெல்லாம் கோவிந்தா.
அதே ஜோதியில் எண்பது ரூபாய் கட்டணத்தில் ஏசி குளிரில் ஐம்பது பேர் பார்த்தோம். நேற்று ஆர்யா வந்தாராம். தியேட்டர் முதலாளி ‘ எப்படிங்க இரண்டு வாரம் ஓட்டறது. கலெக்ஷன் சரியா இல்ல.. கரெண்டு செலவுக்கே காணாது போல ‘ என்றாராம். ஆர்யா ‘ கரண்ட செலவ நான் கொடுத்துடறேன்.. எப்படியாவது ஓட்டுங்க‘ என்றாராம். சீட்டு கிழிப்பவர் சொன்ன தகவல். இப்படித்தான் ஓடுகிறது போலும் எல்லாப் படங்களும்.
0

Series Navigationசிற்றிதழ் அறிமுகம் ‘ முள் ‘மாநகர பகீருந்துகள்