வசந்தபாலனின் ‘ அரவான் ‘

வெயில், அங்காடித்தெரு இயக்குனர். சு.வெங்கடேசனின் கதை. பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கிறது படம்.
கள்ளர்களையும் காவல்காரர்களையும் மையமாகக் கொண்ட கதை. வேம்பூர், மாத்தூர், மதுரைக் கோட்டை, காவானிகாவல் என்று பழக்கத்தில் இல்லாத பெயர்களில் ஊர்கள். கதை நடைபெறும் காலம், பதினெட்டாம் நூற்றாண்டு. மன்னராட்சிக் காலம்.
கொம்புலி ( பசுபதி ) கள்ளர்களின் தலைவன். வரிப்புலி ( ஆதி ) காவல்காரனாக இருந்து கள்ளனாக மாறியவன். ராணியின் வைர அட்டிகையை, தனி ஒரு ஆளாக திருடியிருக்கும் வரிப்புலியைத் தேடிக் கண்டுபிடிக்கிறான் கொம்புலி. அட்டிகை கிடைத்தால், அவன் மக்களுக்கு நூறு கோட்டை நெல் கிடைக்கும். அதுவரை அவனுக்கு கிடைத்ததெல்லாம் இரண்டு கோட்டை கேப்புதான். வரிப்புலியின் அசாகாய சூரத்தைக் கண்டு வியந்து, அவனைத் தன்னோடு சேர்த்துக் கொள்கிறான். அவன் திருடிய வைர அட்டிகையைத் திருப்பிக் கொடுத்து, நூறு கோட்டை நெல்லையும் தன் மக்களுக்கு வாங்கி வருகிறான். வேறு ஊர்க்காரன் என்று தள்ளி வைக்கப்பட்ட வரிப் புலி எப்படி கொம்புலி ஊர்க்காரர்கள் அன்புக்குப் பாத்திரமாகிறான் என்று போகிறது கதை. இடையில் கொம்புலியின் தங்கை சிமிட்டி(சுவேதா மேனன்) அவன் மேல் காதல் கொள்கிறாள். ஆனால் வரிப்புலி அவளை ஏற்க மறுக்கிறான். காரணம் அவனுக்கும் பேச்சி(தன்ஷிகா) க்கும் கல்யாணம் ஆகிவிட்டது.
ஜல்லிக்கட்டில் கொம்புலி காயமடைகிறான். அவனுக்காக வரிப்புலி களத்தில் குதித்து காளையை அடக்குகிறான். ஊர் பேர் தெரியாதவன் என கூட்டம் எள்ளி நகையாட, ரோஷத்தில் வரிப்புலி தன் பூர்வீகத்தைச் சொல்கிறான். அவன் தாய் கொம்புலியின் ஊர். வாழ்க்கைப்பட்டுப் போன இடம் காவல்காரர்களின் ஊர். கரிகாலனின் மைத்துனன் (பரத்) வரிப்புலியின் ஊரில் தனியாகத் தங்கும்போது, கழுத்தறுபட்டு கொல்லப்படுகிறான். பழி ஊர் மேல். பலியாக ஒத்த வயதுடைய ஒருவன் அரவான் சிலைமுன் பலியிடப்பட வேண்டும். வரிப்புலி, சின்னாவாக வாழும் ஊர் அது. அவனே பலியாள். முப்பது நாட்களில் அவனுக்கு தண்டனை. இடையில் அவனுக்கும் பேச்சிக்கும் கலியாணம். தன் ஊர்க்காரன் தான் கொலை செய்திருக்கவேண்டும் என்று, உண்மையைக் கண்டு பிடிக்க போகிறான் சின்னா. வெள்ளி அரை ஞாண் கயிறும் அதில் தொங்கும் புலி நகமும் இறஞ்தவன் கையில். இறுதியில், அந்த ஊர் ராஜாவின் இரண்டாவது மனைவியுடன், இறந்தவனுக்குத் தொடர்பு. அதனால் ராஜாவே அவனைக் கொலை செய்கிறார். உண்மையை ஊருக்கு சொல்லும்முன்பாக ராஜா தற்கொலை செய்து கொள்கிறார். ஊரில் சின்னா சொல்லை நம்புவார் இல்லை.
பலியாள் பத்து வருடம் பிடிபடாமல் இருந்தால், அவனை ஊருக்குள் சேர்த்துக் கொள்வார்கள். சின்னா வரிப்புலியாக மாறி, கள்ளர்களுடன் வாழ்கிறான். அவனைத் தேடி அலையும் கரிகாலன், ஜல்லிக்கட்டில் உண்மை வெளிவர, அவனைப் பிடித்திழுத்து போகிறான். இடையில் கொம்புலி அவனைக் காப்பாற்றுதலும், ஆனால் ஊரே திரண்டு வந்து அவனை பலியிடக் கொண்டு போய், பலியிடுவதாகவும் கதை முடிகிறது. இறக்கும் முன், சின்னா கொம்புலியிடம் தன் மகனை ஒரு காவல்காரனாக வளர்க்கச் சொல்கிறான். கூடவே அவர்களையும் கள்ளத் தொழிலிலிருந்து காவல் தொழிலுக்கு மாறச் சொல்கிறான்.
ஒரு நாவலின் ஒரு பகுதியை படமாக்கும்போது சினிமாட்டிக் ஜஸ்டிஸ் என்று எதையாவது விட்டு விடுவார்கள். அல்லது பல விசயங்களை பின்னணிக் குரலில் சொல்லி விடுவார்கள். வசந்தபாலன் கதைக்கு உண்மையாக இருக்கவேண்டும் என்று எதையும் விட்டுவிடவில்லை. படம் முடிய இரண்டே முக்கால் மணி நேரம் ஆகிறது. ஒரு இயக்குனராக, வசந்தபாலனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்தனை நடிகர்களும், கொடுத்த பாத்திரத்தின் தன்மை மற்றும் அளவு தெரிந்து நடித்திருக்கிறார்கள். ஒருவரும் கோடு தாண்டவில்லை. ஆதியை விட பசுபதி பளிச் என்று தெரிகிறார். சிவாஜிக்குப் பிறகு, அவரது கண்கள் பேசுகின்றன. நல்ல நடிகர் தேர்ந்த இயக்குனர்களால் பயன்படுத்தப் படாமல், வில்லனாக மாறிப் போனது சோகம். சிமிட்டியும் பேச்சியும் வாழ்ந்திருக்கிறார்கள்.
முக்கியமாக இரண்டு பேர் பாராட்டப்பட வேண்டியவர்கள். ஒருவர் கலை இயக்குனர் விஜய் முருகன். அட்டகாசமான செட்டுகள். இன்னொருவர் ஒளிப்பதிவாளர் சித்தார்த். காடும் மலைகளுமாக அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். பாடகர் கார்த்திக் இசையை மேலும் தொடரலாம். நவீன உபகரணங்களால், இந்திய இசைக்கருவிகளை, உச்சத்திற்குக் கொண்டு போகிறார். ஏ ஆர் ரகுமானின் பாதிப்பு இருந்தாலும், அவருக்கு இனி ரெட் கார்ப்பெட் தான். ‘ நிலா ‘ பாடலிலும், ‘ ஒன்னைக் கொல்லப் போறேன் ‘ பாடலிலும் தனித்துத் தெரிகிறார்.
கடைசியில், கைகளை, முதுக்குக்கு பின்னால் இருக்கும் கட்டையோடு கட்டி, மலையேறச் செய்யும் காட்சியில், ஜீஸஸின் சிலுவையேற்றம் ஞாபகம் வருகிறது. அதே தாடி வேறு. எதிர்ப்பு வரக்கூடும். வன்முறை எந்த இடத்திலும் காட்டப்படுவதில்லை என்பதும், படத்துக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட். தலை தெறித்து விழுவதெல்லாம் காட்டப் படவில்லை. ரத்தம் தெறிப்பதோடு சரி.
சில காட்சிகளில் வரும் பரத்தும் அஞ்சலியும் தாங்கள் சிறந்த கலைஞர்கள் என்பதை மறுபடி ஒருமுறை ஊர்ஜிதம் செய்கிறார்கள். பாரதிராஜவுக்கு பிறகு, ஒரு கிராமியக் கதையை, மணம் மாறாமல் கொடுக்கும் திறன் இருக்கிறது வசந்தபாலனிடம். இமையத்திடமிருந்து அளவைக் கற்றுக் கொண்டால், இன்னமும் கூட பிரகாசிக்கலாம். ஜூம் இன் ஜூம் அவுட் என்று போனாலும் ராஜாவிடம் எல்லாம் நறுக்கென்று இருக்கும்.
#
கொசுறு
வசந்தபாலனிடம் இளைஞர் கூட்டம் ஏதோ எதிர்பார்க்கிறது என்பது, வந்திருந்த கூட்டத்திலிருந்து தெரிந்தது. படம் நடுவே அனாவசியக் கூச்சல்கள் இல்லை. சு.வெங்கடேசனின் வசனங்களில் பெரிய தத்துவங்கள் இல்லை. நெகிழும் காட்சிகள் இல்லை. ஒரு டாக்குமெண்டரியை, ஓரளவு திரைப்படமாக எடுத்ததற்கு, வசந்தபாலன் நிறைய பாடுபட்டிருக்க வேண்டும்.
விருகம்பாக்கம் தேவிகருமாரியில், கூட்டம் சொற்பமேனும் சேரும் வரை, படம் போட மாட்டேன் என்கிறார்கள். நீளமான படங்கள், இப்படி தாமதித்து ஆரம்பிப்பதால், முடிய ஒன்பதே முக்கால் ஆகிவிடுகிறது. வீடு போய் சேர பத்தரை. அதற்குள் வீட்டில் இருப்பவர்களெல்லாம் நித்திரை.
#

Series Navigationஷிவானிஉழுதவன் கணக்கு