வளவ. துரையனின் நேர்காணல் – 2

வினாத் தொகுப்பு——–பாரதி இளவேனில் [அன்பாதவன்]

இரண்டாம் பகுதி
அண்ணா—பெரியார் குறித்தெல்லாம் கவியரங்கக் கவிதைகள் வாசித்தவர் வாழ்வில்” வைணவ விருந்து” எப்படி?
ஒரே வரியில் பதில் சொல்லித் தப்பித்து விடலாம். “எல்லாம் தமிழில்தானே இருக்கிறது”. ஓரளவுக்கு இது உண்மை என்றாலும் மாற்றம் என்ற சொல்லைத் தவிர எல்லாம் மாறக் கூடியவைதானே? கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது “ மாற்றம் என்பது மானிடத் தத்துவம் “. நான் இலக்கியத்தில் புகுந்தபோது ஈர்த்தவை திராவிட இயக்கமும், பகுத்தறிவும், இறை மறுப்பும்தான். வளவனூர் திருக்குறட் கழக இடம் திறந்தபோது, இராகு காலத்தில் திறக்கப் போராடி, முடியாதபோது எங்கள் கைகடியாரங்களை மாற்றி வைத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
பேச்சிலும் எழுத்திலும் தீவிரமாக ஈடுபட்டபோது கவர்ந்தவை இராமாயணப் பட்டிமன்றங்கள்தான். பகுதி பகுதியாக இராமாயணம் தெரிந்தது. பிறகு மஹாபாரதம். கிராமங்கள் தோறும் இராமாயணப் பட்டி மன்றங்கள்
பேசியதே முதல் மாற்றம். கம்பன் விழாக்களும் இதற்கு உதவின. கண்ணதாசன் தமிழ்போல கம்பன் தமிழும் ஆட்கொண்டது. ஆய்வான பேச்சால் கோபாலய்யரும், அழகான சுவையான பேச்சால் மதுராந்தகம் இரகுவீரரும் கவர்ந்து நல்ல பழக்கம் ஆனார்கள். இவர்கள் பேசின வைணவ மாநாட்டிற்குப் போய்தான் வைணவத்தில் மாட்டிக் கொண்டேன்.
மதுராந்தகம் இரகுவீரர் “இவரும் பேசுவார்” என்று என்னைக் காட்ட திருப்பாப்புலியூர் வரதராஜப் பெருமாள் கோவில் பொறுப்பாளர்கள் கோயிலில் பேசச் சொன்னார்கள். அப்போது ஒவ்வொரு வாரமும் கோயிலில் சொற்பொழிவு வைக்கும் திட்டம் ஒன்று இருந்தது. சொல்லின் செல்வன், சிறியன சிந்தியாதான், சிரித்தது செங்கட்சீயம், பரதனும் சத்ருக்னனும், போன்ற இராமாயணத் தலைப்புகள் பேசியபின் அவர்கள் விரும்பிய வாறு ஆழ்வார்கள் பாசுரங்கள் படித்துப் பேசத்தொடங்கினேன்.” நாலுகவிப் பெருமாள் என்று திருமங்கை ஆழ்வார் பற்றிப் பேசியது தான் வைணவத்தில் முதல் பேச்சு. ஆழ்வார்களின் தமிழுக்கு ஆட்பட்ட காரணத்தால் வைணவ விருந்து உருவாயிற்று. என் மனம் அப்படியே இருக்கிறது.

”தேரு பிறந்த கதை”——தலித் அழகியலும் அரசியலும் இணைந்த மிகச் சிறப்பான சிறுகதை. எங்கு பிடித்தீர்கள் அந்த
க் கதைக் களத்தை?
சாதி மத வேறுபாடுகள் பாராட்டக்கூடாது என வளர்க்கப் பட்டவன் நான். என் தந்தையின் உடலை அக்ரகாரத்திலிருந்து தூக்கியவர்களில் ஒரு கிறித்துவரும் ஒரு முசுலீமும் இருந்தனர். சிறு வயதில் ஆலக்கிராமத்தில் வண்டி ஓட்டும் வேலையாளை உள்ளே வைத்து நான் என்னுடைய ஆசைக்காக வண்டியை ஓட்டி வர என் தாத்தா வேலையாளைத் திட்டித் தீர்த்தது எனக்கு அதிர்ச்சி தந்தது. குன்றக்குடி அடிகளார் சிதம்பரம் கோயிலில் நுழையாததையும் காந்தியடிகள் மீனட்சியம்மன் கோயிலுக்குள் வர மறுத்ததையும் கேள்விப்பட்ட எனக்கு சித்தர் பாடல்கள் புதிய சிந்தனையைத் தூண்டின. உள்ளே இருந்த விதை நவீன இலக்கியத்தில் புகுந்து “செம்மலர்” படித்தபோதும் பொதுவுடைமைத் தோழர்கள் தொடர்பு வந்தபோதும் வெண்மணி, திண்ணியம்’ மேலவளவு, என்றெல்லாம் கண்டபோதும் மரமாகிக் கொண்டே வந்தது. அதுவும் தமிழின் புதுவரவான தலித் இலக்கியம் புதிய சாளரத்தையே திறந்தது.
நண்பர்கள் சுந்தரமூர்த்தியும், சம்பத்தும் வற்புறுத்தி திருப்பதியில் தேரு பார்க்க அழைத்துச் சென்றனர். பல மணி நேரம் அடைபட்டு ஓரிரு மணித்துளிகள்தாம் பார்க்க முடிந்த பெருமாள், இப்பொழுது மக்களை நோக்கி நேராக வருவதும் அந்த வடத்தை சாதி மத வேறுபாடின்றி அனைவரும் இழுப்பதும் என்னை ஈர்த்தது.
ஒருமுறை திருவாரூரின் பெரிய தேர் பார்த்து வியந்து போனேன்.இவ்வளவு பெரிய கோயிலைக் கட்டியவன் அதனுள்ளே போகமுடியாதவாறு பெரிய தேர் ஏன் கட்டினான்? இந்தச் சிந்தனை வளர்ந்து கொண்டே வர ஒரு நாள் பட்டென்று கிடைத்த கவிதை இது. “ ஊர் கூடி இழுத்தும் இன்னும் வரவில்லை சேரிக்குள் தேர் “.[ சில சொற்கள் மாறி இருக்கலாம் ] இப்பொழுது தேர் பிறக்க ஒரு காரணம் கிடைத்தது. ஒரு வேடிக்கை அந்தக் கதை இன்னும் எந்த இதழிலும் வெளியாகவில்லை. எதற்காவது அனுப்பலாம் என்பதற்குள் தொகுப்பு தயாரானதால் அதில் சேர்க்கப்பட்டது. அந்தக் கதைதான் சேலம், கம்பம், எட்டயபுரத்தில் பரிசுகள் பெற்றுத் தந்தது.

விழுப்புரம் வட்டார ஆளுமைகள் குறித்துத் தங்கள் பார்வை—-?
1967—இல் வளவனூரில் திருக்குறள் கழகம் தொடங்கிய காலத்திலிருந்தே அங்கிருந்து சுமார் 9 கி.மீ தொலைவில் உள்ள விழுப்புரம் இலக்கியவாதிகளுடன் நல்ல தொடர்பு இருந்தது.இப்பொழுது விழுப்புரம் கம்பன் விழாவை நடத்திவரும் மு.க.சங்கரன் அப்போது இலக்கிய உலகில் அறிமுகமாகி இருந்த நேரம் அது. அவரும் அவர் மூலம் அறிமுகமான மயிலம் பேராசிரியர் பழ. முத்தப்பன், மறைந்த காந்தி மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் அ.க. முனிசாமி ஆகியோர் எல்லாம் வளவனூர் வந்து பல நிகழ்வுகளில் பங்கு பெற்றனர். சங்கரன் ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் இலக்கியப் பேரவை என்னும் அமைப்பின் மூலம் மாதந்தோறும் ஓர் இலகியக் கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார் அங்கு பல நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்ட எனக்கு அவை எல்லாம் பயிற்சிக் கூடங்களாக இருந்தன. குறிப்பாக 16—2—1975 இல் அப் பேரவையில் வள்ளுவர்த் திருநாளில் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பெயரர் முருகதாச சுவாமிகள் தலைமையில் நான் கலந்து கொண்ட கவியரங்கம் முக்கியமான ஒன்று.
பிறகு பழமலய் அறிமுகம் வந்தது. அவரின் “நெம்புகோல்”
சார்பான நிகழ்வுகளில் நானும் அர. இராசாராமனும் பங்கு பெற்றோம். அந்த நிகழ்ச்சிகளில் சரியாகத் திட்டமிட்ட நவீன இலக்கியம் பேசப்பட்டது.அவற்றில் மயிலம் இராசேந்திர சோழனின் “பறிமுதல்” தொகுப்பு ஆய்வு குறிப்படத்தக்க ஒன்று. அவை எல்லாம் பழங்கதையாகப் போக
தற்போது அன்பாதவன் மற்றும் விழி. பா. இதயவேந்தன் பொறுப்பில் இயங்கும் “ பெண்ணை இலக்கியக் கூடல் “ சரியான பணிகளைச் செய்து வருகிறது. அந்த அமைப்பின் ஒரு நிகழ்வில் கலந்துரையாடிய “தீம்தரிகிட” ஞாநியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. சில மாதங்கள் முன் வந்த மும்பை மதியழகன் சுப்பையாவின் நூல் அறிமுக நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பும் எனக்கு கொடுக்கப் பட்டது
காலச் சூழலுக்கேற்ப மாற்றங்களுக்கேற்ப அவ்வப்போது விழுப்புரம் அமைப்புகள்செயல்பட்டு வருகின்றன. அவற்றின் வழியாய்ப் பல எழுத்தாளர்கள் தோன்றி இருப்பதும் கண் கூடான உண்மை. ஆகக் கம்பன் ஒருபுறம், நவீன இலக்கியம் ஒரு புறம், மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் இயங்கும் வள்ளலார் அமைப்பு ஒருபுறம் என்று எல்லாமே என் வளர்ச்சிக்கு உரம் இட்டிருக்கின்றன.
<b>இணைய இதழ்கள் இலக்கிய வளர்ச்சிக்கு எவ்விதம் உதவும் எனக் கருதுகிறீர்கள் ?</b>
இணைய வலைத்தளம் பற்றி எனக்கு ‘அ’ னா ‘ஆ’ வன்னா கூடத்தெரியாது. மும்பை சென்றால் என் மகன் வீட்டிலும், கடலூரில் நண்பர் இரகு வீட்டிலும் சில நேரங்களில் இயக்கச் சொல்லிப் படித்திருக்கிறேன் ஓர் எழுத்தாளரைப் படைப்பு கேட்ட போது “ என் வலைத்தளத்திலிருந்து எடுத்துப் போடுங்கள் “ என்று கூறும் அளவிற்கு இன்று வலைத்தளம் உள்ளது. இணைய இதழ்களைப் பொருத்தமட்டில் “ திண்ணை “ பரவலாகக் கவனம் பற்றுள்ளது. சொல்வனம், தடாகம், நந்தலாலா, போன்றவையும் உள்ளன. திண்ணையில் பாவண்ணன் மூலம் என் விமர்சனங்கள் வந்துள்ளன. முன்பு வந்த “ மருதம் “ இணைய இதழில் ஜெயமோகன் எனது சங்க இலக்கியக் கட்டுரைகளை வெளியிட்டார். ” சங்கு “ கூட என் மகனால் சில காலம் இணையத்தில் உலவியது. . இன்னும் எனக்குத் தெரிந்த பல நவீன எழுத்தாளர்கள்
கிராமங்களில் விவசாயக் கூலிகளாக, நகரங்களில் பெருவணிகக் கடைகளில் தினக்கூலிகளாக உள்ளனர். இதுபோல நல்ல வாசகர்களும் உள்ளனர். ஓர் இலக்கியப் படைப்பு சாதாரண மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும். நான் கூறிய மேற்சொன்னவர்கள் இணைய இதழ்களை எட்ட முடியாதவர்கள். குறிப்பிட்ட வசதியான, விரைவாகச் சென்று கொண்டிருக்கிற இலக்கியவாதிகளால் மட்டுமே இணையம் பயன்படுத்தப்படுகிறது. எனவே சாதாரண சிற்றிதழ்கள் போல இணைய இதழ்கள் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்கு அளிக்க முடியாது என்பது என் கருத்து.. [ இப்போது நானும் ஒரளவிற்கு கணினி பயின்று வருகிறேன் என்பதும் காலத்தின் கட்டாயம்தானே “]
[இன்னும் வரும்]

Series Navigation‘சாதனை அரசிகள்’ தேனம்மை லெக்ஷ்மணனின் கட்டுரைத் தொகுப்பு – ஒரு பார்வைவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -3 “காம சூத்ராவைக் கடந்துவா” –