வாசிப்பு அனுபவம்

வெகுநாட்களுக்குப் பிறகு போரூர் அரசு நூலகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது குறித்து குய்யோ முறையோ என்று கூக்குரலிடம் தமிழ் சமுதாயம் கைவிரல்களின் எண்ணிககையில் தான் நூலக பருவ ஏடுகள் அறையில் இருந்தன.. வாசிப்பும் அனுபவமும் அந்த லட்சணத்தில் இருக்கிறது. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை.. வந்திருந்தவர்கள் ஒருவர் கையில் சிறு துண்டு காகிதம் வைத்துக் கொண்டு பேனாவை வேறொரு வாசகரிடம் கடன் வாங்கிக் கொண்டு எம்ப்ளாயிண்ட் நியூஸ் வாசித்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். பிள்ளைக்கோ பேரனுக்கோ..?
வந்திருந்தவர்கள் யாரும் தீவிர வாசகர்கள் இல்லை என்பது அவர்கள் புரட்டும் பாணியிலேயே தெரிந்தது. வீட்டுச் சாவி மனைவியிடம் இருக்கும்.. அல்லது டியூஷன் போன குழந்தையைக் கூட்டிப் போக இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பது போன்ற தலையாயக் கடமைகள் உள்ளவர்களே அங்கு வருகிறார்கள் என்பது எனக்கு புரிந்தது.
நான் இருந்த ஒரு மணி நேரம் வரை யாரும் புத்தகம் எடுக்கவும் இல்லை வாங்க வரவும் இல்லை.. பணி யில் இருந்த இளம்பெண் அடிக்கடி கடிகாரத்தைப் பார்க்கவும் தலையைச் சொறிந்து கொள்ளவுமே நேரத்தைச் செலவிட்டார். நூலகர்கள் சிறந்த வாசகர்களாக இருப்பது நூலகத்தின் ஆரோக்கியத்தைக் கூட்டும் என்று யாரோ சொன்னது எனக்கு நினைவுக்கு வந்தது. இது கூலிக்கு மாரடிக்கிற கூட்டமல்லவா என்று ஜெயகாந்தன் பாணீயில் யோசித்தேன்.
நான் போனதே சில இலக்கிய இதழ்கள் கண்ணில் படாதா என்கிற ஆதங்கத்தில்.. இப்போதெல்லாம் இதழ்களை வாங்க முடிவதில்லை.. 17, 20 என்று விலையேறி எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றன இதழ்கள்.
யாரும் சீண்டாத ஆனந்தவிகடனை எடுத்தேன்.. வண்ணநிலவனின் சிறுகதை.. அருமை.. வயதான தாய், வசதியில்லாத தங்கை, மூன்று கடை வருமானம். ஒருகடை வருமானத்தையாவது கேட்க மனைவி தூண்ட அசலூருக்கு செல்லும் கணவன் கதை நாயகன்.. கடைசியில் அம்மாவுக்கு பழம், தங்கைக்கு பட்சணம் என்று வாங்கித் தந்துவிட்டு அவள் கொடுத்த வடையை தின்று விட்டு எதுவும் கேட்காமல் திரும்பும் அண்ணன்.
உயிர்மை நாலைந்து புத்தகங்களூக்கிடையில் புதைந்து.. தேடி எடுத்து புரட்டினேன். சுகுமாரனின் ‘ சர்ப்பம் ‘ அட மனிதருக்கு என்ன நகைச்சுவை.. மனிதர்களைக் கண்டு நடுங்கும் வயதான சர்ப்பம், அதன் எண்ண ஓட்டம், எல்லாமே மலையாள வாடையோடு வரும் நல்ல தமிழ் வர்ணனை.. இந்த வருடத்தில் சிறந்த கதைகளுள் ஒன்றாகக் கூட ஆகலாம்.
இன்னமும் எம்ப்ளாயிண்ட் ஆள் எழுதிக் கொண்டிருக்கிறார்.. டியூஷன் ஆசாமி புரட்டிக் கொண்டிருக்கிறார்.. நிறைவுடன் வெளியேறுகிறேன் நான்.. மணி ஏழாகி விட்டது.. நூலகம் மூடப்பட வேண்டும்.

Series Navigationமுள் எடுக்கும் முள்இதுவும் அதுவும் உதுவும் – 5